மகா பரிசுத்த ஜெபமாலையின் உதயம்
ஆல்பிஜென்சிய பதிதத்தை அழித்து ஒழிப்பதற்கான உன்னதமான திட்டங்களை தீட்டி உத்தமமான கத்தோலிக்க வேத சத்தியங்களை மக்களுக்கு போதிப்பதிலும் பாப்பரசரின் தூதுக்குழுவினரை வழிநடத்துவதில் தன்னிகரற்ற தலைவராக திகழ்ந்த வந்.டீகோ ஆண்டகையின் பிரிவு அர்ச். சாமிநாதரை மிகவும் பாதித்தது. உத்தமமான வேதபோதக அலுவலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பிரான்சில் கத்தோலிக்க மக்களிடையே இருந்த ஒழுங்கீனமான பிரிவினைகளையும் வந்.டீகா ஆண்டகை சிர்படுத்தி, சைமன் டி மோன்ஃபோர்ட் என்ற ஒரு உத்தம கத்தோலிக்க பிரபுவின் தலைமையின் கீழ் வேத விசுவாசத்தை பிரமாணிக்கமுடன் கடைபிடிக்கும் ஒரு ஸ்திரமான கத்தோலிக்க சமுதாயத்தை ஏற்படுத்தியிருந்தார். புரோயிலில் அர்ச். சாமிநாதர் கன்னியர்களுக்கான மடத்தை ஏற்படுத்தியதற்கான முக்கிய காரணம் அங்கு பரலோக இராக்கினியான அர்ச்.கன்னிமாமரி நிகழ்த்திய ஒரு புதுமையான நிகழ்வேயாம். அந்நிகழ்வை இப்பொழுது காணலாம்: வந்.டீகோ ஆண்டகை ஸ்பெயின் நாட்டிற்கு செல்வதற்கு முன்பாக தன்னுடைய வேதபோதக குழுவினருக்கு தலைவராக பொறுப்பேற்று நடத்தும்படி அர்ச். சாமிநாதருக்கு பணித்தார். அர்ச்.சாமிநாதர் மிக தயக்கத்துடன் தலைமை பொறுப்பேற்றார்.
அக்குழுவின் வேதபோதக அலுவல்களை வழிநடத்தினார். சிறிது காலம் சென்றது. அநேக ஜெபங்கள், ஒறுத்தல்கள், தவக்கிரியைகள் அக்குழுவினரால் மோட்சத்தை நோக்கி ஆல்பிஜென்சிய பதிதர்களின் மனந்திரும்புதலுக்காக
ஒப்புக்கொடுக்கப்பட்டு வந்தது. அப்பதித மதத்தினர் இலகுவான ஜீவியத்தை நடத்தி வந்தனர். யாதொரு வேதகற்பனையோ அல்லது ஒழுங்கோ அனுசரிக்க தேவையில்லாததால் அப்பதித மதம் மக்களை வெகுவாக கவர்ந்தது. அப்பதிதர்கள், தாங்கள், மிகவும் நவநாகரிக மக்கள் என்ற தோற்றத்தினால் மக்களை தங்களுடைய தப்பறையில் எளிதாக சிக்கவைத்தனர். இதையெல்லம் கண்ட அர்ச்.சாமிநாதரின் இருதயம் துக்கத்தால் கனத்தது. அர்ச்.சாமிநாதர், “பரிதாபத்துக்குரிய இம்மக்களை நிச்சயமாக பசாசு தன்னுடைய தீயபிடியில் வைத்துள்ளது. ஓ மிகவும் நேசமான தேவதாயாரே! இந்த திய பதிதர்களையெல்லாம் மனந்திருப்புவதற்கு எங்களுக்கு உதவியருளுங்கள்!” என்று சர்வேசுரனுடைய மாதாவிடம் மன்றாடினார்.
அப்பொழுது உடனே அசாதாரணமான ஒன்று நிகழ்ந்தது. “ஆல்பிஜென்சிய பதிதர்கள் எல்லாரும் மனந்திரும்புவர். அவர்களை தேவமாதாவே மனந்திருப்புவார்கள்” என்ற ஒரு உறுதியான நம்பிக்கை அவருடைய இருதயத்தில் உதித்தது. அதற்கு அவருடைய வேதபோதகக்குழுவினர் செய்ய வேண்டிய அவசியமான காரியம் என்னவென்றால் “அவர்கள் அனைவரும் மிகவும் பரிசுத்த தேவமாதாவிடம்
உத்தமமான பக்திபற்றுதல் கொண்டு விளங்க வேண்டும். தேவமாதாவுக்கு தோத்திரமாக செய்யப்படும் ஜெபங்களை, விசேஷமாக அருள்நிறை மந்திரத்தை சொல்வதில் பிரமாணிக்கமாக இருக்க வேண்டும்” என்றும் அர்ச்.சாமிநாதர் கண்டுணர்ந்தார்.அர்ச்.சாமிநாதர் தன் குழுவினரிடம், “நாம் இதுவரை சொல்லியது போலல்லாமல் மிகுந்த பக்தி உருக்கத்துடன் அருள்நிறை மந்திரத்தை சொல்லத் துவக்குவோம்” என்று கூறினார்.
அப்பொழுது தேவமாதா அர்ச். சாமிநாதரிடம் புதுவிதமாக அருள்நிறை மந்திரங்களை சொல்வதற்கான ஒரு வழிமுறையைக் கற்பித்தார்கள். ஆல்பிஜென்சிய பதிதர்களை மனந்திருப்புவதற்கான அந்த ஜெபமுறையானது தேவமாதாவுக்குத் தோத்திரமாக 150 அருள்நிறை மந்திரங்களையும் அவை பத்துக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பத்து அருள்நிறை மந்திரங்களுக்கு முன் ஒரு பரலோக மந்திரமும் ஆண்டவருடைய திவ்ய இரட்சணியத்தின் தேவ இரகசியங்களையும் தியானித்துக் கொண்டே ஜெபிக்கப்படும் ஜெபமாக விளங்கியது. ஜெபமாலை என்று இனி எல்லாராலும் அழைக்கப்பட இருக்கும்
இந்த ஜெபமானது பழைய ஏற்பாட்டின் 150 சங்கிதங்களின் நினைவாகவே 150 அருள்நிறை மந்திரங்களை கொண்டிருக்கிறது. ஆனால் அப்பழைய ஏற்பாட்டின் ஜெபத்தை விட இந்த ஜெபம் எவ்வளவு இனிமையானது! எவ்வளவு
எளிமையானது! எவ்வளவு மகத்தானது! எவ்வளவு சுருக்கமானது! ஒரு மனிதன் தன் அலுவலுக்குப்போகும்போதும் வரும்போதும் கூட ஒரு ஜெபமாலையை நடந்துகொண்டே சொல்லி விடலாம்.
கல்வியறிவு அற்றவர்களும் படிக்கத் தெரியாதவர்களும் கூட ஜெபமாலையை மிக எளிதாக சொல்லிவிடலாம். உடனே வந். டீகோ ஆண்டகையிடம் அர்ச்.சாமிநாதர், “ஆண்டவரே! இந்தப் பதிதர்களோடு நாம் நடத்தும் இப்போரில் அருள்நிறை மந்திரங்கள், மற்றும் ஜெபமாலையினுடைய மகத்துவ மிக்க வல்லமையினால் நாம் வெற்றியடைவோம்!” என்று கூறினார். “நீங்கள் சரியாகச் சொன்னிர்கள்! நமது மோட்ச இராக்கினி இந்த திமையான பதிதத்தை நாம் அழித்து வெற்றியடைவதற்காக நமக்கு நிச்சயம் உதவிபுரிவார்கள்!” என்று வந்.டீகோ ஆண்டகை பதிலளித்தார். (தொடரும)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக