Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 30 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்:அத்தியாயம் - 14


ஃபோஷோவின் வடக்குஎல்லைப்புறத்தின் வாயிலில் அர்ச்.சாமிநாதர் மடடும் தனியாக நின்று கொண்டிருந்தார். தான் கண்டது வெறும் கனவாகிவிடுமோ என்ற அச்சத்துடன் அடுத்தநாளும் அதே இடத்திற்கு ஆர்வத்துடனும் ஜெபித்துக்
கொண்டும் சாமிநாதர் வந்தார். மெய்யாகவே மகாபரிசுத்த மோட்ச இராக்கினி தன்னிடம் மனம் மகிழ்ந்துள்ளார்களா? தன் சிடர்கள் இதுவரை தினசரி தேவமாதாவுக்கு தோத்திரமாக செய்து வரும் அருள்நிறை மந்திரங்களுக்கு செவிசாய்க்கிறார்களா? தேவமாதா உண்மையாகவே ஆல்பிஜென்சிய பதிதரை மனந்திருப்பும் திட்டம் வைத்திருக்கிறார்களா? அத்திட்டத்தில் இந்த சிற்றாலயமும் ஏதோ ஒருவிதத்தில் பங்கு வகிக்கப் போகிறதோ? என்றெல்லாம் சிந்தித்தார். அந்திநேரம் மங்கியதும் முந்தின இரவில் நிகழ்ந்த அனைத்தும் மிண்டும் நிகழலாயின. அதே வெண்கோள வடிவிலான ஒரு மாபெரும் திப்பிழம்பு தோன்றியது. பள்ளத்தாக்கின் மேல் சிறிதுநேரம் அசைவாடியது. பிறகு யாருமற்ற அர்ச்.கன்னிமாமரியின் சிற்றாலயத்தின் மேல் வந்து நின்றது. 

“என்னிடம் உதவி கேட்டாய். என் மகனே! இதோ புரோயிலில் உள்ள அந்த சிற்றாலயம். இங்கு தான் உன் ஜீவியத்தின் மெய்யான அலுவலை துவக்குவாய். இங்கு தான் நி அநேக ஆத்துமங்களை மோட்சத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பாய்” என்ற அதே வார்த்தைகள்.

சாமிநாதரின் இருதயத்தில் மிண்டும் எதிரொலித்தன. அடுத்தநாள் இரவும் இதே புதுமை மூன்றாம்முறையாக நிகழ்ந்தபோது அர்ச்.சாமிநாதர் திர்மானமான முடிவுக்கு வந்தார்.அவர் கண்டவையனைத்தும் அவருடைய
கற்பனையல்ல. மாறாக அவை அவர் கண்ட காட்சி என்றும், அவர் கேட்ட குரலொலி உண்மையானது என்றும் உணர்ந்துகொண்டார்.

இதைக் கேள்வியுற்ற வந்.டீகோ ஆண்டகை, “என் மகனே! நானும் இக்காரியத்தில் உங்களுடன் உடன்படுகிறேன். தேவமாதா நமக்காக நிச்சயம் புரோயிலில் ஒரு அலுவலை வைத்திருக்கிறார்கள். ஆனால் அது என்ன அலுவல்?” என்று வினவினார்.

“அது எனக்கு தெரியாது, ஆண்டவரே” “அது நிச்சயமாக பிரசங்கிக்கும் அலுவலாக இருக்க முடியாது. ஏனெனில் அவ்வளவு தொலை தூரத்தில் இருக்கும் அந்த இடத்திற்கு யாரும் எளிதாக வரமுடியாது” எவ்வளவு நன்றாக உண்மையை மேற்றிராணியார் கண்டுபிடிக்கிறார் என்று அர்ச்.சாமிநாதர் நினைத்தார். பிறகு அவர் மேற்றிராணியாரிடம், “ஆண்டவரே, அங்கு நமது மனந்திரும்பிய பெண்களுக்கான ஒரு இல்லத்தை ஏற்படுத்த வேண்டும். அது எவ்வளவு நன்றாக இருக்கும்” என்றார்.

“ஆனால் நம்மிடம் ஒரு கை விரல்களைக் கொண்டு மட்டும் எண்ணக்கூடிய அளவுக்கு தானே அத்தகைய மனந்திரும்பிய பெண்கள் உள்ளனர். அதுவும் அவர்கள் துறவற ஜீவியத்திற்கு பொருத்தமானவர்கள் அல்லவே”.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, அர்ச்.சாமிநாதர், “நமக்கு இப்பொழுது
மோட்சத்திலிருந்து ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. இன்னொரு அடையாளம் நிச்சயமாக நாம் பெறுவோம் என்று நம்புகிறேன்” என்றார்.

“இன்னொன்றா?”

“ஆம் ஆண்டவரே! அது நமக்குத் தரப்படும்போது எத்தகைய மாபெரும் மகிழ்ச்சியை நமக்கு தருவிப்பதாக இருக்கும்!”

இதன்பின், சிலவாரங்களுக்குப் பிறகு, ஒருநாள் அர்ச்.சாமிநாதர், ஃபோஷோவில் அதே சிற்றாலயத்தில் 9 பதித பெண்களுக்கு ஞான போதகத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். “என் பிரியமான குமாரத்திகளே! பசாசின் பிடியிலேயே இருப்பதற்கு நீங்கள் அடம்பிடிப்பது, எத்தகைய பரிதாபகரமானது என்று சிந்தியுங்கள்! அத்தகைய நிலைமையில் ஒருபோதும் நிங்கள் மகிழ்ச்சியுடன் ஜீவிக்க முடியாதே!” என்றார். 

உடனே அவர்கள் அதை எதிர்த்து கூக்குரலிட்டனர். அப்பெண்கள் எல்லாரும் அந்நாட்டின் சிற்றரசர்கள் மற்றும் உயர்குல பிரபுக்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களாம். அவர்களால் சாமிநாதருடைய அறிவுரையைத் தாங்க முடியவில்லை. ஜென்சியானா என்ற ஒரு பெண் அக்கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு, அர்ச்சிஷ்டவரைப் பார்த்து, “ நிங்களும் இந்நாட்டில் அங்குமிங்கும் அலைந்து திரியும் மற்ற குருக்களும் தான் அவ்வாறு பசாசின் பிடியில் இருக்கிறீர்கள். நாங்கள் இல்லை” என்று கூவினாள்.

 பிறகு, கிளாரட்டா என்ற மற்றொரு பெண், “அது சரி. உங்கள் மேற்றிராணியார் டீகோவும் தான். அவரை மிகவும் அருகில் கவனித்து வந்தேன். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவர் இங்கு வந்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களிடம் சொல்வதற்கு நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஸ்பெயின் நாட்டிற்கே திரும்பி செல்லட்டும். கர்த்தூசியன் மடாதிபதியும், அவருடைய துறவிகளும்  அவ்வாறே திரும்பி தங்களுடைய ஊருக்குச் செல்லட்டும்” என்று ஆவேசத்துடன் இரைச்சலிட்டாள்.

இப்பெண்களின் இரைச்சலை சட்டைபண்ணாமல், அர்ச்.சாமிநாதர் அவர்களிடம், “என் பரிதாபத்துக்குரிய பிள்ளைகளே! நீங்கள் மெய்யாகவே பசாசின் பிடியில் அகப்பட்டுள்ளீர்கள். நிங்கள் பேசுவது என்னவென்று தெரியாமல் பேசுகிறீர்கள்” என்று ஆணித்தரமாக பலமுறை கூறினார். பிறகு, பரலோக பிதாவைப் பற்றி பிரசங்கிக்கலானார். அவருடைய ஏக குமாரானாகிய திவ்ய சுதனாகிய சர்வேசுரனைப் பற்றியும், 1200 வருடங்களுக்கு முன் அவர் ஸ்தாபித்த திருச்சபையைப் பற்றியும் போதித்தார். அதுவே சத்தியவேதத்தைப் புகட்டும் மெய்யான திருச்சபை என்றும் அதன் வழியாகவே நித்திய பேரின்ப மோட்சத்தை எந்த மனிதனும் அடையமுடியும் என்றும் கற்பிக்கலானார்.

பிறகு அந்த வெறுப்பு நிறைந்த முகங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து, “எவ்வாறு ஏக பரிசுத்த சத்திய திருச்சபை பொய்யானவைகளை போதிக்கக் கூடும்? நன்மையே உருவான சர்வேசுரனாலேயே ஏற்படுத்தப்பட்ட தேவதிரவிய அனுமானங்கள் எவ்வாறு திமையானவையாக இருக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?” என்றார்.

“இரு கடவுளர்கள் உள்ளனர். ஒருவர் நல்லவர் மற்றவர் கெட்டவர் என்பதை மறந்துவிட்டீர்களா சுவாமி? இங்கு எங்களுடைய குழந்தைகளுக்குக் கூட தெரியுமே!” என்று இன்னொரு பெண் கூறினாள். இதைக் கேட்டதும் அர்ச்.சாமிநாதர் சிறிது நேரம் மௌனமானார்.

அவருடைய கண்கள் சாந்தமும் இரக்கமும் நிறைந்து ஒளிர்ந்தது. எத்தகைய அறியாமை இங்கு நிலவுகிறது! இம்மக்களின் மனங்கள் கடினப்பட்டு தப்பறையில் நிலைத்திருக்கின்றனவே! என்றெல்லாம் எண்ணிய அர்ச். சாமிநாதர், உடனே, இவற்றையெல்லாம் நன்கறிந்துள்ள மோட்ச இராக்கினியிடம் தஞ்சமடைந்தவராக, “என் அதிமிக நேசமுள்ள தேவதாயாரே! பதிதத்தில் இருளடைந்திருக்கும் இவர்களுடைய இருதயங்களை ஒளிர்விப்பதில் எனக்கு உதவியாக வாரும்! அவர்கள் பதிதர்களாக இருந்த போதிலும், அவர்களும் உமது பிள்ளைகள் தானே!” என்று வேண்டிக் கொண்டார். பிறகு, ஞானத் தெளிவடைந்தவராக மிக எளிய வார்த்தைகளைக் கொண்டு அப்பதிதர்களிடம் போதிக்கலானார். “ஒரு சிறு பொய் கூட, நமது ஆத்துமத்தை வருத்தப்படுத்துவதற்கும் அழிப்பதற்குமான வல்லமையைக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால், மிகப்பெரிய பொய்கள், முக்கியமாக, இவ்வுலக நாடுகளின் நித்திய கதியான, சர்வேசுரனைப்பற்றிய காரியங்களிலும் அவருடைய கற்பனைகளைப்பற்றியவற்றிலும் பயன்படுத்தப் படும் மிகப்பெரிய பொய்கள் எப்படிப்பட்ட திமை நிறைந்தவைகளாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்! பசாசு தான் முதல் மாபெரும் பொய்க்கு தகப்பனாக விளங்குகிறான். சிங்காரத் தோப்பில் அவன் ஏவாளிடம் அந்தப் பொய்யைக் கூறினான். பசாசு முதலில் ஏவாளிடம், சர்வேசுரன் கூறியதன்பேரில் சந்தேகத்தை ஏற்படுத்தி, பிறகு, அவள் அதை நம்பாமல் செய்தான். பிறகு, விலக்கப்பட்ட கனியைத் தின்றால், மாபெரும் வல்லமையையும் மகிழ்வையும், அதாவது, அவள் கடவுளாகவே மாறுவாள் என்றும், பசாசு ஏவாளிடம் வாக்களித்தது. ஆனால் அந்த மாபெரும் வல்லமையையும் மகிழ்வையும் அவள் கண்டடைந்தாளா? மாறாக, வேதனை துயரம், சாவு, நோவு போன்ற சாபத்தையே பெற்று, சிங்காரவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டாள்” என்று கூறினார். 

அப்பொழுது கர்தோலானா என்ற பெண், திடீரென்று, “ஐயோ! சுவாமி அங்கே பாருங்கள்!” என்று கூக்குரலிட்டு அலறினாள். தேவாலயத்தினுள் ஒரு மாபெரும் கருப்பு பூனையைப் போன்ற ஒரு விநோதமான பயங்கர தோற்றமுடைய ஒரு மிருகம் வருவதை அனைவரும் கண்டனர். அதனுடைய கண்கள், ஒரு எருதுவின் கண்களைப்போலும், அதன் வால், அடர்ந்த ரோமத்துடன் ஒரு நாயின் வாலைப் போலும் இருந்தன. தன் இரையைப் பிடிப்பதற்காக, அதன் செந்நிற நாவை ஆறு அங்குல நிளத்திற்கு வெளியே நிட்டிக் கொண்டு உறுமிக் கொண்டு அப்பெண்களை நோக்கி வந்தது.

(தொடரும்)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக