தேவமாதா காட்சியும், உத்தரியமும்
“கவலைப்படவேண்டாம். தேவமாதா உனது மனதிலிருக்கும் குழப்பம் யாவற்றையும் நீக்கிவிடுவார்கள். விரைவில் நீயும் எங்களைப் போல உத்தம துறவியாவாய். இந்த ஜெபத்தை என்னுடன் சேர்ந்து சொல்” என்று அர்ச்.சாமிநாதர் கூறியபோது, அதை ஏற்றுக்கொள்ளாததுபோல ரெஜினால்டு, தலையை அசைத்துக் கொண்டே,“நான் அந்த உன்னதமான துறவற அந்தஸ்தில் மரிப்பதற்கு முற்றும் தகுதியற்றவன். அந்த மகிமையை அடைவதற்கு நான் இதுவரை ஒன்றும் செய்யவில்லையே” என்று கூறினார்.
இதைக்கேட்ட அர்ச்.சாமிநாதர், தன் ஜெபத்தையும் தவத்தையும் இன்னும் அதிகரித்தார். ஜெபத்தினுடையவும் துன்பங்களினுடையவும் வல்லமையை நன்கறிந்த சாமிநாதர், தமக்கு மிகப்பிரியமான ஞானமகனாக உருவாக இருக்கும் ரெஜினால்டுவின் ஆன்மசரீர சுகத்திற்காக தொடர்ந்து தேவமாதாவிடம் இரவு பகலாக மன்றாடி வந்தார். அர்ச்.சாமிநாதருடைய மன்றாட்டு விரைவிலேயே கேட்கப்பட்டது. ஒருநாள் காலையில் அவருடைய படுக்கையினருகே சென்றபோது, இந்நாள்வரை சாகக்கிடந்த ரெஜினால்டு, உயிர்பெற்றவராக, தெளிந்த முகத்துடன் படுக்கையில் அமர்ந்து இருந்தார். அவர், குதூகலத்துடனும் மிகுந்த உற்சாகத்துடனும், அர்ச்.சாமிநாதரிடம், “சுவாமி! எனக்கு சுகம் கிடைத்துவிட்டது. இந்நேரம் வரைக்கும் தேவமாதா இங்கு இருந்தார்கள். அவர்களே என்னை குணப்படுத்தினார்கள்.” என்று கூறினார்.
உடனே, அர்ச்.சாமிநாதர், அவரிடம், “என்னிடம் இதைப்பற்றி எல்லாவற்றையும் கூறு. இது எப்பொழுது? எவ்வாறு நிகழ்ந்தது?” என்று வினவினார்.
ரெஜினால்டு, “சுவாமி! ஒரு மணி நேரத்திற்கு முன்பாக எனக்குக் காய்ச்சல் மிகவும் அதிகரித்தது. உடம்பெல்லாம் நெருப்பாய் கொதித்தது. இனிமேல் என்னால் இந்த உக்கிரமமான காய்ச்சலைத் தாங்கமுடியாது. நான் இனி உயிர் வாழமுடியாது. வெகு சிக்கிரத்தில் இறந்துவிடுவேன் என்று உணர்ந்தேன். அப்பொழுது திடீரென்று மோட்சத்திலிருந்து தேவமாதா மிகுந்த மாட்சியுடன் இங்கு தோன்றினார்கள். மோட்ச இராக்கினி, மிகுந்த பிரகாசத்துடனும் மகிமையுடனும் பேரழகுடனும் இளவயதுடனும் தோன்றினார்கள். அப்பொழுது, திவ்ய இராக்கினி புரிந்த அந்த பரலோகப் புன்னகையின் மாட்சிமையை என்னால் வர்ணிக்க முடியாது. அதன்பிறகு, அவர்கள் என்னிடம், “இவ்வுலகில் நீ எதை மிகவும் அதிகமாக விரும்புகிறாய்? என்று என்னிடம் கூறு. அதை நான் உனக்குத் தருவேன்” என்று கூறினார்கள். எனக்கு எதைத் தேர்ந்தெடுப்பது என்று ஒன்றும் புரியவில்லை. எனக்கு இந்த நோய் குணமாகவேண்டும் என்று கேட்கத் தோன்றவில்லை. அப்பொழுது, தேவமாதாவுடன் வந்த இரு மோட்சவாசிகளுள் ஒருவர் என்னிடம், “இதை தேவமாதாவின் கரங்களிலேயே ஒப்படைத்துவிடு. அவர்கள் உனக்கு எது அதிக பொருத்தமானதோ, அதையே உனக்குத் தருவார்கள்” என்று கூறினார். நானும் அவ்வாறே எனக்கு எது தேவை என்பதை தேவமாதாவின் திருவளத்திற்குக் கையளித்தேன். இதனால் மகிழ்வடைந்த மோட்ச இராக்கினி, என்னிடம் வந்து, ஒரு எண்ணையைக் கொண்டு என் மேல் பூசி சிறிது நேரம் ஜெபித்தார்கள். பிறகு, தேவமாதா, என்னிடம்,”மகனே, நல்ல இருதயத்தைக் கொண்டிரு. அர்ச்.சிக்ஸ்துஸ் மடத்தில் நீ ஒரு நல்ல போதக துறவியாக வேண்டுமென்பது சர்வேசுரனுடைய சித்தம். உன் மனக்குழப்பங்கள், அவற்றால் வரும் வியாதி எல்லாம் உன்னை விட்டு நிங்கும். என் உதவியினால் நீ இந்த பரிசுத்த துறவற ஜீவியத்தில் நிலைத்திருப்பாய்” என்று கூறினார்கள்” என்று தான்
தேவமாதாவால் புதுமையாக குணமான நிகழ்வை அர்ச்.சாமிநாதரிடம் விவரித்தார்.
அப்பொழுது, அர்ச்.சாமிநாதர், அவரிடம், “அதன் பிறகு என்ன நடந்தது?” என்று கேட்டார்.
அதற்கு அவர், “சுவாமி! இன்னுமொரு விநோதமான காரியம் நிகழ்ந்தது. நம் பரலோக இராக்கினி, என்னிடம் ஒரு வெண் கம்பளியினாலான ஒரு உத்தரியத்தைக் காண்பித்து, “இதோ உன் சபைக்கான துறவற உடை” என்று கூறினார்கள். நான் அந்த வெண்கம்பளி உத்தரியத்தை உற்றுப்பார்த்துக்கொண்டு இருக்கும்போதே தேவமாதாவும் அவ்விரண்டு மோட்சவாசிகளும் மறைந்துவிட்டனர். எனக்கு நினைவு வந்ததும், காய்ச்சல் என்னைவிட்டு முற்றிலும் அகன்றுவிட்டது. நான் பூரண சுகமடைந்துவிட்டேன் என்று உணரலானேன்” என்று கூறினார்.
அர்ச்.சாமிநாதர் தம்முடைய இளந்துறவியை தேவமாதா நேரிலே வந்து புதுமையாக குணப்படுத்தியதை அறிந்து மிகவும் மகிழச்சியடைந்தார். பிறகு, அவர், ரெஜினால்டுவிடம், “சகோதரரே! நாம் நமது பரிசுத்த தேவமாதாவுக்கு நன்றி செலுத்துவோம். தேவமாதா காண்பித்த வெண் கம்பளி உத்தரியத்தின் அர்த்தம் என்ன வென்று அவர்களிடம் கேட்டு மன்றாடுவோம்” என்று கூறினார். பிறகு, இருவரும் சேர்ந்து, ரோம் நகரம் முழுவதும், உலகம் முழுவதும் விரைவிலேயே நேசிக்கப்போகும் அழகிய ஜெபத்தை ஜெபிக்கத் தொடங்கினர்.
“பிரியதத்தத்தினாலே பூரணமரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே! பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே!..” என்று தேவமாதாவை நோக்கி அருள்நிறை மந்திரத்தை உருக்கமாக இருவரும் ஜெபித்தனர்.
மூன்று நாட்கள் கழித்து, மிண்டும் அர்ச்.சாமிநாதர் ரெஜினால்டுவை சந்திக்க சென்றார். அச்சமயம், அந்த இளந்துறவி விவரித்த காட்சி இன்னுமொருதடவை நிகழ்ந்தது. அர்ச்.தேவமாதா இரண்டு மோட்சவாசிகளுடன் அங்கு தோன்றினார்கள். மாதா, தமது கையில் வைத்திருந்த வெண்கம்பளி உத்தரியத்தைக் கொண்டு ரெஜினால்டுவை அணிவித்தார்கள். பிறகு இக்காட்சி மறைந்தது. இதைப் பார்த்த அர்ச்.சாமிநாதர், உடனே இக்காட்சியின் அர்த்தத்தைக் கண்டுபிடித்தார். அதாவது, வெண் கம்பளி உத்தரியத்தை தமது சபையைச் சேர்ந்த துறவிகளுடையவும் கன்னியாஸ்திரிகளுடையவும் துறவற உடையின் அதிமிக பரிசுத்த பாகமாக ஏற்கப்படவேண்டும் என்று தேவமாதா தமக்கு அறிவுறுத்துவதாக உணர்ந்தார். மேலும் இதுவே பரலோகத்திலிருந்து தமது சபைக்குக் கிடைத்த உண்மையான வெகுமானம் என்றும் தமது சபையின் மேல் தேவமாதா கொண்டிருக்கும் விசேஷ விருப்பத்தின் அடையாளம் தான் இந்த உத்தரியம் என்றும் அர்ச்.சாமிநாதர் அறிந்து கொண்டார்.
பிறகு, அர்ச்.சாமிநாதர், மகிழ்வுடனும் உற்சாகத்துடனும், ரெஜினால்டுவிடம், “இந்த பரிசுத்த சின்னத்தை, இப்பரிசுத்த உத்தரியத்தை, நீரே முதலில் பெறவிருக்கிறீர். அதைத் தகுதியுடன் எப்பொழுதும் அணிந்திருக்க தேவையான தேவவரப்ரசாதத்தை சர்வேசுரன் உமக்கு அருள்வாராக!” என்று கூறினார்.
பிறகு, அர்ச்.சாமிநாதர் தேவமாதாவிடமிருந்து அடையப்பெற்ற இப்பரிசுத்த உத்தரியத்தை தமது சபையினர் அனைவரும் அணிவதற்கான ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தார். அந்த நாளில், இதுவரைக்கும் சாமிநாதர்சபை துறவிகள் தங்களுடைய துறவற உடைக்குமேல் அணிந்து வந்த லினன் துணியிலான மேலாடையை நீக்கி விட்டு அதற்கு பதிலாக மாதா கொடுத்த இந்த வெண் கம்பளி உத்தரியத்தை பக்தி பற்றுதலுடன் அணிந்து கொண்டனர். இந்நாளிலிருந்து சாமிநாதர்சபை துறவிகள், “அர்ச்.கன்னிமாமரியின் சகோதரர்கள்” என்ற உயரிய பட்டத்தால் அழைக்கப்பட்டார்கள். ரெஜினால்டுவை தமது சபையில் சேர்த்துக்கொண்டபிறகு, சாமிநாதர், அவர் ஏற்கனவே நேர்ந்துகொண்டபடி, ஆண்டவருடைய பரிசுத்தபூமிக்கு தவயாத்திரையாக செல்லும் பயணத்தைத் தொடரும்படி அனுமதித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக