Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 14 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 30

 

ரெஜினால்டு சபையில் சேர விரும்புதல்


அர்ச்.சாமிநாதர், ரெஜினால்டுவிடம், “உங்களுடைய பிரச்னை உங்களுடைய வருங்கால ஜீவியத்தைப் பற்றியதா?” என்று வினவினார். 

“ஆம். சுவாமி” என்று அவர் பதில் கூறினார். 

மேலும் அர்ச்.சாமிநாதர், “அது என்ன பிரச்சனை என்று சரியாக நான் கூறட்டுமா? சர்வேசுரன் உங்களுக்கு நல்ல மனதையும், சுகத்தையும், நல்ல நண்பர்களையும் வெற்றிகளையும் கொடுத்திருக்கிறார். இவ்வளவு காலமாக நீங்கள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக மாணவர்களிடையே நல்ல கல்வியை போதிப்பதில் ஈடுபட்டிருக்கிறீர்கள். ஆனால் இதெல்லாம் உங்கள் இருதயத்தில் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கும் மேலான ஏதோ “அதிகப்படியான ஒன்றை” நீங்கள் ஆசிக்கிறிர்கள். உங்களுடைய நல்ல மனது, உங்களையும் உங்களுடைய எல்லா வெகுமதிகளையும் சர்வேசுரனுடைய ஊழியத்திற்காக உடனே அர்ப்பணிப்பது தான், “அந்த அதிகப்படியான ஒன்று” என்று உங்களுக்கு அறிவுறுத்துகின்றது” என்றார்.

அர்ச். சாமிநாதர் கூறிய இவ்வார்த்தைகள் அவ்விளைஞனின் இருதயத்தில் மாபெரும் பாதிப்பை

ஏற்படுத்தியது. ரெஜினால்டு கண்ணிர் விட்டு அழுதுகொண்டே “சுவாமி! நீங்கள் கூறுவது உண்மை தான். பல ஆண்டுகளாக நம் நேச ஆண்டவருக்காக உலகைத் துறப்பதற்கான தைரியத்தை மன்றாடி வருகிறேன். ஆனால், என் சுயாதீனத்தை மறுதலித்துவிட்டு, ஒரே இடத்தில் கட்டுண்டுவனாக, ஒரு துறவற அதிபருக்கு என்னை முற்றிலும் கிழ்ப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே, என்னை இது நாள் வரைக்கும் அச்சுறுத்தி வந்திருக்கிறது. மேலும் குருத்துவ அந்தஸ்திற்கான பொறுப்புகள் எவ்வளவு மகத்துவமிக்கவை. அந்த பரிசுத்த அழைத்தலில் நான் என் ஜீவிய காலமெல்லாம் நிலைத்திருப்பேனா? என்றெல்லாம் வீண் அச்சங்கள் என் மனதில் இருந்தன. ஆனால், சுவாமி! இப்பொழுது, சர்வேசுரனுடைய தேவ அனுக்கிரகத்தால், நானும் ஒரு நல்ல துறவியாக முடியும் என்று நம்புகிறேன். சிக்ஸ்துஸ் மடத்திற்கு என்னையும் அழைத்துச் செல்கிறிர்களா? உங்களுடைய போதக துறவிகளைப்போல சர்வேசுரனுக்கு என்னையே எவ்வாறு அர்ப்பணிப்பது என்று எனக்கும் காண்பிக்கறீர்களா?” என்றார்.

உடனே தம் கண்கள் மிளிர்ந்தவாறு, அர்ச்.சாமிநாதர்,“நிச்சயமாக, என் மகனே! இன்று நீ பெற்றுக்கொண்ட தேவவரப்ரசாதத்திற்காக சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக!” என்றார். 

பிறகு, அர்ச்.சாமிநாதர் அங்கிருந்து மறைந்ததும், பசாசின் சூழ்ச்சியால், ரெஜினால்டுவின் பழைய அச்சங்கள்

மீண்டும் அவருடைய மனதை ஆட்கொள்ளலாயின. இதுவரை பாரீஸில் தனது ஜீவியம் உத்தமமானதாகவே இருந்தது என்றும், 30 வயதான தனக்குரிய பழக்கவழக்கங்களை இனிமேல் மாற்றுவது மிகக் கடினமானதென்றும், ஒரு துறவற சபையில் உட்படாமலேயே மோட்சம் சேரமுடியும் என்றும் ரெஜினால்டு சிந்திக்கலானார். இதைப் பற்றி அறிந்ததும், அர்ச்.சாமிநாதர், இந்த ஞானபோராட்டத்தில் ரெஜினால்டு வெற்றியடையும்படியாக, தமது ஜெபதப பரிகாரங்களை இரட்டிப்பாக அதிகரித்தார். தமது சபையின் மற்ற துறவிகளையும், இந்த கருத்துக்காக அதிகம் ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார். 

அவர்களிடம்,“இந்த பிரெஞ்சு இளைஞர், மிக நல்லவர். நமது சபையில் உட்பட்டால் அநேக நற்செயல்களை புரிவார். குறிப்பாக இளைஞர்களை சர்வேசுரன்பால் கொண்டு வருவார். இந்த ஆத்துமத்தை நாம் இழந்து விடாதபடிக்கு தொடர்ந்து ஆண்டவரிடம் மன்றாடுவோம்” என்று கூறினார்.

ஒருநாள் சிக்ஸ்துஸ் மடத்திற்கு மருத்துவர் வரவழைக்கப்பட்டார். ரெஜினால்டு, காய்ச்சலினால் அவதிபட்டு மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். “இந்த இளைஞர் ஏதோ ஒன்றை நினைத்து மிகவும் கவலைக் கொண்டிருக்கிறார். அது அவருடைய மனதை மிகவும் பாதித்துள்ளது. ஒரு சமயம் அவர் தெளிவடைகின்றார். வேறொரு சமயம் குழப்பத்துக்கு ஆளாகிறார். ஆத்துமத்தையே இழந்துபோகும் அளவிற்கு தன்னை இட்டுச் சென்ற, தனது பாவங்களுக்காக, துக்கப்படும் அவர், பெறப்போகும் தேவவரப்ரசாதத்திற்கு தான் தகுதியற்றவன் என்று அடிக்கடி புலம்பிக் கொண்டிருக்கிறார்” என்று மருத்துவர் அர்ச்.சாமிநாதரிடம் கூறினார். 

.அதற்கு சாமிநாதர், “ஆனால் நிச்சயமாக அவர் இதிலிருந்து தேறிவிடுவாரா?” என்று வினவினார். 

அதற்கு மருத்துவர், “அது எனக்குத் தெரியாது. ஏனெனில், அவரை உபாதிக்கும் இந்த மன உளைச்சல், அவருடைய தேகபலம் முழுவதையும் தகர்த்துள்ளது. இது அவருக்கு நல்லதல்ல” என்று தயக்கத்துடன் கூறினார். துறவற வார்த்தைபாடுகள் கொடுக்குமுன்னரே, ரெஜினால்டு இறந்துவிடுவாரோ என்ற துயர நினைவால், சிக்ஸ்துஸ் துறவற மடம் முழுவதும் மூழ்கி இருந்தது. அப்பொழுது அர்ச்.சாமிநாதர், ரெஜினால்டுவின் படுக்கையண்டையில் வந்து, அவரிடம், “நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். நம் தேவமாதா, எல்லாவற்றையும் சரியாக மாற்றி, யாதொரு ஆபத்தும் ஏற்படாமல், இந்நோயினின்று உங்களைப் பாதுகாப்பார்கள் என்று நிச்சயமாக நம்புங்கள்” என்றார்.

அப்பொழுது, ரெஜினால்டு, அதை மறுப்பதுபோல, தன் தலையை வேகமாக அசைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக