⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐
மே 1️⃣0️⃣ம் தேதி
🌹ஸ்துதியரும் மேற்றிராணியாருமான அர்ச். அந்தோனினுஸ் திருநாள்.🌹
இவர் சிறந்த எழுத்தாளர்: நல்லொழுக்கத்தின் வேத இயல் பற்றிய அநேக நூல்களை எழுதியுள்ளார்;திருச்சபைச் சட்டத்தைப் பற்றிய புத்தகம், பாவசங்கீர்த்தனத்தினுடைய ஆன்ம குருக்களுக்கான வழிகாட்டி, உலக சரித்திரத்தினுடைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு நூல், ஆகியவற்றை எழுதியுள்ளார். எல்லோருக்கும் நல்ல ஆலோசகராக இவர் மிகவும் பிரபலமடைந்தார்; எல்லோராலும், “நல்ல ஆலோசனைகளின் சம்மனசானவர்” என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
பதவியை ஏற்கவில்லையென்றால் திருச்சபை விலக்கம் செய்யப்படுவீர் என்று எச்சரிக்கப்பட்டபிறகு, 4ம் யூஜின் பாப்பரசரின் வற்புறுத்தலின் பேரில்,இவர் ஃபுளாரன்ஸ் நகர மேற்றிராணியாராக ,மார்ச் 13ம் தேதி, 1446ம் வருடம், ஃபியசோல் என்ற நகரிலிருந்த அர்ச்.சாமிநாத சபை மடத்தில், அபிஷேகம் செய்யப்பட்டார்.
இவர் தனது மேற்றிராசனத்தில் சகலராலும் அதிகமாக மதிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டார்; குறிப்பாக, ஜெபிப்பதில் எல்லோருக்கும் நன்மாதிரிகையாகத் திகழ்ந்தார்; ஜெபிக்கும் மனிதராக , ஜெபத்தினுடைய மனிதராக, எப்போதும், ஜெபிப்பதில் ஆழ்ந்திருக்கும் ஒரு அர்ச்சிஷ்ட மேற்றிராணியாராக அர்ச்.அந்தோனினுஸ் திகழ்ந்தார். 1448 மற்றும் 1453ம் வருடங்களில், முறையே கொள்ளை நோயும், பூமியதிர்ச்சிகளும் ஏற்பட்டபோது, இரவு பகலாக இவர் தனது மந்தையிலிருக்கும் மக்களுக்கு உணவு உடை இல்லிடம் கொடுத்து உதவுவதில், இரவு பகலாக ஈடுபட்டார்; உணவு உடைகளை, ஒரு கழுதையின் மேல் சுமத்தி, அல்லலுற்ற மக்களைத் தேடிக் கொடுத்து வந்தார்; இம் மாபெரும் பிறர்சிநேக அலுவலில், தனக்கு உதவும்படியாக , இவர் , உதவியாளர்களின் ஒரு குழுவைத் தன்னுடன் கூட்டிச் சென்றார்.
அர்ச்.அந்தோனினுஸ் 1459ம் வருடம், மே 2ம் தேதியன்று, பாக்கியமாய் மரித்தார்; இவருடைய அடக்கச் சடங்கை 2ம் பத்திநாதர் பாப்பரசர், தானே முன்னின்று நடத்தினார்: மேலும், அர்ச்.அந்தோனினுஸ் மீது கொள்கிற பக்திமுயற்சிக்கு, இப்பாப்பரசர் விசேஷ ஞான பலன்களை அளித்தார்.
அர்ச்.அந்தோனினுஸ், ஒரு தராசை கையில் பிடித்தபடி, சித்தரிக்கப்பட்டிருக்கிற படம் மிகவும் பிரபலம். இதற்கான பின்னணி நிகழ்வு: ஒரு சமயம், ஃபுளாரன்ஸ் நகரவாசி ஒருவன், புதுவருட பரிசாக அந்நகரின் அதிமேற்றிராணியாரான அர்ச்.அந்தோனினுசுக்கு ஒரு அழகிய பழக்கூடையை கொண்டு வந்து கொடுத்து, புதுவருட வாழ்த்து கூறி அதிமேற்றிராணியாரிடம் ஆசிர்வாதத்தைப் பெற்றான். அதிமேற்றிராணியார் பதிலுக்கு தனக்கு மிகப் பெரிய வெகுமதி அளிப்பார் என்று எதிர்பார்த்தான்; ஆனால், “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று கூறி, அதிமேற்றிராணியாரான அர்ச்.அந்தோனினுஸ், அவனை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். இதைக்குறித்து அவன் அதிருப்தியடைந்தவனாக வீடு திரும்பினான். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட அர்ச்.அந்தோனினுஸ், அவனை வரவழைத்து, அவனிடம் அவனுடைய பழக்கூடையை தராசின் ஒரு தட்டிலும், “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று எழுதப்பட்ட ஒரு காகிதத்தை தராசின் இன்னொரு தட்டிலும் வைக்கச் சொன்னார்; அவனும் அப்படியேச் செய்தான்; என்ன ஆச்சரியம்! “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று எழுதப்பட்டிருந்த அந்த காகிதம் தான், பழங்கள் நிறைந்த அந்த கூடையை விட அதிகக் கனமுள்ளதாயிருந்ததைக் கண்டு, அவன் ஆச்சரியப்பட்டான்! அவன் நிலையில்லாத உலகத்தனமான வெகுமதியின் பேரில் ஆசை வைத்ததைக் குறித்து வெட்கப்பட்டு, அதிமேற்றிராணியாரிடம் அதற்காக மன்னிப்பு கேட்டான். மேலும், அர்ச்சிஷ்ட மேற்றிராணியாரிடமிருந்து “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று பெற்றுக் கொள்கிற ஆசீர்வாதம் எவ்வளவு அதிக பாக்கிய நன்மையைப் பெற்றுக் கொடுக்கிறது! என்ற உண்மையையும் அறிந்து கொண்டான்.🌹✝
🌹”சர்வேசுரனுக்கு ஊழியம் புரிவது என்பது, ஆட்சி செலுத்துவதாகும்” 🌹 ✍+அர்ச்.அந்தோனினுஸ்
🌹ஸ்துதியரும் மேற்றிராணியாருமான அர்ச்.அந்தோனினுஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக