புதிய அதிபரை தேர்ந்தெடுத்தல்
அர்ச். சாமிநாதர், பொலோஞா நகருக்குச் சென்றார். இங்கு தான் இந்த வருடத்தின் பெந்தேகோஸ்தே திருநாளின் போது அர்ச். பிரான்சிஸ் அசிசியாரை, அவருடைய சிறிய சகோதரர்களின் பொதுக்கூட்டத்தின் போது சந்தித்திருந்தார். ஆனால், இப்பொழுது, அவர் தமது சபையைப் பற்றிய சிந்தனையில் இருந்தார். அவருடைய சபைசகோதரர்கள், இந்நகரத்தில் பல மாதங்கள் தங்கியிருந்தபோதிலும், இன்னும் மடம் ஒன்றும் ஏற்படுத்தப்படாமல் இருந்தது. சாமிநாதசபைத் துறவிகள் பொலோஞாவிலுள்ள அர்ச். மஸ்கரெல்லா மரியம்மாளின் தேவாலயத்தில் தலைமையகத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால், அந்த தேவாலயத்திற்கு மிகச் சொற்ப விசுவாசிகளே வந்தனர். ஏனெனில் அது ஒரு வசதிகுறைவான இடத்தில் இருந்தது. அர்ச். சாமிநாதர், சீடர்களிடம், "நமக்கு இதைவிட பெரிய தேவாலயம் தேவைப்படுகிறது. அருகில் பல்கலைக்கழகம் இருப்பதால், இம்மடத்திற்கு நல்ல பிரசங்கியாரும், இளைஞர்களை சிநேகிப்பவருமான ஒரு அதிபர் தேவைப்படுகிறார்" என்றார்.
இத்திறமைகளைக் கொண்டுள்ள அநேக துறவிகள் அர்ச். சிக்ஸ்துஸ் மடத்தில் இருந்தனர். அர்ச். சாமிநாதர், தமது இருதயத்தில் இத்தகைய திறமைகளுடன் திகழும் ஒருவரைக் கண்டறிந்தார். அவர் இம்மடத்திற்கு வந்தால் இதை வெற்றிகரமாக செயல்பட வைப்பார் என்று நினைத்தார். அவர் தான், பாரீஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான, ஆர்லியன்ஸ் நகரத்தின் சகோ. ரெஜினால்டு. சில மாதங்களுக்கு முன்பாகத்தான் தேவமாதா உத்தரியத்தை இவருக்கு அளித்து, இவருடைய தீராத காய்ச்சலிலிருந்து குணப்படுத்தியிருந்தார்கள். சகோ.ரெஜினால்டு இப்போது தமது பரிசுத்த பூமிக்கான தவயாத்திரை நேர்ச்சையை முடித்துக்கொண்டு, ஜெருசலேமிலிருந்து தமது சபை மடத்தை நோக்கி திரும்பி வருகிறார் என்று அறிந்த அர்ச். சாமிநாதர், " ஆண்டவரே சகோ. ரெஜினால்டுவின் பாதங்களைத் துரிதப்படுத்தியருளும் ! அவர் இங்கு வந்தபிறகே நான் நிம்மதியாக பிரான்சு, ஸ்பெயின் நாடுகளுக்கு செல்லமுடியும்" என்று வேண்டிக் கொண்டார். நவம்பர் மாதம் 1218ம் வருடம் சகோ. ரெஜினால்டு பொலோஞா மடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் இன்னும் அர்ச். சிக்ஸ்துஸ் மடத்திலிருந்த மற்ற நவசந்நியாசிகளுள் ஒரு நவசந்நியாசியாக இருந்தபோதிலும், அர்ச். சாமிநாதரின் விசேஷ கட்டளைக்குப் பணிந்து பொலோஞா மடத்தின் அதிபர் பொறுப்பை கீழ்ப்படிதலினிமித்தம் ஏற்றுக் கொண்டார்.
அவரிடம் பொலோஞாவில் சட்டக்கல்லுாரி இருக்கும் பல்கலைக்கழகத்தைப் பற்றி அறிவித்த அர்ச். சாமிநாதர், "ஓ என் மகனே! நன்றாக ஜெபியுங்கள். இதுவரை இல்லாத அளவிற்கு நன்றாக இந்த இளைஞர்களுக்குப் பிரசங்கம் செய்யுங்கள். ஏனெனில் இக்கல்லுாரி மாணவர்கள் நல்ல துறவிகளாக நமது மடங்களில் சேரும் பிரகாசமான எதிர்காலம் இம்மடத்திற்கு இருக்கிறது என்று நம்புகிறேன்" என்று கூறினார். உடனே சகோ. ரெஜனால்டு , " ஆகட்டும் .சுவாமி.'' என்றார். பிறகு, அர்ச்.சாமிநாதர், அங்கிருந்து, புரோயில், துலோஸிலுள்ள தமது சபை மடங்களைச் சந்திக்கச் சென்றார். அங்கிருந்து ஸ்பெயினிலுள்ள செகோவியா நகர் மடத்திற்கு சென்றார். அங்கு யாதொரு மடமும் இதுவரை நிறுவப்படாமல் இருந்தது. தமது சபையின் அதிபர் சுவாமியார் சென்றதும், சகோ.ரெஜனால்டுவின் இருதயம் கனத்தது. இப்பொழுது தான் மற்ற நவசந்நியாசிகளுடன், துறவற ஒழுங்குகளை நன்கு பயிலும்படியாக அர்ச். சாமிநாதருடைய துறவற சபைக்குள் பிரவேசித்திருந்த சகோ. ரெஜினால்டு, தாமே மற்றவர்களுக்கு அதற்குள்ளாக வேத ஒழுங்குகளைப் பற்றி போதிக்கவும், மற்ற துறவிகளால் இதுவரை துவக்கப்படாத ஒரு துறவறமடத்தை நிறுவவும் வேண்டியிருக்கிறதே என்று நினைத்து மிகவும் கலங்கினார். உடனே அவர் தேவாலயத்திற்கு சென்று தேவமாதாவிடம், "ஓ பரிசுத்த தேவமாதாவே! நான் இத்தனைக் காரியங்களையும் எவ்வாறு நிறைவேற்றுவேன்? இளைஞர்களை எப்படி உமது திவ்ய குமாரனிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்? அவர்களை எவ்வாறு இந்த சிற்றாலயத்திற்குக் கொண்டு வந்து நான் பிரசங்கிப்பதைக் கேட்கச் செய்வேன்?' என்று கலக்கத்துடன் மன்றாடினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக