Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 1 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 24 - அர்ச். பெரிகிரின் லாசியோசி (May 1 - St. Peregrine)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 மே 01ம் தேதி


🌹அர்ச். பெரிகிரின் லாசியோசி திருநாள்🌹

(புற்று நோயாளிகளுக்குப் பாதுகாவலர்)


🌹இவர் 1260ம் வருடம் , வட இத்தாலியிலுள்ள ஃபோர்லி என்ற நகரிலுள்ள ஒரு பணக்காரக் குடும்பத்தில் ஒரே மகனாகப் பிறந்தார். இச்சமயம் இந்நகரம், பாப்பரசருடைய நேரடி அரசாட்சியின் கீழிருந்த பகுதிகளில் ஒன்றாக இருந்தது. பாப்பரசருக்கு எதிரான அரசியல் கட்சிக்கு இவருடைய குடும்பம் ஆதரவளித்தது. 1283ம் வருடம் ஃபோர்லி நகர மக்கள் பாப்பரசருக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டனர்; இந்நகரிலிருந்து இருதரப்பினருக்கும் சமாதானம் ஏற்படுத்துவதற்காக, மகா பரிசுத்த தேவமாதாவின் ஊழியர் துறவற சபையின் பொது தலைமை அதிபராயிருந்த அர்ச்.பிலிப் பெனிசியார் இந்நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அர்ச்.பிலிப் இந்நகருக்கு வந்து, பிரசங்கம் நிகழ்த்த முயன்றபோது, 18 வயது இளைஞனாயிருந்து பெரிகிரீன்,  அர்ச்.பிலிப் பெனிசியாரைப் பிரசங்கம் வைக்கக் கூடாதபடி தடுத்து,  அடித்தான்; பின்னர், அர்ச்.பிலிப் பெனிசியாரை அவமானப்படுத்தி திட்டி, மூர்க்கத்தனமாக வலுவந்தம் செய்து, நகரை விட்டு வெளியேற்றினர்;  சிறிது நேரத்திற்குப் பிறகு, பெரிகிரீன், அர்ச்சிஷ்டவருக்கு எதிராக மிருகத்தைப் போல அக்கிரமமாக நடந்து கொண்டதைக் குறித்து வருந்தியபடி, அர்ச்சிஷ்டவரைச் சந்தித்து, அவரிடம் மன்னிப்பு கேட்டார்;  அர்ச்.பிலிப், பெரிகிரீனை மிகுந்த கனிவுடன் வரவேற்றார். இத்தருணத்தில், பெரிகிரீனிடம் மிக ஆழமான பாதிப்பு ஏற்பட்டது! தான் இழைத்த மாபெரும் பாதகமான செயலுக்காக மனஸ்தாபப்பட்டார்;அதன் காரணமாக எற்பட்ட துக்கத்தினால் நிரம்பியவராக, அதிகமாக ஜெபிக்கத் துவக்கினார்!  தனது சத்துவங்களில் பலத்தையெல்லாம், செலவழிப்பதற்கு,  அநேக நல்ல அலுவல்கள் செய்யத் துவக்கினார். சில வருடங்களுக்குப் பிறகு, சியன்னாவிலுள்ள மகா பரிசுத்த தேவமாதாவின் ஊழியர் சபையில்  சேர்ந்தார்; பின் அந்த துறவற சபையில் குருப்பட்டம் பெற்று , ஒரு குருவானார். 

சில வருடங்களுக்குப் பிறகு, ஃபோர்லி நகருக்கு இவர் அனுப்பப் பட்டார்; அங்கு இவர் தனது துறவற சபையின் புதிய மடத்தை ஸ்தாபித்தார். இவருடைய பிரசங்கங்களும், ஏழைகள் மற்றும் பிணியாளர்கள் மேல் இவர் கொண்டிருந்த கருணையும், இவர்களுக்காக இவர் மேற்கொண்ட பணிவிடைகளும், இவர், தனது சொந்த நகரிலேயே அதிக புகழடையச் செய்தன!

உட்கார அவசியமில்லாத சமயங்களில் நின்று கொண்டு இருப்பது தான், இவர் அனுசரித்த விசேஷ ஒறுத்தல்முயற்சியாகும். நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதால் சோர்வடைந்தால், பாடற்குழுவில் பயன்படும் குச்சியின் மேல் சாய்ந்தபடி  நிற்பார்; இவருக்கு 60 வயதானபோது, இவருடைய வலது காலில் ஒரு புண் ஆறாமல் புரையோடிப்போனது; மருத்துவர் இதைக் குணப்படுத்த, அந்த காலை வெட்ட வேண்டும், என்று கூறினார்; அதன்படி, அறுவை சிகிச்சைக்கான நாளுக்கு முந்தின இரவில், பாடுபட்ட சுரூபத்திலிருந்த ஆண்டவரை நோக்கி, பெரிகிரீன் பக்திபற்றுதலுடன் ஜெபித்துக் கொண்டிருந்தார்; அச்சமயம், ஆண்டவர், சிலுவையிலிருந்து இறங்கிவந்து, இவருடைய காலைத் தொட்டு குணப்படுத்தியதைப் போன்றதொரு காட்சியைக் கண்டார்;  அடுத்த நாள் அறுவை சிகிச்சைக்கு முன் மருத்துவர், புற்றுநோயாகப் புரையோடிப் போயிருந்த அந்த புண் புதுமையாக முற்றிலும் மறைந்துபோனதைக் கண்டு அதிசயப்பட்டார். புதுமையாக இவருடைய புற்று நோய், குணமடைந்ததைப் பற்றிய செய்தி நகரெங்கிலும் பரவியது.  இது, அந்நகர மக்கள் அர்ச்.பெரிகிரீன் மேல் அதிக பக்தி கொள்ளச் செய்தது! அவருடைய நற்பெயரும் புகழும் இன்னும் அதிகரித்தது!

இவர், 85வது வயதில்,1345ம் வருடம் மே 1ம் தேதி பாக்கியமாய் மரித்தார்.  அச்சமயம் இவரைக்
காண திரளான மக்கள் வந்தனர்; அநேக வியாதியஸ்தர்கள், இவருடைய பரிந்துரையினால், புதுமையாகக் குணமடைந்தனர். ஃபோர்லி மகா பரிசுத்த தேவமாதாவின் ஊழியர் மடத்தின் தேவாலயத்தில், இவர் அடக்கம்   செய்யப்பட்டார்; இப்போது, இது அர்ச்.பெல்லகிரீனோ லாசியோசி பசிலிக்கா தேவாலயமாகத் திகழ்கிறது. 5ம் சின்னப்பர் பாப்பரசர்,1609ம் வருடம் இவருக்கு முத்திப்பேறு பட்டமும், 13ம் ஆசீர்வாதப்பர் பாப்பரசர், 1726ம் வருடம் இவருக்கு அர்ச்சிஷ்ட பட்டமும் அளித்தனர்.🌹✝


🌹அர்ச்.பெரிகிரீன் லாசியோசியே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹

🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக