Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 10 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 21


அர்ச்.இராயப்ர், அர்ச்.சின்னப்பருடைய காட்சி



“இப்புதிய பாப்பரசர், முந்தைய பாப்பரசர், சாந்தப்பரைப் போல நம்மிடம் கனிவுடன் நம்மைப் புரிந்து கொள்பவராக இருப்பாரோ? நமது துறவற சபைக்கு உத்தரவ அளிப்பாரோ?” என்றெல்லாம் அர்ச்.சாமிநாதர் கலக்கமுற்றார். ஒரு நாள் இரவு அர்ச்.இராயப்பர் தேவாலயத்தில் தனது வழக்கப்படி, அர்ச்.சாமிநாதர் ஆழ்ந்த ஜெபத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு பரலோகக் காட்சியின் வழியாக, அவருடைய இருதயத்திற்கு சமாதானம் கொடுக்கப்பட்டது. உன்னதமான தேவவரப்பரசாதம் அவர்மேல் பொழியப்பட்டது. அர்ச்.இராயப்பரும், அர்ச்.சின்னப்பரும் அவருக்குத் தோன்றி, அவரிடம், “உலகெங்கும் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கம் செய். இந்த அலுவலுக்காகவே நீ அழைக்கப்பட்டிருக்கிறாய்” என்று கூறினார்கள். பிறகு, அர்ச்.இராயப்பர், அவரிடம் தவயாத்திரையினர் எடுத்துச் செல்லும் ஒரு கோலை வழங்கினார். அர்ச்.சின்னப்பர் ஒரு சுவிசேஷப் புத்தகத்தைக் கொடுத்தார். இந்தக் காட்சி மறைந்தது. அதன்பிறகு, இரண்டாவது காட்சியில், தனது போதக துறவிகள் இருவர் இருவராக உலகெங்கும் சென்று வெள்ளை மனிதர், கறுப்பு மனிதர் மற்றும் மஞ்சள் நிறமனிதர் என்று சகல ஜாதி ஜனங்களுக்கும் சர்வேசுரனுடைய வார்த்தையானவரைப் பற்றி பிரசங்கிக்க செல்வதைக் கண்டார். நீண்ட நேரத்திற்குப் பிறகே, அர்ச்.சாமிநாதர், இந்தப் பரலோகக் காட்சிகளிலிருந்து விடுபட்டு சுயநினைவை அடைந்தார். அக்காட்சிகளின் அர்த்தத்தை உணர்ந்தபோது, அவருடைய சபைக்கான பாப்பரசரின் அனுமதியைப் பற்றி அவர் கொண்டிருந்த குழப்பம் மறையவே, அவருடைய இருதயத்தில் பரலோக சமாதானம் குடிகொண்டது. உடனே மிகுந்த பக்தி பற்றுதலுடன் சர்வேசுரனுக்கு நன்றியறிந்த ஜெபத்தை ஜெபிக்கலானார்.

அர்ச்.சாமிநாதரின் விசுவாசத்துக்கு பலனாக, பாப்பரசர் விரைவிலேயே ரோமாபுரிக்கு திரும்பி வந்தார். இருவரும் மிக நெருங்கிய நண்பர்களானார்கள். அர்ச்.சாமிநாதரின் பரிசுத்ததனமும் ஆன்ம இரட்சணிய ஆவலும் ஹொனோரியுஸ் பாப்பரசரை அர்ச்.சாமிநாதரிடம் வெகுவாக கவர்ந்திழுத்தது. அர்ச்.சாமிநாதருடைய சபையின் போதக அலுவல் மற்றும் அதனுடைய செயல்பாட்டுத் திட்டங்கள் மிக்க தெளிவாக விளக்கப்பட்டபோது, பாப்பரசர் தமது முழு இருதயத்துடன் உடனே அச்சபைக்கு ஒப்புதல் அளித்தார். பல அதிகராபூர்வமான ஆவணங்களைக் கொண்டு, பாப்பரசர், திருச்சபையின் அங்கிகார மடலை அர்ச்.சாமிநாதரின் சபைக்கு அளித்தார்: “உமது துறவற சபைச் சகோதரர்கள் உலகை ஒளிர்விக்கும் சத்திய ஒளியினுடையவும் விசுவாசத்தினுடையவும் தீரர்களாக விளங்குவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, தற்பொழுதும் இன்னும் வருங்காலத்திலும் இந்த துறவற சபையை அதற்குச் சொந்தமான நிலம் மற்றும் உடைமைகள் அனைத்துடனும் நிச்சயித்து அங்கிகரிக்கின்றோம். மேலும் இந்த துறவற சபையை அதன் அனைத்து உடைமைகள், சுதந்திரங்களுடன் நமது நேரடி ஆளுகை மற்றும் பாதுகாப்பின்கீழ் நாமே நிர்வகிப்போம்” என்று அந்த ஆணைமடல் எழுதப்பட்டது. இதனால் அர்ச்.சாமிநாதர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். 

தனது சபைமடத்திற்கு செல்வதற்காக பிரான்சு நாட்டிற்கு உடனே திரும்பிச் செல்லும் எண்ணத்துடன், பாப்பரசர் தனது சபையை அங்கீகரித்து அதற்கான ஆசிரளித்தமைக்காக நன்றி செலுத்துவதற்காக பாப்பரசரை சந்தித்தார். அப்போது, பாப்பரசர், அர்ச்.சாமிநாதரிடம், “என் மகனே! உங்களுடைய பிரான்சு செல்லும் பயணத்தை சிறிது காலம் தள்ளிவைத்தால் நான் மகிழ்வேன். ரோமாபுரியில் இன்னும் சில வாரங்கள் நீங்கள் தங்க முடியமா?” என்றார். அதற்கு, “இன்னும் சில வாரங்களா? பரிசுத்த தந்தையே?” என்று சாமிநாதர் வினவினார். பாப்பரசர், “ஆம். நீங்கள் உங்களுடைய சபைதுறவிகளிடம் உடனே திரும்புவதாக வாக்களித்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் இந்த ரோமாபுரி நகரத்து மக்களுக்கும் நல்ல ஞான பிரசங்கியார்கள் மிக அவசியமாகத் தேவைப்படுகிறார்கள். உங்களுடைய ஞான போதகங்களை இவர்கள் கேட்பதற்கு இந்நகரத்தின் மக்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கலாமல்லவா?” என்று பதிலுரைத்தார்.

இவ்வாறு தம்முடன் தங்க வைத்து ரோமாபுரியின் மக்களுக்கு ஞான பிரசங்கங்களை ஆற்றுவதற்கு தன்னை பாப்பரசர் அழைப்பது, தனக்கு மாபெரும் பெருமையான காரியம் என்று உணர்ந்த சாமிநாதர் உடனே பாப்பரசரின் வேண்டுகோளை ஏற்று அவருடன் சில வாரங்கள் தங்கினார். பாப்பரசரின் ஏற்பாட்டின்படி, ரோமாபுரியில், அர்ச்.சாமிநாதர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவாலயத்தில் பிரசங்கம் செய்தார். அவர் ஒவ்வொரு நாளும் அங்கு மிக முக்கியமான மனிதர்களை சந்திக்கலானார். அர்ச். பிரான்சிஸ் அசிசியாரை அவர் அங்கு அடிக்கடி சந்தித்தார்.

அர்ச்.சாமிநாதர் இவ்வாறு ரோமாபுரியில் தினமும் தேவாலயங்களில் ஞானபிரசங்கங்களை ஆற்றத் துவக்கிய ஒருசில நாட்களுக்குள்ளேயே மக்களிடையே வெகுவாய் பிரபலமானார். அப்பொழுது ரோமில் இருந்த கர்தினால் உகோலினோ (பிற்காலத்தில் 9ம் கிரகோரியார் பாப்பரசர்) அர்ச்.சாமிநாதரைப் பற்றி, “நான் இதுவரைக் கேள்விப்பட்டதில் சங்.தோமினிக் சுவாமியார் தான் மிகச் சிறந்த பிரசங்கியாராகத் திகழ்கின்றார். அவருடைய ஞானபிரசங்கங்களைக் கேட்ட அநேக மாபெரும் பாவிகள் மனந்திரும்பியுள்ளார்கள்” என்று கூறினார். அதற்கு மற்றொரு கர்தினால், “அது மிகச்சரியே! மேலும் தாங்கள் ஒன்றை கவனித்திர்களா? இளைஞர்கள் அனைவரும் எவ்வாறு உற்சாகமாக அவருடைய பிரசங்கங்களைக் கேட்பதற்கும் அவரிடம் பேசுவதற்கும் அவரைச் சுற்றிவந்து கொண்டிருக்கிறார்களே!. இன்னும் சில காலம், சங்.தோமினிக் சுவாமியார் நம்முடன் தங்குவாரேயானால், நம்மிடம் உள்ள மிக நல்ல இளைஞர்கள் அநேகம் பேர் நிச்சயமாக அவருடைய சபையில் சேர்வதற்காக அவருடன் பிரான்சு செல்வார்கள் என்பது நிச்சயம்” என்று கூறினார். 

இதற்கிடையில் அர்ச்.சாமிநாதர் தூலோஸிலுள்ள அர்ச்.ரோமானுஸ் தேவாலயத்திலுள்ள தனது சபைமடத்திற்கு திரும்புவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால், அவருடைய போதகதுறவியர் ஆழ்ந்த வருத்தமுற்றுக் கவலையடைந்திருந்தனர். ஆனால் அவர்களுடைய கவலை திரும்படியாக சாமிநாதர் மே மாதம் தூலோஸ் வந்து சேர்ந்தார். பாப்பரசர் சபையை அங்கிகரித்து அளித்த ஆவணங்களையெல்லாம் தனது சபை மடத்திற்கு சாமிநாதர் கொண்டு வந்தார். மேலும் தனது சபை பற்றிய பல முக்கிய செய்திகளையும் அர்ச்.சாமிநாதர் தன் சீடர்களிடம் அறிவித்தார்.

அதாவது, இன்னும் 3 மாதங்களுக்குள் பாரிஸ் நகரிலும் மாட்ரிட் நகரத்திலும் சபைமடங்கள் கட்டப்பட உள்ளன என்றும், தமது சபை துறவிகள் இருவர் இருவராக ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும், உலகெங்கும் உள்ள நாடுகளுக்கும் ஞான பிரசங்கங்களை நிகழ்த்துவதற்காக அனுப்பப்படுவர் என்றும் அறிவித்தார். (தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக