Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 24 ஜனவரி, 2022

அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 34

 துஷ்ட பெண் மனந்திரும்புதல்

ஒரு நாள் அர்ச்.சாமிநாதர் ஜான், ஆல்பர்ட் என்ற இரு நவசந்நியாசிகள் மிக வருத்தத்துடன் மடத்திற்கு திரும்பி வருவதைக் கவனித்து அவர்களிடம் வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள், "சுவாமி! நாங்கள் இன்று மதிய உணவை பிச்சை எடுப்பதற்காக சென்றோம். ஆனால் ஒரு விதவையிடமிருந்து சிறு ரொட்டித் துண்டு மட்டுமே கிடைத்தது. அதைக் கொண்டு வந்தபோது, அர்ச். அனஸ்தாசியா தேவாலயத்தினருகில் ஒரு பிச்சைக்காரன், மிகுந்த பசியால் வாடிக்கொண்டிருந்தான். அவன் எங்களுடைய கையில் இருந்த ரொட்டியை, ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். எங்களிடம் அந்த ரொட்டியைக் கொடுக்கும்படி கேட்டான். நாங்களும் தேவசிநேகத்தை முன்னிட்டு, அவனிடம் அந்த ரொட்டியைக் கொடுத்துவிட்டோம் ஆனால் நமது மடத்தின் மதிய உணவிற்கு இப்பொழுது என்ன செய்வோம்?" என்றனர்.

அதைக்கேட்ட சாமிநாதர், அவ்விரு சகோதரர்களுடைய தயாள குணத்திற்காக, அவர்களை பாராட்டினார். ”இதுவரை பராமரித்து வந்த கர்த்தர், இன்றும் நமது மடத்திற்கு உணவளிப்பார்” என்று அறிவுறுத்தினார்' தேவாலயத்திற்கு சென்று ஜெபித்துவரும்படியும், ஜெபம் முடிந்ததும் மதிய உணவிற்கான மணியை அடிக்கும்படியும் அவர்களிடம் கூறினார். அவ்விருவரும் அர்ச். சாமிநாதர் கூறியபடி உடனே கீழ்ப்படிந்து, கோவிலுக்கு சென்று ஜெபித்தனர். மதிய ஜெபம் முடிந்ததும், வெளியே வந்து உணவிற்கான மணி அடித்தனர். உடனே, காலியாக இருந்த உணவறை மேஜைகள் முன்பாக, ஒவ்வொருவராக அர்ச். சாமிநாதருடைய சீடர்கள் அனைவரும் கூடிவந்து, மதிய உணவுக்கு முன் ஜெபத்தை ஜெபித்தனர். என்ன ஆச்சரியம்! அவர்களுக்கு முன்பாக வெண்ணுடை தரித்த வசீகரமான இரு வாலிபர்கள் சாப்பாட்டறைக்குள் வந்தனர். ரொட்டித் துண்டுகள் நிறைந்த லினன் துணியிலான பைகள், அவர்களுடைய தோளுக்கு முன்னும் பின்னும் தொங்கிக் கொண்டிருந்தன. உடனே துறவிகள், ”இதோ சம்மனசுகள், மறுபடியும் நமக்கு உணவு கொண்டு வந்துள்ளனர்” என்று ஆச்சரியத்துடன் தங்களுடைய மனதுக்குள் நினைத்தனர்.

இம்முறை சகோதரர்களுக்கு, அவர்கள் முதலில் உணவை பரிமாறினர். அதன்பிறகு, நவசந்நியாசிகள், இளம் சந்நியாசிகள், மூத்த சந்நியாசிகள் என்று வரிசைக்கிரமமாக உணவைப் பரிமாறினர். கடைசியாக, அர்ச். சாமிநாதரின் மேஜைமுன்பாக வந்து, அவ்விரு இளைஞர்களும், தங்கள் பையில் இருந்த இறுதி ரொட்டித் துண்டை , அவரிடம் வைத்து விட்டு மறைந்துவிட்டனர். நீண்ட நேரம் இப்புதுமையால் பிரமிப்படைந்திருந்த சந்நியாசிகள் மௌனமாக இருந்தனர். அர்ச். சாமிநாதர், தன் சீடர்களை நோக்கி, ”சர்வேசுரன் நமக்கு அனுப்பிய உணவை உண்போம்" என்று கூறினார். அந்த ரொட்டியுடன் அவர்களுக்கு அன்று திராட்சை இரசமும் பரிமாறப்பட்டிருந்தது. அது முதல் தரமான இரசமாக அதிமிக சுவையுடன் இருந்தது. அவர்கள் உண்டு முடித்த பிறகும், ரொட்டியின் அளவும் திராட்சை இரசத்தின் அளவும் குறையாமல் இருந்த, மற்றொரு அதிசயமான புதுமையைக் கண்டு சந்நியாசிகள் இன்னும் வியப்பில் ஆழ்ந்தனர். இதற்காக துறவிகள் அனைவரும் ”சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக" என்று ஆண்டவரைப் போற்றி புகழ்ந்து நன்றி செலுத்தினர்.

இப்புதுமை அடுத்த இரு நாட்களும் தொடர்ந்து நீடித்தது. அவர்கள் சாப்பிட்ட பிறகும், ரொட்டியும் திராட்சை இரசமும் குறையாமல், சாப்பிடுவதற்கு முன் இருந்த அதே அளவு, இருந்தது. அதனால் அவ்விரு நாட்களும், துறவிகள் உணவை யாசிப்பதற்காக, வெளியே செல்லவில்லை . இதைக் கண்ட அர்ச்.சாமிநாதர், பரிசுத்த தரித்திரத்தை , தன் சீடர்கள் மறவாமல் கடைபிடிக்கும்படிக்கு, தினமும் சாப்பிட்டபிறகும் குறையாமல், வளர்ந்து வந்த உணவை, வெளியே எடுத்துச் சென்று, மற்ற ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும், கொடுத்துவிடும்படி கூறினார்.

அர்ச்.சாமிநாதர், சீடர்களிடம், "நாம் அனைவரும் நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டோம். நமது பராமரிப்பிற்காக ஆண்டவரை மட்டுமே நம்பியதற்காகவும், நமது இரு சகோதரர்கள் ஒரு பிச்சைக்காரருக்கு உணவை மறுக்காமல் கொடுத்ததற்காகவும், திவ்யகர்த்தர், நமக்கு உணவு கொடுத்து பராமரித்தார்" என்று அறிவுறுத்தினார்.

இந்நாள் முதல் கொண்டு, அர்ச். சாமிநாதரின் சபைமடங்களில், துறவற சகோதரர்களுக்கு முதலாகவும், அதன்பிறகு நவசந்நியாசிகள், இளந்துறவிகள், மூத்த துறவிகள் என்ற வரிசையில் எல்லா துறவிகளுக்கும், இறுதியாக சபை அதிபர்சுவாமியாருக்குமாக உணவு பரிமாறப்பட வேண்டும், என்ற சபை ஒழுங்கை ஏற்படுத்தினார். இந்த சபைவிதிமுறை, மற்றெல்லா துறவறமடங்களிலும் கடைபிடித்துவந்த ஒழுங்குமுறைக்கு , முற்றிலும் நேர்மாறாக இருந்தபோதிலும், சம்மனசுகள் கொண்டு வந்த இந்த ஒழுங்குமுறையை , சம்மனசுகள் நினைவாக, எல்லா சாமிநாதர் சபை மடங்களிலும், இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் உத்தமமான பிறர்சிநேகத்தை, பிச்சைக்காரர்கள் மட்டிலும் அனுசரிக்கும்படியான , ஒரு சபைவிதியையும் ஏற்படுத்தினார்.

ஒருநாள் பதிதர்களின் தந்திரசூழ்ச்சியினால், ஒரு அசுத்த பெண் அர்ச். சாமிநாதரிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய வந்தாள். பாவசங்கீர்த்தனத்தில், தனக்கு இருக்கும் அசுத்த பாவநாட்டங்களை அகற்றுவதற்கு, ஏற்ற புத்திமதி கூறவேண்டுமென்று கேட்டாள். பிறகு, அர்ச்சிஷ்டவரை தன் பக்கம் கவர்ந்திழுக்கப் பார்த்தாள். இது பசாசின் தந்திரம் என்று அறிந்த அவர், உடனே, அவளிடம், அவளுக்கிருந்த பாவநாட்டங்களை அகற்றுவதற்கான அறிவுரையை கொடுப்பதற்காக, அன்று மாலை, ஒரு இடத்திற்கு வரும்படி கூறினார். அவளும் அதே இடத்திற்கு, அதே நேரத்திற்கு சென்றாள். அங்கு இரண்டு பெரிய புதர்களில் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவளுடைய பாவநாட்டங்களுக்குப் பரிகாரம் செய்யும் பொருட்டு, அர்ச். சாமிநாதர், அந்நெருப்பில் நன்றாக தமது சரீரத்தை புரட்டி எடுத்தார். பிறகு, அவ்விரு பெரிய நெருப்புகளுக்கு நடுவே இருந்துகொண்டு, அர்ச். சாமிநாதர் அவளை நோக்கி இப்பொழுது இங்கு வா. உன் பாவத்திற்கு ஏற்ற இடம் இதுவே என்றார். கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த அப்பயங்கரமான நெருப்பைக்கண்டதும், திகிலும் வெட்கமுமடைந்த அந்த துஷ்ட பெண் மனந்திரும்பியவளாக, அங்கிருந்து அகன்று போனாள். நெருப்பினால் யாதொரு பாதிப்புமின்றி, சர்வேசுரனுடைய ஊழியரான அர்ச். சாமிநாதர் அங்கிருந்து வெளியேறி தமது மடத்துக்கு சென்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக