Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 11 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்தரம் அத்தியாயம் 24

 மனம் திரும்பிய ஆல்பிஜென்சிய பதித பெண்கள் 

ஒருசமயம் தூலோஸ் நகரில் உயர்குடி பெண்கள் பலர் ஒரு விடுதியில் வசித்து வந்தனர். அங்கு அவர்களுக்கு போலியான பதித போதகங்களையும், போலியான வெளிவேட தபசையும் காண்பித்து ஆல்பிஜென்சிய பதித போதகர்கள் தங்கள் வசம் அப்பெண்களை ஈர்த்துக் கொண்டிருந்தனர். இதையறிந்ததும் அப்பெண்களை மனந்திருப்பும் திட்டத்துடனும், தபசுகால பிரசங்கங்களை நிகழ்த்துவதற்காகவும் அந்நகருக்கு வந்த அர்ச்.சாமிநாதர், தேவபராமரிப்பினால், அவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே ஒரு அறையில் தன்னுடன் வந்திருந்த ஒரு சீடருடன் தங்கும்படியாயிற்று. தபசும் ஒறுத்தலும் நிறைந்த உத்தமமான துறவற ஜீவியம் என்ன என்பதை அப்போது அப்பெண்கள் நம் அர்ச்சிஷ்டவருடைய ஜீவியத்தைக் கண்டு உணர்ந்து கொண்டனர். 

அர்ச்.சாமிநாதருடைய ஜிவியமுறையானது தங்களை இதுவரை பெரிதும் கவர்ந்துவந்த ஆல்பிஜென்சிய பதிதருடைய வாழ்க்கைமுறையை விட மாபெரும் விதத்தில் உயர்ந்ததும் மேன்மையானதுமாக திகழ்வதை அந்த விடுதியில் வசித்த பெண்கள் கண்டுணர்ந்தனர். மிருதுவான படுக்கை விரிப்புகளை ஒருபோதும் பயன்படுத்தாமல் வெறும் தரையிலேயே அர்ச்.சாமிநாதரும் அவருடைய சீடரும் இரவு நேரங்களில் படுத்து உறங்கினார்கள். பாஸ்குத் திருநாள் வரை தபசுகாலம் முழுவதும் சொற்ப உணவையே உண்டனர்.  வெறும் ரொட்டியும் தண்ணீருமே ஆகாரமாயிருந்தது. இரவு நேரம் முழுவதும் தபசிலும் ஜெபத்திலும் ஈடுபட்டிருந்தனர். பகல் நேரங்களில் சர்வேசுரனின் அதிமிக மகிமைக்காக உழைப்பதிலும் ஆத்தும இரட்சணிய அலுவலிலும் ஈடுபட்டனர். இப்புதியதும் உன்னதமானதுமான கத்தோலிக்க கிறிஸ்துவ துறவறஜீவியமானது பரலோக வல்லமையால் அதைக் காண்பவரின் இருதயங்களை தேவ விசுவாச சத்தியத்திற்கு திறந்துவிட்டது.

அவ்விடுதியில் வசித்த அனைவரும் அர்ச்.சாமிநாதரின் கரங்களாலேயே தங்களுடைய வேதவிசுவாசத்தைப் புதுப்பித்துக் கொண்டனர். “சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக நமது ஒளி மனிதர் முன் ஒளிரும்படியாக திகழும் இத்தகைய கடின தபசையும் ஒறுத்தலையும் கொண்ட பரிகார ஜீவியமான பரிசுத்த துறவற ஜீவியமே ஞான பிரசங்கங்களை விட பலமடங்கு ஞானபலன்களை ஏராளமாக பெறுவிக்கவல்லது” என்று அர்ச்.சாமிநாதர் தன் சிடர்களிடம் அறிவுறுத்தினார்.

தூலோஸ் நகரத்தில் திருச்சபை அதிகாரிகளால் பிடிபட்ட ஆல்பிஜென்சிய பதிதர்கள் அரசாங்கத்தின் நீதி விசாரணைக்குக் கையளிக்கப்பட்டபோது அவர்கள் பதித தப்பறையை விட்டு விடாமல் பிடிவாதமாக மனந்திரும்ப மறுத்தனர். மனந்திரும்புவதற்கு அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நீண்டகால அவகாசத்திற்குப் பிறகு நிதிவிசாரணையாளரான அரசாங்க அதிகாரிகள் அப்பதிதர்களை நெருப்பிலே தள்ளிக் கொல்லும்படி திர்ப்பிட்டனர். அப்பதிதர்களில் ஒருவனை அங்கு வந்திருந்த அர்ச்.சாமிநாதர் பார்த்தார். அவனைப் பற்றிய வருங்கால இரகசியங்களை சர்வேசுரனே தேவ பராமரிப்பினால் அர்ச்.சாமிநாதருடைய இருதயத்தால் அறியும்படிச் செய்தார். உடனே சாமிநாதர் நீதி விசாரரணையாளரான அலுவலர் ஒருவரிடம் அந்தப் பதிதனைச் சுட்டிக் காட்டி, “அவனுக்கு யாதொரு திங்கும் நேராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார். பிறகு அந்தப் பதிதனை மிகவும் கனிவுடன் நோக்கி அர்ச்.சாமிநாதர், “என் மகனே! உனக்குக் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஏனெனில், ஒருகாலத்தில் நீ  ஒரு அர்ச்சிஷ்டவனாக மாறுவாய்”என்றார். இம்மனிதன் பிற்காலத்தில் தொடர்ந்து 20 வருடங்களாக தான் பற்றியிருந்த பதித இருளில் இருந்த போதிலும், அதன்பிறகு, சர்வேசுரனுடைய தேவவரப்ரசாதத்தால் தொடப்பட்டவனாக, தன் பதித தப்பறைகளை உணர்ந்து பதிதத்தை விட்டு விலகினார். உத்தம சாங்கோபாங்கத்தில் உயர்ந்து அர்ச்.சாமிநாதசபையில் உட்பட்டு பாக்கியமான மரணத்தை அடைந்தார்.


Please click here to Read more Saint Stories

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக