Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 27 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்:அத்தியாயம் -10

 அர்ச்.சாமிநாதர் ஏற்படுத்திய கன்னியர் சபை



ஃபோஷோவில் நிகழ்ந்த அதிசயத்திற்கு பிறகு, அதைக்குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர் இப்புதுமையினால் ஒரு சில பதிதர்களே மனந்திரும்பினர். மற்ற அனேக பதிதர்கள் தங்கள் தப்பறையை விட்டு விட மனதில்லாதிருந்தனர் என்று குறிப்பிடுகின்றார். அதற்கு காரணம் அவர்கள் செய்த மாபெரும் பாவங்களேயாகும். நமது திவ்ய ஆண்டவர் இவ்வுலகில் செய்த அரும்பெரும் புதுமைகளைக் கண்டும் மனந்திரும்பாத யூதர்களைப்போலவும் மோயீசனும் திர்க்கதரிசிகளும் செய்த அற்புதங்களைக் கண்டும் சர்வேசுரனுக்குக் கிழ்ப்படியாத ஜனங்களைப்போலவும் எல்லா காலங்களிலும் ஒவ்வொரு பதிதம் தோன்றும்போதும் மக்கள் மிண்டும் சர்வேசுரனை நேசியாமல் தங்களுடைய கேட்டிலேயே நிலைத்திருக்கிறார்கள் என்பதையே நாம் இங்கு காண்கிறோம். கார்கசோன் என்ற மேற்றிராசனத்தைச் சேர்ந்த மோன்ட்ரியல் என்ற நகரத்தில் இதேபோன்ற புதுமை அர்ச்.சாமிநாதரால் நிகழ்த்தப்பட்டது. 

அங்கு நகரத்தினருடைய கூட்டத்தில் பதிதர்களுடன் பகிரங்கமாகவே தர்க்கத்தில் ஈடுபட்ட அர்ச்.சாமிநாதர், தான் தர்க்கத்திற்காக பயன்படுத்திய வேதாகமத்தின் மேற்கோள்களை ஒரு தாளில் எழுதினார். அந்தத் தாளில் எழுதியவேதசத்தியங்களைப் பரிட்சிப்பதற்காக அதை அருகிலுள்ள நெருப்பில் போடப்போவதாகக் கூறினார். அதற்கு பதிதர்களும் இணங்கினர். அர்ச்.சாமிநாதர் உடனே அந்தத் தாளை நெருப்பில் போட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு, அந்தத் தாளை நெருப்பிலிருந்து வெளியே எடுத்தபோது அந்தத் தாள் கருகிச் சாம்பலாகாமல் புதுமையாக அப்படியே இருப்பதை அனைவரும் கண்டு அதிசயித்தனர். பிறகு பலமுறை அந்தத் தாளை அந்த நெருப்பிலே போட்டும் அது கருகிப்போகாததைக் கண்டு அர்ச்.சாமிநாதரின்
போதகமே சத்திய போதகம் என்று அனைவரும் விசுவசித்தனர். அதைக் கண்ட பதிதர்கள் தங்களுடைய வாக்குறுதியின் பிரகாரம் தங்கள் பதிதமார்க்கத்தை விட்டுவிடுவதற்கு மனமில்லாதவகளாக இருந்தனர்.

சத்திய கத்தோலிக்க வேத விசுவாசத்தை ஏற்பதற்கும் உடன்படாமல் போனார்கள்.  இந்தப் புதுமையை தங்களுக்குள் இரகசியமாக வைத்துக்கொண்டனர். ஏனெனில் இதைக் கேள்விப்படும் நாட்டின் மற்ற பகுதியின் கத்தோலிக்கர் அனைவரும் இதை தங்களுடைய மாபெரும் வெற்றியாகக் கொண்டாடுவர் என்பதை தடுப்பதற்காக அவ்வாறு அப்புதுமையை தங்களுக்குள் வைத்துக் கொண்டனர். ஆனால் இதை நேரில் கண்ட பதிதத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதன் மனந்திரும்பி நல்ல கத்தோலிக்குக் கிறிஸ்துவனானான். இவனுடைய நேரடி வாக்குமூலத்தையே
ஆல்பிஜென்சியரின் சரித்திரம் என்ற நுரலில் பீட்டர் தெ வோக்ஸ் செர்னே என்பவர் சேர்த்திருக்கிறார்.

இவ்வாறு நமது வேதபோதக குழவினர் சென்ற இடமெல்லாம் பதிதர்களுக்கு படுதோல்வி ஏற்பட்டது. பல பதிதர்கள் சத்திய வேதத்தில் சேர்ந்தனர். பதிதர்களின் எண்ணிக்கை நாளடைவில் வெகுவாய் குறையலாயிற்று. ஆனால் திவிரவாத பதிதர்கள் தங்களுடைய பதித தப்பறைகளை நிலைநாட்டுவதற்காக மோசடியான காரியங்களில் ஈடுபடலாயினர். சில கத்தோலிக்கு உயர்குடிமக்கள் அக்காலத்தின் அரசியல் குழப்பங்களின் காரணமாக வறியநிலைமைக்கு ஆளாயினர். அவர்கள் தங்களுடைய குழந்தைகளை பதிதர்களுடைய பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பும் சூழ்நிலை
உருவானது. அதைத் தக்கபடி பயன்படுத்திய ஆல்பிஜென்சிய பதிதர்கள் அக்குழந்தைகளின் வேதவிசுவாசத்தை அழிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த அபாய சூழலை நன்கு உணர்ந்த அர்ச்.சாமிநாதர் உடனே தங்களுடைய வேதவிசுவாசத்தை இழந்து நித்திய நரக ஆக்கினையை நோக்கியிருந்த அந்தக் குழந்தைகளை சத்திய வேதத்தில் பயிற்றுவிக்கும்படியான பள்ளிக் கூடங்களை ஏற்படுத்தும் வழிமுறைகளை மிகுந்த தீர்மானமாக திட்டமிடலானார். அதற்கென ஒரு அடைபட்ட கன்னியர் மடத்தை ஏற்படுத்த
தீர்மானித்தார். அதற்கென்று பதிதர்களால் பாதிக்கப்பட்ட மேற்றிராசனங்களிலிருந்து நல்ல பக்தியுள்ள கத்தோலிக்கு பெண்களை வரவழைத்தார். அவர்களுக்கு உன்னதமான வேதசத்தியங்களை திருச்சபையின் பராமரிப்பினால் கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்தார். புரோயில் நகரத்தில் கன்னியருக்கான முதல் மடத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

இந்நகரம் தான் அர்ச்.சாமிநாதர் சபையின் ஆக்கபூவமான அநேக ஞானகாரியங்களுக்கும் சாதனைகளுக்கும் பேர்போன நகரமாக விளங்குகிறது. இந்தக் கன்னியர் மடமே உலகிலுள்ள சகல அர்ச். சாமிநதர் சபைக் கன்னியர் மடங்களுக்கும் தாய் மடமாக விளங்குகிறது. புரோயில் என்னும் அழகிய கிராமம் பிரன்னிஸ் மலையடிவாரத்தில் மோன்ட்ரீயல் நகருக்கருகில் இருக்கிறது. அங்கு ஏற்கனவே உலகப் பிரசித்தி பெற்ற தேவமாதாவுக்கு தோத்திரமாக ஒரு பேராலயம் இருந்தது.

தூலோஸ் நகரத்தின் மேற்றிராணியாரான வந்.ஃபல்க் ஆண்டகையின் பேராதரவுடன் அர்ச்.சாமிநாதர் கன்னியருக்கான மடத்தை அங்கு
ஸ்தாபித்தார். அக்கால சூழ்நிலைக்கு மிக அத்தியாவசியமானதொன்றாக இந்த மடம் விளங்கியதை அனைவரும் கண்டுணர்ந்தனர். இச்சபையின் வளர்ச்சிக்காக பலரும் தங்களாலான உதவிகளைச் செய்ய முன்வந்தனர். நார்போன் அதிமேற்றிராணியார், வந்.பெரெஞ்சர் ஆண்டகை உடனே இந்த கன்னியர் சபைக்காக தன்னிடமிருந்த ஏராளமான நிலங்களையும் மற்றும் மாதந்தோறும் வருமானம் தரக்கூடிய பல சொத்துக்களையும் அளித்தார். கத்தோலிக்கு உயர்குடிமக்கள், அரண்மனை உயர் அதிகாரிகள், சைமன் டி மோன்ஃபோர்ட் என்பவருடைய தலைமையில் தாராள மனதுடன் நன்கொடை அளித்து பல நன்மைவிளைவிக்கும் திட்டங்களையும் ஏற்படுத்தி தந்தனர். அத்திட்டங்களினால் அவர்களே அநேக நன்மைகளால் பயனடைந்தனர். 

இச்சபையில் முதலில் 9 கன்னியர் சேர்ந்தனர். அனைவரும் அர்ச். சாமிநாதரின் போதனைகள் மற்றும் புதுமைகளால் ஆல்பிஜென்சிய பதிதத்திலிருந்து
மனந்திரும்பியவர்கள்.

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக