Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

Feb. 4 -:அர்ச். கோர்சினி பெலவேந்திரர்

பிப்ரவரி 04ம் தேதி

ஸ்துதியரும் மேற்றிராணியாருமான அர்ச். கோர்சினி பெலவேந்திரர் 

இவர் இத்தாலியிலுள்ள ஃபுளாரன்ஸ் நகரில், கோர்சினி என்கிற ஓர் உயர்குடும்பத்தில், அவருடைய பெற்றோர்களின் இடைவிடாத ஜெபத்தின் பலனாக குழந்தையாகப் பிறந்தார். உடனடியாக, பெற்றோர்கள், தங்கள் குழந்தையை மகா பரிசுத்த தேவமாதாவிற்குக் காணிக்கையாக அர்ப்பணம் செய்தார்கள்.

இவர் வயிற்றிலிருந்தபோது, அவருடைய தாய் ஒரு ஓநாயைப் பெற்றெடுத்ததாகவும், அந்த ஓநாய் அருகிலிருந்த கார்மல் துறவற மடத்தின் தேவாலயத்தை நோக்கி ஒடியதாகவும், தேவாலயத்தின் நுழைவாயில் மண்டபத்தை அடைந்ததும், உடனே அந்த ஓநாய் ஒரு செம்மறியாக உருமாறியதாகவும், ஒரு கனவு கண்டார்கள்.

இளம் வயதில், இவருடைய குடும்ப அந்தஸ்திற்கேற்ப பக்தியுடன் நன்கு வளர்க்கப்பட்டார்; நல்ல கல்வி இவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் நாளடைவில், இவர் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டார். இதற்காக இவருடைய தாயார் அடிக்கடி கடிந்து கொண்டார்கள். மிக மோசமான நிலையை அடைந்தபோது, பக்தியுள்ள நல்ல தாயார், இவர் பிறப்பதற்கு முன் கண்ட கனவைப் பற்றியும், குழந்தையாகப் பிறந்ததும் மகா பரிசுத்த தேவமாதாவிற்கு அர்ப்பணித்ததைப் பற்றியும் கூறினார்கள்.

இதை அறிந்ததும், இவர் தேவசிநேகத்தினால் பற்றியெரிந்தவராக, கார்மெல் துறவற சபையில் சேர்ந்தார். இச்சமயம், இவரை பிசாசு பெரும் சோதனைகளால் அலைக்கழித்தது. ஆனால் துறவற சபையில் சேர்வதற்காக கொண்டிருந்த திடமான தீர்மானத்தை எந்த விதத்திலும் மாற்றவில்லை. பாரீஸ் நகருக்கு அனுப்பப்பட்டு, அங்கே பட்டப்படிப்பை முடித்து சொந்த நாட்டிற்கு திரும்பினார். டஸ்கனியிலுள்ள கார்மெல் துறவற மடத்தின் அதிபரானார்.

வாழ்நாள் முழுவதும், மகா பரிசுத்த தேவமாதாவின் மீதான பக்தியைப் பரப்பி வந்தார்; பரலோக இராக்கினியைப் பற்றிய புகழ்ச்சி மகிமைகளைப் பரப்பினார். ஜெப, தவம், ஒறுத்தல் நிறைந்த உத்தம துறவியாக வாழ்ந்தார்.

இச்சமயம், ஃபியசோல் நகர மேற்றிராணியார் இறந்தார். உடனே, அந்நகர் மக்கள் இவரை மேற்றிராணியாராக தேர்ந்தெடுத்தனர். இந்த உயர்ந்த பதவிக்கு தன்னைத் தகுதியற்றவர் என்று எண்ணி, அர்ச். கோர்சினி பெலவேந்திரர் நீண்ட காலமாக வெளி உலகத்திலிருந்து ஒளிந்திருந்தார். ஆனால், ஒரு சமயம், நகரத்திற்கு வெளியே ஒளிந்திருந்த இவரை ஒரு குழந்தை பேசிக் காட்டியது. இதுவே தேவ சித்தம் என்று உணர்ந்த இவர், மேற்றிராணியார் பட்டத்தை ஏற்றுக் கொண்டார்.

இப்பதவிக்கு உயர்த்தப்பட்டபோது, தாழ்ச்சியை அதிகமாக அனுசரித்தார். ஏழைகளுக்கு தர்மம் அளித்து, அவர்களை பராமரித்தார். இடைவிடாமல் ஜெபித்து, இரவு நேரங்களில் மகா பரிசுத்த தேவநற்கருணைப் பேழையின் முன் கண்விழித்து, நேச ஆண்டவருடன் சல்லாபித்துக் கொண்டிருப்பார். தீர்க்கதரிசன வரத்தையும் பெற்றிருந்த இவருடைய அர்ச்சிஷ்டதனத்தை சகல மக்களும் ஏற்று, அவரை கொண்டாடி மகிழ்ந்தனர்.

1373ம் ஆண்டில், இவர் பரலோக செம்மறியானவரின் திருமண விருந்திற்கு அழைக்கப்பட்டார். தனது இறுதி நேரத்தில், மகா பரிசுத்த தேவமாதாவின் பரிந்துரையால் மிகப் பாக்கியமான மரணத்தை அடைந்து, நித்திய மோட்ச மகிமையை அடைந்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக