Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 10 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 19


போதக துறவற சபையை துவங்குதல் 

அர்ச்.பிரான்சிஸ் அசிசியார், அர்ச். சாமிநாதரிடம், விரைவில் அவருடைய போதகக் குருக்களுக்கான சபையும் பாப்பரசரால் அங்கிகரிக்கப்படும் என்றும் அந்த சபைக்கு நன்மை எல்லாம் நிகழும் என்றும் கூறினார். அப்போது அர்ச். சாமிநாதர் இருதய துடிப்பு அதிகரிக்குமளவுக்கு சந்தோஷ மகிழ்வால் நிரம்பினார். சாமிநாதரிடம், பிரான்சிஸ், “நான் 5 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு வந்து எனது சபைக்கான பாப்பரசருடைய அனுமதிக்காக வந்தேன். பிறகு 3 வருடங்களுக்கு முன்பாக இங்கு வந்தேன். எனவே உங்கள் சபைக்கான அனுமதி கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்டால்அதைரியப்படாதீர்கள். உங்கள் நம்பிக்கையை நமது ஆண்டவரிடத்தில் வைத்துவிடுங்கள். அவர் உங்களைக் காப்பாற்றுவார்” என்றார். பிறகு இருவரும் அர்ச்.இராயப்பரின் பேராலயத்தை விட்டு வெளியேறினர். அர்ச்.பிரான்சிஸ் சாமிநாதரிடம், தனது சீடர்களுடன் இத்தாலி நாடெங்கும் திருச்சபைக்காக தனது சபை ஆற்றி வரும் ஞான அலுவலின் சாராம்சத்தை சுருக்கமாக எடுத்துரைத்தார். அர்ச். சாமிநாதருடைய வேதபோதக அலுவலைப் போலவே அவர்களும், இத்தாலி நாட்டின் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஆண்டவருடைய சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வருவதைப் பற்றிக் கூறினார். அவர்கள், அர்ச்.சாமிநாதரும் அவருடைய சீடர்களும் செய்து வந்ததுபோல கல்வியில் தேர்ச்சிபெற்றிருந்த பதிதர்களுடனும் அவர்களுடைய தலைவர்களுடனும் வேதத்தைப் பற்றிய தர்க்கத்தில் ஈடுபடாமலிருந்தபோதிலும், ஆண்டவருடைய சுவிசேஷத்தை போதிப்பதிலே முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தனர். 

ஏனெனில் இத்தாலியில் அக்காலத்தில் அநேக உயர்குலக் குடும்பங்கள் உலக சுகபோகங்களிலும் ஆடம்பரமான ஜீவியத்திலும் மிதமிஞ்சிய அளவிற்கு ஈடுபட்டிருந்ததால், வேதவிசுவாசத்தை இழந்துவிடும் அபாயத்திலிருந்தனர். அவர்களுக்கு வேதத்தைப் போதிப்பதிலேயே பிரான்சிஸின் சபையினர் ஈடுபடலாயினர். அர்ச்.பிரான்சிஸ் மற்றும் அவருடைய சிடர்கள் அனைவரும் தங்களுக்கென்று யாதொரு பொருளையும் வைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் விட்டு விட்டு வந்தவர்கள். அவர்களுக்கென்று இந்த உலகில் ஒன்றும் இல்லை. அவர்கள் தங்களுடைய உடை மற்றும் அன்றாட உணவிற்கு கூட ஒவ்வொரு விடாகச் சென்று பிச்சையெடுப்பார்கள். சாமிநாதரிடம், பிரான்சிஸ், “நமது நேச ஆண்டவருக்காக இவ்வுலகில் நாம் ஏழையாக ஜீவிப்பது எவ்வளவு உன்னதமான ஜீவியம்! அதற்கு ஈடு இணை வேறொன்றும் இல்லை! ஒரு மனிதனுக்கு உடைமைகள் இருப்பின் அவற்றைப் பாதுகாப்பதற்காக பெட்டகங்களையும் ஆயுதங்களையும் அவன் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு அவன் உடைமைகளையும், ஆயுதங்களையும் வைத்திருக்கும்போது அவற்றால் அவன் தனது உறவினருடனும் அயலாருடனும் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனிமித்தமே அவனுடைய தேவசிநேகமும் பிறர்சிநேகமும் கூட காயப்பட்டு பாதிக்கும் நிலைமைக்குள்ளாகக் கூடும். சகோ.தோமினிக்! இதை ஒத்துக் கொள்கிறிர்களா?” என்று கூறினார். 

இதுவரை மிகுந்த வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்த அர்ச்.சாமிநாதர், அர்ச்.பிரான்சிஸின் இந்தக் கருத்துக்கு தானும் முழு மனதுடன் உடன்படுவதாக தெரிவித்தார். பல வாரங்கள் ரோமில் இவ்வாறாக இருவரும் ஒன்றாக தங்கியிருந்தபோது அர்ச்.பிரான்சிஸ் கூறிய அநேக காரியங்களையும் அர்ச்.சாமிநாதர் மிகுந்த உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். அட்ட தரித்திரத்தை தனது சுபாவத்திலேயே அணிந்து கொண்டவராக, தனது சகோதரி “ஏழ்மை”யை நேசித்து ஜீவித்த அர்ச்.பிரான்சிஸ் அசிசியாரின் உன்னதமான தேவசிநேக ஜீவியத்தையும் அதை விளக்கிக் கூறிய அவருடைய வார்த்தைகளையும் முழு மனதுடனும் உற்சாகத்துடனும் ஏற்று பாராட்டிய பிறகு அவரிடமிருந்து அர்ச்.சாமிநாதர் விடைபெற்றுக் கொண்டார்.

ஒரு நாள் பாப்பரசர் 3ம் இன்னசன்ட், அர்ச்.சாமிநாதரை வத்திக்கானுக்கு வரவழைத்து, “நேற்று இரவு ஒரு காட்சி கண்டேன். அர்ச்.அருளப்பருடைய லாத்தரன் பேராலயம் இடிந்து விழுவதற்கான மிக ஆழமும் அகலமுமான வெடிப்புகள் அதன் சுவற்களில் தோன்றி அதன் கூரை பிளந்து போகும் அபாயத்தில் இருக்கும் போது நீர் அங்கு தோன்றினிர்.. ” என்று கூறினார்.

 அதற்கு “நானா! அங்கு தோன்றினேன், பரிசுத்த தந்தையே!” என்று பாப்பரசரிடம் சாமிநாதர் வினவினார். 

பாப்பரசர், “ ஆம். நிர் தான் அங்கு தோன்றி, இராட்சதனைப் போல மாபெரும் உருவமாக வளர்ந்து, உமது தோள்களினால், விழ இருந்த பேராலயத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டீர். அம்மாபெரும் பிரம்மாண்டமான கதிட்ரல் பேராலயத்தை நீர் ஒரு துளி கஷ்டமுமின்றி உமது கரங்களை நீட்டி தாங்கினீர். நீர் அதைத் தொட்டவுடனே அந்த பேராலயக் கட்டிடத்தின் ஓட்டை, விரிசல் இடிபாடுகள் அனைத்தும் மறைந்து போகவே மீண்டும் புதுப்பொலிவுடன் கம்பீரமாக நின்றது” என்று பதிலளித்தார். பாப்பரசர் தன்னைப் பற்றி இவ்வாறு கூறியதை அர்ச்.சாமிநாதர் மிகுந்த திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அவரால் ஒன்றும் பேச இயலவில்லை. மேலும், பாப்பரசர் அவரிடம், “என் பிரிய மகனே கேளுங்கள்! சில வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு காட்சியைக் கண்டேன். அப்பொழுது நமது சிறிய நண்பர், சகோதரர் பிரான்சிஸ் என் முன்பாக தோன்றினார். அப்பொழுது அவர் அசிசியிலிருந்து இங்கு வந்து ரோமாபுரியில் தங்கியிருந்தார். அவர் தன்னுடைய பிச்சையெடுக்கும் துறவிகளுடைய சபைக்கான பாப்பரசருடைய அனுமதிக்காகக் காத்திருந்தார். முதன் முதலில் அவரைக் கண்டவுடன் அவருடைய கருத்துக்கள் பின்பற்றமுடியாதபடிக்கு மிகவும் கடினமானவையாகத் தோன்றியதால், அவருடைய சபைக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டேன். ஆனால் அதற்குப் பிறகு நேற்று இரவு நான் கண்ட காட்சியைப் போலவே ஒரு காட்சியைக் கண்டேன். அப்பொழுது பிரான்சிஸ் மிகச் சரியானவற்றையே கூறியிருக்கிறார் என்று உணர்ந்தேன். அதாவது தரித்திர ஜீவியத்தைப் பற்றி மக்களிடம் போதித்து, நம் ஆண்டவர் சேசுகிறிஸ்துநாதர்மேல் நமக்குள்ள சிநேகத்தை முன்னிட்டு ஏழ்மையை நாம் அணிந்துகொள்வோமேயாகில், ஆடம்பரமும் தப்பறையுமான இவ்வுலகத்தின் ஜீவிய முறைகள் மறைந்து அழிந்து போகும். அதன்பிறகு இத்தாலியா நாடெங்கும், இவ்வுலகம் முழுவதும் புதியதொரு ஞானஜீவியத்திற்கான சுதந்திரம் மலரும்” என்றார். 

மேலும் பாப்பரசர் தாம் எளிய சகோதரர் பிரான்சிஸின் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் கடந்த சில வருடங்களாக அவரும் அவருடைய சிடர்களும் ஆன்ம இரட்சணிய அலுவலில் அரும்பாடு பட்டு உழைத்ததன் பயனாக எண்ணற்ற ஆத்துமங்களை இரட்சணிய பாதைக்கு அழைத்து வந்துள்ளனர் என்றும் சாமிநாதரிடம் கூறினார். பாப்பரசர் 3ம் இன்னசன்ட் மிகுந்த மகிழ்ச்சி அக்களிப்புடன், சர்வேசுரன் ஆத்துமங்களைக் காப்பாற்றுவதற்கான விசேஷ அலுவலுக்காக சாமிநாதரையும் தேர்ந்தெடுத்து உயர்த்தியிருக்கிறார் என்பதை அறிவித்தார். ஆதலால் பாப்பரசர் இந்தப் புதிய பிரசங்கிக்கும் மற்றும் போதிக்கும் துறவற சபையானது உடனே துவங்க வேண்டும் என்று ஆசித்தார்.

எனவே போதக துறவியரின் சபையை துவக்கும்படி பாப்பரசர் அர்ச். சாமிநாதரிடம், “உடனே பிரான்சுக்கு செல்லுங்கள். அங்கு உங்களுடைய  சீடர்களை ஒன்று கூட்டி உங்களுடைய சபை விதிமுறைகளை ஏற்படுத்துங்கள். அதன்பிறகு உங்களுடைய சபைவிதிமுறைகளை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார். பாப்பரசரிடம் ஆசீர் பெற்றுக் கொண்ட சாமிநாதர், சில நாட்களுக்குப் பிறகு தூலோஸ் மேற்றிராணியார், வந்.ஃபல்குவஸ் ஆண்டகையுடன் மகிழ்ச்சி நிறைந்த இருதயத்துடன் பிரான்சு நோக்கி திரும்பி கொண்டிருந்தார். அப்போது மேற்றிராணியார் அவரிடம் சபைவிதி முறைகளை அவருடைய ச சீடர்கள் ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படலாம் என்றும் வேதபோதக அலுவலை பல இடங்களுக்கும் சென்று நிறைவேற்றுவதற்கு 6 சீடர்கள் மட்டும் பற்றாமல் போய்விடும் என்றும் அதற்கு அநேக தேவ அழைத்தல்கள் தேவைப்படும் என்றும் கூறினார்.

அதற்கு சாமிநாதர் அவரிடம், “இப்போது நமது பாப்பரசர் நம் பக்கம் இருக்கிறார் என்ற நினைவே எனக்கு மிகுந்த பலமாகவும், எனக்குத் தேவையான எல்லாமாகவும் இருக்கிறது. ஓ ஆண்டவரே! நாம் ரோமாபுரிக்கு வந்தது குறித்து பெரிதும் மகிழ்கிறேன்” என்றார். தூலோஸ் வந்து சேர்ந்ததும் மேற்றிராணியார், சாமிநாதரின் சீடர்கள் எண்ணிக்கை 6லிருந்து 16 ஆக உயர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் அதிசயப்பட்டு, அச்சபையின் பிற்கால வளர்ச்சியை முன்கூட்டியே உணர்ந்து பேருவகை கொண்டார். புரோயிலில் சில  சீடர்களும் தூலோஸில் சில மாதங்களுக்கு முன்பாக பீட்ர் சேலா என்பவர் அன்பளிப்பாக கொடுத்த ஒரு இல்லத்தில் சில சீடர்களுமாக சாமிநாதரின் சீடர்கள் இரண்டு இல்லங்களில் ஜீவித்து வந்தனர். வந்.ஃபல்குவஸ் ஆண்டவர், “என்னால் நம்பவே முடியவில்லையே 16 சீடர்கள் அதற்குள்ளாகவா!” என்றார். அதற்கு சாமிநாதர், “ஆம். ஆண்டவரே! ஆனால் இது ஆரம்பம் தான் என்பதை நாம் நினைக்க வேண்டும். சர்வேசுரனுடைய அனுக்கிரகத்தால், ஏராளமான தயாளமுள்ள பரந்த இருதயத்துடைய நல்ல மனிதர்கள் நம்முடன் சேர இருக்கிறார்கள்” என்று கூறினார். (தொடரும்)

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 20

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 19

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 18

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 17






அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 9

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 8

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 7

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 6

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 4



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக