வந்.ஃபல்குவஸ் ஆண்டகை சாமிநாதரை சந்தித்தபோது நிகழ்ந்த உரையாடல்
பாப்பரசர் ஹோனொரியுஸிடமிருந்து தன் சபைக்கு அங்கிகாரம் பெற்ற பிறகு ரோமாபுரியில் தங்கி பாப்பரசருடைய விருப்பத்திற்கு ஏற்ப சிறிது காலம் ஞானபிரசங்கங்களை நிகழ்த்திய பிறகு சாமிநாதர் தூலோஸிலுள்ள தன் சபை மடத்திற்கு திரும்பினார். 1216ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி தேவமாதா பரலோகத்திற்கு ஆரோபனமான திருநாளன்று புரோயிலுள்ள தேவமாதாவின் தேவாலயத்தில் சபையின் அதிபராக நின்று, தன் சபைத் துறவிகளின் நிரந்தர வார்த்தைப்பாட்டை ஏற்றுக் கொண்டார். அப்போது தன் சபையின் இளந்துறவிகளை உலகின் நான்கு திசைகளுக்கும் அனுப்புவதாகத் தெரிவித்தார். பாரிஸூக்கு சென்று அங்குள்ள பல்கலைக் கழகத்தின் அருகில் ஒரு மடத்தை ஏற்படுத்துவதற்காக சபையின் 7 சகோதரர்களும் அனுப்பப்படுவர் என்றும் 4 சகோதரர்கள் மாட்ரிட் நகருக்கும் புரோயிலிலுள்ள கன்னியரை கவனிக்கும்படியாக அங்கு 2 சகோதரர்கள் அனுப்பப்படுவர் என்றும் தூலோஸில் 2 சகோதரர்கள் தங்கும்படியாகவும் பெல்ஜியத்திலிருந்து வந்த சகோ.ஸ்டீபன் தன்னுடன் மற்றொரு ரோமாபுரி பயணத்தை மேற்கொள்ளவும் சாமிநாதர் ஏற்பாடு செய்தார். இதைப்பற்றிக் கேள்விப்பட்ட வந்.ஃபல்குவஸ் ஆண்டகை சாமிநாதரை சந்தித்தபோது இருவருக்குமிடையே நிகழ்ந்த உரையாடல்:
“உங்கள் சபைத் துறவிகளை அதற்குள்ளாக பல்வேறு இடங்களுக்கு அனுப்புகிறீர்களே, அவர்கள் இளந்துறவிகளல்லவா? அவர்கள் குருப்பட்டம் பெறுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கிறதே, இந்நிலையில் அவர்களை மற்ற இடங்களுக்கு வேதபோதகத்திற்கும் மடங்களையும் நிறுவுவதற்கும் அனுப்புவது ஏற்புடைய காரியமா?”
“ஏனென்றால், ஆண்டவரே! ஒரு நொடிப்பொழுது நேரத்தையும் நாம் வீணடிக்கக்கூடாது”
“நேரத்தை வீணடிக்கக் கூடாதா?”
“ஆண்டவரே! புதித தப்பறை எங்கும் பரவியுள்ளது. ஐரோப்பா முழுவதற்குமாக ஞான பிரசங்கங்களை நிகழ்த்துவதற்கு போதகர்கள் தேவைப்படுகிறார்கள்”
“ஆனால், அதற்காக எவ்வாறு இந்த 18 அல்லது 20 வயதுடைய பையன்கள், அதற்கு உதவக்கூடும்?”
இதற்கு அர்ச்.சாமிநாதர் புன்னகையுடன், “ஆண்டவரே! பையன்கள் என்று நீங்கள் குறிப்பிடும் இந்த இளந்துறவிகள் சர்வேசுரனையும், அவருடைய பரிசுத்த தாயாரையும் சிநேகிக்கிறார்கள். ஆதலால், அவர்கள்மேல் நான் முழு நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். பாரீஸ் மற்றும் மாட்ரிட் நகரத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு அருகில் தான் அவர்கள் மடங்களில் தங்கியிருப்பார்கள். அதனால் அவர்களுடைய மேல் படிப்பை எளிதில் தொடர முடியும். அங்கு அவர்கள் மற்ற மாணவர்களுடன் தங்கி அவர்களுடைய ஜீவிய முறையை உத்தம கிறிஸ்துவ ஒழுங்கிற்குக் உயர்த்திக் கொண்டு வரமுடியும்” என்றார்.
“அவர்கள் தங்களுடைய துறவற ஜீவியத்திலேயே பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர முடியுமா?”
“ஆம். ஆண்டவரே!”
“இது வழக்கத்திற்கு முரணாக இருக்கிறதே”
“சிறிதளவு ஆழ்ந்த படிப்பு, அதிக ஜெபமும் தியானமும் இணைய வேண்டும். அப்பொழுது சர்வேசுரன் மற்றதைக் கவனித்துக் கொள்வார்”
“உங்களுடைய இந்த உதவியாளர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாதவராயும் மற்றவர்கள் சிறு பையன்களாகவும் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்களை தனியாக பாரிஸூக்கும் மாட்ரிட் நகருக்கும் நீங்கள் அனுப்புவது ஞானமான ஒரு செயல் என்று நிச்சயித்திருக்கிறிர்களா?”
“ஆண்டவரே! இதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். எல்லாம் நலமாக நடைபெறும். நான் அதை நிச்சயமாக அறிவேன்” என்று வழக்கம்போல பரலோக சமாதானம் மிளிரும் கண்களுடன் அர்ச்.சாமிநாதர் பதிலளித்தார்.
அர்ச்.சாமிநாதர் தன் இளந்துறவிகளுக்கு சிறு ஞானவாசகத்துடன் கூடிய தியானத்தைப் பயிற்றுவித்தார். அவர்களும் ஞானவாசகமாக சுவிசேஷத்தை சிறிது நேரம் படித்துவிட்டு பிறகு தேவாலயத்திற்கு சென்று மகா பரிசுத்த தேவநற்கருணையை ஆராதித்தபிறகு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடலாயினர். பிறகு அவர்கள் தங்கள் மனதில் எழும் வினாக்களுக்கான தெளிந்ததும் ஆழமானதுமான விளக்கங்களை தங்கள் அதிபர் சுவாமியாரான அர்ச். சாமிநாதரிடம் கற்றுத் தேர்ந்தனர். பிறகு அர்ச்.சாமிநாதர், அவர்களுடைய புதிய வேதபோதக அலுவலைப்பற்றி மிகுந்த உற்சாகத்துடனும் அவர்களுடைய இருதயத்தில் உத்வேகத்தைத் தூண்டும்படியாகவும் பிரசங்கித்தார். அர்ச். சாமிநாதர் விவரித்த இப்புதிய முறையில் சர்வேசுரனுக்காக உழைப்பது மிக விசேஷ அழைத்தலாகும் என்று அவருடைய சீடர்கள் உணரலாயினர். அப்போது சகோ.ஜான் சாமிநாதரை சந்தித்து அவரிடம் பின்வருமாறு உரையாடினார்:
“தந்தையே! எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை. ஒருவேளை பாரீஸூக்கோ அல்லது மாட்ரிட் நகருக்கோ நாங்கள் பயணத்தை மேற்கொள்ளம்போது வழியில் எங்களில் ஒருவருக்கு நோய் வந்தால் என்ன செய்வது? எங்களிடம் ஒரு காசும் கிடையாதே? மக்கள் யாரும் எங்களுக்கு தர்மம் ஏதும் செய்யாமல் விட்டால் நாம் என்ன செய்ய முடியும்?”
“சர்வேசுரன் அப்போஸ்தலர்களைப் பராமரித்தது போல உங்களையும் பராமரித்துப் பாதுகாப்பார் என்று பலமுறை நான் உங்களிடம் கூறியிருக்கிறேனே”
“ சுவாமி! இந்த விஷயத்தில் என் விசுவாசம் மிக பலவீனமாயிருக்கிறது”
“பல முறை இவ்விஷயத்தைப் பற்றி நாம் பேசியிருக்கிறோமே. சிறிது நேரத்திற்கு முன் சபை அதிபரான எனக்கு எல்லாவற்றிலும் கிழ்ப்படிவதாக வார்த்தைப்பாடு கொடுத்தீரே. மற்ற சகோதரர்களுடன் சேர்ந்து பாரிஸூக்கான பயணத்தை மேற்கொள்விராக!”
“ஆம்.சுவாமி. ஆனால் இது என்னால் கூடாத காரியம். நான் ஒரு பிச்சைக்காரனாக முடியாது”
இதைக் கேட்டதும் அர்ச்.சாமிநாதர், பசாசின் தந்திர சூழ்ச்சியில் சகோ.ஜான் உழல்கிறார் என்பதை உணர்ந்தார். உடனே அதை மேற்கொள்வதற்கான வழியையும் கண்டுபிடித்தார். உடனே அதை மேற்கொள்வதற்கான வழியையும் கண்டுபிடித்தார். கீழ்ப்படியாத சகோ. ஜானை உடனே தண்டித்திருக்கலாம்.
ஆனால் அதனால் யாதொரு கோபத்திற்கும் உட்படாமல் அர்ச்.சாமிநாதர் அந்த இளந்துறவியின் தேவ அழைத்தலுக்கே கேட்டை விளைவிக்க பசாசினால் ஏவப்பட்ட இந்த சோதனையிலிருந்து ஜானைக் காப்பாற்றும்படியாக சாமிநாதர் ஜானிடம், “மகனே உமக்கு பயண செலவுக்கு பணம் தானே வேண்டும். இதோ அதற்கான ஏற்பாட்டைச் செய்கின்றேன்” என்று கூறிக் கொண்டே ஒரு பணப்பையைக் கொண்டு வந்து சகோ.ஜானிடம் கொடுத்தார். உடனே சகோ.ஜான் கண்ணிர் மல்க அர்ச்.சாமிநாதர் முன்பாக முழங்காலில் இருந்தார்.
பிறகு அர்ச்.சாமிநாதர் அந்த நான்கு சீடர்களையும் ஆசீர்வதித்தார். தேவமாதாவை நோக்கி அனைவரும் மன்றாடியபிறகு, அவர்கள் 360 மைல் கல் தொலைவிலுள்ள பாரிஸை நோக்கிப் பயணமானார்கள். அவர்கள் சென்றதும் அர்ச்.சாமிநாதர் தேவமாதாவின் தேவாலயத்திற்கு சென்று ஜெபத்தில் ஆழ்ந்தார். அவருடைய முகம் சோகமாக இருந்தது. தன் சீடர்களை மிகவும் நேசித்த சாமிநாதர் அவர்களுடைய பிரிவை தாங்கமுடியாதவராக இருந்தார். மேலும் ஜானுடைய தேவ அழைத்தலுக்காகவும் அவருடைய பலவீனமான வேதவிசுவாசம் பலமடையும்படியாகவும் தேவமாதாவிடம் மன்றாடினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக