மீண்டும் ரோமாபுரி பயணம்
சிறிது காலத்திலேயே, அர்ச்.சாமிநாதர் தூலோஸ் மடத்திலிருந்த தமது சபைதுறவிகளை புரோயிலுக்கு வரவழைத்து அவர்களையும் அங்கேயே தங்க வைத்தார். இங்கு தான் தேவமாதா அவருக்கு 10 வருடங்களுக்கு முன் தோன்றி ஒரு துறவறசபையை அவர் துவக்குவார் என்று முன்னறிவித்திருந்தார்கள். 1216ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புரோயிலில் கூடிய அவருடைய சபையின் துறவிகள்: பிரான்சு நாட்டிலிருந்து 7 பேரும் ஸ்பெயின் நாட்டிலிருந்து 6 பேரும் போர்த்துக்கல், பெல்ஜியம் மற்றும் இங்கிலிரந்திலிருந்து தலா ஒருவருமாக மொத்தம் 16 பேர் அர்ச். சாமிநாதரைப் பின்பற்றி சர்வேசுரனுக்காக தங்கள் ஜீவியத்தை முற்றும் கையளிப்பதற்காக அந்த மடத்தில் கூடினர்.
அப்பொழுது அர்ச்.சாமிநாதர் பாப்பரசரின் அறிவுரையின்படி தமது துறவற சபையின் விதிமுறைகளை ஏற்படுத்துவதற்காக அங்கு கூடியிருந்த 16 பேருடனும் ஆழ்ந்த ஜெபத்தில் நீண்ட நேரம் ஈடுபட்டார். பின்னர் அனைவரும் ஏக மனதாக காலத்தால் போற்றப்பட்டுவந்ததும் பண்டைய கால திருச்சபையில் துறவற மடங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்ததுமான அர்ச். அகுஸ்தினாரின் துறவறசபை விதிமுறைகளையே தங்களுடைய சபையின் விதிமுறைகளாக அங்கீகரித்தனர். ஏனெனில் இந்த துறவற சபையில் தான் எண்ணற்ற அர்ச்சிஷ்டவர்கள் தோன்றினார்கள் என்பதையும் இச்சபையின் விதிமுறைகள் சபைதுறவிகள் வேதபோதகத்தில் ஈடுபடுவதற்கும் ஞான பிரசங்கங்களில் ஈடுபடுவதற்கும் ஏற்புடையனவாக உள்ளன என்றும் அறிந்திருந்தனர். போர்த்துக்கிசியரான சகோ.சுவரோ கோமஸ் என்பவர் அர்ச்.சாமிநாதரிடம், “நாம் இப்பொழுது சர்வேசுரனுக்கு உகந்த ஊழியத்தை சரியாகச் செய்யலாம். சபைஒழுங்குகளைப்பற்றி எங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், சுவாமி! தினமும் நீங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும்” என்றார்.
அதற்கு அர்ச்.சாமிநாதர், “சகோ.பெர்ட்ராண்ட் உங்களுக்கு இதில் உதவுவார். நான் ரோமாபுரிக்கு திரும்பிச் செல்கின்றேன்” என்றார்.
அதற்கு சகோ.சுவரோ கோமஸ் சாமிநாதரிடம், “ஆனால், சுவாமி! இப்போது தானே அங்கிருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் நிச்சயமாக உடனே அங்கு செல்வதற்கு கூட நினைத்திருக்க மாட்டீர்கள்” என்றார். உடனே இங்கிலாந்தைச் சேர்ந்த சகோ. லாரன்ஸ் மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த சகோ.ஸ்டீபன் சாமிநாதரை அணுகி, “ ரோம் 600 மைல் தொலைவில் அல்லவா உள்ளது” “சுவாமி! இப்பொழுது தான் அந்த தொலை தூர பயணத்தை இருமுறை முடித்திருக்கிறீர்கள்” “அந்த நீண்ட தூர பயணத்திற்குப் பிறகு உங்களுக்கு ஓய்வு அவசியமாகத் தேவைப்படும்” “ சுவாமி! எங்களை முன்னிட்டு உங்களுடைய சரீர நலனைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்றெல்லாம் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அதற்கு அர்ச்.சாமிநாதர் புன்னகைத்துக் கொண்டே, “இப்பொழுது, நீஙகள் எனது சரீர ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். நான் நன்றாக பலமான சரீரத்துடன் இருக்கிறேன். மேலும், நமது சபை விதிமுறைகளை தேர்ந்தெடுத்த உடனே பரிசுத்த தந்தை பாப்பரசருக்கு தெரியபடுத்துவதாக அவரிடம் வாக்களித்துள்ளேன். அதை மீறச் சொல்கிறீர்களா?” என்றார். இதற்கு சபையின் 16 உறுப்பினர் சகோதரர்களும் உடன்பட்டனர். ஆனால் பாப்பரசரை சந்தித்தபிறகு ரோமாபுரியில் நிண்டகாலம் தங்காமல் உடனே தங்களிடம் திரும்பி வரும்படி அவர்கள், அர்ச்.சாமிநாதரிடம் கேட்டுக் கொண்டனர். அதற்கு அர்ச்.சாமிநாதர், “சர்வேசுரனுக்கு சித்தமானால் ஒரு சில மாதங்களுக்குள்ளேயே நான் திரும்பி வருவேன்” என்று பதிலளித்தார்.
அர்ச்.சாமிநாதர் ரோமாபுரிக்கு செல்வதற்கு முன்பாக வந்.ஃபல்குவஸ் ஆண்டகை தமது தூலோஸ் நகரத்திலிருக்கும் அர்ச்.ரோமானுஸ் தேவாலயத்தையும் அதன் வளாகத்தையும் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து, அவரிடம், “ நீங்கள் துவங்க இருக்கும் புதிய துறவற சபைக்கு ஃபோஷோ மற்றும் புரோயிலை விட இந்த இடம் மிகவும் ஏற்புடையதாக இருக்கும். இங்கு உங்களுடைய மடத்தை இந்த வளாகத்தில் கட்டிக் கொள்ளுங்கள்” என்றார். அதற்கு அர்ச்.சாமிநாதர், “ அர்ச்.ரோமானுஸ் தேவாலயத்தினுடைய இந்த வளாகமே எங்களுடைய முதல் துறவற மடமாக விளங்கும். ஓ ஆண்டவரே! நமது பரிசுத்த தந்தை நீங்கள் எங்களுக்கு அளிக்கும் இந்நன்கொடையைப் பற்றி அறியவரும்போது எவ்வளவு மகிழ்ச்சியடைவார்!” என்றார். ஆனால், மடத்தை அங்குக் கட்ட துவக்கியபோது, அவர்களுக்கு பாப்பரசர் இறந்து விட்டார் என்ற துயர செய்தி ரோமாபுரியிலிருந்து வந்தது. அவர்களுடைய மடம் கட்டியபிறகும் அர்ச்.சாமிநாதர் அப்போது புதிதாக பதவியேற்ற 3ம் ஹொனோரியுஸ் பாப்பரசரை சந்திக்க ரோமாபுரிக்கு சென்றார்.
ஆனால் அவரை சந்திக்க இயலவில்லை.ஏதோ முக்கிய அலுவலுக்காக வெளிநாடு சென்றிருந்த பாப்பரசர் எப்போது ரோமாபுரிக்கு திரும்புவார் என்று யாருக்கும் தெரியாமலிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக