இரு பெரும் அர்ச்சிஷ்டவர்களின் சந்திப்பு
அர்ச்.சாமிநாதரைச் சுற்றி வந்த அக்கிரமிகளான பதிதர்கள், தங்களிடம் அன்று, அர்ச்சிஷ்டவர் கூறிய வாதங்களை நினைவு கூர்ந்தனர். அதாவது மிக மெதுவாக தன்னை சித்திரவதைச் செய்து கொல்வதையே அவர் மாபெரும் பாக்கியமாகக் கருதியதையும், அவ்வாறு கொடூரமாகத் தன்னைக் கொல்லப் போவதற்காக முன்கூட்டியே அவர், அவர்களுடைய அத்தகைய கனிவுமிக்க செயலுக்காக நன்றி தெரிவித்ததையும் ஞாபகப் படுத்திக் கொண்டனர். அத்தகைய கொடூரமான வேதசாட்சிய மரணத்தினால் தான் மிகுந்த பேறு பலன்களை அடையப் போவதாகக் கூறியதையும் நினைவு கூர்ந்தனர். அந்த இருண்ட இரவு நேரத்தில், அந்தப் பதிதர்கள் இத்தகைய நினைவுகளால் மிகவும் குழப்பமும் சோர்வுமடைந்திருந்தனர்.
நாம் அவரைக் கொல்லவா? வேண்டாமா? இங்கு அதிக நேரம் நாம் இருக்க முடியாது, என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். பிறகு அவர்கள் தங்களுக்குள் கூச்சல் குழப்பத்துடன் உரத்த குரலில் பேசிக் கொண்டனர். வேண்டாம்! இவர் தன் உயிரை மிகவும் துச்சமாக மதிக்கிறார். அப்படிப்பட்டவரை கொலை செய்வதை விட வேறு ஒரு குருவைக் கண்டு பிடித்து அவரைக் கொலை செய்வதில் நம் விளையாட்டை விளையாடலாம் என்று பேசி முடிவெடுத்தனர். அடுத்த நாள் அதிகாலையில் சாமிநாதர் எழுந்து ஜெபத்தில் ஈடுபட்டார். தன் ஜெபத்தை முடித்துக்கொண்டு கார்க்கசோன் நகரத்தை சுற்றிவரத் துவக்கினார். தன் இனிய குரலினால் தேவமாதாவின் பாடல்களை பாடிக் கொண்டே அந்நகரத்தை வலம் வந்தார்.அவர் ஆங்காங்கே ஞான பிரசங்கங்களையும் போதிக்கலானர். பதிதர்கள் முதலில் அவருடைய போதனையை அலட்சியப்படுத்திய போதிலும், சிறிது நேரத்திலேயே வினோதபிரியத்தை அடக்கக்கூடாதவர்களாய் அர்ச்சிஷ்டவருடைய சத்திய வேத போதனைகளைக் கேட்கலாயினர். பிறகு அவர்கள் தங்களுக்குள், இந்தக் குருவானவர் வார்த்தைகளைக் கொண்டு ஏதோ ஒரு வழிவகையை அறிந்திருக்கிறார். இதுவரை இவ்வளவு நேர்த்தியாக யாராவது பேசுவதை நாம் கேட்டதில்லையே! என்று கூறினர்.
பதிதத்தை அழிப்பதற்காக துவங்கிய போர் நாளடைவில் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் காரணமாக, மிகவும் தீவிரமடைந்த இந்தப் போர் 7 வருடங்களாக நீடித்துக் கொண்டிருந்தது. அர்ச்.சாமிநாதர், எதிர்பார்த்தை விட அதிக காலமாக இந்தப் போர்க்களத்தில் தான் இருந்தது போதும் என்று நினைத்தார். “என் மகனே! நீங்கள் உங்கள் பாகத்திற்கு மிக அதிகமாகவே இந்தப் போருக்காக உழைத்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் ரோமாபுரிக்கு ஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன். என்னுடன் வருகிறீர்களா?” என்று வந்.ஃபல்குவஸ் ஆண்டகை சாமிநாதரிடம் வினவினார். அதற்கு அர்ச்.சாமிநாதர், “ஆண்டவரே! நான் உம்முடன் ரோமாபுரிக்கு வருவதற்கு மிகவும் விரும்புகிறேன்” என்றார். 600 மைல் தொலைவிலிருந்த ரோம் நகரத்திற்கு அதே வருடம் ஆகஸ்ட் மாதம் கால்நடையாகவே இருவரும் திருயாத்திரை சென்றனர். செப்டம்பர் மாதத் துவக்கத்தில் ரோம் நகரத்தை அடைந்தனர். அம்மாதத்தில் தான் ரோம் நகரில் சரித்திரப்புகழ்வாய்ந்த 4வது லாத்தரன் சங்கத்தின் கூட்டம் நடைபெற இருந்தது. அந்த சங்கத்தில் கலந்து கொள்ள சாமிநாதர் மிகுந்த ஆவலுடன் இருந்த போதிலும், அதற்கு முன்பாக பரிசுத்த தந்தை பாப்பரசரிடம் இதுவரை திருச்சபையில் இல்லாத ஒருதுறவற சபையை ஆரம்பிக்கவிருக்கும் தனது திட்டத்தை வெளியிட மிகவும் ஆவலுடனிருந்தார்.
“அது போதகர்களுக்காகவும் ஆசிரியர்களுக்காகவுமான ஒரு துறவற சபை. பரிசுத்த தந்தையே! அது இக்காலத்திற்கு மிகவும் இன்றியமையாத தேவையாக இருக்கிறது” என்று பாப்பரசரிடம் கூறினார்.
அர்ச்சிஷ்டவர் கூறுவதை 3ம் இன்னசன்ட் பாப்பரசர் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்வுடனும் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார். பல ஆண்டுகளாக அந்தப் பரிசுத்த பாப்பரசர் இத்தகைய ஒரு சபையை தோற்றுவிப்பதற்கு ஆவல் கொண்டிருந்தார். அது விரைவில் தோன்றும் என்றும் நம்பிக் காத்திருந்தார். ஆனால் அதை நிறுவுவதற்கான தகுந்த கல்வியறிவு மிக்கவரும், ஆசிரியரும், வேதபோதகருமான, ஒரு அர்ச்சிஷ்டவருக்காக காத்துக் கொண்டிருந்தார். அத்தருணம் இப்போது வந்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியுற்றார். மேலும் அவர், “மகனே! உமது திட்டத்தைப் பற்றிக் கூறுங்கள். அது மிகுந்த நன்மை பயக்கக் கூடியதாக இருக்கிறதே!” என்று சாமிநாதரிடம் வினவினார். உடனே அர்ச்.சாமிநாதர் பாப்பரசரிடம் கடந்த 11 ஆண்டுகளாக பிரான்சின் தெற்கு பகுதியில் ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்காக மேற்கொண்ட செயல்முறைகளை எல்லாம் தெளிவாக எடுத்துரைத்தார். முதலாவதாக தங்களுடைய வேத போதகங்களுக்கும் ஞான பிரசங்கங்களுக்கும் வேண்டிய தேவ ஆசிர்வாதத்தை அடையும்படிக்கு ஒரு அடைபட்ட கன்னியர் மடத்தை ஏற்படுத்தியதைப் பற்றி தெரிவித்தார். இரண்டாவதாக நுரற்றுக் கணக்கான பதிதர்களை மனந்திருப்பியதை எடுத்துரைத்தார்.
மூன்றாவதாக தற்பொழுது தானும், தன்னுடன் வேதபோதக அலுவலில் இருக்கும் குருக்கள் மற்றும் துறவியர் அனைவரும் தூலோஸ் நகர மேற்றிராணியாரான வந்.ஃபல்குவஸ் ஆண்டகையின் “முதன்மை உதவியாளர்கள்” என்றும் அதாவது “தூலோஸ் மேற்றிராசன போதகர்கள்” என்றும் அழைக்கப்படுவதையும் தெரிவித்தார். மேலும் அவர்கள் இன்னும் அதிகமாக ஐரோப்பிய நாடுகளின் அனைத்து நகரங்களிலும் ஞான பிரசங்கங்களைப் பிரசங்கிப்பது மற்றும் சத்திய வேதத்தைக் கற்பிப்பது போன்ற வேதபோதக அலுவலில் ஈடுபட்டு உழைக்கவே ஆசிப்பதையும் பாப்பரசரிடம் அறிவித்தார். “பரிசுத்த தந்தையே நாங்கள் அனைவரும் சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு துறவற சபைக்குட்பட்டு அதன் பிரமாணிக்கமுள்ள துறவிகளாக ஜீவித்துக்கொண்டே இவ்வேதபோதக அலுவல்களை ஆற்றவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்.
“ஆனால் அதற்கு தேவையான உங்களுடைய ஜீவாதாரத்தை எவ்வாறு அடைந்து கொள்வீர்கள்?” என்று பாப்பரசர் வினவினார். அதற்கு சாமிநாதர், “பரிசுத்த தந்தையே! நாங்கள் பிச்சையெடுத்து ஜீவிப்போம்” என்ற பதில் கூறினார். ஒரு நிமிடம் பாப்பரசர் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். பிறகு ஆழ்ந்த கருத்துடன் கூடிய புன்னகை செய்தார். பிறகு சாமிநாதரிடம், “மகனே! நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மிகவும் அருமையான செய்தியை இப்போது உங்களிடமிருந்து கேட்டிருக்கிறேன். லாத்தரன் சங்கம் கூடும்போது அதன் உறுப்பினர்களிடம் உங்களுடைய இத்திட்டத்தைப் பற்றித் தெரிவியுங்கள்” என்றார்.
“அப்படியே ஆகட்டும் பரிசுத்த தந்தையே!” என்று அர்ச்.சாமிநாதர் பதலிளித்தார்.
“அதுவரைக்கும், இதில் நீங்கள் இன்னும் அதிக ஞானத்தெளிவை அடையும்படிக்கும் உங்களுடைய இந்த அற்புதமான அலுவலை பசாசு ஒருபோதும் தகர்த்துவிடாதபடிக்கு திவ்ய இஸ்பிரீத்துசாந்துவானவரிடம் தொடர்ந்து ஜெபித்து வாருங்கள்” என்று பாப்பரசர் அறிவுறுத்தினார். பாப்பரசரின் அறிவுரையின்படி உடனே சாமிநாதர், இதுவரை இல்லாத அளவிற்கு மிகுந்த திவிரத்துடன் ஜெபிப்பதில் ஈடுபட்டார். அர்ச்.இராயப்பர் பேராலயத்தில் நடைபெற்ற தியானமே அவருடைய ஜீவியத்தின் மிகவும் முக்கியமான தியானமாகும். அங்கு ஒரு இரவு முழுவதும் முழங்காலில் இருந்து ஜெபிப்பதில் ஈடுபட்டார். அப்போது அவர் கண்ட மகிமைமிகுந்த ஒரு பரலோகக் காட்சியால் அவர் விசுவாசத்தில் ஸ்திரப்படுத்தப்பட்டார். அந்தக் காட்சியில் நம் ஆண்டவர் தமது திவ்ய கரங்களில் மூன்று அம்புகளை வைத்திருப்பதைக் கண்டார். அந்த அம்புகளைக் கொண்டு நம் ஆண்டவர் உலகத்தின் பாவாக்கிரமங்களுக்காக அதை உடனே தண்டிப்பதற்காக தயாராக இருப்பதையும் சாமிநாதர் உணர்ந்தார். அப்பொழுது திடீரென்று அங்கு நம் மோட்ச ஆண்டவளான அர்ச்.தேவமாதா தோன்றி தமது திவ்யகுமாரனான சேசுநாதர்சுவாமியின் முன்பாக சாஷ்டாங்கமாக தெண்டனிட்டு விழுந்து பணிந்து ஆண்டவரை ஆராதித்தார்கள். பின்பு, துறவியரான இருமனிதர்களை, அவர் முன்பாக நிறுத்தி அவருக்கு அவர்களை அறிமுகப்படுத்தினார்கள்.
முதலாவதாக இருந்தவர் ஒரு முரட்டு சாம்பல்நிறத்திலான அங்கியை அணிந்திருந்தார். இடுப்பில் ஒரு கயிற்றையும் அணிந்திருந்தார். இரண்டாவது துறவி, வெள்ளைக் கம்பளியிலான அங்கியையும் அதன்மேல் கறுப்பு முக்காட்டையும் அணிந்தவராக காட்சியளித்தார். அங்கியின் மேல் அவர் சர்ப்ளிஸ் (Surplice) அணிந்திருந்தார். இவ்விருவரும் ஏராளமான பாவிகளை மனந்திருப்புவர் என்றும் அதனால் தேவகோபத்தை அமர்த்துவர் என்றும் கூறினார்கள். மேலும் உலகத்தைத் தண்டிக்க தயாராக இருந்த நம் ஆண்டவரிடம், தேவமாதா இவர்கள் இருவரையும் காண்பித்து இவர்கள் இருவரை முன்னிட்டு உலகத்தைத் தண்டியாமல் மன்னித்து உலகத்தின்பேரில் இரக்கமாயிரும் என்று மன்றாடினார்கள்.
சாமிநாதரைப் பார்த்த உடனே, அந்தத் துறவி தன் இரு கரங்களை விரித்தவராக மகிழ்ச்சி மிகுந்த புன்னகையுடன் “சகோ. தோமினிக்! உங்களை வரவேற்கிறேன். நான் சகோ.பிரான்சிஸ்” என்றார். மிகுந்த ஆனந்த உவகையுடன் இருவரும் ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொண்டனர். ஆம். அந்த சாம்பல் நிற அங்கியணிந்த துறவி வேறு யாருமல்ல. அர்ச்.பிரான்சிஸ் அசிசியார் தான் அவர்!!
(தொடரும்)
அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 19
அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 18
அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக