Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 12 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்தரம் அத்தியாயம் 23

 அர்ச்.சாமிநாதரின் புதுமைகள்


1211ம் ஆண்டு பதிதர்களிடையே பிரசங்கிப்பதற்காக தூலோஸ் நகரத்தில் வேதபோதகர்கள் தங்கி இருந்தபோது அர்ச்.சாமிநாதர் காரோன் நதிக்கரையில் இருந்த ஒரு சிற்றாலயத்தில் வழக்கம்போல ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது காம்பொஸ்தெல்லா நகரிலுள்ள அர்ச். யாகப்பருடைய தேவாலயத்தை நோக்கி தவயாத்திரையாக இங்கிலாந்திலிருந்து 40 யாத்ரிகர்கள் அந்த ஆற்றை ஒரு படகில் கடக்க முயன்றனர். அப்போது படகு அதிக பாரத்தால் தலைகீழாக கவிழ்ந்து மூழ்கியது. உடனே அருகிலிருந்த வீரர்கள் இதைக் கண்டு அலறினர். அவர்களுடைய அலறல் சத்தம் அர்ச்.சாமிநாதரை, அவருடைய ஆழ்ந்த ஜெபத்திலிருந்து எழுப்பியது. அவர் ஆற்றங்கரைக்கு வந்தார். அப்போது ஆற்றில், படகையும் அதில் பயணம் செய்த ஒருவரையும் காணவில்லை. உடனே சாமிநாதர் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து மௌனமாக ஜெபித்து ஆண்டவரை மன்றாடினார். பிறகு அவர் உன்னதமான தேவவிசுவாசத்தில் ஒளிர்பவராக, ஆற்றில் கவிழ்ந்த படகின் திசையில், “யாதொரு சேதமுமில்லாமல் உயிருடன் கரைக்கு வந்து சேரும்படியாக, நம் ஆண்டவர், சேசு கிறிஸ்துநாதர் சுவாமியின் நாமத்தினாலே, உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்று கட்டளையிட்டார். அந்நேரமே, தவயாத்திரைக்கு வந்த பயணிகள் அனைவரும் உயிருடன் ஆற்றுத் தண்ணீருக்குமேலே வந்தனர். அங்கிருந்த படை வீரர்களின் உதவியுடன் அனைவரும் கரைக்கு வந்து சேர்ந்தனர். தாங்கள் இவ்வாறு புதுமையாக உயிர் பிழைத்ததற்காக சர்வேசுரனுக்கு நன்றி செலுத்தினர். அப்புதுமை நிகழக் காரணமான அர்ச்.சாமிநாதருக்கும் நன்றி செலுத்தினர். 

வேறொரு சமயம் அர்ச்.சாமிநாதர் ஏரியஜ் ஆற்றை ஒரு பாலத்தின் வழியாகக் கடக்க நேரிட்டபோது அந்த ஆற்றில் அவர் புத்தகங்களை தவறவிட்டு விட்டார். 3 நாட்களுக்குப் பிறகு, ஒரு மீனவன் அந்த புத்தகங்களை கண்டெடுத்தான். அப்புத்தகங்கள் புதுமையாக தண்ணீர் படாமல் முழுவதும் காய்ந்திருப்பதைக் கண்டு வியந்தான். ஒரு சமயம், அதே ஆற்றை ஒரு படகில் கடந்தார். படகு ஆற்றின் மறுகரைக்குச் சென்றதும் படகோட்டி அவரிடம் படகுசவாரிக்கான கட்டணத் தொகையைக் கேட்டான். அப்போது அர்ச்.சாமிநாதர் தன்னிடம் யாதொரு பணமும் இல்லாததைக் கண்டு படகோட்டியிடம், “ நான் நமது ஆண்டவராகிய சேசுகிறிஸ்துநாதருடைய சிடன். எனவே பொன்னோ,  வெள்ளியோ என்னிடம் இல்லை. நான் எதையும் எடுத்து செல்ல மாட்டேன். என்னை நீ இங்கே கொண்டு வந்து விட்டதற்காக சர்வேசுரனே உனக்கு தேவையானதைத் தருவார்” என்று கூறினார். அதற்கு அப்படகோட்டி, சாமிநாதரிடம் அவர் அணிந்திருந்த அங்கியை அதற்கு பதிலாக தரும்படி கேட்டான்.  உடனே அர்ச்.சாமிநாதர் பரலோகத்தை நோக்கி தமது கண்களை உயர்த்தி ஜெபித்தார். பிறகு படகோட்டியிடம் தரையில் புதுமையாக தோன்றிய ஒரு வெள்ளி நாணயத்தைக் காண்பித்து, “என் பிரிய சகோதரரே! இதோ நீ  கேட்ட பணம். அதை எடுத்துக் கொள். நான் செல்கிறேன். என்னைப் போக விடு” என்று கூறினார்.

கர்தினால் ரானியரி கப்போச்சி என்பவர் அர்ச்.சாமிநாதர் வாழ்ந்த காலத்தில் ஜிவித்தவர். அவர் பின் வரும் நிகழ்வைக் குறிப்பிடுகின்றார்: ஒருதடவை அர்ச்.சாமிநாதர் வேறொரு நாட்டில் ஒரு பயணத்தில் இருந்தபோது அவருடன் வேறொரு துறவற சபையைச் சேர்ந்த துறவி ஒருவருடன் சில நாட்கள் தொடர்ந்து செல்ல நேர்ந்தது. இருவரும் வெவ்வேறு மொழி பேசியதால், அவர்களால் எதைப்பற்றியும் உரையாட இயலவில்லை. ஆயினும் அர்ச். சாமிநாதருடன் உரையாடுவது என்பது தன் ஆத்துமத்திற்கு மிகவும் பயனளிக்கும் என்று உணர்ந்த அந்தத் துறவி இரகசியமாக சர்வேசுரனிடத்தில் மன்றாடினார். அர்ச்.சாமிநாதர் பேசுவது தனக்கும், தான் பேசுவது அவருக்கும் புரிய வேண்டுமென்று ஆண்டவரிடத்தில் வேண்டினார்.

அத்துறவியின் மன்றாட்டிற்கு சர்வேசுரன் உடனே செவி சாய்த்தார். அதன்பிரகாரம் இருவரும் அவரவருடைய மொழியில் பேசியபோதும் ஒருவருக்கொருவர் புதுமையாகப் புரிந்துகொண்டு உரையாடிச் சென்றனர். இந்த வரம் அவர்களுடைய பயணம் முடிவடையும் வரையில் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

ஒரு சமயம் அர்ச்.சாமிநாதர் இரவு முழுவதும் பதிதர்களுடன் தர்க்கித்தபோது, சத்தியவேதத்தின் உன்னதமான சத்தியங்களை எடுத்துக் கூறி அவற்றைத் தெளிவிப்பதில் ஈடுபட்ட பிறகு, ஒரு சிஸ்டர்ஷியன் துறவியுடன் தன் வழக்கத்தின்படி அருகில் இருந்த தேவாலயத்திற்கு ஜெபிப்பதற்காக சென்ற போது அந்தக் கோவில் பூட்டப்பட்டிருக்கக் கண்டார். உடனே இருவரும் கோவிலுக்கு வெளியே முழங்காலில் இருந்து ஜெபிக்கலாயினர். உடனே அவர்கள் இருவரும் புதுமையாக, கோவிலுக்குள்ளே பிரதான பெரிய பீடத்தின் முன் இருக்கக் கண்டனர். காலையில் விடிந்தவுடன் ஏராளமான வியாதியஸ்தர்களும் பேய்பிடித்தவர்களும் அர்ச். சாமிநாதர் அருகே கொண்டுவரப்பட்டனர். திவ்யபலிபூசைக்கு அணிவது போல ஸ்டோலை (Stole) அவர் தன் தோள்களில் கட்டிக் கொண்டார். பிறகு அதை வியாதியஸ்தர்மேலும் பேய்பிடித்தவர்கள் பேரிலும் அவர்களுடைய கழுத்தின் மேல் போட்டார். போடவே அவர்களுடைய வியாதியும் பசாசும் அவர்களை விட்டு பறந்தோடின.


Please click here to Read more Saint Stories

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக