மே
0️3️ம் தேதி
திருச்சிலுவைக் கண்டெடுக்கப்பட்ட திருநாள்
நமதாண்டவர் பாடுபட்டு மரித்த பரிசுத்த சிலுவைக் கண்டெடுக்கப்பட்ட திருநாளை, திருச்சபை இன்று கொண்டாடுகிறது. பெரிய வெள்ளின்று, சிலுவையானது
மனிதர்களுடைய இரட்சணியத்தினுடைய கருவியாக மாற்றப்பட்டதைக் கண்டதும், பசாசினுடைய ஆங்காரம் மிகப் பயங்கரமாகத் தாழ்த்தப்பட்டது! ஆண்டவருடைய
பரிசுத்தப் பாடுகளின் பெரிய வாரத்திற்கான திருவழிபாட்டின் முன்னுரைஜெபத்தில், திருச்சபை
“மனுக்குலத்தை ஒரு மரத்தினால் வெற்றிகொண்ட
பசாசானவன், ஒரு மரத்தினால் தோற்கடிக்கப்பட்டு
மேற்கொள்ளப்பட்டான்” என்று
அறிவிக்கிறது! இவ்விதமாக முறியடிக்கப்பட்ட பசாசு,அவனுடைய சீற்றத்தை, பரிசுத்த சிலுவையின் இரட்சணிய மரத்தின் மீது பாயவிட்டான்; பசாசு.
சிலுவையை அழித்து நிர்மூலமாக்கியிருப்பான்; ஆனால், அது, அவனுடைய வல்லமைக்கு
அப்பாற்பட்டது என்பதை அறிந்தவனாக,அதை அவசங்கைப் படுத்தவும்,
பார்வையிலிருந்து மறைக்கவும் மாபெரும் முயற்சியில் ஈடுபட்டான்; ஆகவே, அதைப் புதைத்து விடும்படி, யூதர்களை பசாசு தூண்டி ஏவி விட்டான்.
கல்வாரியின் அடியில், ஆண்டவருடைய கல்லறையிலிருந்து வெகு அருகிலிருந்த மிக
ஆழமான ஒரு துளையினுள், ஆண்டவருடைய
பரிசுத்த சிலுவையும், அதன் மேல் பொருத்தப்பட்டிருந்த
“INRI” என்று பிலாத்துவினால் எழுதும்படி செய்யப்பட்ட தலைப்புப்பலகையும், இரு கள்வர்களின் சிலுவைகளும்,
எறியப்பட்டன! பின் அந்த துளை,
குப்பைகளாலும் மண்ணினாலும் அடைக்கப்பட்டு மூடப்பட்டது.
நமதாண்டவரை சிலுவையில் அறைந்து நாற்பது வருடகாலத்திற்குப் பிறகு, ஜெருசலேம் நகரம், உரோமையர்களால் அழிக்கப்பட்டது. பின், கல்வாரி மலையின் மேல் உரோமையர்கள் வீனஸ்
என்ற அஞ்ஞான தேவதைக்கு ஒரு கோவிலைக் கட்டினர்.
கி.பி.313ம் வருடம், மகா
கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தி கிறீஸ்துவராக மனந்திரும்பிய பின், அவருடைய தாயாரான அர்ச். ஹெலன், ஆண்டவர் பாடுபட்டு மரித்த உண்மையான பரிசுத்த சிலுவையைக் கண்டுபிடிப்பதற்காக, ஜெருசலேமுக்கு திருயாத்திரைச் சென்றார்கள்.
நமது
தெய்வீக அரசரான திவ்ய சேசுகிறீஸ்துநாதரின் செங்கோல் (சிலுவை) அதனுடைய
கல்லறையிலிருந்து, ஒரு அரச மகிமையுடைய
கரத்தினால் வெளியே உயர்த்தப்பட வேண்டியிருந்தது!
நமதாண்டவர், பாடுகளின்போது, எந்த இடத்தில் யூதர்களால்
மாபெரும் நிந்தை அவமானங்களாலும், இழிவுகளாலும், தாழ்த்தப்பட்டாரோ, அதே இடத்தில், மகா
கான்ஸ்டன்டைனின் தாயாரும் அர்ச்சிஷ்ட
சக்கரவர்த்தினியுமான ஹெலனம்மாள், உலகத்தினுடைய உண்மையான இராஜாதி இராஜாவான நமதாண்டவருக்குரிய
சகல மகிமைகளையும் செலுத்தும்படியாக பரலோகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்! கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தியின் கட்டளையினால்,வீனஸ் தேவதையின் கோவில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது! அர்ச். ஹெலனம்மாளின் கட்டளையின்படி, கல்வாரியைச் சுற்றிலுமுள்ள நிலப்பகுதி தோண்டப்பட்டது; மூன்று சிலுவைகளும் கண்டுபிடிக்கப்பட்டன; இம்மூன்று சிலுவைகளில் ஆண்டவருடைய பரிசுத்த சிலுவை எதுவாக இருக்கும் என்பதைப் பரிசோதிக்க அர்ச். ஹெலன், ஒரு சாகப்போகிற நோயாளிப்
பெண்ணைக் கூட்டிவரும்படிச் செய்து, மூன்று சிலுவைகளையும் தொடச் செய்தார்கள்; ஆண்டவர் பாடுபட்டு மரித்த பரிசுத்த சிலுவையை அப்பெண் தொட்டபோது,உடனடியாக புதுமையாகக் குணமடைந்தாள். அந்த சிலுவையே, ஆண்டவருடைய
சிலுவை என்பதைக் கண்டுபிடித்தார்கள்.
தமது இரட்சணிய அலுவலின் மகிமையின்
அடையாள சின்னமாகிய சிலுவையின் கொடியை, பூமியிலிருந்து உயர்த்தியதன் மூலமாக, இந்த
அஞ்ஞான உலகத்தின் மீதான தமது வெற்றியை, நமதாண்டவர்
இவ்விதமாக நிறைவேற்றி முடித்தார்; ஆனால்
அந்நாள்வரை, யூதர்களுக்கு இடறலாகவும், அவமானச் சின்னமாகவும், அஞ்ஞானிகளுக்கு மடமையாகவும் திகழ்ந்த சிலுவை, இப்போது, ஆண்டவருடைய இரட்சணிய அலுவலின் மகிமையின் சின்னமாக மாறியது! சிலுவை, மனுக்குல இரட்சணியத்தினுடைய மகிமையின் சின்னமாகத் திகழ்கிறது! சிலுவை, கிறீஸ்துவர்களின் மகிமையான அடையாளச் சின்னமாகவும், பாதுகாக்கும் சின்னமாகவும் திகழ்கிறது!
326ம் வருடம், அர்ச்.
ஹெலன் ஆண்டவருடைய
மெய்யான சிலுவையைக் கண்டுபிடித்தார்கள்; பிலாத்து கட்டளையிட்டிருந்த “INRI” பெயர்ப்பலகை ஆண்டவருடைய சிலுவையில் பொருத்தப்படும்படி அர்ச். ஹெலன் கட்டளையிட்டார்கள்; மேலும், அர்ச். ஹெலன்,
கல்வாரி மலையில் நமதாண்டவரின் பரிசுத்தப்பாடுகளுக்கும் பரிசுத்த மரணத்திற்கும், அடக்கத்திற்கும் தோத்திரமாகக்
ஒரு பசிலிக்கா தேவாலயத்தைக் கட்டுவித்து, ஆண்டவரின் பரிசுத்த சிலுவையை அதில் ஸ்தாபிக்கும்படிச் செய்தார்கள். இப்பசிலிக்கா தேவாலயம், ஆண்டவருடைய மகிமைமிகு கல்லறையையும், ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்த ஸ்தலத்தையும், உள்ளடக்கியுள்ளது! இதற்கு அடுத்ததாக ஆண்டவருடைய பரிசுத்த சிலுவை 300 வருட காலம் புதைக்கப்பட்டிருந்த
இடத்திலும் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது;
இங்கு நீண்ட தூர நடைபாதை படிக்கட்டுகளால்
அமைக்கப்பட்டது! அது, பரிசுத்த சிலுவை
புதையுண்டிருந்த ஆழமான ஒரு குகை வரை
நீடித்திருக்கும். அந்த குகைதான் பரிசுத்த
சிலுவையின் கல்லறையாயிருந்தது.
ஆண்டவரின்
பரிசுத்த சிலுவையிலிருந்து, ஒரு பெரிய துண்டை
வெட்டியெடுத்து, அர்ச். ஹெலன், புதிய ஜெருசலேமாகிய உரோமைக்கு
அனுப்பி வைத்தார்கள். விலைமதிப்பில்லாத இந்த பொக்கிஷத்தை, மகா
கான்ஸ்டன்டைன், உரோமையிலுள்ள செஸ்ஸோரியன் தோட்டத்தில், தான் கட்டியிருந்த ஒரு
பசிலிக்கா தேவாலயத்தில் பூஜிதமாக ஸ்தாபிக்கும்படிச் செய்தார். பின்னர் இந்த தேவாலயம், ஜெருசலேமின்
பரிசுத்த சிலுவை பசிலிக்கா தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது. பின்
வந்த எல்லா நூற்றாண்டுகளிலும், ஆண்டவரின் பரிசுத்த சிலுவையிலிருந்து சிறு சிறு துண்டுகள்
வெட்டப்பட்டு, கத்தோலிக்க அரசர்களுக்கும், துறவற மடங்களுக்கும் அன்பளிப்பாக அளிக்கப்பட்டன!✝
ஓ!
சிலுவையே! எங்கள் ஏக நம்பிக்கையே! வாழ்க!
(50 நாள் பலன்)