Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

sacramentals லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sacramentals லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 ஜனவரி, 2024

அருட்கருவிகள் - மெழுகுவர்த்தி


  நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம்.
திருச்சி, 1941


தேவ ஆராதனைகளில் தீபம் உபயோகிப்பது தொன்று. தொட்டு வழங்கி வரும் ஓர் நல்ல வழக்கம். யூதரும் அஞ்ஞானிகளுமே இதைப் பிரயோகித்து வந்தார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை. கிறிஸ்துவர்களுக்குள் இதன் பிரயோகம் ஆரம்பத்தில் அவசியத்தினிமித்தம் உண்டானது என்று சொல்லக் காரணமுண்டு. அது எவ்வாறெனில், பொழுது விடியுமுன்னர் அல்லது சுரங்கங்களில் திவ்விய பலி ஆராதனை நிறைவேற்ற வேண்டியிருந்த காலத்தில் இருளைப் போக்குவதற்குத் தீபம் அவசியமாயிருந்தது. ஆனால் தீபப் பிரயோகத்தில் உன்னதமான ஞானக்கருத்துகள் அடங்கி இருக்கின்றன வென்பதைக் கிறீஸ்தவர்கள் ஆரம்பத்திலேயே தெளிவாய்க் கண்டு கொண்டார்கள் என்பது நிச்சயம்,

வெளிச்சம் சுத்தமானது. அது அந்தகாரத்தை ஊடுருவுகிறது. அதன் எல்கைக்குள் இருப்பதையெல்லாம் பிரகாசிப்பிக்கிறது. ஆதலால், மகா பரிசுத்தரும், சர்வ வியாபியும், சகல வரங்களுக்கும் ஊற்றுமாயிருக்கிற சர்வேசுரனுக்கு அது உச்சிதமான அறிகுறி என்பது வெளிப்படை. அது தமது திவ்விய இரட்சகரையும் அவரது அலுவலையும் உருவகப்படுத்துகிறது. ஏனெனில், அவர் உலகத்தின் ஒளி, அந்தகாரத்திலும் மரண நிழலிலும் உட்கார்ந்திருப்பவர்களைப் பிரகாசிப்பிக்க வந்தவர். மெழுகுவர்த்தியை உபயோகிப்பதற்கும் விசேஷ காரணமுண்டு. மெழுகு மாசற்றதாயிருப்பதி னிமித்தம், கிறீஸ்துநாதரின் மாசற்ற சரீரத்துக்கு உருவகமாய் இருக்கிறது. அதற்குள் இருக்கிற திரி அவரது ஆத்துமத்துக்கு அடையாளம், அதிலிருந்து புறப்படும் சுடர் ஒரே தெய்வீக ஆளிடமாய் தேவ சுபாவமும் மனுஷ சுபாவமும் ஒன்றித்து இருப்பதைக் காட்டுகின்றது.

பச்சாத்தாபம் ஒன்று நீங்கலாக, மற்ற தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றுகையிலெல்லாம் மெழுகுவர்த்தி உபயோகப்படுகிறது. திவ்விய பலிபூசை வேளையிலும், வேறு தேவ ஆராதனை முயற்சிகளிலும், சுற்றுப்பிரகாரங்களின் போதும், இன்னும் இதர சமயங்களிலும் மெழுகுவர்த்தி கொளுத்தி வைக்கிறார்கள்.

பீடத்தின்மேல் மெழுகுவர்த்தியை வைப்பது 11-ம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது என்று சொல்லாம். அதற்கு முந்தின காலங்களில், பீடத்துக்கு அருகாமையில் உயரமான தண்டுகளில் அல்லது சுவரிலிருந்து கொளுவியில் ஊன்றி வைப்பது வழக்கம்.

பெரிய பாட்டுப் பூசையில் ஆறு மெழுகுவர்த்திகளும், சாதாரண பாட்டுப் பூசையில் ஒரே குருவானவர் மாத்திரம் நிறைவேற்றும்போது நான்கு திரிகளும், மேற்றிராணியார் செய்யும் பாட்டுப்பூரையில் ஏழு திரிகளும், மேற்றிராணியா ருடைய சாதாரண பூசையில் நான்கும், குருக்கள் செய்யும் சாதாரண பூசையில் இரண்டு திரிகளும் கொளுத்துவது முறை. ஆயினும், உற்சவ ஆடம்பர தினங்களில் இந்த எண்ணிக்கைக்கு அதிகமாய் வைப்பதில் ஆட்சேபனையில்லை.

இதுவரையும் நாம் சொல்லி வந்தது தேன் மெழுகினால் செய்த திரிகளைப் பற்றியேயன்றி, மீன் திரி என்று நமது நாட்டில் வழங்கும் திரிகளைப் பற்றியல்ல. மேலே சொன்ன சமயங்களில் உபயோகிக்கிற திரி தேன்மெழுகினால் செய்து, தேவமாதாவின் சுத்திகரத் திருநாளன்று அல்லது அதற்குப் புறம்பாய் மந்திரிக்கப்பட்டிருப்பதே ஒழுங்கு. மீன் திரி அல்லது கொழுப்புத் திரி பலிபீடத்திலாவது தேவதிரவிய அதுமானங்களை நிறைவேற்றுகையிலாவது உபயோகிப்பது ஒழுங்கல்ல. இந்தத் திரிகளை மந்திரிக்கிறதுமில்லை. இவைகள் வேண்டுதல் திரி எனப்படும். இவைகள் சாதாரணமாய் ஏதாவது ஒரு அர்ச்சியசிஷ்டவருடைய கரூபத்துக்கு முன்பாக எரிகிறவைகள், விசுவாசிகள் அந்தந்த அர்ச்சியசிஷ்டவர் மட்டில் தங்களுக்குள்ள விசேஷ பற்றுதல் வணக்கத்தைக் காட்டுவதற்காக இவைகளை உபயோகிக்கிறார்கள்.

மந்திரித்த மெழுகுதிரி ஒவ்வொரு கத்தோலிக்கர் வீட்டிலும் இருக்க வேண்டும். குருவானவர் அவ்வீட்டில் யாருக்காவது நற்கருணை அல்லது அவஸ்தைபூசுதல் கொடுக்கும்போது அந்தத் திரிகளைக் கொளுத்தி வைக்க வேண்டும். மரணத் தறுவாயிலிருக்கிறவன் கையில் மந்திரித்த திரியைப் பிடித்திருக்கும்படி செய்வது மகா பக்திக்குரிய ஓர் வழக்கம். இந்தத் திரியின் சுடர் அவனது விசுவாசத்துக்கும். அவன் பெற்றுக்கொண்ட தேவ வரங்களுக்கும். அவன் பெறப் போகிற நித்திய மகிமைக்கும் அடையாளமாயிருக்கிறது.








ஞாயிறு, 31 டிசம்பர், 2023

அருட்கருவிகள் - குருத்தோலைகள் (Palm)

 குருத்தோலைகள்

 நன்றி கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941




மதாண்டவர் தமது மரணத்துக்குச் சில தினங்களுக்கு முன்பு ஜெருசலேம்! பட்டணத்தின் மகிமையாய் பிரவேசித்ததின் ஞாபகார்த்தமாக, குருத்து ஞாயிற்றுக் கிழமையில் குருத்துக்களை மந்திரித்துக் கொடுக்கிற வழக்கம் ஏற்பட்டது. நமது திவ்விய இரட்சகர் பட்டணத்தை நெருங்கி வரும்போது திரளான ஜனங்கள் அவரை எதிர்கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருசிலர் அற்புதமானவரும் புகழ் பெற்ற தீர்க்கதரிசியுமானவரைப் பார்க்க வேண்டுமென்ற வினோதப் பிரியத்தால் வந்தவர்கள். வேறு சிலர் அவருக்குள்ள அற்புத வரத்தைக் காட்டி ஏதாவது புதுமை செய்வாரென்று எண்ணி வந்தவர்கள் இன்னும் சிலர் அவர்மட்டில் விசுவாசங்கொண்டு அவரே வெரு காலமாய் எதிர்ப் பார்க்கப் பட்ட இரட்சகர் என்று அங்கீகரித்தவர்கள்.

ஜனங்கள் கையில் குருத்தோலை பிடித்து, மங்களம் பாடிக்கொண்டு, சேசுநாதர் வரும் வழியில் தங்கள் வஸ்திரங்களை விரித்துச் சங்கைசெய்து, அவரை ஆடம்பரத்துடன் அழைத்துச் சென்றார்கள் என்று சுவிசேஷத்தில் சொல்லியிருக்கிறது. கீழ்த்திசை நாடுகளில் உள்ள ஈந்து ஓலைகள்தான் அவர்கள் கையில் பிடித்திருந்தவை.


ஈந்தோலையின் கருத்து: ஈந்து ஓலை அல்லது குருத்து ஓலை வெற்றிக்கு அடையாளம். சந்தோஷத்தையும் குதூகலத்தையும் காட்டுவதற்கு இதை உபயோகப்படுத்தும் வழக்கம் வெகு சாதாரண மானது. அஞ்ஞான ஜனங்களுள், ஜெயசீலரான தளபதிகளும் வெற்றி வீரரும், ஈந்து ஓலைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு மகிமையாய்ச் செல்வது நீண்டகால வழக்கம். யூதர்கள், கூடாரத் திருநாள் எனப்பட்ட மாசூல் உற்சவத்தைச் சிறப்பிப்பதற்குக் குருத்து ஓலைகளை உபயோகித்தார்கள். கிறிஸ்தவ வழக்கப்படி வேதசாட்சி களின் வெற்றியைக் குறிப்பிடுவதற்குக் குருத்து ஓலை உபயோகிக் கப்படுகிறது. குருத்துக்களுள்ள மரம் நிழழும் கனியும் தருவதின் பொருட்டுத் தேவ பராமரிப்பின் பாதுகாவலையும் அருட் கொடை  யையும் கட்டிக்காட்டும் குறியாய் விளங்குகிறது.

குருத்து ஞாயிற்றுக்கிழமையில் மந்திரிப்பதற்கு மிகவும் தகுதியான ஓலை ஈந்து (ஈச்ச மர) ஓலைதான் என்று சொல்லத் தேவையில்லை. இது அகப்படாத இடங்களில், தென்னங் குருத்துகளை அல்லது ஒலிவக் கிளைகளை உபயோகித்துக் கொள்ளலாம்.

குருத்து மந்திரித்தல்: இந்த சடங்கு எக்காலத்தில் ஆரம்பமாயிற்று என்று திட்டமாய்த் தெரியவில்லை. திருச்சபை பஞ்சாங்கங்களுள் மிகப் பழமையானவைகளிலும் இதர புத்தகங்களிலும் காணக் கிடக்கிற சில குறிப்புகளைக் கவனிக்கும்போது. 5-வது நூற்றாண் டிலேயே இது அனுசரிக்கப் பட்டுவந்ததென்று நினைக்கக் காரண முண்டு, ஆயினும், இதைப்பற்றித் திட்டமான விபரம் சுமார் 700-ம் ஆண்டில் அர்ச். பேதா காலத்தில்தான் காண்கிறோம்.

இந்தச் சடங்கு பெரிய பூசைக்கு முன்பு நடைபெறும். பூசை செய்யப் போகிற குருவானவர் ஊதா  காப்பா (மேலங்கி) அணிந்து, இஸ்ராயேலர் வனாந்தரத்தின் வழியாய் சீனாய் மலைக்குச் சென்ற பிரயாணத்திற் கண்ட பன்னிரண்டு நீரூற்றுகளையும், எழுபது ஈத்து மரங்களையும், சர்வேசுரன் அவர்களுக்கு பரமண்டலத்திலிருந்து மன்னாவென்னும் போஜனத்தை அனுப்புவதாக வாக்களித்ததையும் எடுத்துரைக்கிற பழைய ஆகமத்தின் பாகங்களை வாசிக்கிறார். இதன்பின் நமது ஆண்டவர் ஜெருசலேம் பட்டணத்தில் பிரவேசித்த சம்பவத்தை விவரிக்கிற பாகத்தை அர்ச். மத்தேயு சுவிசேஷத்தி லிருந்து வாசிக்கிறார். இது முடிந்ததும், நமக்கு வெற்றியின் குருத் தோலை கிடைக்கும்படியாக மன்றாடும் ஜெபத்தைச் சொல்லி, குருத்துக்களின் பேரிலும் அவற்றைப் பற்றுதலுடன் வைத்திருப் பவர்கள் பேரிலும் தேவ ஆசிரை மன்றாடி, பேழையிலிருந்த நோவாவிடம் புறா கொண்டு வந்த ஒலிவக்கிளையைக் குறித்தும், குருத்து வெற்றிக்கு அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டியும் நேர்த்தியான முகவுரை ஒன்று வாசிக்கிறார் அல்லது பாடுகிறார். சாங்க்துஸ் பாடினபின், ஐந்து வெவ்வேறு ஜெபங்கள் சொல்லி (அர்ச்சியசிஷ்டவாரம் என்னும் புத்தகத்தில் காண்க.) குருத்துகளின் பேரில் மும்முறை தீர்த்தம் தெளித்து மும்முறை தூபங்காட்டிப் பின்னும் ஓர் ஜெபம் சொல்லி முடிப்பார்.

இவ்விதம் மந்திரித்தபிறகு, முதன்முதல் குருக்களுக்கும், அவர்களுக் கொடுப்பார். கிராதியருகில் போய்க் குருத்தை வாங்குவது வழக்கமா யிருந்தாலும், நமது தேவாவயங்களில் ஜனத்திரளின் நெருக்கத்தை முன்னிட்டு, அவ்விதம் செய்ய இயலாததால், ஜனங்கள் இருக்கிற இடத்திலே அவைகளை வாங்கிக்கொள்வது பெரும்பாலும் வழக்க மாயிற்று. பூசை நேரத்தில் நமதாண்டவருடைய பாடுகளின் வரலாற்றை வாசிக்கும் போது, கையில் குருத்துகளைப் பிடித்திருக்க வேண்டும்.

அக்காலத்தில் குருத்தைப் பிடித்துக்கொண்டு ஒரு கோவிலிலிருந்து வேறொரு கோவிலுக்குச் சுற்றுப்பிரகாராமாய் சென்று, இரண்டாவது கோவிலில் பூசை காண்பது வழக்கமாயிருந்தது. இக்காலத்தில் ஒரே கோவிலைச் சுற்றி வருகிறோம். அச்சமயத்தில் குருத்தைப் பிடித்துக் கொண்டு, நமதாண்டவரை ஜெருசலேம் பட்டணத்துக்குள் ஆடம்பர மாய் அழைத்துச் சென்ற சம்பவத்தை ஞாபகப்படுத்தி, மோட்சமாகிய ஜெருசலேம் நகருக்கு நாம் போய்ச்சேரும் வரத்தை ஆண்டவர் நமக்கு அளித்தருளும்படி மன்றாடுவோமாக!

குரு தூபக்கலசத்தில் சாம்பிராணியைப் போட்ட பிறகு: “ஆண்டவரே, நீர் ஈசோப் என்கிற புல்லினால்" என்று துவங்கும் ஆரம்ப வாக்கியத்தை மட்டும் சொல்லிக்கொண்டு தீர்த்தத்தால் மும்முறை குருத்தோலைகளின்மேல் தெளித்து, மும்முறை தூபம் காட்டுகிறார்.


செபம்

சர்வேசுரா, தேவரீருடைய திருக்குமாரனும் எங்கள் ஆண்டவருமான சேசு கிறீஸ்துநாதரை எங்களுடைய இரட்சண்யத்தின் பொருட்டு அவர் எங்களிடமாய்த் தம்மைத் தாழ்த்தி, எங்களைத் தேவரீரிடத்தில் மீளவும் சேர்க்கும்படி இவ்வுலகத்திற்கு அனுப்பினீரே: அவர் வேதாகமங்கள் நிறைவேறும் பொருட்டு ஜெருசலேமிற்கு எழுந்தருளினபோது. திரளான விசுவாசிகள் மிகுந்த பற்றுதலுள்ள பக்தியோடு தங்களுடைய வஸ்திரங்களையும் குருத்தோலை களையும் அவரது பாதையில் விரித்தார்களே: நாங்களும் அவருக்கு விசுவாசத்தின் பாதையை ஆயத்தஞ் செய்யவும், இடறும் கல்லும், துர்மாதிரிகையின் பாறையும் அப்பாதையிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டு, உமது திவ்விய சமூகத்தில் எங்களுடைய நற்கிரியைகள் நீதியென்னும் கிளைகளை விட்டுத் தழைக்கவும். நாங்கள் அவருடைய திருப்பாதச் சுவடுகளை பின்செல்ல அருகராகவும் அநுக்கிரகஞ் செய்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில் சர்வேசுரனும், சதாகாலமும் சீவியரும் இராச்சிய பரிபாலனஞ் செய்கிறவருமாயிருக்கிற உமது திருக்குமாரனும் எங்கள் ஆண்டவருமான சேசு கிறீஸ்துவின் பேரால் ஆமென்.

வெள்ளி, 22 டிசம்பர், 2023

அருட்கருவிகள் - சாம்பிராணித் தூபம் (Incense)


நன்றி கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941




தேவ ஆராதனை முயற்சிகள் ஆடம்பரச் சிறப்புடன் நடைபெறுவதற்கு அல்லாமல்  செய்பவர்களும், அம்முயற்சிகளில் பங்கடைகிற  சகலரும் பக்தி பற்றுதலில் அதிகரிக்கும்படியாக சடங்குமுறை ஆசாரங்கள் மிகுந்த பிரயோசனமுள்ளவைகள் என்று திருச்சபை எப்போதும் அங்கிகரித்திருக்கிறது.

யாதாமொரு வேத ஆசாரமுறை அல்லது சடங்கு ஆரம்பத்தில் அஞ்ஞானிகளால் அல்லது யூதரால் அனுசரிக்கப்பட்டது என்கிற ஒரே காரணத்தின்பொருட்டு, அந்த ஆசாரம் அல்லது சடங்குமுறை நாம் அநுசரிக்கத் தக்கதல்லவென்று திருச்சபை விலக்கிவிடுகிறதில்லை. திருச்சபையில் இப்போது வழங்கி வருகிற ஆராதனை ஆசார முயற்சிகளிற் சில மோயிசன் சட்டத்தில் உள்ளவைகள். வேறு சில அஞ்ஞானிகள் அநுசரித்தவைகள். இதனிமித்தம், திருச்சபை விரோதிகள் சிலர் கத்தோலிக்க வேதம் கிறீஸ்தவ அஞ்ஞானம் என்று குறைகூறத் தலைப்பட்டார்கள். இது முழுவதும் தப்பறையானது. ஏனெனில் மனிதன் கடவுளை ஆராதிக்கிற வழிமுறைகளில் அநேக அநுஷ்டானங்கள். கடவுள் மட்டில் மனிதனுக்குள்ள பக்தி பற்றுதலை வெளியரங்கமாய்க் காட்டுபவைகள் என்கிற அளவில், அவைகள் குற்றமற்றவைகள் என்று திருச்சபை  அறிந்து, அவைகளில் சிறந்த சில அநுஷ்டானங்களைத் தனது ஆசாரமுறையில் ஏற்றுக்கொண்டது. அவ்வாறே, தீர்த்தப் பிரயோகம், சுருபங்கள் அணிவது. சாம்பிராணித் தூபம் ஆராதனையில் உபயோகிப்பது. இவை யாவும் ஏற்கனவே யூதர் அல்லது அஞ்ஞானிகள் அனுசரித்தவைகள்தான். இவைகளெல்லாம் பக்திப் பற்றுதலை மூட்டுவதற்குச் சிறந்த சாதனங்கள். இவைகளை உபயோகிப்பதில் அஞ்ஞானம் ஒன்றுமில்லை. ஞானமே முழுவதும் பொருந்தியிருக்கிறது.


சாம்பிராணி, ஆசியாவின் சில பாகங்களில் சாம்பிராணி ஜாதி மரங்களில் உண்டாகும் பிசின். இதைப் பொடித்து நெருப்புக் கங்குகளின் மேல் தூவினால், சுகந்தம் வீசும் வெள்ளை நிறமான புகை கிளம்புகிறது. இந்தப் புகைக்குத் தான் தூபம் என்று பெயர்.

பழைய ஆகமங்களில் இதன் பிரயோகத்தைப்பற்றிய குறிப்புகள் அநேகம் உண்டு. தேவ கூடார ஆலயத்தில், காலை மாலை சாம்பிராணி புகைப்பதற்கென்று ஒரு பீடம் ஏற்பட்டிருந்தது. யாத்திராகமத்தில் அதைக் குறித்துச் சொல்லியிருப்பதாவது: சுகந்த வர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும். எடுத்துப் பொடித்துத் தூளாக்கிக் கூடாரத்துக்கு முன்பாக வைப்பாயாக, இத்தர் சாம்பிராணித் தூபம் மகா பரிசுத்தமானதென்று உணரக்கடவாய். சங்கீதங்களிலும், இசாயாஸ், ஜெரேமியாஸ். மலக்கியாஸ் தீர்க்கத் தரிசனங்களிலும், அர்ச். ஸ்நாபக அருளப்பரின் தந்தையாகிய சக்கரியாஸ் கண்ட காட்சியை எடுத்துரைக்கிற சுவிசேஷ பாகத்திலும் சாம்பிராணித் தூபத்தைப்பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

அஞ்ஞானிகள் தங்கள் ஆராதனையில் அதை உபயோகித்தார்கள் என்பதற்கு ஒளிட், வீர்ஜில் என்னும் புலவர்கள் அத்தாட்சி கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது உரோமானருடைய ஆராதனையைப்பற்றி, அந்த வழக்கம் நமது நாட்டிலிருந்துதன் உரோமானருக்குள் பரவிவது என்று சொல்ல நியாயமுண்டு. சூடம், கற்பூரம், இவைகளின் உபயோகம் இக்காலத்திலும் இந்துமத ஆலயங்களில் வெகு சாதாரணம் என்பது நாமே அறிந்த விஷயம். எஜிப்து தேசத்து ஆலயங்களிலும் கல்லறைகளிலும் உள்ள சித்திரங்கள், இப்போது நாம். உபயோகிக்கிற தூபக் கலசங்களைப் போன்ற பாத்திரங்களில் சாம்பிராணியைப் புகைத்து அரசருக்குந் தேவர்களுக்குத் தூபங்காட்டி ஆராதனை செலுத்துவதைக் காட்டுகின்றன.

கத்தோலிக்கத் திருச்சபையில் தூபப்பிரயோகம்

எக்காலத்தில் ஏற்பாடாயிற்று என்று திட்டமாய்ச் சொல்ல முடியாது. ஐந்தாம் நூற்றாண்டுக்குமுன் அது பிரயோகிக்கப்பட்டதாகச் சொல்வதற்குக் தீட்டமான அத்தாட்சி இல்லை. ஆயினும் பழைய ஆகமங்களில் அதன் பிரயோகம் வெகு சாதாரணமாய் இருந்ததுபற்றி, கத்தோலிக்கத் திருச்சபையிலும் அது பூர்வீக காலந்தொட்டே வழங்கி வந்திருக்கும் என்று சொல்ல நியாய முண்டு, இது உரோமையிலும் ஐரோப்பாவின் மேற்பாகங்களிலும் ஆரம்பிக்கும் முன்னரே, ரஷ்யாவிலும் கீழ்திசை நாடுகளிலும் வழங்கி வந்தது என்பதற்குச் சந்தேகமில்லை. துவக்கத்தில், பூசையில் சுவிசேஷம் வாசிக்கையில் மாத்திரம் தூபம் பிரயோகித்தார்கள். நாளடைவில், பூசையின் வேறு  பாகங்களிலும் இதர ஆராதனை முயற்சிகளிலும் உபயோகிக்க லானார்கள்.

இக்காலத்தில், திருச்சபையின் ஆடம்பர ஆராதனை முயற்சிகளில் தூபம் காட்டுவது முக்கியமான அம்சங்களில் ஒன்றாய் விளங்குகிறது. இலத்தின் ரீதிப்பிரகாரம் தனிப்பூசையில் தூபம் உபயோகிப்பதில்லை. ஆடம்பர அல்லது பெரிய பாட்டுப்பூசையில், பிரவேச கீதத்துக்கு (Introit) முன்னும், சுவிசேஷ ஆரம்பத்திலும், பாத்திரம் ஒப்புக்கொடுத்த பின்னும், எழுந்தேற்ற சமயத்திலும் உபயோகிக்கப்படுகிறது. மரித்தவர்களுக்காகச் செய்யும் பாட்டுப்பூசையில், மேலே கூறின சமயங்களுள் முதல் இரண்டு வேளைகளிலும் உபயோகிப்பதில்லை பலி ஒப்புக்கொடுக்கிற குருவானவருக்கும் பணிவிடை செய்கிற உதவிக் குருக்களுக்கும் மரியாதையின் அடையாளமாகத் தூபங்காட்டுவது பாட்டுப்பூசைச் சடங்கில் ஏற்பட்டது. பூசையிலுமின்றி, சுற்றுப்பிரகாரங்கள், ஆசீர்வாதம், மரித்தோர் அடக்கச் சடங்கு முதலியவைகளிலும் தூபம் உபயோகிக்கிறார்கள். ஆட்களுக்கு மாத்திரமல்ல, அருளிக்கங்கள், சுரூபங்கள், படங்கள் முதலியவைகளுக்கும் தூபம் காட்டுவது உண்டு. சில பொருட்களை மந்திரிக்கையிலும் தூபம் உபயோகப்படுகிறது.

தூபங்காட்டுவதின் கருத்து என்ன? இது எளிதில் கண்டுபிடிக்கக்கூடியதே. சாம்பிராணி எரிவது. விசுவாசிகளிடம் இருக்கவேண்டிய பற்றுதலுக்கும், அதிலிருந்து கிளம்பும் சுகந்த வாசனை கிறீஸ்தவ புண்ணியத்தின் நறுமணத்திற்கும், மேலே எழும்பும் புகையானது. சர்வேசுரனுடைய சந்நிதானத்துக்கு ஏறிச் செல்லுகிற நமது ஜெபத்துக்கும் அடையாளமாம். அர்ச். அருளப்பர் காட்சியாகமத்தில் சொல்லியிருப்பது போல்,அர்ச்சியசிஷ்டவர்களின் ஜெபமாகிய தூபப்புகை சம்மனசுவின் கரத்திலிருந்து சர்வேசுரனுக்கு முன்பாக ஏறிச் சென்றது. தூபங்காட்டுவது மரியாதை வணக்கத்தின் அறிகுறி என்பதே பொதுக்கருத்து. ஆகையால் வெளிர் சிறப்புக்கும் பக்தி பற்றுதலை எழுப்புவதற்கும் சாம்பிராணித் தூபம் சிறந்த சாதனம் என்பதற்குச் சந்தேகமில்லை.

ஆண்டவரே என் விண்ணப்பம் தீபத்தூபமாகவும், என் கைகளை ஏந்துதல் அந்திப் பலியாகவும் உமது சமூகத்தில் ஏறக்கடவது (சங். 140:2)

வியாழன், 21 டிசம்பர், 2023

Sacramentals - An explanation in Tamil

 அருட்கருவிகள் - ஓர் விளக்கம்
Sacramentals - An explanation


அருட்கருவிகள் - உதாரணங்கள்


1. நம்மை அர்ச்சிப்பதற்கு தேவதிரவிய அனுமானங்களைத் தவிர வேறே வெளி வழிவகைகள் உண்டா?

திருச்சபை உபயோகிக்கும் அருட்கருவிகள் உண்டு.

2. அருட்கருவிகள் என்பதற்கு அர்த்தமென்ன?

தேவதிரவிய அனுமானங்களின் பாவனையாக, திருச்சபை தனது மன்றாட்டினால் நமக்கு வேண்டிய சில நன்மை சகாயங்களை, விசேஷமாய் ஞான நன்மைகளை, அடைந்து கொடுக்கும்படி உபயோகிக்கும் பொருட்கள் அல்லது கிருத்தியங்களே (செயல்கள்) அருட்கருவிகள் எனப்படும்.

3. இவ்விடம் கிருத்தியங்கள் அல்லது செயல்கள் என்றால் என்ன?

அருட்கருவியின் தன்மையான விஷயம் தற்காலமாயிருந்து. அதற்குப்பின் நிலையற்றதாயிருந்தால் கிருத்தியம் அல்லது செயல்கள் எனப்படும். உதாரணமாக: மந்திரித்தல்.

4. இவ்விடம் பொருட்கள் என்றால் என்ன?

அருட்கருவியின் தன்மையான விஷயம் நிலையுள்ளதாயிருந்தால், அது பொருள் எனப்படும்.

உதாரணமாக: தீர்த்தம், மந்திரிக்கப்பட்ட சுரூபங்கள் முதலியவைகள்.

5. அருட்கருவிகள் எப்படித் தேவதிரவிய அனுமானங்களின் பாவனையாயிருக்கின்றன?

அருட் கருவிகளும் தேவதிரவிய அனுமானங்களைப் போல், தம் வழியாய் அடையக்கூடுமான இலௌகிக நன்மைகளையோ அல்லது ஞான நன்மைகளையோ குறித்துக்காட்டும் வெளியரங்கமான அடையாளங்களாயிருக்கின்றன.

6. தேவதிரவிய அனுமானங்களுக்கும் அருட்கருவிகளுக்குமுள்ள வித்தியாசம் என்ன?

(1) தேவதிரவிய அனுமானங்களெல்லாம் சேசு கிறீஸ்துநாதரால் உண்டாக்கப்பட்டன. அருட்கருவிகளோ திருச்சபையால் ஏற்படுத்தப்பட்டன. மேலும் திருச்சபை புதுத் தேவதிரவிய அனுமானங்களை ஏற்படுத்தக்கூடாது. ஆனால் புது அருட்கருவிகளை உண்டாக்கலாம்.

7. அருட்கருவிகள் எத்தனை வகைப்படும்?

அவைகளை ஆறு பிரிவாய்ப் பிரிக்கலாம்.

(1) செபங்கள் அதாவது திருச்சபையால் கற்பிக்கப்பட்டு அதன் பெயரால் சொல்லப்படும் செபங்கள். உதாரணமாக: ஞானஸ்நானம், அவஸ்தைப்பூசுதல் கொடுக்கப்படும்போது சொல்லப்படும் கர்த்தர் கற்பித்த செபம், பூசைச் செபம், திருச்சபையின் கட்டளைப்படி குருக்கள் செபிக்கும் சங்கீதமாலை முதலியவைகள். ஒவ்வொருவரும் தனித்தனியே செபிக்கும் செபம் அருட்கருவியல்ல.

(2) தீர்ந்தத் தெளித்தலும், திருப்பூசுதலும்,

(3) மந்திரிக்கப்பட்ட பதார்த்தங்களைப் புசித்தல்

(4) பூசையின் துவக்கத்திலும், திவ்விய நன்மை கொடுக்கும்போதும், கட்டளை செபம் செபிக்கும்போதும் சொல்லப்படுகிற பாவசங்கீர்த்தன மந்திரம்.

(5) திருச்சபை கற்பிக்கிற தானதர்மங்களும், ஆத்தும சரீர சம்பந்தமான சகல தமக்கிரியைகளும்,

உதாரணமாக: விசுவாசப்பரம்புதல், பாலர் சபை, அர்ச். இராயப்பர் காசு முதலியவைகளுக்குச் செய்யும் தர்மம், ஞானோபதேசம் கற்றுக் கொடுத்தல், வியாதிக்காரரைச் சந்தித்தல் முதலியவைகள். மற்றப்படி ஒவ்வொருவரும் தன் இஷ்டப்படி செய்யும் தானதர்மம் அருட்கருவியல்ல.

(6) திருச்சபையால் ஏற்படுத்தப்பட்டு ஜனங்கள் பேரிலாவது, யாதொரு பொருள் பேரிலாவது, அர்ச். பாப்பாண்டவர். மேற்றிராணிமார்கள், குருக்கள் கொடுக்கிற சகலவித ஆசீர்வாதங்களும், அவ்விதமாய் மந்திரிக்கப்பட்ட பொருட்களும்.

8. அருட்கருவிகளால் விசேஷமாய் விளையும் நன்மைகள் எவை? 

பலவித நன்மைகளை, விசேஷமாய் ஞான நன்மைகளை வருவிக்க அருட்கருவிகளுக்குச் சக்தியிருக்கின்றது. (1) நம்மிடத்தில் ஸ்திரமான பக்திப் பற்றுதலை எழுப்பி, நாம் பாவத்தை விலக்கிப் புண்ணியத்தைச் செய்யும்படி வேண்டிய உதவி வரப்பிரசாதத்தைப் பெறுவிக்கிறதுமின்றி, பாவப்பொறுத்தலை அடைய நம்மை ஆயத்தப்படுத்துகின்றன.

(2) மனப்பற்றுதலற்ற சகல அற்பப்பாவங்களும் மன்னிக்கப்படும்.

(3) பசாசானது இருக்கக்கூடிய இடங்களிலும், ஆட்களிலும், பொருட்களிலும் நின்று அதைத் துரத்துகின்றன.

(4) அநேக பிரபஞ்சத் தீமைகளினின்று இரட்சிக்கின்றன. இப்படியே வியாதி, தொத்துநோய், இடி, பஞ்சம் முதலிய துன்ப துரிதங்களிலும், ஆபத்து விபத்துக்களிலும் நின்று காப்பாற்றுகின்றன. மேலும் பற்பல இலௌகீக நன்மைகளையும் அளிக்கின்றன. உதாரணமாக: மழை, சௌக்கியம், வெள்ளாண்மை.

(5) மன்னிக்கப்பட்ட பாவங்களுக்கு இன்னும் வரவேண்டிய அநித்திய ஆக்கினையும் நீங்கிப்போகலாமென்பது சில சிறந்த வேதசாஸ்திரிகளின் அபிப்பிராயம்.

9. அருட்கருவிகளுக்குரிய நன்மைகளைப் பெறுவதற்கு வேண்டிய ஆயத்தம் என்ன?

விசுவாசம், பக்தி, பாவங்களின் மேல் மனஸ்தாபம் முதலிய பற்றுதல்கள் அவசியம். மெய்யான மனஸ்தம் இல்லாமல் யாதொரு அற்பப்பாவமும் மன்னிக்கப்படாது. அருட்கருவிகளைப் பெறுபவர்களின் ஆயத்தத்துக்குத் தகுந்தபடி அதிகமான பலனைப் பயக்குவதினால், அவைகளால் வரும் நன்மைகளை ஏராளமாய் அடையும்படி நல்ல ஆயத்தமாயிருக்க வேண்டியது