Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 18 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் - அத்தியாயம் 1

 அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 1: 

பிறப்பும் குழந்தைபருவமும்



மத்திய நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் திருச்சபை அதிகாரிகள், குருக்கள் மற்றும் துறவியரிடையே நிலவிய மிதமிஞ்சிய உலகப் பற்றுதலினால் தேவசிநேகம் குளிர்ந்து திருச்சபையில் இருள்சுழ்ந்த காலத்தில் தான் சத்தியவேதத்தின் ஒளியையும் தேவசிநேக நெருப்பையும் கொண்டு வரும்படியாக சர்வேசுரன் இவ்வுலகிற்கு அனுப்ப திருவுளமான அர்ச்சிஷ்டவர்களில் முக்கியமானவரும் போதக குருக்களுக்கான சந்நியாச சபையை ஏற்படுத்தியவருமான அர்ச்.சாமிநாதர் 1170ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் காலராகோ கோட்டையில் அந்நாட்டின் அரசருடைய நண்பரும் உத்தம கத்தோலிக்க வீரப் பாரம்பரியத்தையுடையவருமான தொன் ஃபெலிக்ஸ் கஸ்மனுக்கும் ஆசாவின் ஜேனுக்கும் 3வது மகனாகப் பிறந்தார். இவருடைய ஞானஸ்நானப் பெயர் தோமினிக் கஸ்மன். இவருடைய தந்தை பக்திமிகு கத்தோலிகராக ஜீவித்ததால் தன் கோட்டையை ஒரு சந்நியாச மடத்தைப்போல வைத்திருந்தார். அவருடைய தாயார் ஜேன் ஒரு அர்ச்சிஷ்டவள். இவளுக்கு 1828ம் ஆண்டு 12ம் சிங்கராயர் முத்திபேறு பட்டம் அளித்தார். 

இவர் பிறக்கும்போது இவருடைய மூத்த சகோதரர்கள் இருவரும் குருமடத்தில் படித்துக்கொண்டிருந்தனர். முதல் சகோதரர் அந்தோணியோ மேற்றிராசன குருவானார். ஏழைகளுக்கு தன் உடைமைகளையெல்லாம் விற்றுவிட்டு மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் பணிவிடை புரிவதில் தன் இறுதிகாலத்தைப் பரிசுத்தமாகக் கழித்தார். இரண்டாவது மூத்த சகோதரர், மானெஸ், ஒரு குருவானவராக அர்ச்சிஷ்ட ஜீவியம் ஜீவித்தார். இவருக்கும் பின்னாளில் முத்திபேறு பட்டம் அளிக்கப்பட்டது. ஜேன் தன் உதரத்தில் சாமிநாதரை குழந்தையாய் தரித்திருக்கிறபோது, எரிகிற ஒரு தீப்பந்தத்தை தன் வாயிலே கவ்வியபடி ஒரு நாய்குட்டி தன் வயிற்றுக்குள்ளே இருப்பது போலவும், அங்கிருந்து அது புறப்பட்டு வெளியே வந்து அத்தீப்பந்தத்தினாலே உலகை நெருப்பினால் பற்றவைத்து ஒளிர்விப்பதுபோலவும் ஒரு கனவு கண்டாள். அர்ச்.சாமிநாதர் தம்முடைய அர்ச்சிஷ்டதனத்தின் ஒளியினாலேயும் வேதசாஸ்திர பிரசங்கத்தின் பிரகாசத்தினாலும் பாவஇருளில் அகப்பட்டவர்களை ஒளிர்விப்பார் என்றும் மனிதருடைய இருதயத்தில் தேவசிநேக அக்கினியை அவர் பற்றவைக்கப்போகிறார் என்றும் அந்தக் கனவு ஒரு தீர்க்கதரிசன அடையாளமாயிருந்தது.

அவர் ஞானஸ்நானம் பெற்றபோது, அவருடைய ஞானத்தாய் குழந்தை தோமினிக்கின் நெற்றியில் ஒரு பிரகாசமாக ஒளிரும் நட்சத்திரம் பதிந்திருப்பதையும் அதினின்று புறப்பட்ட ஒளி உலகம் முழுவதையும் ஒளிர்வித்ததையும் காட்சியாகக் கண்டாள். இதை நிச்சயப்படுத்தும் வகையில் பின்னாளில் சாமிநாதருடைய ஞானமகளான முத்.செசிலியா என்பவள், “அர்ச்.சாமிநாதருடைய நெற்றியில் இருபுருவங்களுக்கும் நடுவிலிருந்து ஒரு ஒளியானது பிரகாசிக்கும். அதனால், அவரைச் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் அவர்மேல் சங்கை கொள்ளும்படியும் அவரை நேசிக்கும்படியுமான மேலான இனிய உணர்வுகளால் நிரப்பப்படுவர்” என்று அவருடைய முகத்தோற்றத்தைப்பற்றி விவரிக்கின்றாள். அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்த ஞானஸ்நானத் தொட்டி பின்னாளில் மாட்ரிட் நகருக்கு எடுத்துச்செல்லப்பட்டு அதில் இதுநாள் வரைக்கும் ஸ்பெயின் நாட்டு அரசகுடும்பத்தின் பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு வருகிறது. சாமிநாதருக்கு 7 வயதானபோது காலராகோவிற்கு சமீபத்திலிருந்த குமியல் டி இசான் என்ற நகருக்கு அனுப்பப்பட்டார். அந்நகரத்தின் தலைமை குருவாக இருந்த அவருடைய மாமாவின் பாதுகாப்பில் வேதகல்வி பயின்றார். அங்கு தேவாலயத்தில் பரிசாரக பணியில் பயிற்றுவிக்கப்பட்டார். அடிக்கடி தேவநற்கருணையை சந்திப்பதற்காக தேவாலயங்களுக்குச் சென்று மகிழ்வார். 

குருக்கள் துறவியருடைய கட்டளைஜெபத்தை சொல்லப் பழகினார். தேவாராதனைக் கீர்த்தனைப் பாடல்களை பாடவும் திவ்யபலி பூசைக்கும் பொதுதிருவழிபாட்டு சடங்குகளிலும் பரிசாரக சிறுவனாக உதவிடக்கற்றுக்கொண்டார். இவையெல்லாம் பரலோகத்தில் சம்மனசுக்களால் நிறைவேற்றப்படும் தேவசிநேகத்தின் குற்றேவல்களாக சாமிநாதர் உணர்ந்து அவற்றில் தன் முழுஇருதய நேசத்துடன்ஈடுபடுவார். இவ்வாறு இயற்கையிலே குழந்தைபருவமுதல், சாமிநாதர் உத்தம கத்தோலிக்க பக்தி காரியங்களில் மிகவும் தீவரித்தநாட்டமுடையவராக வளர்ந்து வந்தார். சாமிநாதர் ஒரு சம்மனசைப்போல மிகுந்த ஆச்சார வணக்கத்துடனும் ஸ்திரத்துடனும் மகாபரிசுத்த தேவநற்கருணையின் பிரசன்னத்தில் ஆராதித்துக் கொண்டிருப்பதையும் தேவாலயத்தின் பீடங்களை சுத்தப்படுத்தியும் அழகுபடுத்தியும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருப்பதையும் பார்ப்பவருடைய இருதய்ஙகளில் தேவசிநேகத்தைத் தூண்டுவார். †

(தொடரும்)

அர்ச்.அமலோற்பவ மாமரியே!வாழ்க! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக