Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 28 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின்ஜீவிய சரித்திரம்:அத்தியாயம் - 11

வந்.டீகோ ஆண்டகையின் பிரிவு



இந்த சிறு கன்னியர்குழுவினருடன் மேலும் இரு உயர்குடி கத்தோலிக்கக் குடும்பஙகளிலிருந்து இருவர் சேர்ந்தனர். அவர்களில் ஒருவர் ஃபோஷோவின் கில்லமெட் என்ற பெண்மணியாவார். இவள் சிறிது காலம் கழித்து இக்கன்னியர் சபையில் சேர்ந்தபோதிலும் இவளுடைய அரிய நற்புண்ணிய ஜிவியத்தை முன்னிட்டும் கன்னியர்களை ஆண்டு நடத்தக்கூடிய திறமைகளை இவள் பெற்றிருந்ததாலும் இவளே 1225ம் ஆண்டு வரைக்கும் இம்மடத்தின் தாயாராக அர்ச்.சாமிநாதரால் நியமிக்கப்பட்டார். 1206ம் வருடம் டிசம்பர் மாதம் 27ம் நாளன்று புரொயிலில் புதிதாக கட்டப்பட்ட மடத்தில் கன்னியர் குடியேறினர். அக்கன்னியருக்கான துறவற உடை, வெள்ளை அங்கியும் பழுப்பு கலந்த மஞ்சள் நிற வெளி முக்காடும் உடையதாக விளங்கியது. அவர்கள் தினமும் சிறுபிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பதுடன் நூல் நூற்பதிலும் ஈடுபட்டிருந்தனர்.அர்ச்.சாமிநாதரே அக்கன்னியர் மடத்தின் தலைமை அதிபராக பொறுப்பேற்றிருந்தார். கன்னியருடைய மடத்தின் அடைப்பிற்கு வெளியே ஒரு வீட்டில் வசித்து வந்தார். அர்ச்.சாமிநாதர் தமது வேதபோதக அலுவல்களுக்கிடையே கன்னியர்களுடைய ஞான ஜீவியத்திற்கான தேவைகளையும் பராமரித்து வந்தார். 

பிற்காலத்தில் இந்தக் கன்னியர் மடம் உலகெங்குமிருந்த அர்ச். சாமிநாதருடைய கன்னியர் சபை மடங்கள் அனைத்திற்கும் தாய் மடமாக விளங்கியது. மற்ற எல்லா கன்னியர் மடங்களுக்கும் மேல்வரிச்சட்டமாக திகழ்ந்தது. அர்ச்சிஷ்டதனத்தில் சிறந்து விளங்கிய பல கன்னியர்கள் இங்கு வாழ்ந்தனர். போர்போன் அரண்மனையைச் சேர்ந்த பல அரசகுடும்பத்தின்
பெண்கள் இம்மடத்தின் தலைமை தாயாராக பொறுப்பேற்றிருந்தனர்.

புரொயிலில் அர்ச்.சாமிநாதர் கன்னியர்களுக்கான மடத்தை ஸ்தாபித்ததைக்
கண்டபிறகே வந்.டீகோ ஆண்டகை ஸ்பெயின் நாட்டில் தமது ஓஸ்மா மேற்றிராசனத்திற்கு திரும்பிச் சென்றார். அவர் அம்மேற்றிராசனத்தைவிட்டு இந்த பிரெஞ்சு பிராந்தியத்திற்கு வந்து 2 வருட காலமாயிருந்தது.அவருடைய வேதபோதகக் குழுவினர் தூலோஸ் நகரையடுத்தப் பகுதிகளில் தங்கள் வேதபோதக அலுவலில் அட்ட தரித்திர கோலத்தில் மிக வெற்றிகரமாக ஈடுபட்டிருந்தனர். வந்.டீகோ ஆண்டகையின் இந்தக் கடைசி அப்போஸ்தலர்கள்  இப்பகுதியில் அநேக வெற்றி வாகைகளைச் சூடினர். மோன்ட்ரியல் நகரில் மட்டும் சுமார் 500 ஆல்பிஜென்சிய பதிதர்கள் தங்களுடைய தப்பறைகளைத் துறந்து மனந்திரும்பி சத்திய வேதத்தில் உட்பட்டனர். 

அதே சமயம் பேமியர்ஸ் என்ற இடத்தில் கத்தோலிக்கர்களுடைய உயர் அதிகாரிகளுக்கும் பாப்பரசரின் தூதுக்குழுவினருக்கும் இடையே ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது கத்தோலிக்க அதிகாரிகள் வெளிப்படுத்திய அதிசயத்தக்க விரத்தையும் மகத்துவத்தையும் கண்ட பல முக்கிய ஆல்பிஜென்சிய தலைவர்கள் தங்களுடைய தப்பறைகளை மிகுந்த பிரமாணிக்கத்துடன் துறந்துவிட்டு, கத்தோலிக்க வேதவிசுவாசத்திற்கு தங்களை முற்றும் கையளித்தார்கள். வந்.டீகோ இந்தக் கூட்டத்திற்கு பிறகு, தனது சொந்த ஓஸ்மா மேற்றிராசனத்தை நோக்கி பயணமானார். ஏறக்குறைய 3 வருடங்களுக்குப் பிறகே அவர் தமது சொந்த மேற்றிராசனத்திற்கு திரும்பினார். ஆனால் அவர் ஆசித்தபடி மறுபடியும் அர்ச்.சாமிநாதரை அவரால் சந்திக்க முடியாமல் போயிற்று. ஏனெனில் அதற்குள் அவர் இறக்க நேரிட்டது. ஆனால் முத்.ஜோர்டான் குறிப்பிடுவது போல தவச்சபையின் ஸ்தாபகரான அர்ச்.சாமிநாதர் தமது அப்போஸ்தல ஜீவியத்தின் ஆரம்பகாலத்தில் மிகவும் முக்கியமான அர்ச்சிஷ்டவரான வந்.டீகோ ஆண்டகையுடன் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சத்திய வேத விசுவாச சத்தியத்தை ஆல்பிஜென்சிய பதிதர்களிடையே போதிக்கும்படியாக நித்திய ஜீவியத்திற்கு முன்குறிக்கப்பட்டவரான வந்.டீகோ ஆண்டகை மெய்யாகவே பரலோகத்தால் அனுப்பப்பட்டிருந்தார் என்று அப்பதிதர்களே ஒப்புக்கொள்ளும் வண்ணம் வந்.டீகோ மேற்றிராணியார் உன்னதமான அர்ச்சிஷ்ட ஜீவியம் ஜீவித்தார். (தொடரும்)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக