Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 21 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 33



சிறுவன் உயிர் பெறுதல் 


அர்ச்.சாமிநாதருடைய ஞானதியானப் பிரசங்கங்களை யெல்லாம் தவறாமல் கேட்டு அதன்பிரகாரம் உத்தம கிறிஸ்துவ ஜீவியம் நடத்தி வந்தவள், குடதோனா என்ற பெண்மணி. இவள் ரோம் நகரைச் சேர்ந்தவள். இவள் ஒருநாள் அர்ச்.மார்க் தேவாலயத்தில் நடைபெற்ற அர்ச்சிஷ்டவருடைய தியானப் பிரசங்கத்தை வழக்கம்போல் கேட்டு விட்டு தன் விட்டுக்குத் திரும்பினாள். அங்கு தன் மகன் இறந்திருப்பதைக் கண்டாள். மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தாள். அதிர்ச்சியிலிருந்து மீண்டதும் இறந்து போயிருந்த தன் மகனை அர்ச்.சிக்ஸ்துஸ் மடத்திற்கு எடுத்துச் சென்றாள். அவள் மடத்துத் தலைவரான அர்ச்.சாமிநாதரிடம் தன் மகனுக்கு உயிரளிக்கும்படி மன்றாடினாள். அவள் மேல் இரங்கியவராக, அர்ச்.சாமிநாதர், பரலோகத்தை நோக்கி தன் கண்களை உயர்த்தி சிறிது நேரம் ஆழ்ந்த ஜெபத்தில் ஈடுபட்டார். பிறகு, இறந்த சிறுவன் மேல் சிலுவை அடையாளத்தை வரைந்து அவனை ஆசீர்வதித்தார். பிறகு, சிறுவனின் கரத்தைப் பிடித்துத் தூக்கி விட்டார். அவனும் புதுமையாக உயிர்பெற்று, உடனே எழுந்து நின்றான். 
இந்நிகழ்வைப் பற்றி சாமிநாதருடைய இளந்துறவற சிடர்கள் பின்வருமாறு உரையாடினர்: சகோ.டான்கிரட் அப்புதுமையைப் பற்றி, “அவர் அவன் மேல் சிலுவை அடையாளத்தால் ஆசீர்வதித்து, அவனை கையைப் பிடித்து எழுப்பினார். உடனே சிறுவனும் எழுந்தான். அவன் புதுமையாக உயிர்பெற்று தன் தாயுடன் பேசுவதைக் காண்பது எவ்வளவு நன்றாக இருந்தது!” என்று கூறுகின்றார். 

சகோ.பிலிப், “நமது அதிபர் சுவாமியார் இப்புதுமையைச் செய்வதற்கு முன்பாக நீண்ட நேரம் ஜெபத்தில் ஈடுபட்டிருந்தாரா?” என்று வினவினார். 

அதற்கு, சகோ.டான்கிரட், “இல்லை. ஒரு சிறு ஜெபம் மட்டுமே மௌனமாக ஜெபித்து விட்டு உடனேயே அவர் சிலுவை அடையாளத்தினால் அப்பையனை ஆசீர்வதித்தார். இந்த புதுமையை நிகழ்த்தினார். “ஆனால், அந்த ஜெபத்தை ஜெபிக்கும்போதும், அச்சிறுவனை சிலுவை அடையாளத்தால் ஆசிர்வதிக்கும் போதும், மிக நிதானமாகவும், புன்முறுவலுடனும் மகிழ்ச்சி மிக்க இனிய முகத்துடனும் நமது அதிபர் சுவாமியார் பக்திபற்றுதலுடன் காணப்பட்டார். ஏற்கனவே புதுமை நிகழும் என்று முற்றிலும் அறிந்தவராகவே தோன்றினார்” என்று சகோ.கிரகோரி குறிப்பிட்டார். 

“அவர் சிலுவை அடையாளமிட்டு ஜெபிப்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். இதுவரை வேறு யாரிடமும் நான் பார்த்திராத அளவிற்கு, மிகுந்த பக்தி பற்றுதலுடனும் வணக்கத்துடனும் அவர் அவ்வாறு அர்ச்.தமதிரித்துவ தோத்திர ஜெபமான, அர்ச்சிஷ்ட சிலுவை மந்திரத்தை ஜெபிப்பதை பார்த்ததினாலேயே, நான் அவர்பால் ஈர்க்கப்பட்டு அவருடைய சபைக்குள் நுழைந்தேன்” என்று சகோ.பிலிப் கூறினார்.
 
பிறகு அங்கிருந்த சகோ.சிக்ஸ்துஸ், சகோ.பிலிப் மற்றும் சகோ.டான்கிரட் போன்ற இளந்துறவிகள், தங்களுடைய சபை அதிபர் சுவாமியார், ஒரு நாளைக்கு பல முறை அர்ச்.தமதிரித்துவத்தை ஸ்தோத்தரித்து சர்வேசுரனுக்கு ஏற்றபிரகாரம் நேர்த்தியான விதத்தில் சிலுவை அடையாளத்தை வரைந்து ஜெபிக்கிறார் என்றும் அதனால் ஏராளமான தேவவரப்ரசாதங்களை அடைகின்றார் என்றும் உணர்ந்தனர். உடனே, தங்களுக்கும் தங்களுடைய சபைக்கும் தேவையான தேவ வரப்ரசாதங்களை அடைந்துகொள்ளும்படிக்கு, இதுவரைக்கும் தங்கள் இளமைப்பருவ முதற்கொண்டு சொல்லிவரும் அர்ச்சிஷ்ட சிலுவை மந்திரத்தை இனி தாங்களும் அதிக பக்தி பற்றுதலுடனும் கவனத்துடனும் ஜெபிப்பதாக உறுதி பூண்டனர். மேலும் அவர்கள், “நாம் போதிக்க செல்லுமிடங்களிலெல்லாம் அர்ச்சிஷ்ட சிலுவை மந்திரத்தின் மாண்பைப் பற்றி அனைவருக்கும் பிரசங்கிக்க வேண்டும். இந்த மந்திரத்தை வயதானவர்களும், வியாதியஸ்தரும், குழந்தைகளும் என்று எல்லா தரப்பு மக்களும் யாதொரு கஷ்டமுமின்றி எப்பொழுதும் எங்கும் ஜெபிக்கலாம். அப்பொழுது அவர்கள் மோட்சத்திலிருந்து விசேஷ தேவவரப்ரசாதங்களைப் பெற்றுக் கொள்வார்கள். அஞ்ஞானம், பதிதம், உலகாயுதத் தப்பறைகள் என்று எதுவும் அவர்களை சர்வேசுரனிடமிருந்தும் தேவமாதாவிடமிருந்தும் பிரிக்காது. மக்கள் அனைவரும் உத்தம கத்தோலிக்க விசுவாசிகளாக மாறுவர். ஒரு சிறு ஜெபம், நன்றாக சொல்லப்படுமேயானால், எத்தகைய உன்னதமான கத்தோலிக்க சமுதாயத்தை உருவாக்கக் கூடிய வல்லமையுடன் திகழ்கிறது என்பதைப் பாருங்கள். இதுபோல ஏராளமான ஞானப்பலனுள்ள ஜெபங்களை நமது திருச்சபை வழியாக நமது நேச ஆண்டவர், நமக்கு வழங்கியிருக்கிறார்.இதுதான் நமது கத்தோலிக்க வேதத்தின் மகிமை”என்று தங்களுககுள் பேசிக் கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக