ஜுன் 2️4ம் தேதி
நமதாண்டவரின்
முன்னோடியான
அர்ச். ஸ்நாபக அருளப்பர் பிறந்த திருநாள்
நம் பரிசுத்த தாய் திருச்சபை, ஒவ்வொரு
அர்ச்சிஷ்டவரும் மோட்சத்தில் பிறந்த நாளாகிய அவர் பூமியில் இறந்த தினத்தையே, அவருடைய திருநாளாக அனுசரிக்க வேண்டும் என்கிற விதிமுறையை,
இன்று விசேஷ விதமாக விலக்கம் செய்து, நமதாண்டவரின் பரிசுத்த முன்னோடியும்,”இன்னொரு
எலியாஸ் தீர்க்கதரிசி!” என்றும், “ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர்!” என்றும், “ஆண்டவரின்
திருமுகத்தின் முன்பாக அனுப்பப்பட்ட சம்மனசானவர்!” என்றும் அழைக்கப்பட்டவரும், “ஸ்திரீகளிடத்தில்
பிறந்தவர்களிலேயே மிகப் பெரியவர்!” என்று நமதாண்டவராலேயே விவரிக்கப்பட்டவருமான அர்ச்.ஸ்நாபக
அருளப்பரின் திருநாளை அனுசரித்துக் கொண்டாடுகிறது!
“ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களுக்குள்ளே ஸ்நாபக அருளப்பரைப்
பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லையென்று மெய்யா கவே உங்களுக்குச் சொல்லுகிறேன்”
(மத் 11:11) என்று நமதாண்டவர் , அர்ச்.ஸ்நாபக அருளப்பரை மிக உயர்வாக பாராட்டிப்புகழ்ந்ததை,
சுவிசேஷத்தில் வாசிக்கிறோம். இது, அர்ச்.ஸ்நாபக அருளப்பர் மீது விசேஷ பக்தி பற்றுதலைக்
கொண்டிருக்கும்படி, நம்மை ஊக்குவித்து உற்சாகப்படுத்துகிறது!
அர்ச். ஸ்நாபக அருளப்பர், அவரின் தாயாரான அர்ச்.
எலிசபெத்தம்மாளின் உதரத்திலிருந்தபோது, மகா பரிசுத்த தேவமாதாவை சந்தித்த அதே மணித்துளி
நேரத்திலேயே ஜென்மப் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆனந்த அகமகிழ்வின் சந்தோஷத்தால்
துள்ளிக்குதித்தார்! (லூக் 1:44). இது, ஆதித்திருச்சபையின்
பொதுவான பாரம்பரிய சத்தியமாக இருக்கிறது, என்று அர்ச்.அகுஸ்தீனார் குறிப்பிடுகின்றார்!
அர்ச்.ஸ்நாபக அருளப்பர், தனது தாயாரின் உதரத்திலிருந்தே திவ்ய இஸ்பிரீத்து சாந்துவினால்
நிரப்பப்பட்டிருந்தார்!(லூக் 1:15), என்பது
நிச்சயம். ஆதலால், ஜென்மப் பாவம் இல்லாமல் பிறந்தார், என்பதும் நிச்சயமாயிருக்கிறது!
அர்ச்.ஸ்நாபக அருளப்பர் பிறக்கவிருப்பதைப் பற்றி,
அதிதூதரான அர்ச்.கபிரியேல் சம்மனசானவர், அவருடைய தந்தையான அர்ச்.சக்கரியாஸ், தேவாலயத்தில்
தூபம் காட்டியபோது, அவருக்கு முன்னறிவித்தார்!
உலகத்திற்கு வரவிருந்த திவ்ய இரட்சகரும் நமதாண்டவருமான
திவ்ய சேசுகிறீஸ்துநாதரின் பாதையை ஆயத்தம் செய்வதே, அர்ச்.ஸ்நாபக அருளப்பரின் முதன்மையான
அலுவலாக இருந்தது! நமதாண்டவர் உலகத்தில் பிறப்பதற்கு
முன்னதாகவே, மனுவுருவான திவ்ய சுதனாகிய சர்வேசுரனுக்காக அர்ச்.ஸ்நாபக அருளப்பர் ஜீவிக்கத்
துவக்கினார்!
இவர் பிறந்தபோது, “ஜான்” (அருளப்பர்)
என்கிற பெயர் இவருக்கு வைக்கப்பட்டது! இது, எபிரேய மொழியில் “ஜெஹோனான்”
என்கிற பெயராக இருக்கிறது. “சர்வேசுரன் நமக்கு
இரக்கத்தைக் காண்பித்திருக்கிறார்!”, என்பது இதன் அர்த்தம்.
இதன் பிரகாரம், ஜுன் 24ம் தேதியன்று அர்ச்.ஸ்நாபக
அருளப்பரின் பிறப்பை திருச்சபை , ஒரு பெரிய திருவிழாவாகக் கொண்டாடுகிறது! அதாவது, நமதாண்டவரை
விட, அர்ச்.ஸ்நாபக அருளப்பர் ஆறு மாதம் மூத்தவராக இருக்கிறதால், இவருடைய பிறந்த திருநாள்,
நமதாண்டவர் பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதிக்கு, மிகச்சரியாக ஆறு மாதம் முன்னதாக,
அதாவது ஜுன் 24ம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது!
அப்படியென்றால், அர்ச்.ஸ்நாபக அருளப்பர் பிறந்த திருநாள் ஜுன் 25ம் தேதிக்கு பதிலாக 24ம் தேதி அனுசரிக்கப்படுவது
ஏன்? என்கிற கேள்வி வருகிறது. அதற்கான பதில்: உரோமானிய முறைப்படி, ஒரு தேதியை முன்குறிப்பதற்கு,
அந்த நாளுக்கு அடுத்து வருகிற மாதத்தின் முதல் நாளிலிருந்து பின்னோக்கிக் கணக்கிடுவது
வழக்கமாயிருக்கிறது. அதன்படி, “கிறீஸ்துமஸ்” அடுத்து வருகிற
ஜனவரி முதல் தேதிக்கு முன் எட்டாவது நாளாக இருக்கிறது. அதேபோல், ஜுலை மாதத்தின் முதல்
தேதிக்கு முன் எட்டாவது நாளாக ஜுன் 24ம் தேதி இருக்கிறபடியால், அந்த நாளையே அர்ச்.ஸ்நாபக
அருளப்பருடைய பிறந்த நாளாக நாம் அனுசரித்துக் கொண்டாடுகிறோம்.
அர்ச். ஸ்நாபக அருளப்பரின் திருநாள் மகா பெரிய திருநாளாக
உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே, கிபி 841ம் வருடம் ஃபோன்டெனே
என்ற இடத்தில் நிகழ்ந்த போரானது, அடுத்த நாளுக்கு (ஜுன் 25) தள்ளிப்போடப்பட்டது!
அர்ச். ஸ்நாபக அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக