தேவநற்கருணையில் நடந்த புதுமையைக் கண்டு அஞ்ஞானியான ஒரு சிற்றசரசன் மனந்திரும்பின புதுமை
சாக்சனி தேசத்தில் அஞ்ஞானியான விட்டிக்கின் என்ற ஒரு சிற்றரசன் ரோமாபுரி அரசனுடன் சண்டை செய்தபோது ரோமாபுரி அரசனே போரில் வெற்றி பெற்றதால் அவன் அச்சிற்றரசனுடன் சமாதானாமாய் போனான். அரசன் பாளையம் இறங்கிப்போவதற்குமுன் நாற்பது நாள் தபசுகாலத்தில் ஒரு சந்தி இருந்து கடைசியில் வருகிற பெரிய வியாழக்கிழமை, பெரிய வெள்ளிக்கிழமை, பெரிய சனிக்கிழமை ஆகிய பாஸ்குத் திருநாளை அங்கேயே வெகு ஆடம்பரத்தோடு கொண்டாடினான்.
சாக்சனி நாட்டின் சிற்றரசன் ரோமாபுரி அரசனும் மற்றக் கிறீஸ்துவர்களும் அந்தத்திருநாளில் செய்யும் காரியங்களைப் பார்ப்பதற்காக மாறுவேடம் பூண்டு பரதேசிபோல் அரசனுடைய பாளையத்துக்குப்போனான். திருநாள் முடியுமட்டும், அவன் அங்கேயிருந்து திருநாளில் செய்கிற சடங்குகளை யெல்லாம் நன்றாய்ப் பார்த்தான். அங்கே ஒருவன் அவனுடைய முகத்தை உற்றுப் பார்த்து அவன் விட்டிக்கின் என்று அறிந்து அரசனிடத்தில் சொன்னான். இதை விட்டிக்கின் அறிந்து, தானே வலிய அரசனுடைய கூடாரத்துக்குள்ளே போனான். அரசன் இவனைக் கண்டு பட்சத்தோடு வரவேற்று “நீர் இங்கே வரவிரும்பினால், மகிமையோடு வராமல் இந்த நீசவேஷத்தோடு வருவதேன்?”; என்று வினவினான்.
இதற்கு விட்டிக்கின், “இந்தத் திருநாளிலே நீங்கள் செய்வது என்னவென்று
பார்க்கவே மாறுவேடத்தில் வந்தேன்” என்றான்.
அரசன் “என்ன பார்த்தீர்?”; என்று கேட்டதற்கு, அவன், “நான் பார்த்த காரியங்களுள் ஆச்சரியமான இரண்டு காரியங்களாவன:
1-வது வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் நீங்கள் சலிப்பாயிருந்து சனிக்கிழமை சந்தோஷமாயிருந்தீர்கள்.
2-வது குருவானவர் உமக்கும் சேவகர்களுக்கும் தேவநற்கருணை கொடுக்கிறபோது குருவின் கையில் அலங்காரமுள்ள மகிமைமிக்க குழந்தையை நான் கண்டதுமல்லாமல், நீரும் சேவகரும் திவ்யநன்மை
வாங்கினபோது மாட்சிமிக்க அந்த திவ்யகுழந்தை உம்முடைய வாயிலும் சில சேவகர் வாயிலும் சந்தோஷமாய்ப் போனதையும் சில சேவகர் வாயில்
கஸ்தியோடு கட்டாயத்துடன், போவதையும் கண்டேன். ஆனால், அந்தக் குழந்தை யாரென்று நான் அறியேன். நீர் சலிப்பாய் இருந்ததற்கு காரணம் இன்னதென்றும் அறியேன்” என்றான்.
அரசன் இச்செய்தியெல்லாம் ஆச்சரியத்தோடு கேட்ட பிறகு “வியாழன் வெள்ளி இரண்டு நாளும் நம்முடைய திவ்யகர்த்தர் சேசுநாதருடைய திவ்ய திரு மரணத்தின் சடங்குகளைச் செய்ததினால் ஆண்டவருடைய திவ்ய பாடுகள் மற்றும் மரணத்தின் மட்டில் ஏற்பட்ட துக்கதுயரத்தின் காரணமாக இரண்டு நாளும் மனவருத்தமாயிருந்தோம். பிறகு சனிக்கிழமையன்று, நம் ஆண்டவர் உயிர்த்தெழுந்தருளின சடங்கை செய்ததினால் அன்றைக்கு சந்தோஷமாயிருந்தோம்”; என்றான்.
பிறகு அரசன் தேவநற்கருணையின் பரமஇரகசியத்தையும் அவனுக்கு விளக்கிச் சொல்லி, “திவ்ய நற்கருணையிலிருக்கிற சேசுநாதரை நான் காணாதிருக்கையில், அவரை நீர் கண்டதினால், முன்போல் இராமல் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. சில சேவகர்கள் பாவத்தோடு தேவநற்கருணை உட்கொண்டதால், ஆண்டவர் கட்டாயமாக அவர்களுடைய வாயில் போகிறதை நீர் கண்டீர்” என்று சொன்னான்.
இதையெல்லாம் கேட்ட அந்த சிற்றரசனுக்கு கிறிஸ்துவ மதத்தில் சேர ஆசை ஏற்பட்டது. உடனே ஞானஉபதேசம் கேட்டு மேற்றிராணியாரான அர்ச். ஹெர்பர்ட் என்பவருடைய கையினால் ஞானஸ்நானம் பெற்றான். அவனுக்கு அரசனே ஞானத் தகப்பனாயிருந்தான்.
கிறீஸ்துவர்களே! அந்த ரோமாபுரி அரசன் நம் நேச ஆண்டவரான சேசுநாதர்சுவாமி மேல் வைத்த நேசத்தினாலும் இரக்கத்தினாலும் பெரிய
வியாழக்கிழமையும் பெரிய வெள்ளிக் கிழமையும் மன வருத்தமாயிருந்தாரென்று கேட்டீர்கள். வெள்ளிக்கிழமை தோறும் திவ்ய கர்த்தர் நமக்காக அனுபவித்த கஸ்திகளை தியானித்து அவர் பேரில் உங்கள் இருதயங்களில் இரக்க உணர்ச்சி ஏற்படச் செய்வது புண்ணிய முயற்சியாகும். திவ்ய கர்த்தர் உங்களுடைய இருதயங்களில் மகிழ்வுடன் இறங்குவதற்கு நீங்கள் தேவ இஷ்டபிரசாத அந்தஸ்தில் இருக்க வேண்டியது அவசியமாகும்.
சாவான பாவ அந்தஸதில் திவ்ய நன்மையை உட்கொண்டால் அதுவே உங்கள் நித்திய ஆக்கினைக்குக் காரணமாயிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக