ஆகஸ்டு
1️0️ம் தேதி
உரோமை தலைமை தியாக்கோனும் ஸ்துதியரும் வேதசாட்சியுமான அர்ச். லாரன்ஸ்
திருநாள்
இவர், 225ம் வருடம், ஸ்பெயினில்,
ஹூஸ்கா என்ற இடத்தில் பிறந்தார்.
இளைஞராயிருந்தபோது, இவர் உயர்கல்வி கற்பதற்காக சரகோசாவிற்கு அனுப்பப்பட்டார்; அங்கு தான், இவர் எதிர்காலத்தில் 2ம் சிக்ஸ்துஸ் பாப்பரசராக
திருச்சபையை ஆளவிருந்தவரைச் சந்தித்தார்; இருவரும், ஸ்பெயினை விட்டு உரோமாபுரிக்குச் சென்றனர். 257ம் வருடம், 2ம்
சிக்ஸ்துஸ் பாப்பரசரானதும், லாரன்ஸ், இப்பாப்பரசரிடம், உரோமையின் ஏழு பேர்களில் ஒருவராக
தியாக்கோன் பட்டம் பெற்றார். இவர் தலைமை தியாக்கோனாக பொறுப்பேற்றார்; திருச்சபையின் திரவிய சாலையின் பொறுப்பையும், ஏழைகளுக்கு தர்மம் அளித்துப் பராமரிக்கும் அலுவலையும் கொண்டிருந்தார்; அச்சமயம், பெர்ஷிய நாட்டில் போரில் ஈடுபட்டிருந்த அஞ்ஞான உரோமைச் சக்கரவர்த்தியான வலேரியன், உரோமாபுரியிலிருக்கும் எல்லா கத்தோலிக்கக் குருக்களையும் கொன்றுபோடும்படியான ஒரு அரச ஆணையை
அனுப்பினான்; உரோமையிலுள்ள அஞ்ஞான விக்கிரகங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடனேயே இந்த அரச ஆணையை
அனுப்பியிருந்தான்.
ஏனெனில், அந்நேரம், இதற்கான தீவிரப் பிரச்சாரத்தின்போது வலேரியன், மிக ஆபத்தான துன்பங்களுக்கு
ஆளானான்; அதன் காரணமாக,அவன் விரைவிலேயே பெர்ஷியர்களால் பிடிக்கப்படவும், அதன் விளைவாக, மரண தண்டனையையும், அடையவும்
கூடும் என்கிற ஆபத்தான நிலையிலிருந்தான்; வலேரியனுடைய இந்த அரச ஆணையின்
உடனடி விளைவாக, 258ம் வருடம், ஆகஸ்டு
6ம் தேதியன்று, 2ம் சிக்ஸ்துஸ் பாப்பரசர்,
அர்ச். காலிக்ஸ்துஸ் பாப்பரசரின் கல்லறைச்சுரங்கத்தில், திருவழிபாடு நடத்திக்கொண்டிருந்தபோது, கைது செய்யப்பட்டு, வேதசாட்சியாகக்
கொல்லப்பட்டார். அதே சமயத்தில், பாப்பரசருடன்
கூட அவருடைய தலைமை தியாக்கோனான அர்ச். லாரன்சும் கைது செய்யப்பட்டார்; அனால்,
இவர் திருச்சபையின் திரவியசாலையின் பொறுப்பாளர் என்பதை, உரோமை ஆளுநன் அறிந்தவுடன், இவரிடமிருக்கும் திருச்சபையின் திரவியசாலையை, மூன்று நாட்களுக்குள், தன்னிடம் ஒப்படைத்தால், இவரை உயிருடன் விட்டு
விடுவதாகக் கூறினான். அர்ச். லாரன்ஸ் விரைவாக செயல்பட்டு, திருச்சபையின் திரவியத்தை, பணத்தை, ஏழைகளுக்குப் பகிர்ந் தளித்தார்; மூன்று நாட்களுக்குப் பிறகு, ஏழைகளையும் முடவர்களையும், உரோமை ஆளுநன் முன்பாகக் கூட்டி வந்து, “இதோ! நான் உங்களிடம்
காண்பிப்பதாக வாக்களித்திருந்த திருச்சபையின் பொக்கிஷ திரவியங்கள், இந்த ஏழைகளிடம் இருக்கிறது!
இப்பொக்கிஷங்களுடன் கூட, திருச்சபையின் கிரீடங்களாகத்
திகழும், ஏழை விதவைகள், மற்றும்
சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கன்னியர்கள் என்கிற முத்துக்களையும், விலை மதிப்பில்லாத இரத்தினக்கற்களையும்
சேர்த்துக் காண்பிப்பேன்! திருச்சபை மெய்யாகவே, மிகுந்த செல்வ வளமுடையதாக உங்களுடைய சக்கரவர்த்தியை விட, அதிக செல்வ
வளமுடையதாகத் திகழ்கிறது!” என்று கூறினார்.
உரோமை ஆளுநன், இதைக் கேட்டு மிகவும் சீற்றமடைந்தான்; அர்ச். லாரன்ஸை, மெதுவாக அதே சமயம், மிகக்
கொடிய வேதனை நிறைந்த மரணத்தை அளிக்கும்படியான மரண தண்டனைக்குத் தீர்ப்
பிட்டான்; அதற்காக, ஒரு பெரிய இரும்புக்கட்டில்
தயார் செய்யப்பட்டது; அதன் அடியில் எரியும் கரிகளால், அது, சூடேற்றப்பட்டது;அந்த கட்டில்
மேல் படுக்க வைத்து, அர்ச். லாரன்ஸை,
உயிருடன் மெதுவாக, வறுத்தெடுக்க உத்தரவிட்டான். பரிசுத்த தியாக்கோன் லாரன்ஸ், சூடேற்றப்பட்டுக் கொண்டிருந்த அந்த இரும்புக்கட்டிலில், கிடத்தப் பட்டு, நீண்டநேரம்
தாங்கமுடியாக அந்த சூட்டினால், வறுத்தெடுக்கப்படுகிற
மிகப் பயங்கரமான வேதனையை அனுபவித்த பிறகு, “சகோதரரே! என்னுடைய ஒரு பக்கம் நன்றாக
வெந்து விட்டது; அடுத்த பக்கமும் நன்றாக வேகும்படியாக, என்னைத் திருப்பிப் போடுங்கள்!” என்கிற தனது மிகப் பிரசத்திபெற்ற
வாக்கியத்தை, பரலோக மகிழ்ச்சியுடனும், இனிய முகத்துடனும், கொலைஞர்களிடம்
கூறினார். பின் பரலோகத்தை நோக்கி, உரோமாபுரியின் மனந்திரும்புதலுக்காக ஜெபித்து வேண்டிக் கொண்டார்; அதன்பின் மரித்தார்!
அர்ச். லாரன்சின் வேதசாட்சிய மரணத்தின் இக்காட்சியைக் கண்ட
உரோமை செனட்டர்களில் அநேகர், மனந்திரும்பினர்! அவர்களே, எரிந்துபோன அர்ச். லாரன்சின் பரிசுத்த சரீரத்தை, பக்திபற்றுதலுடன், சுமந்து சென்று, பூஜிதமாக திவோலியினரு கிலிருக்கும், வெரோனா வயல்வெளியிலுள்ள ஒரு குகையில் பூஜிதமாக
அடக்கம் செய்தனர். 258ம் வருடம் ஆகஸ்டு
10ம் தேதி,அர்ச். லாரன்ஸ், வேதசாட்சியாக, உயிருடன்
சூடேற்றப்பட்ட ஒரு இரும்புக்கட்டிலில் வறுத்தெடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
ஏறக்குறைய நூறு வருடங்களுக்குப் பிறகு,
மகாக் கான்ஸ்டன்டைன் பேரரசர், அர்ச். லாரன்சின் கல்லறையின் மேல் ஒரு தேவாலயத்கைக் கட்டினார்.
பின்னாளில், முதலாம் தமாசுஸ் பாப்பரசர், இத்தேவாலயத்தை சீரமைத்து, பெரிய பசிலிக்கா தேவாலயமாகப் புதுப்பித்துக் கட்டினார். இது தான், சான்
லொரன்சோ ஃபுவோரி லே முரா என்று,
இக்காலத்தில் அழைக்கப்படுகிற அர்ச். லாரன்ஸ் தேவாலயம். இந்த
தேவாலயத்தில், முதல் வேதசாட்சியாக மரித்த அர்ச். முடியப்பருடைய பரிசுத்த சரீரமும் கூட, பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டி
ருக்கிறது! 2ம்
பெலாஜியுஸ் பாப்பரசர், இப்பசிலிக்கா தேவாலயத்தைப் புதுப்பித்துக் கட்டியபோது, கான்ஸ்டான்டிநோபிளிலிருந்த அர்ச். முடியப்பருடைய
பரிசுத்த சரீரத்தை, இப்பசிலிக்கா தேவாலயத்திற்கு இடமாற்றம் செய்தார்! இந்த பசிலிக்கா தேவாலயத்தில்,
ஹிலாரியுஸ் பாப்பரசரும் 9ம் பத்திநாதர் பாப்பரசரும்
அடக்கம் செய்யப்பட்டிருக் கின்றனர். அர்ச். லாரன்ஸ் கிடத்தப்பட்டிருந்த அந்த பெரிய இரும்புக்கட்டில்,
லூசினாவில், அர்ச். லாரன்ஸ் தேவாலயத்தில், 2ம் பாஸ்கால் பாப்பரசரால்
பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது!
அர்ச். லாரன்ஸ் திருநாளன்று, அர்ச். லாரன்சின் பரிசுத்தத் தலை அடங்கிய அருளிக்கப்பேழை,
வத்திக்கானில் பொது வணக்கத்திற்காக வைக்கப்படும்! 1557ம்
வருடம், ஆகஸ்டு 10ம் தேதி, அர்ச்.
லாரன்ஸ் திருநாளன்று,
அர்ச். குவென்டின் என்ற இடத்தில் நிகழ்ந்த
போரின் போது, அடைந்த வெற்றியின் நினைவாக ஸ்பெயின் அரசரான 2ம்பிலிப் அரசர், அர்ச். லாரன்சிற்குத் தோத்திரமாக ஒரு மாளிகையைக் கட்டினார்.
இக்கட்டிடம், அர்ச். லாரன்சிற்கு மகிமையாக அவர் வேதசாட்சியாகப் பாடுபட்டு மரித்த இரும்புக்கட்டில் வடிவத்தில் அமைக்கப்பட்டது! ✝
தியாக்கோனும்,
வேதசாட்சியுமான அர்ச். லாரன்ஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக