Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 29 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் - 13

தேவமாதா செய்த புதுமை



வந்.டீகோ ஆண்டகையும் அவருடைய தலைமையின் கிழ் வேதபோதகக் குழவினரும் பிரான்சு நாட்டின் தெற்குப்பகுதியில் அயராமல் வேதபோதக
அலுவலில் ஈடுபட்டனர். வெண் கம்பளியிலான நீண்ட அங்கியை அணிந்திருந்தனர். லினன் மேலங்கியும் கறுப்புக் கம்பளியிலான வெளி முக்காடும் அணிந்திருந்தனர்.இவ்வுடையானது ஓஸ்மா மேற்றிராணியாரின் கதிட்ரல் பேராலயத்தின் உதவிக்குருக்கள் அணிகின்ற ஆடையாக இருந்தது.
பிரான்சின் நகரங்கள் அனைத்திற்கும் சென்று பதிதர்களுடன் நம் வேதபோதகக் குழுவினர் நேருக்கு நேராக வேதவிசுவாச சத்தியங்களைக் கற்பித்தும் அவர்களுடைய தப்பறைகளைச் சுட்டிக் காட்டியும் அதற்கான தர்க்கத்தில் ஈடுபட்டு அவர்களைத்  தெளியவைத்தும் வந்தனர். 
அர்ச். சாமிநாதர் மகா பரிசுத்த தேவமாதாவிடம், “ஆனால் இது மட்டும் போதாது. நாங்கள் போதித்துக் கொண்டு இருக்கும் போதே மக்கள் தங்கள் தப்பறைகளிலேயே மடிந்து போகின்றனரே! ஓ மோட்ச இராக்கினியே! எங்கள் நேச பரிசுத்த தாயாரே! நிச்சயமாக இதை விட வேறு ஒன்றை நாங்கள் செய்யக் கூடும்! இவ்வலுவலை இன்னும் அதிக துரிதமானதாகவும் மாற்றக் கூடியதும் அதிக பலனுள்ளதுமாக மாற்றக்கூடிய வேறு ஒரு திட்டத்தை நிங்கள் எங்களுக்காக நிச்சயம் வைத்திருப்பிர்கள்!” என்று மன்றாடினார்.

1206ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் நாள் அர்ச்.மரிய மதலேனம்மாளின் திருநாளன்று, அர்ச்..சாமிநாதர் ஃபோஷோவில் இருந்தார். வந். ஃபல்க் ஆண்டகை அவருக்கு நன்கொடையாக அளித்திருந்த சிற்றாலயம் அந்நகரில் இருந்தது. அப்பொழுது அந்த சிற்றாலயத்தின் வளாகத்தை தான் அர்ச். சாமிநாதர் தமது வேதபோத அலுவலின் தலைமையகமாக ஏற்படுத்தியிருந்தார்.  அன்று மாலையில் அர்ச்.சாமிநாதர் அந்நகரத்தின் வடக்கு எல்லையில் இருந்த நகரத்தின் வாயிலை நோக்கி நடந்தார். அங்கிருந்து அருகில் இருந்த மலை, பள்ளத்தாக்கு, காடுகள், கிராமத்து வயல்கள் அனைத்தையும் பார்க்கமுடியும். அது ஒரு மிக அழகிய காட்சியாக
இருக்கும். தூரத்தில் கார்கசோன் நகரத்தின் கற்கோட்டைச் சுவர் மாலைச் சூரிய ஒளியில் பொன்னாலான அரண்மனையெனக் காட்சியளித்தது. அதன் அருகில் மோன்ட்ரியல் நகரத்தின் கோபுரங்களும், மதில் சுவர்களும் பளபளக்கும் பளிங்கிலான கூரைச்சுவர்களும் தெரிந்தன.

எல்லாம் நன்றாக இருந்த போதிலும் அர்ச்.சாமிநாதர் ஆழ்ந்த வருத்தத்தில்
மூழ்கியிருந்தார்.;இங்கு எல்லாம் நன்றாக இருந்த போதிலும், பதித தப்பறை எவ்வளவோ பரவி முன்னேறியுள்ளது. பிரான்சில் வேறு எந்த பகுதியிலும் இல்லாத அளவிற்கு, இங்கு உயர்குடிமக்கள், விவசாயிகள் என்று எல்லாரையும்
நாசகரமான அந்த தப்பறை பாதித்துள்ளதே!. இதோ இந்நேரத்தில் நுரற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர், திவ்யபலிபூசையையும், தேவதிரவிய அனுமானங்கள் மற்றும் சுவிசேஷத்தையும் வெறுக்கும்படி பயிற்றுவித்து கல்வி கற்பிக்கப்படுகின்றரே! அக்குழந்தைகளின் தாய்மார்கள், பாட்டிமார்கள் மற்றும் அத்தைமார்களே அக்குழந்தைகளின் தப்பறைக்கு பொறுப்பாளிகள்! பசாசு ஞானஜீவியத்திலும் வேத விசுவாசத்திலும் அவர்கள்
கொண்டிருக்கும் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களுடைய அடுத்த தலைமுறையையும் நேச ஆண்டவரும் தங்களுடைய பரலோக தந்தையுமானவரை அறிந்து நேசிக்காவண்ணம் அவர்களை இருளான அந்த தப்பறையிலேயே வைத்திருக்கிறது; என்று தனக்கு தானே அர்ச். சாமிநாதர் கூறிக்கொள்வார்.

பிறகு அம்மாலை நேரத்தில் சூரியன் முழுதும் மறைந்து போகவே அப்பள்ளத்தாக்கை இருள் சூழந்தது. ஆனால் ஃபோஷோ நகரத்தின் வடக்கு வாசல் கதவுகளுக்கு அப்பால் தனிமையில் நின்றுகொண்டிருந்த அர்ச்.சாமிநாதர் பொழுது சாய்ந்து இருள் பரவுவதைக் கவனிக்கவில்லை.
 "பிரான்சின் தெற்கு பகுதியில் இருந்த பெண்களின் இருதயங்களில் இருந்து அத்தீய பதிதத்தை மடடும் விரட்டியடித்தால் எவ்வளவு நன்மை உண்டாகும்!
நிச்சயமாக அப்போது, நாம் ஆல்பிஜென்சிய பதிதத்திற்கு எதிராக செய்து வரும் இப்போரில் பாதி வெற்றிஅடைந்தவர்களாவோம்! ஏனெனில் குழந்தைகள் அனைவரும் காப்பாற்றப்படுவர். பிறகு, இறுதியில் அதன்விளைவாக ஆண்களும் தங்களுடைய மனைவி மக்களை பின்பற்றி சத்தியவேதத்திற்கு திரும்புவர்!" என்ற நினைவுகளில் ஆழ்ந்திருந்தார்.

அர்ச்.சாமிநாதர் “பள்ளிக்கூடங்கள், சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கன்னியர் மடங்கள்..” என்று தனக்குள் முணுமுணுத்தார். அப்போது திடீரென்று வானத்தில் ஒரு அதிசயம் ஏற்பட்டது. வெள்ளை நிறத்தில் ஒரு கோள வடிவத்தில் ஒரு ஒளி அந்திவானத்தில் அங்குமிங்கும் வட்டமிட்டது. பிறகு அதனுடைய பிரகாசம் அதிகரித்தது. மோட்சத்திலிருந்து வந்த அவ்வொளி
அப்பள்ளத்தாக்கிலிருந்த ஒரு தேவாலயத்தின் மேல் இறங்கியது. அர்ச். சாமிநாதர் அதையே உற்றுப் பார்த்தார். பிறகு, அவர், அவ்வெண்ணொளி புரோயில் என்ற ஊரில் இருந்த அர்ச்.கன்னிமாமரியின் தேவாலயத்தின் மேல் பலமுறை வட்டமிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார்.

அது ஃபோஷோ நகருக்குக் கீழிருந்த சிற்றாலயம்.அங்கு வெகு அரிதாகவே மக்கள் ஜெபிப்பதற்கு வருவர். “இந்நிகழ்விற்கான அர்த்தம் என்ன?” என்று அவர் தனக்குள்ளே வினவினார். உடனே அவருடைய இருதயத்தில் அசாரீரியான ஒரு குரலொலி, “என்னிடம் உதவி கேட்டாய். என் மகனே! இதோ புரோயிலில் உள்ள அந்த சிற்றாலயம். இங்கு தான் உன் ஜீவியத்தின் மெய்யான அலுவலை துவக்குவாய். இங்கு தான் நீ அநேக ஆத்துமஙகளை மோட்சத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பாய்” என்று சப்தித்தது. அப்பொழுது
அர்ச்.சாமிநாதர் ஆனந்த அக்களிப்புற்றார். ஏனெனில் மோட்ச இராக்கினியான மிகவும் பரிசுத்த தேவமாதாவே தன்னிடம் பேசினார்கள் என்று கண்டுகொண்டார். உடனே தேவமாதாவிடம் கேட்பதற்காக, அவர் மனதில் அநேக கேள்விகள் உதித்தன. அப்பொழுது, புரோயில் சிற்றாலயத்தை
முழுதும் பிரகாசிக்கச் செய்து கொண்டிருந்த அவ்வெண்ணொளி தேய்ந்து மறையலாயிற்று. அவருடைய இருதயத்தில் கேட்டுக்கொண்டிருந்த அந்த அசாரீரியான அக்குரலொலியும் நின்று போயிற்று. (தொடரும்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக