அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 2:
இளமையில் ஞானம்
அர்ச்.சாமிநாதருக்கு 14 வயதானதும் அக்காலத்தில் ஸ்பெயினில் பிரசித்தி பெற்ற பலென்சியா பல்கலைகழகத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு 10 வருடமாக உயர்கல்வி பயின்றார். அங்கு நிலவிய யாதொரு சுழலும் அவருடைய தேவசிநேக ஜீவியத்தை பாதிக்கவில்லை. அங்கு படிப்பில் அவருடைய அபரமானஅறிவு திறமையும் பழகுவதில் அவர் கொண்டிருந்த சம்மனசைப்போன்ற பரிசுத்ததனமும் பார்ப்பவர் அனைவரையும் அவர்பால் வெகுவாய் கவர்ந்தது. அவர் பிறந்ததிலிருந்தே சர்வேசுரனுடைய காரியங்கள் மட்டுமே அவரைக் கவர்ந்திருந்ததால், தற்பொழுது அவர் இருந்த பல்கலைக் கழகத்தில் நிலவிய உலகக் கவர்ச்சிகள் அவரை சிறிதளவும் பாதிக்கவில்லை.
அங்கு இவர் பயின்ற உலக அறிவியல் இவருடைய உன்னத ஆவல்களை திருப்திபடுத்தவில்லை. வேதஇயலைப் படிப்பதில் தன்னையே விரைந்து ஈடுபடுத்திக் கொண்டார். அதிலுள்ள உன்னத பரலோக ஜீவசுனையின் நீரானது மேலான பரலோக சத்தியத்தைக் கண்டடையும்படி தன் ஆத்துமத்தில் ஏற்பட்டிருந்த தாகத்தைத் தணிக்கக்கூடியது என்பதை உணர்ந்திருந்தார். பரிசுத்த வேதாகமத்தின் நிரூபங்களையும் தத்துவ இயலையும் ஆழ்ந்து பயில்வதில் 4 வருடங்கள் ஈடுபடலானார். வேதகல்வியை தகுதியுடன் கற்பதற்கு ஒருவனுடைய இருதயமானது தன் ஊனியல்பை மேற்கொள்ள கற்றறிந்திருக்க வேண்டும் என்று அறிந்தார். எனவே அவர் அங்கு கல்வி கற்ற 10 வருடங்களும் திராட்சை இரசம் அருந்தாமல் தபசுடன் ஜீவித்திருந்தார்.
தியோடொரிக் அப்போல்டா என்பவர் அர்ச்.சாமிநாதரைப்பற்றி,;இவர் ஒரு சிறுவனாக இருந்தபோதிலும் ஞானத்தில் ஒரு அறிவு முதிர்ந்த துறவியாக காணப்பட்டார். அவருடைய வயதிற்குரிய இன்பங்களுக்கு மேம்பட்ட வயதினராக ஜீவித்தார். நீதியின் மேல் தாகமுள்ளவராக இருந்தார். அவர் தன்னைச் சுற்றியிருந்த இலக்கு ஏதுமில்லாத மூடத்தனமான உலகத்தை விட திருச்சபையையே பெரிதும் தன் கண்ணென போற்றி மகிழ்வார்.
திருச்சபையின் பரிசுத்த உறைவிடமான மகாபரிசுத்த தேவநற்கருணை பேழையே அவருக்கும் தங்கி மகிழும் ஓய்விடமாக இருந்தது. அவருடைய அன்றாட நேரமெல்லாம் ஜெபத்திற்கும் படிப்பிற்கும் சமமாக ஒதுக்கப்பட்டிருந்தது. சாமிநாதர் கொண்டிருந்த உன்னதமான பக்தி பற்றுதலுக்கும் அவர் பக்திபற்றுதலுடன் வேதகற்பனைகளை அனுசரித்து வந்த ஜீவியத்துக்கும் சம்பாவனையாக சர்வேசுரன் உன்னத ஞானத்தை அவருக்கு அளித்தார். சாமிநாதர் அந்த ஞானத்தைக் கொண்டு மகா கடினமான கேள்விகளுக்கும் மிக எளிதாக விடைஅளிப்பவராக திகழ்ந்தார்; என்று குறிப்பிடுகின்றார்.
1190ம் ஆண்டு இலையுதிர்காலம். ஸ்பெயின் நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டாயிற்று. பலேன்சியா நகரெங்கும் வறுமை0 அதனால் மக்கள் பசி பட்டினியால் மடிந்தனர். இதைக் கண்ட 20 வயது இளைஞரான சாமிநாதர் தனனிடமிருந்த பணத்தைக் கொடுத்தும் தன் உடைமைகளை விற்றும் அநேக ஏழைகளுடைய வறுமையை நீக்கினார். மேலும் தன்னிடமிருந்த விலையுயர்ந்த புத்தகங்களையும் விற்பதற்கு தீர்மானித்தார்.
அப்போது அவருடைய சக மாணவ நண்பர்கள் அவரிடம், “ இந்த புத்தகங்கள் இல்லாமல் எவ்வாறு உன் கல்வியை தொடரமுடியும்?”; என்று வினவினர். அதற்கு சாமிநாதர், “இவ்வுலகில் வாழ லேண்டிய மனிதரின் சாரங்கள் இறக்கும் தருவாயில் உள்ளபோது, இந்த இறந்த ஆட்டுத்தோலில் எழுதப்பட்ட இப்புத்தகங்கள் நமக்கு முக்கியமானவையாகுமோ? நான் இப்புத்தகங்கள் இல்லாமலேயே நான் சமாளித்துக் கொள்வேன்” என்றார். அவருடைய இந்த பிறர்சிநேக சேவை அவருக்கு பரலோகத்திலிருந்து இன்னும் மேலான வெகுமதிகளைப் பெற்றுத் தந்தது. சாமிநாதர் எல்லா பாடங்களிலும் முன்னைவிட இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று, தன் வகுப்பிலேயே முதல் தலைசிறந்த மாணவனாக திகழந்தார்.
இவ்வாறு ஏழைகளின் வறுமையை போக்குவதற்காக சாமிநாதர் தன் விலையுயர்ந்த புத்தகங்களையெல்லாம் விற்றதைப்பற்றி ஓஸ்மா நகர மேற்றிராணியார் கேள்விபட்டதும் தீரமிக்க இந்த மாணவர் பிற்காலத்தில் ஒரு நல்ல குருவாக தனக்கு நல்ல உதவியாளராக பணிபுரியக்கூடும் என்று எண்ணி சாமிநாதர் தன்னிடம் வரும்படி ஆசித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக