Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 3 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் - 17

 பதிதர்களின் நடுவில் சாமிநாதர்


அர்ச்.சாமிநாதரிடம், சங்.பிட்டர் சுவாமியார் வேதசாட்சியாக கொலையுண்டநேரத்தில் அவர் கூறியசெய்தியை அவருடைய சீடர்கள் கூறினர். சங்.பீட்டர் சுவாமியார் ரோன் நதிக்கரையில் தனது சககுருவானவருடன் நின்று கொண்டிருக்கும்போது, அவரை சிறை பிடிக்கும்படியாக வந்த ரேமண்ட் சிற்றரசனின் அரண்மனை காவலர் இருவரில் ஒருவன் அவரை ஈட்டியால் குத்தினான். உடனே இந்த உன்னதமான வேதசாட்சிய மரணத்திற்காக வெகுகாலம் ஆவலுடன் காத்திருந்த சங்.பீட்டர் சுவாமியார், தன்னைக் குத்தினவனை நோக்கி, “நண்பா! சர்வேசுரன் உன்னை மன்னிப்பாராக! நான் ஏற்கனவே உன்னை மன்னித்து விட்டேன்” என்று கூறினார். 

பிறகு தன் சக குருவானவரை நோக்கி, “இதனால் அiதரியப்படாதீர்கள். மிகுந்த கவனத்துடனும் அச்சமின்றியும் நமது திருச்சபைக்காக ஊழியம் செய்யுங்கள். நமது கத்தோலிக்கு விசுவாசத்திற்காக அஞ்சாமல் வேதத்தைப் போதியுங்கள்” என்றார். அவருடைய வேதசாட்சிய மரணத்தின் பலனாக ரேமண்டிற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான ஐரோப்பிய கிறிஸ்துவர்கள் பிரான்சில் மட்டுமல்லாமல், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்தும் ஒன்றாக திரண்டனர். திருச்சபைக்காக போராடுவதற்காகவும், திருச்சபையின் வேத சத்தியத்தை பிரான்சு நாட்டில் நிலைநாட்டும்படியாகவும் அவர்கள் படைபலம் கொண்டு ரேமண்டின் பதிதத்தை ஒடுக்குவதற்காக முற்பட்டனர். இங்கிலாந்து நாட்டின் உயர்குடிமகனான சைமன் டி மோன்ஃபோர்ட் என்பவர் கத்தோலிக்க படைக்கு தலைமை தாங்கினார். வீரமிக்க அவருடைய பெயரைக் கேட்டாலே எதிரிகள் அஞ்சினர். அர்ச்.சாமிநாதரின் சிடர்களில் ஒருவரான சகோ.பெர்ட்ரான்ட் என்பவர்,  “ சுவாமி! நமது படை பலத்தைக் கண்ட பதிதர்களில் சிலர் ஏற்கனவே நம்மிடம் சமாதானம் செய்து கொள்வதற்காக மன்றாடி வருகின்றனர். சில நாட்கள் மட்டுமே போர் நடந்து முடிந்தால் நலமாயிருக்குமே! அதற்குள்ளாக ரேமண்ட் மனம் திருந்தினால் நன்றாக இருக்குமே!” என்று கூறினார்.

சைமன் டி மோன்ஃபோர்டின் தலைமையில் கூடிய படை வீரர்களில் பெரும்பாலானோர் சாதாரண விவசாயிகளாக இருந்தனர். இது பதிதத்திற்கு எதிரான போர், அதாவது, பிரான்சு நாட்டில், பரிசுத்த வேத விசுவாசத்தைக் காப்பாற்றுவதற்கான பரிசுத்த போர் என்பதனாலேயே அவர்கள் இந்தப் போரில் ஈடுபட்டிருந்தனர். இப்போரில் ஒரு சில நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள் ஈடுபட்டாலே அதற்கான ஞானபலன்கள் திருச்சபையால் வாக்களிக்கப்பட்டிருந்ததால், அந்தக் குடியானவர்கள், அந்த ஞானப்பலன்களை முன்னிட்டே இந்தப்போரில் ஈடுபட்டனர். எனவே படைவீரர்கள் அல்லாத இந்த பாமரவிவசாயிகளைக் கொண்டு போர் புரிவது சைமன் டி மோன்ஃபோர்ட்டிற்கு மிகக் கடினமானதொன்றாக விளங்கியது. மேலும் சில வாரங்களிலேயே படையில் இருந்த ஏராளமான விவசாயிகள், தங்களுக்குத் தேவையான ஞானப்பலன்களைப் பெற்றுக் கொண்டவர்களாக தங்கள் இல்லங்களுக்குத் திரும்பலாயினர். அதனால் படையில் நாளடைவில் வெகு சொற்ப பேரே எஞ்சினர். அப்பொழுது அர்ச்.சாமிநாதர், “ இந்தப் போர் நீண்ட காலம் நிடிக்கும்போலிருக்கிறதே! ஓ மிகவும் பரிசுத்த கன்னிமாமரியே! நாங்கள் என்ன செய்யப் போகிறோம்?” என்று தேவமாதாவிடம் வேண்டிக் கொண்டார். 

இதற்கிடையே அர்ச்.சாமிநாதருக்கும் சைமன் டி மோன்ஃபோர்ட்டிற்கும் இடையில் ஆழ்ந்த நட்பு ஏற்படலாயிற்று. விரைவிலேயே இருவரும் சேர்ந்து பல மணி நேரங்கள் ஒன்றாக செயல்படலாயினர். ஏனெனில் சைமன் டி மோன்ஃபோர்ட்டின் படையினரிடையே வேத கடமைகளையும் ஒழுங்குகளையும் நிலைப்படுத்தும்படிக்கு படையினருக்கான குருவானவராகவும், சிறைபிடிக்கப்பட்ட ஆல்பிஜென்சிய பதிதர்களின் நகரங்களில் சத்திய வேதத்தைப் போதிக்கும்படியாகவும் அங்கிருக்கும் தேவாலயங்களில் பாரம்பரிய கத்தோலிக்க வழிபாட்டு முறைமைகளை மிண்டும் ஏற்படுத்தி அப்பதிதர்களுக்கு ஞானஉபதேசத்தைப் போதிக்கும்படியாகவும், அர்ச்.சாமிநாதர் கத்தோலிக்குப் படையினருடன் கூட செல்ல வேண்டியிருந்தது. ஆங்கிலேய படை தளபதியான சைமன் டி மோன்ஃபோர்ட் அர்ச்.சாமிநாதரிடம், “சுவாமி! எங்களைவிட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்று ஒருபோதும் நினைக்காதிர்கள். நிங்கள் எங்களுக்கு மிகவும் தேவையாயிருக்கிறீர்கள்” என்று கூறினார். சாமிநாதரும் பிரான்சு நாட்டில் பல வருடங்கள் தங்கியிருந்தார். பதிதர்களிடையே வெகு கடுமையான நிதிபதியாக இருக்கிறார் என்று ஆரம்பத்தில் அர்ச். சாமிநாதரைப் பற்றி நிலவிய தப்பறையான கருத்து, கருணையுடனும் அன்புடனும் பதிதர்களை அவர் கையாண்ட முறைகளினால் அவருடைய இரக்க சுபாவம் உலகிற்கு வெளிப்படலாயிற்று. ஆயினும் பதிதர்களிடையே அவருடைய அடைந்து வந்த வெற்றிகளாலும் அநேக பதிதர்கள் அவரால் மனந்திரும்பியதாலும் அவர்மேல் சில தியவர்கள் கொடிய பகைகொண்டவர்களாக அவரைக் கொல்லுவதற்கான வழி தேடினர். இதை அறிந்த அர்ச்.சாமிநாதர், உன்னதமான கத்தோலிக்க வேத விசுவாசத்திற்காக தன் உயிரை விடுவது என்பது நேரே மோட்சத்திற்குக் கொண்டு செல்லும் வேதசாட்சிய மரணமாகும். நானும் வேதசாட்சியாவதற்கு ஒரு நல்ல வழியைக் கண்டு பிடித்துள்ளேன். பதிதர்களின் ஊரான கார்க்கசோன் நகரத்திற்கு நான் தனியாக சென்று அந்த உயரிய வேதசாட்சிய முடியைப்பெறுவேன்” என்றார்.

கார்க்கசோன் என்னும் சிறிய நகரமானது ஆல்பிஜென்சிய பதித்தின் உறைவிடங்களில் மிக முக்கிய நகரமாக விளங்கியது. அங்கு வாழ்ந்த கத்தோலிக்கர்கள் பதிதர்களால் மிகவும் கொடூரமாக உபாதிக்கப்பட்டனர். ஆனால் அர்ச்.சாமிநாதர், மிகுந்த இளகிய இருதயத்துடனும் கனிவுடனும் பரலோக இராக்கினியின் மகிமையைக் குறித்து திவ்ய இரட்சகரின் தாயாரே! ஏன்னும் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடலைப் பாடிக் கொண்டு அந்நகரத்தின் வாயில்களுக்குள் நுழைந்தார். அவரைக் கண்டதும் முதலில் பதிதர்கள் திடுக்குற்றனர். பிறகு, அவர்மேல் கோபமுற்றவர்களாக, “இவர் ஏன் இங்கு வந்தார். கத்தோலிக்க படையிலல்லவா இவர் இருக்கிறார். ஏன் பாடிக்கொண்டு வருகிறார். அவருக்காக இங்கு என்ன காத்துக்கொண்டிருக்கிறது என்று அவர் உணரவில்லையா?” என்று கத்தினர். 

அதற்கு அவரே பதிலளித்தார். போர் கத்தோலிக்கர்களுக்கு சாதகமாகவே இருப்பதால், கொஞ்ச காலத்திற்கு படையிலிருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக வேறு ஒரு குருவானவர் படைவீரர்களைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவர் மகிழ்ச்சியுடன் இருப்பதால், தேவமாதாவின் பாடலைப் பாடுகிறார். அது அவருடைய மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்கின்றது. மேலும் அவர் அவர்களை நோக்கி, “நண்பர்களே! நான் விரைவில் மோட்சம் செல்ல விருக்கிறேன் என்று அறிவது எவ்வளவு நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.

அவரைக் கொல்ல முயற்சிக்கும் தங்களைப் பார்த்து கொஞ்சம் கூட பயமும் இல்லாதவராக, தங்களை நண்பர்கள் என்று அழைக்கும் இந்த கறுப்பு வௌ;ளை அங்கியை அணிந்த போதகர், எப்படிப்பட்டவராக இருக்கிறார்! என்று சிறிது நேரத்திற்கு அந்த பதிதர்கள் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு, “இரவு வரும். அப்போது நாம் கத்தியையும் வாளையும் அவரிடம் காட்டும்போது அவர் வேறொரு வித்தியாசமான பாடலைப் பாடுவதைப் பாருங்கள்” என்று அவலட்சணமுகத்தையுடைய ஒரு இளைஞன் கூறினான். அதற்கு

இன்னொருவன், “அப்படியே அவரை சுட்டெரித்து விடுவோம். தனது உடல் வறுக்கப்படும்போது, அவர் நம்மைப் பார்த்து இரக்கத்தை மன்றாடுவார். அப்போது அவரைப் பார்ப்பது நன்றாகயிருக்கும்” என்றான். வேறொருவன் “

அது சரிதான். ஆனால், இப்போது அவரை வைத்து நாம் ஒரு விளையாட்டை விளையாடலாம். அவருடைய கண்களைப் பிடுங்குவோம். அவருடைய விரல்களை வெட்டுவோம். ஆனால் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மெதுவாக செய்வோம்” என்றான். 

முதலில், இரகசியமான குரல்களில் ஒலித்த இவ்வெச்சரிக்கைகள், பிறகு உரத்த சப்தமாக மாறின. இவற்றைக் கேட்ட அர்ச்.சாமிநாதர் யாதொரு அச்சமுமின்றி முன்னைவிட இன்னம் அதிக மகிழ்வுடன், சிரித்துக் கொண்டே, அந்நகரத்துத் தெருக்களில் தேவமாதாவின் பாடல்களை தனது இனிமையான குரலில் பாடிக் கொண்டே நடந்து சென்றார். வுழியில், தன்னை ஆச்சரியத்துடன் வீடுகளின் கதவுகளுக்கிடையே ஒளிந்து நின்று உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியரை ஆசீர்வதித்துக் கொண்டே சென்றார். சில இடங்களில் தன்னை உபாதிக்கத் தேடிய பதிதர்களிடையே ஞான பிரசங்கங்களையும் போதிக்கலானார். பிறகு இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, அன்று இரவில் அந்தக் கிராமத்தின் பசும்புல் தரையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தன் இரவு ஜெபத்தைச் சொன்னார். பிறகு அங்கேயே படுத்து ஓய்வெடுத்தார். இதைக் கண்ட பதிதர்கள் தங்கள் கண்களையே நம்பமுடியாதவர்களாக, கத்திகளுடனும் ஆயுதங்களுடனும் அவரைக் கொலை செய்யும் எண்ணத்துடன், அமைதியாக தரையில் உறங்கிக் கொண்டிருந்த அர்ச்.சாமிநாதரையே சுற்றி சுற்றி வந்தனர். (தொடரும்)


அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 17






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக