பாப்பரசர் ஹொனோரியுஸ் சந்திப்பு
மனந்திரும்பியஅவ்விளைஞர்கள் உத்தமமான ஆத்தும இரட்சணிய ஆவலுடன் மற்ற ஆத்துமங்களையும் சர்வேசுரனிடம் மாதா வழியாகக் கொண்டு வரும் படிக்கு தங்களை தேவமாதாவுக்கு அர்ப்பணிக்க பற்றியெரியும் ஆவலுடன் விளங்கினர். அதே போல இப்பொழுது இந்த இளைஞர்களில் ஒருவனான கிரகோரி அர்ச்.சாமிநாதரிடம், “சுவாமி, நீங்கள் ரோமாபுரிக்கு செல்லும்போது நானும் உங்களுடன் வரலாமா? என்னையும் உங்களுடைய சபைத் துறவியாக ஏற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டான். அதன்பிறகு மற்ற மூன்று இளைஞர்களும், தாங்களும் ஆத்தும இரட்சணிய அலுவலில் உழைக்கும் படியாகவும் தேவமாதாவின் மகிமைகளைப் பற்றி மென்மேலும் கற்றுக் கொள்ளும்படியாகவும் தங்களையும் சாமிநாதரிடம், அவருடைய சபையில் துறவிகளாக சேர்த்துக் கொள்ளும்படி விண்ணப்பித்தனர்.
அர்ச்.சாமிநாதர் இளைஞர்களை உற்றுப் பார்த்து புன்முறுவலுடன் “என் பிள்ளைகளே! நிங்களும் என்னுடன் ரோமாபுரிக்கு வரலாம்” என்று கூறினார். பின்னர் தன் இளையசகாக்களுடன் சாமிநாதர் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகள் வழியாக இத்தாலியை அடைந்தார். 1217ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியை அடைந்தார். மிலான், வெனிஸ், பொலோஞா நகரங்களில் தங்கி ஞானபோதகங்களை பிரசங்கித்தவாறு தனது ரோமைநகர பயணத்தைத் தொடர்ந்தார். 1218ம் வருடம் ஜனவரி மாதம் ரோம் நகரத்தை அடைந்தார். பாப்பரசர் ஹொனோரியுஸ் அர்ச்.சாமிநாதாரையும் அவருடன் சென்றிருந்த இளைஞர்களையும் அன்புடன் வரவேற்றார். உடனே பாப்பரசர் அர்ச்.சாமிநாதருக்கு மாபெரும் விலையுயர்ந்த நன்கொடையை அளித்தார். அதுதான் அர்ச்.சிக்ஸ்துஸ் தேவாலயம். “ரோம் நகரிலிருந்து சிறிது தூரத்தில் இந்த தேவாலயம் உள்ளது. ஆனால் அந்த இடம் உங்களுடைய துறவற மடத்திற்கு ஏற்ற இடம். அங்கு உங்களுடைய துறவற மடத்தைக் கட்டுவதற்கு திட்டமிடுங்கள்” என்று பாப்பரசர் கூறினார்.
“ஆம். பரிசுத்த தந்தையே! அதற்காகத் தான் இங்கு வந்தேன்” என்று சாமிநாதர் பதிலளித்தார்.
அதற்கு பாப்பரசர் புன்னகையுடன், “நான் உங்களுக்கு இந்த உதவியை செய்தேன் என்றால் அதற்கு பதிலாக ஒன்றை உங்களிடமிருந்து கேட்பேன். அது என்னவென்று உங்களால் ஊகிக்க முடியுமா?” என்று வினவினார். ஒரு நாடோடியும் ஏழைப் பிரசங்கியுமான தன்னால் பூலோகத்தில் ஆண்டவரின் பிரதிநிதியாக விளங்குபவருக்கு என்ன உபகாரம் செய்ய முடியும் என்று அர்ச்.சாமிநாதர் எண்ணினார். ரோம் நகரில் ஆங்காங்கே இருந்த கன்னியாஸ்திரிகளுடைய மடங்களையெல்லாம் ஒழுங்குபடுத்த விரும்பிய பாப்பரசரோ, சாமிநாதரிடம், "சுவாமி நீங்கள் இங்கிருக்கும் கன்னியர் மடங்களெல்லாம் ஒரே சபைவிதிமுறையைப் பின்பற்றி உங்களுடைய ஞான அதிகாரத்தின் கீழ் இயக்க ஆசிக்கிறேன். புரோயிலில் நிங்கள் ஏற்படுத்தியுள்ள கன்னியர் சபையின் ஒழுங்குகளையே இங்கு பயன்படுத்தலாம். ஆனால் பல சபைகளைச் சேர்ந்த கன்னியர்களிடமிருந்தும், அவர்களுடைய பெற்றோரிடமிருந்தும் ஏராளமான எதிர்ப்புகளை நிங்கள் சந்திக்க நேரிடும்" என்றார்.
அதற்குஅர்ச்.சாமிநாதர், "பரிசுத்த தந்தையே! கன்னியர்சபை சீர்திருத்த அலுவலை எப்பொழுது ஆரம்பிக்கலாம்? நான் அதற்கு தயார்" என்றார்.
அதற்கு பாப்பரசர், "அதற்கு முன்பாக நிங்கள் உங்களுடைய சபையை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளதே. அர்ச்.சிக்ஸ்துஸ் தேவாலய வளாகத்தில் உங்களுடைய சபை மடத்தை நிறுவ வேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் முதலில் செய்து முடியுங்கள். அதன்பிறகு கன்னியாஸ்திரிகள் சபைசிர்திருத்த அலுவலை மேற்கொள்ளுங்கள்" என்றார்.
அதற்கு சம்மதித்த அர்ச்.சாமிநாதர், "பரிசுத்த தந்தையே! முன்பு நான் செய்து வந்ததுபோல இந்நகரத்தில் ஞான தியான பிரசங்கங்களை பிரசங்கிக்கலாமா? அதற்கு உங்களுடைய அனுமதி தேவை" என்றார். பார்ப்பரசரும் உடனே மனமுவந்து அர்ச்.சாமிநாதருக்கு ரோம் நகரமெங்கும் போதிப்பதற்கான அனுமதியும் அதற்கான ஆசிரையும் அளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக