வேதசாட்சியான அர்ச்.ஒனேசிமுஸ்
இவர் பிறப்பினால் ஃபிர்ஜியனாகவும், பிலமோன் என்பவரின் அடிமையாகவும் இருந்தார். அர்ச்.பிலமோன், என்பவர் ஏற்கனவே அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரால் கிறீஸ்துவராக மனந்திருப்பப்பட்டிருந்தார்.
இவர், தன் எஜமானாகிய பிலோமனிடமிருந்து திருடிவிட்டு, ஓடிப்போனார்; பின் எதிர்பாராதவிதமாக, உரோமையில், சிறைபட்டிருந்த அர்ச். சின்னப்பரை இவர் சந்திக்க நேர்ந்தது. அர்ச். சின்னப்பர் இவரை மனந்திருப்பி, ஞானஸ்நானம் கொடுத்தார். பின், இவரை, இவருடைய எஜமானரான அர்ச். பிலமோனிடம் அனுப்பி வைத்தார். அச்சமயம், அர்ச். சின்னப்பர், ஒரு அழகிய கடிதத்தை பிலமோனுக்கு, எழுதி இவரிடம் கொடுத்து அனுப்பினார். அது, சுவிசேஷத்தில், நமக்கு பிலமோனுக்கு எழுதிய நிரூபமாகக் கிடைத்தி ருக்கிறது! அந்த கடிதத்தில், பிலமோனிடம், அவருடைய அடிமையான ஒனேசிமுஸை மன்னிக்கும்படியும் மன்னித்து, அவருடைய உதவியாளராக சேர்த்துக்கொள்ளும்படியும், அர்ச். சின்னப்பர் கேட்டுக் கொள்வதை வாசிக்கிறோம்.
அர்ச். சின்னப்பரின் அறிவுரையின்பேரில், பிலமோன், ஒனேசிமுஸை மன்னித்து, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து முழு சுதந்திரத்தை அளித்தார்; அதன் பின், தன் ஞான தந்தையான அர்ச்.சின்னப்பர் ஏற்கனவே கேட்டுக் கொண்டதன் பேரில், ஒனேசிமுஸ், திரும்பி அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரிடமே வந்து சேர்ந்தார்.அவருக்கு பிரமாணிக்கத்துடன் ஊழியம் செய்து வந்தார்.
அர்ச். சின்னப்பர், கொலோசியருக்கு எழுதிய நிரூபத்தை, தீகிக்கு என்பவரிடம் கொடுத்தனுப்பியபோது, அவருடன் ஒனேசிமுஸையும் சேர்த்து அனுப்பி வைக்தார்.(கொலொ 4:7-9). பின்னர், ஒனேசிமுஸ், உரோமாபுரி ஆளுநனால், மிகக் கொடிய உபத்திரவங்களால் சித்ரவதை செய்யப்பட்டார்; திருமணம் செய்யாமல் பரிசுத்த ஜீவியம் ஜீவிக்கும் கத்தோலிக்கக் குருத்துவத்தைப் பற்றி இவர் பிரசங்கித்தபோது, அதைக் கேட்டுக் கோபமடைந்த உரோமை ஆளுநன், இவரை சிறையிலடைத்து, 18 நாட்கள் தொடர்ந்து உபாதித்தான்: இவருடைய கால்களையும், கைகளையும் குண்டாந்தடியால் அடித்து, முறித்தனர்; பின் கல்லால் எறியப்பட்டு கி.பி.95ம் வருடம் வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார். சர்வேசுரனை சிநேகிக்கிறவர் களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக உதவுகிறதென்று, அறிந்திருக்கிறோம்; அவர்கள், தேவ தீர்மானத்தின்படி, அர்ச்சிஷ்டவர்களாக அழைக்கப்பட்டிருக் கிறார்களாமே! (அர்ச்.சின்னப்பர் உரோமையருக்கு எழுதிய நிரூபம் 8:28).
அர்ச்.ஒனேசிமுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக