Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 19 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 32


சம்மனசுக்கள் உணவு பரிமாறுதல் 


“பாலஸ்தீனத்திற்கு சென்று வந்த பிறகு ரெஜினால்டு சிக்ஸ்துஸ் மடத்தில் துறவற பயிற்சி பெறுவார். அதன் பிறகு சர்வேசுரனுக்கு சித்தமானால், அவர் பொலோஞா நகரத்திற்கு அனுப்பப்படுவார். அங்கு மற்றொரு போதக துறவிகளுக்கான மடத்தை ஏற்படுத்துவார். அந்நகரில் மிகவும் பிரசித்திபெற்ற சட்டக் கல்லூரி இருக்கிறது. அங்குள்ள பேராசிரியர்களும், மாணவர்களும் நம் ரெஜினால்டு சகோதரரின் ஞான முயற்சியினால் தேவ வரப்ரசாதத்தைப் பெறுவர். நம் நேச ஆண்டவரின் உத்தம பிள்ளைகளாக மாறுவர்” என்று அர்ச்.சாமிநாதர் சிந்தித்துக் கொண்டிருந்தார். மேலும் தற்போது அர்ச்.சிக்ஸ்துஸ் மடத்தில் 40 இளைஞர்கள் புதிதாக துறவற ஜீவியத்திற்குள் நுழைந்துள்ளனர். போதக துறவிகளாவதற்கான ஆர்வமுள்ள அவர்களுக்கு தகுந்த ஞானப் பயிற்சியை அளிப்பதற்கான அரும்பணியாற்ற வேண்டிய மாபெரும் கடமை தம்மேல் சுமத்தப்பட்டிருப்பதை அர்ச்.சாமிநாதர் உணரலானார். 

அர்ச்.சிக்ஸ்துஸ் மடத்தின் சமையலறைக்கு பொறுப்பாளரான ஒரு இளந்துறவி அச்சமயம் சாமிநாதரிடம் வந்தார். அவர், “சுவாமி! உணவறை காலியாக இருக்கிறது. இன்று நாம் உண்பதற்கு ஒன்றுமில்லை. ஒரு சில காய்ந்த ரொட்டித் துண்டுகள் தான் உள்ளன. இதுவரை இதுபோல நிகழ்ந்ததில்லை. உணவு கேட்டு வீடுகளுக்கு செல்லும் நம் சகோதரர்கள் ரொட்டி, பாலாடைக் கட்டிகள், காய்கறி, பழங்கள் என்று ஏதாவது உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். இம்முறை அவர்கள் எதையும் கொண்டு வரவில்லை. இப்பொழுது மதிய உணவிற்கான நேரமாகிவிட்டது. இப்பொழுது என்ன செய்யபபோகிறோம்?” என்று வினவினார். 

அதற்கு அர்ச்.சாமிநாதர் அவரிடம், “சரி. சாப்பாட்டு மணியை அடியுங்கள்!” என்றார். 

சில நிமிடங்களில் துறவற சகோதரர்கள் அனைவரும் சாப்பாட்டு அறையில் கூடினர். ஆனால் அவர்கள் காலியான தட்டுகளின் முன்பாக தங்களுடைய இருக்கைகளில் அமர்வதற்கு முன்பாக இதுவரை பார்த்திராத இரு இளைஞர்கள் அங்கு தோன்றினர். அவர்கள் புதிதாக சுடப்பட்ட தரமான ரொட்டிகளை உணவறையில் இருந்த அனைவருக்கும் பரிமாறினார்கள். அவர்கள் ஏதோ ஒரு பெரிய செல்வந்தரின் வீட்டிலிருந்து வந்திருக்கலாம் என்று நினைத்த துறவிகளும் ஒன்றும் கேட்காமல் அவர்களுக்கு நன்றி செலுத்தி உணவை உண்டார்கள். ஆனால் உணவை பரிமாறிய பிறகு அவ்விரு இளைஞர்களும் நின்ற இடத்திலிருந்து திடீரென்று மறைந்து விட்டனர். இவ்வதிசய நிகழ்வைக் கண்ட அனைவரும் அவர்கள் மோட்சத்திலிருந்து வந்த சம்மனசுகள் என்று வியந்தனர். 

அப்போது அர்ச்.சாமிநாதர் அவர்களிடம், “ஆம். தம்மேல் நம்பிக்கை கொண்டிருப்பவர்களை நல்ல சர்வேசுரன் எவ்வளவு மகத்துவமிக்க விதத்தில் பராமரிக்கிறார் என்பதைப் பாருங்கள்” என்று கூறினார். இப்புதுமை ரோம் நகரெங்கும் பரவியது.

அர்ச்.மார்க் தேவாலயத்தில் அர்ச்.சாமிநாதர் நிகழ்த்திய பிரசங்கங்களைக் கேட்பதற்காக எல்லா வயதினரும் மிக ஆர்வமுடன் பெருந்திரளாகக் கூடினர். “சங்.தோமினிக் சுவாமியார் ஒரு அர்ச்சிஷ்டவர். அவருடைய ஜெபத்திற்கு செவிசாய்த்து நல்ல ஆண்டவர் தமது சம்மனசுகளை அனுப்பி அவருடைய சபையினருக்கு உணவளித்து பராமரிக்கிறார். அவருடைய நிழல் கூட நோயாளிகளைக் குணப்படுத்துகின்றது” என்றெல்லாம் அர்ச்சிஷ்டவருடைய மகிமைகளைப் பற்றி ரோம் நகரத்து மக்கள் வியப்புடன் கூறிவந்தனர். சாமிநாதர் போகுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டு அவருடைய துறவற அங்கியிலிருந்து சிறு சிறு துண்டுகளை வெட்டிச் சென்றனர். அவருடைய ஞாபகமாக  தங்களுடன் வைத்திருக்கும்படியாகவும் வியாதி நேரத்தில் தங்களை மந்திரித்துக் கொள்ளும்படியாகவும் அத்துணியை அவர்கள் எடுத்துச் சென்றனர். 

இதைக் கண்ட அவருடைய சகோதரர்கள், ஒரு நாள் அவரிடம், “சுவாமி! இதை இப்படியே விட்டு விடக்கூடாது. உங்களைத் தொடுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உங்களுடைய உடையை வெட்டி வெட்டி கந்தலாக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் புத்தி புகட்டுவதற்கு எங்களை அனுமதியுங்கள்” என்று கேட்டனர். 

அதற்கு அவர் அவர்களிடம், “வேண்டாம். அவர்கள் எதையும் கெடுதலாக செய்யவில்லை. இந்த ஒரு சிறு கம்பளித்துண்டு, அவர்களுடைய நினைவுகளை சர்வேசுரன்பால் உயர்த்தவும் அவர்களிடம் உத்தமமான தேவ சிநேகத்தையும் தேவ நம்பிக்கையையும் ஏற்படுத்தவும் கூடுமானால், அவர்கள் அந்த துணியை வைத்தக் கொள்ளட்டும்” என்று கூறினார். 
ரோம் நகர மக்கள், ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் பலரும் அவரை எப்பொழுதும் எங்கும் பின்தொடர்ந்து செல்வர். தங்களை அவர் ஆசிர்வதிக்கும்படி மன்றாடுவர். அவர் ஒரு தேவாலயத்தில் ஜெபங்களையும் தேவகீர்த்தனை பாடல்களையும் பாடி அவர்களை ஆசீர்வதிப்பார். முன்பு அவர்கள் அதே ஜெபங்களை ஜெபித்தபோது அடையாத புத்துணர்வையும் தேவ வரப்ரசாதங்களையும், இப்போது அபரிமிதமாகப் பெறுவதை உணர்ந்து சர்வேசுரனுக்கு நன்றியும் ஆராதனையையும் செலுத்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக