Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 24 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 8

சிஸ்டர்ஷியன் சபையினருடன் உரையாடுதல்

வந். டீகோ ஆண்டகை சிஸ்டர்ஷியன் சபையின் மடாதிபதியான சங். ஆர்னால்ட் சுவாமியாரிடம் ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி விவரிக்கலானார். அப்பதிதம் பரவியுள்ள ஊர்களுக்கு பிரசங்கிக்க செல்லும்போது சுவிசேஷத்தின் தரித்திரத்தைப் பின்பற்றும் விதத்தில் எளிய தரித்திர அங்கியை அணிந்து செல்ல வேண்டும் என்றும் மிதியடிகள் இல்லாமல் வெறும் காலுடன் நடந்து செல்ல வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார். மேலும் வேதபோதக அலுவலில் ஈடுபட்டிருக்கும்போது துறவிகள், வசதியான சத்திரங்களில் தங்காமல் எளிய விவசாயிகளுடைய இல்லங்களிலேயே அவர்களுடன் எளிய உணவை உட்கொண்டு அங்கேயே தங்குமாறு அறிவுறுத்தினார். 

அதற்கு அம்மடாதிபதி, “அது கண்ணியமாக இருக்காதே!” என்றார். வந்.டீகோ ஆண்டகை , “நமக்கு நமது கண்ணியம் முக்கியமா? அல்லது ஆத்துமங்கள் முக்கியமா?” என்றார்.

மடாதிபதியோ, “ உங்களுக்கு புரியவில்லை. இங்கு பிரான்சில், நாங்கள் நமது 3ம் இன்னசென்ட பாப்பரசரின் பிரதிநிதிகள். அப்படியிருக்க நாங்கள் எவ்வாறு தரித்திர பிச்சைக்கார கோலத்தில் செல்வது?” என்றார். 

இதைக் கேளாதவர் போல வந்.டீகோ ஆண்டகை, “ நாங்கள் இன்னொரு ஆலோசனையும் வைத்திருக்கிறோம்” என்று கூறிக் கொண்டே அர்ச்.சாமிநாதர் பக்கம் திரும்பி, “மகனே! அது என்ன என்று இவர்களுக்குக் கூறுகிறீர்களா?” என்றார். இதைக் கேட்டதும் புன்னகையுடன் அர்ச்.சாமிநாதர், “மடாதிபதி சுவாமியவர்களே! நமக்கு பெண் உதவியாளவர்களும் தேவைப்படுகின்றனர்!” என்றார். “பெண் உதவியாளர்களா?

அது முடியாத காரியம். பிரசங்கிப்பது என்பது ஆண்களின், அதுவும் குறிப்பாக குருக்களின் அலுவலாகும்” என்றார். அதற்கு, அர்ச்.சாமிநாதர், “ஓ சுவாமியவர்களே! எவ்வளவு பெண் உதவியாளர்களை அனுப்பமுடியுமோ அவ்வளவு பேரை இப்பொழுதே அனுப்பும்படி நாம் சர்வேசுரனை மன்றாட வேண்டும்” என்றார்.

அர்ச்.சாமிநாதர் இவ்வாறு கூறியதற்கான காரணத்தை அம்மடாதிபதி விரைவிலேயே புரிந்து கொண்டார். அப்பகுதியில் பதிதர்கள் பல பள்ளிக் கூடங்களைக் கட்டியிருந்தனர். அவற்றில் பெரும்பாலானவற்றைப் பெண்களே நிர்வகித்து வந்தனர். அங்கு கல்வி பயின்று வந்த சிறுவர் சிறுமியருக்கு தேவதிரவிய அனுமானங்கள் மிது வெறுப்பை ஏற்படுத்தியும் விசுவாசபிரமாணத்தின் எல்லா விசுவாச சத்தியங்களையும் பாப்பரசரையும் வெறுத்து பகைக்கும்படி போதித்தும் வந்தனர், ஆல்பிஜென்சிய பதிதர்கள். 

இதனிமித்தமே, அப்பகுதி மக்கள் சர்வேசுரனைப்பற்றியும் திருச்சபையைப் பற்றியும் அறியும் பொருட்டு, கத்தோலிக்க ஞான உபதேசத்தைக் கற்பிக்கும்படியான பள்ளிக்கூடங்களை அங்கு நிறுவ வேண்டும் என்று வந்.டீகோ ஆண்டகையுடன் அர்ச்.சாமிநாதர் திட்டமிடலானார்.

இத்திட்டத்தைப்பற்றி அறியவந்த மடாதிபதி, “ஆம். அது நமது அலுவலை மிகவும் எளிதாக்கும்” என்றார். சங்.ருடால்ஃப் சுவாமியார், “ஆம். மனந்திரும்பிய பெண்கள் தங்குவதற்கு இத்தகைய கல்வி நிலையங்கள் பாதுகாப்பான இடங்களாக விளங்கும். ஏனெனில் அவ்வாறு மனந்திரும்பும் பதிதர்கள் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களாலேயே துன்பப்பட நேரிடும் என்று நான் கேள்விபட்டேன்” என்றார். இதைக் கேட்ட சங்.பீட்டர் சுவாமியார், “எனக்கும் இதுபற்றிய சந்தேகம் இருந்தது. மனந்திரும்பியவர்கள் எவ்வாறு பதிதர்களை விட்டு வெளியேற துணிவார்கள்? ஆனால் இத்தகைய பாதுகாப்பிடங்கள் இருக்குமானால் அவர்களை அங்கு தங்க வைக்கலாம்” என்று கூறினார்.

இதன்பிறகு, சுவிசேஷத்தின் தரித்திரத்தைப்பின்பற்றியவர்களாக, வந்.டீகோ ஆண்டகை, அர்ச்.சாமிநாதர் மற்றும் சில வேதபோதகர்களுடன் தெற்கு பிரான்சின் பல பகுதிகளுக்குச் சென்று ஞான உபதேசத்தைக் கற்பித்தும் ஞான பிரசங்கங்களை நிகழ்த்தியும் வந்தார். ஆல்பிஜென்சிய பதிதத்தை அழித்தொழிப்பதில் வந்.டீகோ ஆண்டகையின் தலைமையில் ஈடுபட்டிருந்த நமது வேதபோதகர்களுக்கு பேராதரவு தந்து கொண்டிருந்த, தூலோஸ் நகர மேற்றிராணியார் வந்.ஃபோல்க்வெஸ் ஆண்டகை இவர்களிடம் ஒருநாள், “வருத்தப்படாதிர்கள். உங்களுடைய முயற்சிகளில் சர்வேசுரன் மகிழ்ந்திருக்கிறார். விரைவிலேயே எல்லாவிற்றிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்! உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது” என்றார்.

இந்த மேற்றிராணியார் அர்ச்.சாமிநாதருக்கு ஃபாஷோ என்ற இடத்தில் ஒரு சிற்றாலயத்தை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். இந்த சிற்றாலயத்தில் தான் இச்சிறு வேதபோதகக் குழுவினர் ஓய்வு நேரங்களில் ஜெபித்தும் அதன் வளாகத்தில் தங்கி ஓய்வெடுத்தும் பதிதத்தை அழிப்பதற்கான திட்டங்களைத் திட்டியும் வந்தனர். அந்த மேற்றிராணியார் தங்களுக்கு என்ன நல்ல செய்தி சொல்லப்போகின்றார் என்று இவர்கள் எல்லாரும் அவரை ஆவலுடன் உற்று நோக்கினர்.

தூலோஸ் நகர மேற்றிராணியார் அவர்களிடம், “எனது மேற்றிராசனத்தைச் சேர்ந்த நன்கு கற்றிறிந்தவர்களும் பரிசுத்தருமான அநேக குருக்கள் அப்பதிதத்தை அழித்தொழிப்பதில் உங்களுக்கு உதவ முன்வந்துள்ளனர் என்பதே அந்த நல்ல செய்தி” என்றார். 


அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 9

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 7


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக