அர்ச். மார்டின் தே போரஸ்
பெரு நாட்டின் தலைநகரமான லீமாவில் 1579ம் ஆண்டு டிசம்பர் 9ம் நாள் பிறந்தார். இவருடைய தந்தை ஜான் தே போரஸ், ஸ்பெயின் நாட்டின் அரச அலுவலர். இவருடைய தாய், அன்னா வெலாஸ்குவஸ், நிக்ரோ இனத்தை சேர்ந்தவர். தன் தாயைப் போலவே கறுப்பாக இருந்ததால், குழந்தைப் பருவத்தில் இவர் தன் தந்தை உட்பட அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டார். குழந்தைப் பருவத்திற்கு தேவையான யாதொரு பராமரிப்பு போஷாக்கும் கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். சிறுவயதில் ஒரு நல்ல இருதயம் கொண்ட மருத்துவர் இவருக்கு பலவித நோய்களைக் குணமாக்கும் மருத்துவ முறையைக் கற்றுக் கொடுத்தார்.
மிகச் சிறு வயதிலேயே இவர் தன் தாயிடமிருந்து நன்றாக பக்தியுடன் ஜெபிக்கக் கற்றுக் கொண்டார். சிறு வயது முதல் மார்டின் ஆண்டவருடைய பாடுகளின் மேல் மிகுந்த பக்தி கொண்டு விளங்கினார். நேச ஆண்டவருடைய திவ்ய இரட்சணியத்தால் மனுக்குலம் முழுவதும் அடைந்த அளவற்ற தேவ ஆசீர்வாதங்களுக்குக் கைம்மாறாக எவ்வாறு நன்றி செலுத்துவது என்று தனக்குத் தெரிவிக்கும்படியாக, இவர் தன் வாழ்நாள் முழுவதும் திவ்ய இரட்சகரிடம் மன்றாடி வந்தார். லிமா நகரில் இருந்த அர்ச்.சாமிநாதரின் “Holy Rosary” துறவறமடத்தில் ஒரு தாழ்நிலை வேலைக்காரராக சேர்வதற்காக விண்ணப்பித்தார்.
அம்மடத்துத் தலைவரும் இவரை தன் மடத்தில் சேர்;த்துக் கொண்டார். கழிவறை உட்பட அந்த மடத்தை முழுவதும் சுத்தம் செய்வது, நோயுற்றிருக்கும் துறவிகளுக்கு பணிவிடை செய்தல் மற்றும் துணிகளை சலவை செய்தல் போன்ற பல கடைநிலை அலுவல்களை, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக, சர்வேசுரனுக்காகவே செய்வதுபோல மிகுந்த மகிழ்வுடன் செய்து வந்தார். எப்பொழுதும் துடைப்பத்தை இவருடைய கையில் காணலாம். பல ஆண்டுகாலம் இவ்வாறு மடத்தில் ஊழியம் செய்து வந்த மார்டின், இறுதியில் அம்மடத்துத் துறவற அதிகாரிகளுடைய ஆணைக்குக் கிழப்படிந்து அர்ச்.சாமிநாதர் சபையின் துறவற சகோதரராக வார்த்தைப்பாடு கொடுத்து சபையின் அங்கியை அணிந்து கொண்டார். அர்ச்.மார்டின் இந்த துறவற அந்தஸ்தை தன் தகுதிக்கு மேலாக கிடைத்த மாபெரும் பேறு என்று எண்ணி அதற்காக சர்வேசுரனுக்கு இடைவிடாமல் நன்றி செலுத்திவந்தார். தன் பக்தி நிறைந்த ஜெபங்களின் உதவியாலும் தன் திறமையாலும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதிலும் திராத நோய்களை குணமாக்குவதிலும் கைதேர்ந்து விளங்கினார். அதனால் இவருடைய புகழ், பெரு நாட்டைக் கடந்து வெளி நாடுகளிலும் பரவியது. ஒரு குருவானவருடைய புரையோடிய புண்ணினால் பழுதடைந்திருந்த ஒரு காலை புதுமையாக குணப்படுத்தினார். ஒரு குருமாணவனின் துண்டிக்கப்பட்ட கைவிரலைக் குணப்படுத்தி குருத்துவத்திற்கு தகுதியுடைவராக்கினார். மேலும் அனேக ஏழை எளிய நோயாளிகளுடைய குணமாக்கமுடியாத வியாதிகளையும் அர்ச்.மார்டின், அற்புதமாக தன் ஜெபத்தினாலும் மருத்துவத்தினாலும் குணமாக்கினார்.
ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருக்கும் குணாதிசயத்தை, அர்ச்.பதுவை அந்தோணியாரைப் போன்ற அர்ச்சிஷ்டவர்கள் பெற்றிருந்த அரிய வரத்தை, அர்ச்.மார்டின் தே போரஸ் புதுமையாகப் பெற்றிருந்தார். இவரை மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு மக்களும் பார்த்துள்ளனர். ஆனால் அர்ச்.மார்டின் ஒருபோதும் லிமாவிலுள்ள தன் மடத்தை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. கதவு திறக்கப்படாமலே அறைகளுக்குள் புதுமையாக செல்வதும் அங்கிருக்கும் ஒவ்வொரு நோயாளிக்கும் தேவையான மருந்துகளையும் உணவுகளையும் ஆறுதலையும் கொடுப்பதும் அர்ச்.மார்டினுக்கு வழக்கமாயிருந்தது. நோயால் வாடிய மாடு, நாய் போன்ற விலங்குகளும் அர்ச்சிஷ்டவரைத் தேடி வந்தன. அவரும் அவைகளை நோயினின்று காப்பாற்றினார். அர்ச்.மரியம்மாளும் அர்ச்.மார்த்தம்மாளும் இந்த அர்ச்சிஷ்டவரிடத்தில் ஒருங்கே காணப்படுகிறார்கள். அதாவது நல்ல பாகத்தைத் தேர்ந்தெடுத்த அர்ச்.மரிய மதலேனம்மாளைப் போல ஆண்டவருடைய ஞானமொழிகளைக் கேட்டு தியானித்து ஜெபத்தில் ஈடுபடுவதிலும் தொடர்ந்து நிலைத்திருந்தார். அதே நேரத்தில் அர்ச்.மார்த்தம்மாளைப் போல இவருக்குக் கொடுக்கப்பட்ட துப்புரவு வேலை மற்றும் நோயாளிகளைக் கவனிப்பது போன்ற புறஅலுவல்களிலும் நுட்பமான விதத்தில் ஈடுபட்டார். இவருடைய ஒரு கரம் துடைப்பத்தைப் பிடித்து துப்புரவு செய்து கொண்டிருந்தாலும் மற்றொரு கரத்தால் தனது சட்டைப்பைக்குள் இருந்த ஜெபமாலை மணிகளைப் பிடித்தபடி, அவருடைய இருதயம் மிகவும் பரிசுத்த தேவமாதாவின் மகிமைகளை தியானித்தபடி, எப்பொழுதும் ஜெபமாலை ஜெபித்தபடி இருக்கும். அல்லது மனவல்லிய ஜெபங்களை ஜெபித்தபடி இருப்பார். இவ்வாறாக அர்ச்சிஷ்டவர், ஒரு இமைப்பொழுதையும் விணடிக்காமல், எப்பொழுதும் சர்வேசுரனுடன் ஐக்கியமானவராக, பரலோக வாசத்தில் சஞ்சாரம் செய்தார்.
பகல் நேரம் முழுவதும் எல்லா வேலைகளிலும் ஈடுபட்டிருந்தாலும் இரவு நேரம் முழுவதும் பிணியாளிகளைக் கவனிப்பதில் ஈடுபட்டிருப்பார். இடையில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் தன் அறையிலேயே மேல் கூரையில் புதுமையாக அந்தரத்தில் இருப்பார்0 பாடுபட்ட சுருபத்தை மிகுந்த பக்தி பற்றுதலுடன் பார்த்துக் கொண்டே ஆழ்ந்த ஜெபதியானத்தில் மூழ்கியிருப்பார். அம்மடத்துக் குருமாணவர்கள் தங்களுடைய வேத இயல் மற்றும் தத்துவ இயல் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கான விளக்கங்களை அர்ச்சிஷ்டவரிடம் கேட்டுத் தெளிவடைவர். அவரும் தன் துப்புரவு வேலையை செய்துகொண்டே, மிகுந்த ஞானத்துடன் மிக எளிய முறையில் அவர்களுக்கு அவற்றை விளக்குவார். இவ்வாறாக அர்ச்.மார்டின் தே போரஸிடம் தேவசிநேகம், தாழ்ச்சி, கீழ்ப்படிதல் போன்ற கிறிஸ்துவ புண்ணியங்கள் அசாதாரண முறையில் விளங்கின. ஒரு சமயம் மடத்தில் எலிகளால் மிகுந்த தொல்லை ஏற்பட்டது. உடனே மடத்தின் அதிபர் அர்ச்.மார்டினிடம் எலிகளை விஷம் வைத்துக் கொல்லும்படி கூறினார். மார்டினும் உடனே அதிபருக்குக் கீழ்ப்படிந்து தோட்டத்திற்குச் சென்றார்.
எலிகளை தம்மிடம் வரும்படி கூப்பிட்டார். எலிகளும் அவரருகில் வந்தன. அவர், “நீங்கள் மடத்தின் துணிகளையும் உணவுப் பொருட்களையும் நாசப்படுத்தி ஏன் மடத்திற்கு கஷ்டத்தைக் கொடுக்கிறீர்கள்? இதோ அதிபர் சுவாமியார் உங்களைக் கொல்லச் சொன்னதால் இந்த விஷத்தை உங்களுக்காக இங்கு வைக்கிறேன். அதிபரை இனிமேல் இவ்வாறு நிங்கள் கோபப்படுத்தாமல் இருந்தீர்களேயானால் நான் உங்களுக்கு நிச்சயமாக இதே இடத்தில் தினமும் உணவளிப்பேன்” என்று எலிகளிடம் கூறினார். அந்த எலிகளும் அர்ச்.மார்டின் கூறிய அனைத்தையும் ஆமோதிப்பது போல் அசைவற்று நின்றன. பிறகு அவற்றை அங்கிருந்து செல்லும்படி அனுப்பி விட்டார். அவரும் வாக்களித்தபடி தன் ஜீவியகாலம் முழுவதும் எலிகளுக்குத் தேவையான உணவை தோட்டத்தில் வைத்து வந்தார். அந்நாள் முதல் கொண்டு இந்நாள்வரைக்கும் “Holy Rosary” மடத்திற்கு எலிகளால் யாதொரு தொந்தரவும் ஏற்படவில்லை. வேறொரு சமயம் நவசந்நியாசிகள் சிலருடன் அர்ச்.மார்டின் வெளியே ஓரிடத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வரும்போது மிகவும் பிந்திவிட்டது. மாலை ஆராதனை(Vespers) நேரத்திற்குள் மடத்திற்கு திரும்ப வேண்டும் என்பது மடத்தின் ஒழுங்கு. இவர்கள் இருந்த இடம் மடத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்தது. ஜெபத்திற்கு நிச்சயமாக தாமதமாகிவிடும் என்று உணர்ந்த அர்ச்சிஷ்டவர் நவசந்நியாசிகள் அனைவரையும் ஒருவர் ஒருவரைப் பிடித்துக் கொண்டு தன்னுடன் சேர்ந்து நிற்கச் சொன்னார். பிறகு கண்மூடி திறப்பதற்குள் அனைவரும் மடத்தின் வளாகத்திற்குள் புதுமையாக வந்து சேர்ந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
1639ம் ஆண்டு தமது 60வது வயதில் பாக்கியமாக மரித்தபோது பெரு நாடே துக்கத்தில் ஆழ்ந்தது. பெரு நாட்டின் உயர் அதிகாரிகளும் திருச்சபை அதிகாரிகளும் அர்ச்சிஷ்டவருடைய சடலத்தை மிகுந்த பக்தி வணக்கத்துடன் அடக்கம் செய்தனர். 1962ம் ஆண்டு மே 5ம் நாளன்று இவர், 23ம் அருளப்பர் பாப்பரசரால் அர்ச்சிஷ்டவராக பீடத்திற்கு உயர்த்தப்பட்டார்.
அர்ச்.மார்டின் தே போரஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக