ரோம் நகரில் பிரசங்கித்தல்
பாப்பரசரின் அனுமதியைப் பெற்றவுடன் சற்றும் தாமதிக்காமல் அர்ச்.சாமிநாதர், ஒவ்வொரு நாளும் ரோம் நகரமெங்கும் உள்ள தேவாலயங்களில் ஞானபிரசங்கங்களை நிகழ்த்தினார். “இப்பொழுது உங்களுடைய கவனமெல்லாம் பணத்தை சேர்ப்பதிலும், நண்பர்களைக் கொண்டிருப்பதிலும், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதிலும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், எல்லாரும் இன்னும் சில அல்லது பல வருடங்கள் கழித்து இறந்துபோவோம் என்பது நிச்சயமான உண்மை. அப்போது, மரணமானது, இவற்றை எல்லாம் உங்களிடமிருந்து அகற்றி விடும். சாவு, நேருக்கு நேராக, நீதித் தீர்வையிடும் சர்வேசுரன் முன்பாக உங்களை இட்டுச் செல்லும். இந்த உலக ஜீவியத்தில் சர்வேசுரன் நமக்கு அனுப்பும் தேவவரப்ரசாதங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் நம் நேச ஆண்டவரை சிநேகிக்கும் உத்தமபுண்ணிய ஜீவியத்தில் நிலைத்து இருப்பவர்கள் அந்த நேரத்தில் பாக்கியமான நிலையில் சர்வேசுரனை சிநேகத்தின் அரசராகக் காண்பர்.
அப்போது, சாங்கோபாங்கத்தின் புண்ணிய ஜீவியத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாத கெட்ட கிறிஸ்துவர்களின் பயங்கரமான கதியை நினைத்துப்பாருங்கள். அவர்கள் என்னமாய்ப் போவார்கள்! வெறுமையான கைகளை உடைய மூடர்களாக, அதிபயங்கரமான தரித்திரர்களாக, நித்தியத்திற்கும் பரலோக ஜீவியத்தை இழந்தவர்களாக மாறுவார்கள், என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆ! எத்தகைய சோகமான நிகழ்வு அது. எப்படிபட்ட மிளாத் துயரத்திற்கு நீங்கள் ஒவ்வொரும் ஆளாவீர்கள். ஆனால், என்பிரியமானவர்களே! இன்னும் நேரம் இருக்கும்போதே, ஞானத்துடன் செயல்படுங்கள்.
நித்திய மோட்ச சம்பாவனையை அடைந்து கொள்வதற்காக இப்போதே புண்ணிய ஜீவியத்தைத் தொடங்குங்கள். இந்த உலகத்தில் இருக்கும்போதே, சர்வேசுரனை அறியவும், அவரை அறிந்து சிநேகிக்கவும், சிநேகித்து அவருக்கு உகந்தவிதமாக ஊழியம்செய்யும்படியாக தேவையான தேவவரப்ரசாதத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக பரலோகத் தந்தையிடம் மன்றாடுங்கள். உங்கள் ஜிவியத்தின் ஒவ்வொரு மணித்துளி நேரத்திலும் உங்களுடன் இருந்து, உலகம், பசாசு, சாரீரம் என்னும் ஞான சத்ருக்களிடமிருந்து உங்களைப் பாதுகாக்கும்படியாக தேவமாதாவிடம் தினமும் மன்றாடுங்கள். தேவமாதா சர்வேசுரனின் பரிசுத்த தாய். அவர்கள் மனுக்குல மக்களாகிய நம் அனைவருக்கும் தாய். நீங்கள் தினமும் தேவமாதாவை நோக்கி மன்றாடுவீர்களேயாகில், தாய்க்குரிய கனிவுள்ள இருதயத்தையுடைய தேவமாதா, உங்களுக்கு பாவத்தை மேற்கொள்வதற்கான ஞான பலத்தைத் தந்து உங்களை பாவத்தினின்று பாதுகாப்பார்கள்.
பிள்ளைக்குரிய மாசற்ற சிநேகத்துடன் தேவமாதாவை நீங்கள் நேசியுங்கள். நமது பரலோக இராக்கினியின் மாசற்ற இருதயத்திற்கு மிகப்பிரியமான பக்திமுயற்சியான 150 மணி அருள்நிறைமந்திரத்தின் சங்கித மாலையை (ஜெபமாலையை) தினமும் ஜெபியுங்கள். அப்போது மோட்ச இராஜ்யமானது நம்மிடையே தோன்றும். தீமையும் பாவமும் நம்மிடமிருந்து அகலும். நமது சத்திய வேதவிசுவாசம் உலகெங்கும் செழித்தோங்கும். பதிதமும் அவிசுவாசமும் அழிந்தொழியும். நமது வேதத்தை அனுசரிக்கும் விசுவாசிகள் அனைவரும் உத்தமதனத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து, அர்ச்சிஷ்டவர்களாவர்” என்று ரோமாபுரி மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களெங்கும் அர்ச்.சாமிநாதர் பிரசங்கித்து வந்தார்.
அதைக்கேட்ட மக்களிடம் இரட்சணியத்தின் மிது ஆவல் ஏற்பட்டது. அதற்கு அவசியமான உத்தமமான புண்ணிய ஜீவியத்திற்கு அனைவரும் மனந்திரும்பினர். வெதுவெதுப்புள்ள கிறிஸ்துவர்கள் இந்த ஞானப்பிரசங்கங்களைக் கேட்டதும் தங்களுடைய ஞான ஜீவியத்தின் மந்தநிலையைக் கண்டுணர்ந்தனர். உடனே அதற்குப் பரிகாரம் செய்யத் துவக்கினர். கடினப்பட்ட பாவிகள் ஆங்காங்கே இருந்த தேவமாதாவின் திரு ஸ்தலங்களில் இருந்த சுரூபங்கள் முன்பாக முழங்காலில் இருந்து ஜெபித்தனர். அதன்விளைவாக, நல்ல பாவசங்கிரத்தனம் செய்து மனந்திரும்பி வாழ்ந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக