அர்ச்.பிரான்சிஸ் அசிசியாரின் செம்மறி ஆடு நடுப்பூசையில் ஆண்டவரை ஆராதித்த புதுமை
அர்ச்.பிரான்சிஸ் அசிசியார் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த உண்மை நிகழ்வைப்பற்றி அர்ச்.பொனவெந்தூர் தமது புத்தகத்தில் எழுதிவைத்துள்ளார்: ஐந்து காய வரம் பெற்ற அர்ச்.பிரான்சிஸ், திவ்ய கர்த்தரின் பாடுகளைப் பற்றி மிகுந்த பக்தியுடையவராயிருந்ததால், ஆண்டவருடைய பாடுகளின் பேரில் தமக்கு அடிக்கடி நினைவு வரவேண்டும் என்பதற்காக ஒரு செம்மறியாட்டுக் குட்டியைத் தமதருகில் இருப்பதற்குப் பழக்கம் பண்ணினார். அர்ச்.பிரான்சிஸ் எங்கேயிருந்தாலும் அந்த ஆட்டுக்குட்டியும் அவர்கூடவே இருக்கும். செம்மறி ஆடு ஆண்டவருடைய திவ்யபலியின் அடையாளமாக இருப்பதால், அந்த ஆட்டுக்குட்டியைக் காணும்போதெல்லாம், திவ்ய கர்த்தர் பாடுபட்டதை நினைத்து, அழுதுகொண்டு அந்தப் பாடுகளின்பேரில் தியானம் பண்ணுவார்.ஒருசமயம், அர்ச்.பிரான்சிஸ் திவ்யபலிபூசை காண்கிறபோது, அந்த ஆட்டுக்குட்டியும் அவரருகில் படுத்துக்கொண்டது. நடுப்பூசை சமயத்தில் குருவானவர் தேவநற்கருணை எழுந்தருளப்பண்ணுகிற மணிச்சத்தம் கேட்டவுடனே, ஆட்டுக்குட்டி எழுந்திருந்து, தன் முன்னங்கால் இரண்டையும் மடித்துத் தலைகுனிந்து, மகா பரிசுத்த தேவநற்கருணைநாதரை ஆராதித்து வணங்கியது.
அதைக் கண்டு திவ்யபலிபூசையில் எழுந்தருளியிருக்கிற நேச ஆண்டவரான சேசுநாதர்சுவாமியின் பேரில் மிகுந்த பக்தியினால் அழுதார்.
கிறிஸ்துவர்களே! திவ்யபலிபூசை நேரத்தில் குருவானவர் அணிந்திருக்கிற வஸ்திரத்தின் அர்த்தத்தை நிங்கள் அறிந்தால் உங்களுக்கு அதிக பக்தி ஏற்படும். குருவானவர் முதுகில் தரித்திருக்கிற சிறிய துண்டு, யூதர் பரிகாசமாக சுவாமியுடைய திவ்ய திருமுகத்தை மறைத்த வஸ்திரத்தின் அடையாளம். அவர் அணிகிற வெள்ளை அங்கி, சுவாமியை பைத்தியமென்று எண்ணி, பரிகாசமாக ஏரோது, ஆண்டவர் மேல்போட்ட வெள்ளைச் சட்டைக்கு அடையாளம். குருவானவர் தரித்திருக்கிற இடுப்புக் கயிறு, சேவகர் ஆண்டவரைப் பிடிக்கிறபோது அவரைக் கட்டின கயிற்றின் அடையாளம். குருவானவர், கையில் அணிகிற நிண்டப் பட்டு, ஆண்டவரைக் கற்றூணூடே கட்டின அடையாளம். குருவானவர் கழுத்தில் அணிகிற நீண்ட பட்டு உத்தரியம் ஆண்டவர் சிலுவை சுமந்துபோகிற போது யூதர்கள் அவர் முகத்தில் போட்ட கயிற்றின் அடையாளம். குருவானவர் தரித்திருக்கிற பெரிய பட்டு மேலாடை யூதர் பரிகாச ராஜாவாக ஆண்டவர் மேல்போட்ட சிகப்புப் பட்டுக்கு அடையாளம். எனவே திவ்யபலிபூசையில் பக்தியற்று நம் ஆண்டவரை ஆராதியாமல் இருக்கும் கெட்ட கிறிஸ்துவர்களும் அந்த துஷ்ட யூதர்களுடன் சேர்ந்து மிண்டும் திவ்ய இரட்சகரை நிந்திக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் நன்குணர வேண்டும். நாம், திவ்யபலிபூசையைக் காண்கிறபோது, எப்பொழுதும் மிகுந்த பக்தியுடன் ஆண்டவரை ஆராதித்துக் கொண்டிருக்க வேண்டும். நடுப்பூசையில் எழுந்தருளியிருக்கும் திவ்ய கர்த்தரை நாம் திவ்ய நன்மையில் உட்கொள்ளும் வரை ஆராதித்துக்கொண்டிருக்க வேண்டும்.
அதன்பிறகு தேவமாதாவுடனும், சகல மோட்சவாசிகள், நமது பாதுகாவலான அர்ச்சிஷ்டவர்கள், மற்றும் நம் காவல் சம்மனசானவரின் உதவியுடனும் நம் நேச ஆண்டவரை நம் ஆத்துமத்தில் வரவேற்று ஆராதித்து, அவருடன் உரையாட வேண்டும். பகுத்தறிவில்லாத இந்த ஆடு ஆண்டவரை ஆராதித்ததைப் பார்த்தோம். ஆனால், எத்தனையோ கிறிஸ்தவர்கள், மந்தபுத்தியுள்ளவர்களாக கோவிலில் ஆண்டவருக்கு எந்த பக்தி ஆச்சாரம் எதுவும் காண்பிக்காமல் அசமந்தர்களாக இருப்பதைக் காணும்போது அவர்கள் எதற்காக கோவிலுக்கு வருகிறார்கள்? யாருடைய (பசாசுடைய!!) கருவிகளாக அங்கு செயல்படுகிறார்கள் என்பதை நன்கு சிந்திப்போம்.
Ave Maria
பதிலளிநீக்கு