அர்ச்.சாமிநாதர் பதிதர்களிடம் செய்த புதுமை
தூலோஸ் நகர மேற்றிராணியார் கூறியபடி புதிய உதவியாளர்கள் தங்களுடைய வேதபோதக அலுவலுக்கு வந்ததும் அவர்களையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டு, இச்சிறு வேதபோதகக் குழுவினர் அனைவரும் மிதியடிகளைக்கூட அணிந்து கொள்ளாமல் அட்ட தரித்திர கோலத்தில் அண்டை நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் சென்று ஞான உபதேசத்தைக் கற்பித்தும் வேதவிசுவாச சத்தியங்களைப் பிரசங்கித்தும் வந்தனர். அதன்பிறகு மோன்ட்பெல்லியரில் ஒரு மாநாட்டைக் கூட்டினர். அதில் பதிதர்களும் கலந்து கொண்டு வேதசத்தியங்களைப் பற்றிய தர்க்கங்களில் ஈடுபட்டனர். நமது வேதபோதகர்கள் தங்களின் நுட்பமான வேத ஞானத்தைக் கொண்டு பதிதர்களை விவாதத்தில் தோறகச் செய்தனர். அதன்பிறகு தூலோஸ் நகரத்தை நோக்கி அனைவரும் பயணத்தை மேற்கொண்டனர். திவ்ய இஸ்பிரித்துவானவரால் வழிநடத்தப்பட்டவர்களாக ஆங்காங்கே வழியில் தென்பட்ட மக்களை வேத விசுவாசத்தில் ஸ்திரப்படுத்தியும் பதிதர்களிடம் தர்க்கம் செய்து அவர்களுக்கு வேத ஞானத் தெளிவை ஏற்படுத்தியும் சென்றனர்.
இவ்வாறு வேதபோதக அலுவலில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் அனைவரும் தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு சர்வேசுரனுடைய தேவபராமரிப்பையே நம்பியிருந்தனர். அவர்கள் இவ்வாறு தபசு போலத்தில் ஆற்றிய வேதபோதக அலுவல் உடனே ஞான பலன்களையும் நன்மைகளையும் விளைவிக்க துவக்கியது.
பால்ட்வின், தியர்ரி என்ற இரு முக்கிய ஆல்பிஜென்சிய பதிதர்கள் வாழ்ந்துவந்த கார்மெய்ன் என்ற நகரத்தை அடைந்தனர். இந்நகரம் தூலோஸ் நகரத்தினருகில் இருந்தது. அந்நகர மக்கள் நமது வேதபோதகர்களை மிக அன்புடனும் சங்கை மரியாதையடனும் வரவேற்று உபசரித்தனர். ஏராளமான பதிதர்கள் மனந்திரும்பினர். ஆனால் மனந்திரும்பாத பதிதர்களை அந்நகரிலிருந்து அகற்றுவதற்கு அந்நகர தலைவர்கள் தடை செய்தனர். பிறகு அந்நகர மக்கள் இந்த ஞான போதகர்களை நகர எல்லை மட்டும் வந்து அன்புடன் வழியனுப்பினர். இவ்வாறே பெசியர் மற்றும் கார்க்கசோன் என்ற நகரங்களிலும் நமது போதகர்களுக்கு நிகழ்ந்தது. இவ்வாறு பிரான்சின் தெற்குப் பிரதேசத்தில் வசித்த அநேக கத்தோலிக்கர்களை வேதவிசுவாசத்தில் உறுதிப்படுத்தியும் ஏராளமான பதிதர்களை மனந்திருப்பி சத்திய திருச்சபையில் சேர்த்தும் வந்தனர். ஏராளமான மாநாடுகளின் மூலம் வேதபோதகர்கள் இப்பிரதேசத்தின் பதிதர்கள் அநேகரை திருச்சபையில் சேர்த்தனர்.இதற்கு முக்கிய காரணமாயிருந்தவர் சகோ. தோமினிக் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட சாமிநாதர். அவருடைய வேதஞானமும் பதிதர்களிடம் விவாதம் செய்வதில் தேர்ச்சியும் அவர் கொண்டிருந்த அசாதாரண பேச்சுத் திறமையும் பதிதர்களின் வாயை அடைத்துப் போட்டன.
இதனாலேயே அர்ச்.சாமிநாதர் பதிதர்களின் சம்மட்டியாக விளங்கினார். அதனால் தான் அப்பதிதர்கள் இவரை தங்களுடைய மாபெரும் எதிரி என்று எண்ணி இவரைக் கொல்வதற்கு வழிதேடினர். ஆனால் அர்ச்.சாமிநாதர் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இரவு நேரங்களில் தன்னை இரகசியமாக சந்தித்து தனது ஞான ஆலோசனையைக் கேட்க வந்த மனந்திரும்பிய பதிதர்களை ஞான ஜீவியத்தில் திடப்படுத்துவதிலும் அவர்களுக்காக இரவு முழுவதும்ஜெபிபப்பதிலும் ஜெபதபபரித்தியாக ஜீவியத்திலும் ஈடுபட்டிருந்தார். பதிதர்களுடன் தர்க்கிப்பதில் அவர் மிகுந்த ஞானத்தைக் கொண்டிருந்தார். ஆனால் அதைவிட அவர் கடைப்பிடித்த இந்த தவஜீவியமே அதிக மேன்மையாக விளங்கியது.
ஒருதடவை ஃபோஷோ என்ற இடத்தில் அர்ச்.சாமிநாதருக்கும் ஆல்பிஜென்சிய பதிதர்களுக்கும் அந்நகர மக்களின் முண்ணிலையில் பகிரங்கமாக வேதத்தைப்பற்றிய தர்க்கம் நடைபெற்றது. இதை அர்ச்.சாமிநாதரின் சபை சரித்திர ஆசிரியர் முத்.ஜோர்டான் சகோதரர் பின் வருமாறு விவரிக்கின்றார்:“மாபெரும் நெருப்பு அந்நகரத்தின் ஒரு சதுக்கத்தில் மூட்டப்பட்டிருந்தது. நமது சத்திய வேதத்தின் உன்னத விசுவாசக் கோட்பாடுகள் ஒரு புத்தகத்தில் அர்ச்.சாமிநாதரால் எழுதப்பட்டிருந்தன. மற்றொரு புத்தகத்தில் ஆல்பிஜென்சிய பதிதர்களின் தப்பறையான கோட்பாடுகள் எழுதப்பட்டிருந்தன. இரு புத்தகங்களையும் அந்த நெருப்பில் போட்டார்கள். பதிதர்களின் புத்தகமோ உடனே நெருப்பினால் கருகி சாம்பலானது. சர்வேசுரனின் பரிசுத்த மனிதரான அர்ச்.சாமிநாதர் எழுதிய புத்தகமோ யாதொரு சேதமும் ஆகாமல் கருகிச் சாம்பலாகாமல் போனது மட்டுமல்லாமல் எல்லோர் முன்னிலையிலும் திச்சுவாலையினால் அருகிலிருந்த ஒரு மரத்தூணிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இரண்டு, மூன்று முறையும் இவ்வாறே சர்வேசுரனுடைய உத்தம வேத விசுவாசத்தின் புத்தகம் புதுமையாக, நெருப்பினால் யாதொரு சேதமும் அடையாமல் அதே தூணின்மேல் திச்சுவாலையினால் கொண்டு செல்லப்பட்டது.
இப்புத்தகத்தை எழுதியவரின் மெய்யான விசுவாசமும் பரிசுத்ததனமும் இதில் வெளிப்பட்டது” இப்புதுமை அர்ச்.சாமிநாதர் வாழ்ந்த காலத்திலேயே ஒருவரால் எழுதப்பட்டது. வந்.கான்ஸ்டன்டைன் மெடிசி என்ற ஓர்வியட்டோ நகர மேற்றிராணியார் கட்டளை ஜெபத்தில் இந்நிகழ்வைப்பற்றி பிற்சேர்க்கையில் சேர்த்தார். 1254ம் ஆண்டு பிரான்சு நாட்டின் அரசர் சார்லஸ் லெ பெல் என்பவர் இப்புதுமை நிகழ்ந்த விட்டை வாங்கி அதை அர்ச். சாமிநாதருக்கு தோத்திரமாக ஒரு தேவாலயமாகக் கட்டினார். அப்புதுமையில் அர்ச்.சாமிநாதரின் புத்தகம் நெருப்பு சுவாலையால் தாங்கி ஒரு மரத்தூணின் மேல் செல்லப்பட்டன. அந்த மரத்தூணும் அவருடைய சரித்திரத்தை காஸ்டிக்லியோ என்பவர் எழுதும் வரை பாதுகாக்கப்பட்டு வந்தது. †
(தொடரும்)
அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 10
அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 8
அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 7
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக