Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 11 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 22

கரடு முரடான பாதை 

ஒரு சமயம் ஆல்பிஜென்சிய பதிதர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு மேற்றிராணியார் வெகு ஆடம்பரத்துடன் வந்ததைக் கண்ட அர்ச்.சாமிநாதர், மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தார். சர்வேசுரனுடைய எளிய ஊழியரான அர்ச்.சாமிநாதர் அந்த மேற்றிராணியாரிடம், “என் தந்தையே! ஆங்காரத்தின் சந்ததியினரை நாம் இந்தக் கோலத்தில் சந்திப்பது ஏற்கமுடியாத ஒன்றாகும். சத்தியத்திற்கு எதிரிகளான இப்பதிதர்களை உன்னத நற்புண்ணியங்களான தாழ்ச்சியினாலும் பொறுமையினாலும் மட்டுமே முறியடிக்கமுடியும். மாறாக இந்த பகட்டான உலக ஆடம்பரங்களால் அல்ல. எனவே ஜெபத்தினாலும் தாழ்ச்சியினாலும் நம்மை உடுத்திக்கொள்வோமாக. பாதணிகூட இல்லாமல் இந்த கோலியாத்துகளுக்கு எதிராக செல்வோம்” என்றார். சாமிநாதரின் இந்த அறிவுரைகளுக்கு உடனே முழுவதும் பணிந்தவராக அந்த மேற்றிராணியார் தனது ஆடம்பரமான வஸ்திரங்களையும் மிதியடிகளையும் எல்லாம் களைந்து விட்டு தவசங்கிதங்களைப் பாடிக் கொண்டே அர்ச்.சாமிநாதரின் போதக துறவியருடன் பதிதர்களை சந்திக்கச் சென்றார். அப்போது அவர்களுக்கு வழிகாட்ட வந்த, பதிதர்களுடைய தூதுவன் ஒருவன் அவர்களைக் காயப்படுத்தவும் சஞ்சலப்படுத்தவும் வேண்டுமென்றே முட்புதர் நிறைந்த மோசமான பாதையின் வழியாக அவர்களைக் கூட்டி வந்தான். அதனால் அவர்களுடைய பாதங்கள் முட்களாலும் கற்களாலும் காயப்பட்டு வழியெல்லாம் இரத்தம் சிந்தின. இந்த துன்பத்தையம் வேதனையையும் சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும்படி தனது குழுவினரிடம் கூறி மிகுந்த மகிழ்வுடன் அவர்களை உற்சாகப்படுத்திக கொண்டே சென்றார். 

“ என் பிரிய சகோதரரே! சர்வேசுரனில் நம்பிக்கை கொள்ளுங்கள். நமக்கு வெற்றி நிச்சயம். ஏனெனில் நமது பாவங்களுக்காக நமது இரத்தத்தால் இப்போது பரிகாரம் செய்கிறோம். “சமாதானத்தின் சுவிசேஷத்தைக் கொண்டு வருபவர்களின் பாதங்கள் எவ்வளவு அழகானவை” என்று எழுதப்பட்டுள்ளதல்லவா?” என்று கூறினார். அதன்பிறகு, ஒரு சங்கீதத்தை மிகுந்த இனிமையான குரலில் பாடினார். அதைக் கேட்ட அவருடைய குழுவினர் அனைவரும் உற்சாகமும் மனத்திடனும் தங்கள் இருதயங்களில் நிரம்பப்பெற்றவர்களாய் அர்ச்.சாமிநாதருடன் சேர்ந்து அந்த சங்கீதத்தை மிகுந்த மகிழ்வுடன் பாடிச் சென்றனர். (தொடரும்)


உங்களுக்குத் தெரியுமா?

சைமன் டி மோன்ஃபோர்ட், அர்ச்.சாமிநாதருடன் சேர்ந்து ஆல்பிஜென்சியருக்கு எதிராக புரிந்த போரில் படைத் தளபதியாக இருந்த மாபெரும் விரர். ஒரு சமயம் 400 குதிரை விரர்களுடனும் சொற்ப தரைப்படை விரர்களுடனும் பதிதர்களுக்கு எதிராக போருக்கு சென்றபோது, மூரட் நகரத்தில் ஆரகன் நாட்டு அரசன் 40,000 படை வீரர்களுடன் வந்து சைமன் டி மோன்ஃபோர்;டை முற்றுகையிட்டான். அவர் ஒரு தேவாலயத்தில் திவ்யபலி பூசை பக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த முற்றுகையைப் பற்றி அவருக்கு அறிவித்த படையின் அலுவலர்களிடம் அவர், “திவ்யபலி பூசை முடியட்டும். பிறகு நான் வந்து உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்” என்றார். திவ்யபூசை முடிந்தவுடன் அவர் தன் படைகளிடம், சர்வேசுரன் மேல் முழுநம்பிக்கை கொள்ளும் படியாக அறிவுறுத்தினார். நகரத்தின் வாசல்களைத் திறக்கக் கட்டளையிட்டார். பிறகு எதிரிகளுடைய படையை அதன் மத்தியப் பகுதியை தாக்கி, நேராக உட்புகுந்து ஆரகன் நாட்டு அரசனை விழ்த்தினார். உடனே பதிதருடைய படை சிதறி பின்வாங்கி ஓடியது. இவ்வாறு, சைமன் டி மோன்ஃபோர்ட் திவ்ய பலிபூசையின் மகத்துவமிக்க வல்லமையால் வெற்றிபெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக