Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 14 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 29



அர்ச். சாமிநாதர் ரெஜினால்டை சந்தித்தல் 



ரோமாபுரியில் மக்களிடையே ஞான ஜீவியம் மிண்டும் புதுப்பொலிவுடன் ஸ்திரமடைந்ததைக் குறித்து மகிழ்ந்த அர்ச்.சாமிநாதர், அம்மக்கள் உத்தம கத்தோலிக்க ஜீவியத்தில் நீடித்து நிலைத்திருப்பதற்காக ஜெபமாலை சபையை நிறுவினார். ஜெபமாலைசபையில் உட்படும் ஒவ்வொருவரும் தங்களுடைய ஜீவிய காலம் முழுவதும் தினமும் தங்களையே தேவமாதாவுக்கு அர்ப்பணித்து, அவர்களுக்குத் தோத்திரமாக 150 மணி அருள்மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்பதை ஜெபமாலை சபைவிதியாக ஏற்படுத்தினார். பக்தி மிகுந்த ஆண்களும் பெண்களும் உடனே அச்சபையில் சேர்ந்தனர். ஜெபமாலை சபை உறுப்பினர்கள் தங்களை அர்ச்சித்துக்கொள்வதுடன் ஆன்மஈடேற்ற அலுவலிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டதால், விரைவிலேயே ரோம் நகரம் முழுவதும் உத்தம கத்தோலிக்க விசுவாசிகள் நிறைந்த நகரமாக மிளிர்ந்தது.

ரோம் நகரத்தையடுத்திருந்த அர்ச்.சிக்ஸ்துஸ் தேவாலய வளாகத்தில் கட்டப்பட்ட தமது துறவிகளுக்கான மடத்திற்கு அர்ச்.சாமிநாதர் வந்த ஒரு மாதத்திற்குள்ளாக 40 இளைஞர்கள் மடத்திற்குள் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களுடன் வந்தனர். இதற்குள்ளாக, அர்ச்.சாமிநாதரைக் காண வரும் இளைஞர்கள் அனைவரும் தங்களுடைய குடும்பங்களையும் நண்பர்களையும் விட்டு விட்டு அவருடைய மடத்தில் சேர்ந்து, துறவிகளாகின்றனர் என்ற பேச்சு ரோம் நகரெங்கும் நிலவியது.

அர்ச்.சாமிநாதா; சிறுவயதுமுதற்கொண்டு தம்மையே ஆன்ம ஈடேற்றத்திற்காக சர்வேசுரனிடம் ஒப்புக் கொடுத்து ஜெபித்து வந்தார். இப்பொழுது, அவருடைய ஜெபத்திற்கு சர்வேசுரன் செவிசாய்த்தார். அது தான் இப்பொழுது அவர் இந்த இளைஞர்களிடையே அடையும் வெற்றிக்குக் காரணம். சாமிநாதர், “பரலோக பிதாவே! உமது அதிமிக தோத்திரத்திற்காக, என்னையும் எனது துறவற சபையின் சகோதரர்களையும் உமக்குகந்த கருவிகளாக பயன்படுத்தியருளும்” என்று அடிக்கடி வேண்டிக்கொள்வார். அதன் விளைவாக ஆண்டவர் அவருக்கு ஒரு நல்ல சீடரை அனுப்பினார். ஆர்லியன்ஸ் நகரத்தைச் சேர்ந்தவரும் பாரீஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ரெஜினால்டு என்பவர் ஆண்டவருடைய பரிசுத்த பூமிக்கு தவயாத்திரையாக மேற்கொண்ட பயணத்தின் நடுவே ரோம் நகருக்கும் வந்தார். 

உலக செல்வத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கியபோதும் ரெஜினால்டின் மனதில் அமைதியும் சமாதானமும் இல்லை. அர்ச்.சாமிநாதர் அவரை சந்தித்து சிக்ஸ்துஸ் தேவாலய வளாகத்தில் உள்ள தமது துறவிகளின் புதியமடத்திற்கு அழைத்துச் சென்றார். துறவற ஜீவியத்தைக் கண்ட ரெஜினால்டு, அர்ச்.சாமிநாதரிடம், “சுவாமி! உங்களுடைய துறவற ஜீவியம், என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதற்கு உங்களுக்கு, என் பாராட்டுகள். இங்கிருக்கும் உங்களைப் பின்பற்றி வந்திருக்கும் இளந்துறவிகளுடைய உயர்கல்விக்கான படிப்பு, அவர்கள் ஆற்றும் ஞான பிரசங்கங்கள், அவர்கள் பொது விசுவாசிகளிடையே ஆற்றும் ஆன்ம ஈடேற்ற அலுவல்கள் ஆகிய அனைத்தும் மிக அருமையானவையாக இருக்கின்றன” என்று கூறினார். 

அதற்கு சாமிநாதர்,“ நீங்களும் எங்களுடன் சேர விரும்புகிறிர்களா?” என்று கேட்டார். 

அதற்கு அவர், “சுவாமி! அது என்னால் முடியாது. ஏனெனில், இந்த ஜீவியத்தின் நல்ல காரியங்களை என்னால் இழக்க முடியாது” என்றார். 

அப்பொழுது, அர்ச்.சாமிநாதர், ரெஜினால்டை உற்றுப் பார்த்தார். ரெஜினால்டு 30 வயதுடைய ஒரு இளைஞர். வசிகர தோற்றமுடைய இவ்விளைஞர் உலகைச் சார்ந்தவராக, உலக கவர்ச்சிகளில் தமது மனதைப் பறிகொடுத்தவராக இருப்பதை அர்ச்.சாமிநாதர் உணர்ந்தார். அதே நேரத்தில், ரெஜினால்டு, நல்லதைப் பற்றிக்கொள்வதில் நேர்மையானவரும் தீவிரமுள்ளவருமானவர் என்பதையும் சாமிநாதர், கண்டறிந்தார். அவர் மேலும் அர்ச்.சாமிநாதரிடம்,“சுவாமி! எனது பாலஸ்தீன தவயாத்திரையால் ஏற்கனவே என் பல்கலைக்கழக அலுவல் பல மாதங்களாக தாமதமடைந்துள்ளது” என்றார். 

அதற்கு அர்ச்.சாமிநாதர்,அவரிடம், “எதற்காக நீங்கள் நம் ஆண்டவருடைய பரிசுத்தபூமிக்கு செல்கிறீர்கள்?” என்று வினவினார். 

“சுவாமி! எனக்கிருக்கும் ஒரு பிரச்னையைத் திர்ப்பதற்காக நமதாண்டவருடைய கல்லறைக்கு செல்கிறேன்” என்றார் ரெஜினால்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக