Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 21 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 6

 

பாப்பரசர் 3ம் இன்னசென்ட்டை சந்திக்கின்றார்



1204ம் ஆண்டில் அர்ச்.சாமிநாதருடன் ரோமாபுரியை வந்தடைந்த வந்.டீகோ ஆண்டகை, கிழக்கத்திய நாடான ஹங்கேரி மற்றும் அதைச் சுற்றியிருந்த கிறிஸ்துவ நாடுகளை அடிக்கடி கொள்ளையடித்து சீரழித்து வந்த டார்டார் கூமன் இனத்தவரை மனந்திருப்புவதற்காக அங்கு சென்று வேதபோதக அலுவலை மேற் கொள்வதற்காகவும் அவ்வுன்னத அப்போஸ்தலிக்க அலுவலில் வேதசாட்சிய முடிபெறுவதற்கான தன் ஆன்ம இரட்சணிய ஆவலின் பொருட்டு தன்னை ஓஸ்மா நகர மேற்றிராணித்துவ அந்தஸ்திலிருந்து விடுவிக்கும் படியாக பாப்பரசர் 3ம் இன்னசென்ட்டிடம் (Pope Innocent III)அனுமதி கோரினார். ஆனால் பாப்பரசர் இவ்விண்ணப்பத்தை நிராகரித்தார். பாப்பரசர் தான் பதவியேற்றதிலிருந்து கடந்த 6 வருடங்களாக திருச்சபைக்கு பெரும் திங்கு விளைவித்து வந்த ஆல்பிஜென்சிய பதிதத்தை பிரான்சின் தெற்கு பகுதியிலிருந்து ஒழித்து அகற்றுவதற்காக பாப்பரசருடைய குழு (Commision) ஒன்றை ஏற்படுத்தினார். அர்ச்.பெர்னார்ட் ஏற்படுத்தியிருந்த சிஸ்டர்ஷியன் சபையின் அதிபரான சங்.ஆர்னால்ட் சுவாமியாரும் சங்.ருடால்ஃப், சங்.பீட்டர் என்ற அச்சபையின் இருகுருக்களும் மற்றும் அச்சபையைச் சேர்ந்த சில மடத்து அதிபர்களும் அக்குழுவில் இருந்தனர். அவர்கள் பிரான்சு நாட்டின் தெற்கு பகுதிக்குச் சென்று அங்கு நுற்றுக்கணக்கான ஞானபிரசங்கங்களை இதுவரை நிகழ்த்தியுள்ளனர். 

ஆனால், அதனால் அவர்கள் வெகு சொற்ப பலனையே கண்டனர். இப்பதிதத்தை ஒடுக்குவது அவர்களுக்கு மிகக்கடினமாக இருந்தது. ஏனெனில் அப்பகுதியின்பங்குகுருக்களும் மேற்றிராணிமார்களும் மிதமிஞ்சிய உலகப்பற்றுமிக்கவர்களாக ஆடம்பரமாக ஜீவித்தனர். தங்கள் பொறுப்பிலுள்ள விசுவாசிகளின் ஞானஜீவியத்தைப்பற்றி யாதொரு கவலையுமின்றி இருந்தனர். தூலூஸ் நகரத்தின் சிற்றரசன் ரேமண்ட் தன் செல்வாக்கைக் கொண்டு ஆல்பிஜென்சிய பதிதத்தின் வல்லமைவாய்ந்த பாதுகாவலனாக திகழ்ந்தான். பாப்பரசர் 3ம் இன்னசென்ட இந்த சு+ழலைப் பற்றி, “இப்பகுதியில் ஞானமேய்ப்பர்களான பங்கு குருக்கள் சம்பளத்திற்கு மட்டும் பணிபுரியும் கூலிக்காரர்களாக செயல்பட்டனர். 

அவர்கள் தங்களுடைய மந்தைகளுக்கு ஞானஉணவு அளிக்கவில்லை. மாறாக அவர்கள் தங்கள் வயிற்றை நிரப்புவதிலேயே கருத்தாயிருந்தனர். ஓநாய்கள் உள்ளே புகுந்தன. சர்வேசுரனுடைய இல்லத்தின் எதிரிகளை எதிர்த்து நிற்கும் தடைச்சுவராக இந்த ஞான மேய்ப்பர்கள் செயல்படாமல் அவர்களை உள்ளே நுழைய விட்டுவிட்டனர்” என்று குறிப்பிடுகின்றார். திருச்சபையின் ஞான மேய்ப்பர்களின் இத்தகைய துர்மாதிரிகையான ஜீவியமே ஆல்பிஜென்சிய பதிதத்தை எளிதாக பரப்புவதற்கான ஏற்புடைய சாதனமாக இருந்ததாக அப்பதிததர்கள் பாப்பரசரின் குழுவினரான அத்துறவியரிடம் வெளிப்படுத்தினர். “அவர்களுடைய கனிகளைக் கொண்டே அவர்களை அறிந்துகொள்ளுங்கள்” என்ற ஆண்டவருடைய திவ்ய வார்த்தைகளையே மேற்கோளாகக் கூறி ஞானமேய்ப்பர்களின் பொறுப்பற்ற உலகப்பற்றுள்ள ஜீவியத்தை அவர்கள் சுட்டிக்காட்டலாயினர். 

இதைக்குறித்து பெரிதும் கவலையும் துயரமும் அடைந்தவராக, பாப்பரசர் வந்.டீகோ ஆண்டகையை நோக்கி, “என் மகனே! உமது அலுவல் மேற்கில் உள்ளது. (வந்.டீகோ ஆண்டகை பாப்பரசரிடம் விண்ணப்பித்த டார்டார் இனத்தவரை மனந்திருப்பும் வேதபோதக அலுவல் கிழக்கில் இருந்தது). உடனே அங்கு திரும்பிச் செல்லுங்கள். பல்லாயிரக்கணக்கான மக்களின் இரட்சணியம் ஆபத்தில் உள்ளது” என்றார். மேலும் பாப்பரசர்;, “சில வருடங்களுக்கு முன்பு பிரான்சின் தெற்கு பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்காக சிஸ்டர்ஷியன் துறவியர் சென்றனர். அங்கு அவர்கள் ஆற்றிவரும் ஞானபிரசங்கங்கள் மற்றும் வேதபோதக அலுவல்கள் அவர்களுக்கு இதுவரை சொற்ப வெற்றியை மட்டுமே பெற்றுத்தந்துள்ளன. இதனால் அத்துறவியர் மிகவும் உற்சாகமிழந்துள்ளனர். நீங்கள் தான் அவர்களுக்கு உதவ முயலவேண்டும்” என்றார்.

பரிசுத்த கீழ்படிதல் சர்வேசுரனுக்கு மிகஉகந்த பலியாகும் என்று நன்கறிந்த வந்.டீகோ ஆண்டகை உடனே பாப்பரசரிடம், “பரிசுத்த தந்தையே! நல்லது. அத்துறவிகளுக்கு உதவ முற்படுவேன்!” என்றார். பிறகு பாப்பரசர் தன் கவலையிலிருந்து மிண்டவராக, அருகிலிருந்த அர்ச்.சாமிநாதரிடம், “ என் மகனே! நிங்களும் இவருடன் சேர்ந்து அத்துறவிகளுக்கு உதவிடுங்கள்” என்றார். “ஆமாம். பரிசுத்த தந்தையே! தாங்கள் அதை விரும்புவீர்களானால், நானும் அவர்களுக்கு உதவிடுவேன்” என்றார் அர்ச்.சாமிநாதர்.

(தொடரும்) †



அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 5







Please Join our Telegram Channel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக