Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

saints of the day லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
saints of the day லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஆகஸ்ட், 2024

August 28, St. Agustine, அர்ச்‌. அகுஸ்தீனார்


 

ஆகஸ்டு 2️8️ம்‌ தேதி

திருச்சபையின்‌ தலைசிறந்த வேதபாரகரும்‌
தந்தையுமான ஹிப்போ நகரின்‌
அர்ச்‌. அகுஸ்தீனார்திருநாள்

 

இவர்‌, 354ம்‌ வருடம்‌,நவம்பர்‌ 13ம்‌ தேதியன்று உரோமையின்‌ ஆப்ரிக்கப்‌ பிராந்தியத்தைச்‌ சேர்ந்த டகாஸ்டே (தற்போதைய அல்ஜீரியாவிலுள்ள சூக்‌ ஆஹ்ராஸ்‌)வில்‌ பிறந்தார்‌. அர்ச்‌.மோனிக்கம்மாள்‌, இவருடைய தாயார்‌. ஆனால்‌, இவருடைய தந்தையார்‌, ஒரு அஞ்ஞானியாக இருந்தார்‌; அர்ச்‌.மோனிக்கம்மாளின்‌ இடைவிடா ஜெபத்தின்‌ பலனாக, மரணப்படுக்கையிலிருந்தபோது, இவருடைய தந்தை, கத்தோலிக்கராக மனந்திரும்பி பாக்கியமாய்‌ மரித்தார்‌. கத்தோலிக்க வேத விசுவாசத்தில்‌ வளர்க்கப்பட்டபோதிலும்‌, முதல்‌ சில நூற்றாண்டுகளில்‌, வாலிப வயதை அடைந்ததும்‌ ஞானஸ்நானம்‌ பெற்றுக் கொள்ளும்‌ வழக்கம்‌ திருச்சபையில்‌ அனுசரிக்கப்பட்‌டதால்‌, அகுஸ்தீனார்‌, சிறு வயதில்‌,ஞானஸ்நானம்‌ பெற்றுக்கொள்ளவில்லை.

அர்ச்‌. மோனிக்கம்மாளுடைய பிரபல்யமான குமாரனும்‌, உயரிய இலட்சியங்களையும்‌,பிரகாசமுள்ள திறமைகளையும்‌, அதே சமயம்‌, மூர்க்கமான ஆசாபாச உணர்‌வுகளையுமுடைய பள்ளிக்கூட மாணவனாயிருந்தவருமான அர்ச்‌.அகுஸ்தீனார்‌, அநேக வருடங்கள்‌, தீமைகளும்‌, போலியான பதித நம்பிக்கைகளும்‌ நிறைந்த ஜீவியம்‌ ஜீவித்து வந்தார்‌. இதுவரை ஜீவித்த மனிதர்களிலேயே மாபெரும்‌ அறிவுத்திறனும்‌, ஞானமும்‌ உடையவராயிருந்த மனிதர்களில்‌ ஒருவராகத் திகழ்ந்த  போதிலும்‌, அசுத்த பாவங்களும்‌, ஆங்காரமும்‌, அகுஸ்தினாரின்‌ மனதை, எவ்வளவுக்கு அதிகமாக இருளடையச்‌ செய்ததென்றால்‌, சத்திய வேதத்தினுடைய நித்திய சக்தியங்களை இவரால்‌ பார்க்கக்‌ கூடாமல்‌, அல்லது புரிந்துகொள்ளக்‌ கூடாமற்போயிற்று!  இருப்பினும்‌, இவர்‌ இலத்தீன்‌ மொழியில்‌, எவ்வளவு உயரிய  தேர்ச்சியை அடைந்தாரென்றால்‌, வாய்ச்சாலகமாக அம்மொழியைப்‌ பேசுவதிலும்‌, தனது கருத்தைத்‌ தெளிவு படுத்துவதற்காக புத்திசாலித்‌தனமாக வாதிடுவதிலும்‌ நிபுணத்துவம்‌ பெற்றிருந்தார்‌.

தத்துவ இயலில்‌ தொடர்ந்து உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்தார்‌; இலக்கியத்தையும்‌, இலக்கணத்தையும்‌ , தனது சொந்த ஊரான டகாஸ்டேயிலும்‌, கார்த்தேஜிலும்‌ 9 வருட காலமாகக்‌ கற்றுக்கொடுத்து வந்தார்‌. இவருடைய வயதின்‌ கடைசி இருபதுகளில்‌, ஆப்ரிக்காவை விட்டு, உரோமாபுரியில்‌, வேலை தேட ஆரம்பித்தார்‌. இதே சமயம்‌, இவருடைய கத்தோலிக்க தாயாரான அர்ச்‌. மோனிக்கம்மாள்‌, இவருடைய மனந்திரும்புதலுக்காக இடைவிடாமல்‌ ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்‌; இவரைப்‌ பின்தொடர்ந்து உரோமாபுரிக்கும்‌ சென்றார்கள்‌. உரோமாபுரியில்‌ அகுஸ்தினார்‌ வளமையடைந்தார்‌; அணியிலக்கணத்தின்‌ துறையினுடைய தலைமை பேராசிரியராக நியமிக்கப்பட்டார்‌. மிலான்‌ நகர மேற்றிராணியாரான அர்ச்‌. அம்புரோசியாரை, அகுஸ்தீனார்‌ சந்தித்தார்‌; இவர்‌ கேட்ட அத்தனை கேள்விகளுக்கும்‌, திருச்சபையின்‌ ஞானமுள்ள பதில்களை, அர்ச்‌. அம்புரோசியார்‌ அளித்தார்‌. அப்போது தான்‌,கிறீஸ்துவ வேதம்‌,தத்துவ இயல்‌ வல்லுனர்களுக்கு ஏற்ற வேதம்‌, என்பதை அகுஸ்தீனார்‌ கண்டறிந்தார்‌.

ஆனால்‌, இவர்‌ தனது துர்ப்‌ பழக்கங்களின்‌ சங்கிலிகளை உடைத்தெறியக்கூடாமலிருந்தார்‌; அதற்‌கான தீர்மானத்தை எடுக்கக் கூடாமலிருந்தார்‌. உடனடியாக, அகுஸ்தீனாரால்‌ கிறீஸ்துவராக மாறக்‌ கூடாமலிருந்தது. பரிசுத்த ஜீவியத்தை, ஒரு அர்ச்சிஷ்டவருடைய ஜீவியத்தைத் தன்னால்‌ ஒருபோதும்‌ ஜீவிக்க முடியாது, என்று , இவர்‌, நினைத்திருந்தார்‌. இருப்பினும்‌ ஒருநாள்‌, அர்ச்‌. வனத்து அந்தோணியாரின்‌ ஜீவிய சரித்திரத்தை வாசித்ததால்‌, இரு மனிதர்கள்‌ கத்தோலிக்கர்களாக மாறினர்‌, என்பதைக்‌ கேள்விப்‌பட்டதும்‌, இவர்‌ தன்னைப்பற்றி, மாபெரும் விதமாக வெட்கமடைந்தார்‌; இவர்‌ தன்‌ நண்பரான அலிபியுஸ்‌ என்பவரிடம்‌, “நாம்‌ என்ன செய்து கொண்டிருக்கிறோம்‌? கல்வியறிவில்லாக மனிதர்கள்‌, வலுவந்தமாக பரலோகத்தைக்‌ கைப்பற்றிக்‌ கொள்கின்றனர்‌! அதே சமயம்‌, எல்லாவிதமான அறிவையும்‌ கொண்டிருக்கிற நாம்‌, நம்‌ பாவங்கள்‌ என்கிற சேற்றிலே உருண்டுகொண்டிருக்கும்‌ அளவிற்கு மாபெரும்‌ கோழைகளாக இருக்கிறோம்‌!” என்று கூறினார்‌.

அகுஸ்தீனார்‌, பின்னர்‌, பரிசுத்த வேதாகமத்தை எடுத்து, அர்ச்‌. சின்னப்பரின்‌ நிரூபங்களை ஒரு புதிய ஒளியில்‌ வாசித்தார்‌; ஒரு நீண்‌டதும்‌ கொடூரமானதுமான முரண்பாடு இவருடைய இருதயத்தில்‌ இதைப்‌ பின்தொடர்ந்து வந்தது! ஆனால்‌, தேவ வரப்பிரசாதத்தின்‌ உதவியால்‌, உள்ளரங்க போராட்டத்தை, இவர்‌ வெற்றிகொண்டார்‌. அர்ச்‌. மோனிக்கம்மாளின்‌ இடைவிடா ஜெபங்களாலும்‌, அர்ச்‌. அம்புரோசியாரின்‌ ஆச்சரியமிக்க பிரசங்கங்களாலும்‌, கத்தோலிக்க வேதம்‌ மட்டுமே உண்மையான வேதம்‌ என்பதைத் தெளிந்தமனதுடன்‌, 386ம்‌ வருடம்‌, அகுஸ்தீனார்‌, கண்டறிந்தார்‌; 387ம்‌ வருடம்‌ ஈஸ்டர்‌ திருநாளன்று, அர்ச்‌. அம்புரோசியார்‌, அர்ச்‌. அகுஸ்தீனாருக்கு, ஞானஸ்நானம்‌ அளித்தார்‌.  இவர்‌ ஆப்ரிக்காவிற்கு சென்று, தனது உடைமைகளையெல்லாம்‌ ஏழைகளுக்கு அளித்தார்‌; வட ஆப்ரிக்காவிலுள்ள ஹிப்போ நகருக்கு குடியேறினார்‌; அங்கே,395ம்‌ வருடம்‌, மேற்றிராணியாராக அபிஷேகம்‌ செய்யப்பட்டார்‌. அடுத்த 35 வருட காலத்தில்‌, இவர்‌ அயராமல்‌ திருச்சபைக்காக உழைத்தார்‌;

 வடஆப்ரிக்கா, திருச்சபையின்‌ மையமாக உருமாறியது! இவருடைய ஞான ஜீவியம்‌ உத்தமமான விதமாக பிரகாசித்தது! அச்‌சமயத்தில், இவர், ‌ திருச்சபையில்‌ நிலவிய சகல பதிதத்‌ தப்பறைகளையும்‌, எதிர்ப்பதிலும்‌, தன்னிகறற்ற தர்க்கவாதத் திறமையால்‌, பதிதத்தப்பறைகளை அழித்தொழிப்பதிலும்‌, முன்னோடியான ஞானமும்‌ வலிமையுமிக்க வேகபாரகராகத்‌ திகழ்ந்தார்‌; அநேகக்‌ காண்டங்களையுடைய இவருடைய எழுத்துக்களும்‌, நூல்களும்‌, உலகெங்கிலும்‌ ஏற்கப்பட்டு, கிறீஸ்துவ ஞான ஜீவிய முறைகளுடையவும்‌, வேத இயல்‌ ஊகங்களுடையவும்‌ முக்கிய ஆதாரமாகப்‌ பயன்படுத்துப்படுகின்றன!

அர்ச்‌.அகுஸ்தீனார்‌ காய்ச்சலினால்‌, 430ம்‌ வருடம்‌, ஆகஸ்டு 28ம்‌ தேதியன்று, 76வது வயதில்‌, மரித்தார்‌. இந்நேரத்தில்‌, ஹிப்போ நகரத்தை நாசகாரர்கள்‌ முற்றுகையிட்டிருந்தனர்‌. 8ம்‌ நூற்றாண்டில்‌, ஹிப்போ நகரில்‌ ஸ்தாபிக்கப்பட்டிருந்த அர்ச்.அகுஸ்தீனாருடைய பரிசுத்த அருளிக்கங்களை, லொம்பார்டு நாட்டின்‌ அரசரான லுட்பிராண்டு என்பவர்‌, இத்தாலியாவிலுள்ள பாவியாவில்‌ ஸ்தாபித்தார்‌; அதற்காக பெருந்தொகையை, அவர்‌ மகமதியருக்கு அளிக்க வேண்டியிருந்தது!                                 

அர்ச்‌.அகுஸ்தீனாரின்‌ பிரபல்யமான காட்சி

St. Agustine and the Child (Angel)


ஒரு சமயம்‌, அர்ச்‌.அகுஸ்தினார்‌, கடற்கரையோரத்தில்‌, மகா பரிசுத்த தமதிரித்துவத்தினுடைய பரம இரகசியத்தைப்‌ பற்றி தியானித்தபடி நடந்துசென்று கொண்டிருந்த போது,கடற்கரையில்‌ ஒருசிறு குழந்தை ‌ விளையாடிக்கொண்டிருப்பதைக்‌ கவனித்தார்‌: அது தன்‌ கையிலிருந்த ஒரு சிறு ஓட்டிற்குள்‌ கடற்தண்ணீரை அள்ளி வந்து அருகிலுள்ள ஒரு குழிக்குள்‌ ஊற்றிக்கொண்டிருந்தது; இதைத்‌ தொடர்ந்து செய்தபடி இருந்தது.அந்த குழந்தையிடம்‌, அர்ச்சிஷ்டவர்‌, “நீ என்ன செய்கிறாய்‌?” என்று கேட்டார்‌; அதற்கு அந்த குழந்தை, “கடலிலுள்ள எல்லா தண்ணீரையும்‌ இந்த குழிக்குள்‌ விட்டு, கடலைக்‌ கட்டாந்தரையாக்கப்‌ போகிறேன்‌!” என்று கூறியது. உடனே, அக்குழந்தையிடம்‌, அர்ச்சிஷ்டவர்‌, “குழந்தையே! உன்‌ ஜீவியகாலமெல்லாம்‌ இந்த வேலையில்‌ நீ ஈடுபட்டாலும்‌, உன்னால்‌, இதை முழுவதுமாக முடிக்கமுடியாது!” என்று கூறினார்‌; அதற்கு, அந்த குழந்தை, “இருப்பினும்‌, நீங்கள்‌ உங்களுடைய மனதில்‌ தியானிக்கிற அந்த மகா பரம இரகசியத்தைப்‌ பற்றி நீங்கள்‌ புரிந்துகொள்வதற்கு முன்பாக , நான்‌ இதை செய்து முடிப்பேன்‌!” என்று கூறிய பிறகு, அங்கிருந்து மறைந்துபோனது. உடனே, அர்ச்‌. அகுஸ்தீனார்‌, மகா பரிசுத்த தமதிரித்துவத்தின்‌ பரம இரகசியத்தைப்‌ பற்றிப்புரிந்துகொள்வதற்கு, தான்‌ எடுத்து வந்த பயனற்ற முயற்சிகள்‌ பற்றி, தனக்கு அறிவுறுத்தும்படியாகவே, ஒரு சம்மனசானவரை இக்குழந்தையின்‌ உருவில்‌ தன்னிடம்‌, சர்வேசுரன்‌ தாமே அனுப்பியிருக்கிறார்‌, என்பதைக்‌ கண்டுணர்ந்தார்‌.

மாபெரும்‌ திருச்சபையின்‌ வேதபாரகரும்‌ தந்தையுமான அர்ச்‌.அகுஸ்‌ தீனாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!

Download St. Augustine Books for Free
 Click Here to download

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

August 27 - St. Joseph Calasanctius

 

ஆகஸ்டு 2️7️ம்‌ தேதி 

ஸ்துதியரும்‌ பியாரிஸ்ட்‌ துறவற சபை ஸ்தாபகருமான

அர்ச்‌.  கலசாங்சியுஸ்சூசையப்பர்திருநாள்‌.

 


இவர்‌ ஸ்பெயினிலுள்ள ஆரகன்‌ என்ற நாட்டில்‌, 1556ம்‌ வருடம்‌,ஓர்‌ உயர்‌ குடும்பத்தில்‌ பிறந்தார்‌. உத்தமமான கத்தோலிக்கக்‌ கல்வியை இவருடைய பெற்றோர்கள்‌ இவருக்கு அளித்தனர்‌; இவர்‌ 5வது வயதில்‌, மற்ற சிறுவர்களைக்‌ கூட்டிக்கொண்டு, தெருக்கள்‌ வழியாக பசாசைக்‌ கண்டுபிடித்து அதை வெட்டிக் கொல்வதற்காக, பவனியாகச்‌ சென்று எல்லா இடங்களிலும்‌ பசாசைக்‌ தேடிப்பார்த்தார்‌. இவர்‌ 27வது வயதில்‌ குருப்பட்டம்‌ பெற்றார்‌;பங்கு குருவாகி, பங்கின்‌ ஞான அலுவல்களில்‌ ஈடுபட்டிருந்தார்‌. 1592ம்‌ வருடம்‌, “ஜோசப்‌! ரோமாபுரிக்குச்‌ செல்‌!” என்கிற ஒரு குரலொலி , ஒரு பரலோகக்‌ காட்சியின்போது இவருக்குக்‌ கேட்டது. அக்காட்சியில்‌, இவரால்‌ கற்பிக்கப்‌ பட்ட அநேக சிறுவர்களைக்‌ கண்டார்‌; அவர்களுடன்‌ சம்மனசுகளின்‌ கூட்டத்தையும்‌ கண்டார்‌.

இவர்‌, பரிசுத்த நகரமான உரோமாபுரியை அடைந்ததும்‌, அந்நகரிலிருந்த ஏழை சிறுவர்களின்‌ தீயொழுக்கமும்‌, அறியாமையும்‌ இவருடைய கனிவான இருதயத்தைப்‌ பெரிதும்‌ பாதித்தது! அறியாமையானது, இவர்களுடைய தீயொழுக்கத்தினுடையவும்‌, துன்ப துயரத்தினுடையவும்‌ காரணமாயிருக்கிறது என்பதை, இவர்‌ தெளிவாகக்‌ கண்டார்‌. இச்சூழ்நிலைக்கு, ஞாயிற்றுக்கிழமை ஞான உபதேச வகுப்புகள்‌ ஒரு போதுமான மாற்றுமருந்தாக, ஒரு தீர்வாக, இருக்காது! என்பதையும்‌ உணர்ந்தார்‌. அக்காலக்கட்டத்தில்‌ நடைமுறையிலிருந்த கட்டமைப்பின்படி, எந்த அமைப்பினுடைய ஒத்துழைப்பும்‌ கிடைக்காத சூழலில்‌, ஐரோப்பாவில்‌, முதல்‌ இலவச பள்ளிக்கூட நிறுவனத்தை ஸ்தாபித்தார்‌. இவருடன்‌ இன்னும்‌ இரண்டு குருக்கள்‌ சேர்ந்தனர்‌. பள்ளிக்கூடத்தில்‌ விரைவில்‌, 1200 பிள்ளைகள்‌ சேர்ந்தனர்‌; இதற்கு பொதுமக்களின்‌ பேராதரவுகிடைத்‌தது!

பின்னர்‌, பக்தியுள்ள பள்ளிக்கூடங்களின்‌ குருக்கள்‌ துறவற சபையை ஸ்தாபித்தார்‌; இப்போது இது, பியாரிஸ்ட்ஸ்‌ துறவற சபை என்று அழைக்கப்படுகிறது. கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல்‌ என்கிற மூன்று வார்த்தைப்பாடுகளுடன்‌ கூட, ஏழைகளுக்கு ஞான உபதேசக்‌ கல்வியை அளிப்பதற்கான உறுதியான அர்ப்பணிப்பு என்கிற வார்த்‌ தைப்பாட்டையும்‌ இத்துறவியர்‌ எடுத்தனர்‌. 8ம்‌ கிளமென்ட்‌ பாப்பரசர்‌ இத்துறவற சபைக்கு, அதிகாரபூர்வமாக அங்கீகாரம்‌ அளித்தார்‌. இத்துறவற சபை மிகத்துரிதமாக பரவி வளர்ந்தது; ஆனால்‌ அதே சமயம்‌, இவருக்கு எதிரிகள்‌ தோன்றினர்‌; அதுவும்‌ இவருடைய துறவற சபையில்,‌ இவருக்குக்‌ கீழ்‌ இருந்தவர்களே, இவருக்கு எதிராக பாப்பரசரின்‌ பரிசுத்த பீடத்தின்‌ தலைமை அலுவலகத்தில்‌ முறையீடு செய்தனர்‌: இவருடைய 86வது வயதில்‌, கைது செய்யப்பட்டு, உரோமைத்‌ தெருக்கள்‌ வழியாக சிறைக்கு நடத்திச்‌ செல்லப்பட்டார்‌. இந்த சிலுவையை ஆண்டவர்‌ மீது கொண்டிருந்த சிநேகத்திற்காக, இவர்‌ அமைதியுடனும்‌ பொறுமையுடனும்‌ ஏற்று அனுபவித்தார்‌. இதன்‌ காரணமாக, இவருடைய துறவற சபை,ஒரு மேற்றிராசனத்தினுடைய கட்டுப்பாட்டிற்குள் செயல்படும்‌ ஒரு சிறிய துறவற சபையாகக்‌ குறைக்கப்பட்டது.

அர்ச்‌. கலசாங்சியுஸ்‌ சூசையப்பர்‌ மரித்தபிறகே, இத்துறவற சபை முந்தின சலுகைகளைப்‌ பெற்று, திருச்சபையெங்கிலும்‌ ஸ்தாபிப்பதற்கான அனுமதியைப்‌ பெற்றது! இருப்பினும்‌, இவர்‌, “என்னுடைய இந்த அலுவல்‌, சர்வேசுரனுடைய சிநேகத்திற்காக மட்டுமே, துவக்கப்பட்டது!” என்று கூறியபடி, முழு நம்பிக்கையுடன்‌ பாக்கியமாய்‌, மரித்தார்‌. இவர்‌ தான்‌,பொதுமக்களின்‌ பிள்ளைகளுக்கு இலவசமான கல்வியை முதன்‌ முதலில்‌ அளித்தவர்‌. அர்ச்‌. கலசாங்சியுஸ்‌ சூசையப்பர்‌, 1647ம்‌ வருடம்‌ 92வது வயதில்‌ மரித்தார்‌. இவர்‌ இறந்து 8 வருடங்களுக்குப்‌ பிறகு, 7ம்‌ அலெக்சாண்டர்‌ பாப்பரசர்,‌ பக்தியுள்ள பள்ளிக்கூடங்களின்‌ மேல்‌ சுமத்தப்பட்டிருந்க அவப்‌பெயரை நீக்கி, அப்பள்ளிக்கூடங்கள்‌ மறுபடியும்‌ திறக்கப்பட அனுமதித்தார்‌.

1748ம்‌ வருடம்‌, ஆகஸ்டு 7ம்‌ தேதியன்று, 14ம்‌ ஆசீர்வாதப்‌பரால்‌ இவருக்கு முத்திப்‌ பேறு பட்டமும்‌, 1767ம்‌ வருடம்‌, ஜூலை 16ம்‌ தேதியன்று, 13ம்‌ கிளமென்ட்‌ பாப்பரசரால்‌ அர்ச்சிஷ்டப்பட்‌டமும்‌ அளிக்கப்பட்டது. உரோமாபுரியிலுள்ள பியாரிஸ்ட்‌ துறவற சபை மடத்தின்‌ சிற்றாலயத்தில்‌, புதுமையாக அழியாமலிருக்கும்‌ இவருடைய பரிசுத்த இருதயமும்‌, பரிசுத்த நாவும்‌ அருளிக்‌கங்களாக பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. 1948ம்‌  வருடம்‌, ஆகஸ்டு 13ம்‌ தேதியன்று, 12ம்‌ பத்திநாதர்‌ பாப்‌பரசர்‌, இவரை அகில உலகக்‌ கிறீஸ்துவப்‌ பொதுப்‌ பள்ளிக்‌ கூடங்களுக்குப்‌ பாதுகாவலர்‌ என்று பிரகடனம்‌ செய்தார்‌.

“சர்வேசுரனுக்கு ஊழியம்‌ செய்வதில்‌ நீ, உன்‌ சொந்த வசதியைத்‌ தேடுவாயாகில்‌, நீ சர்வேசுரனுக்கு ஊழியம்‌ செய்யாமல்‌, உனக்குத்‌ தானே ஊழியம்‌ செய்கிறாய்‌!” 📚 🏻+ அர்ச்‌. கலசாங்கியுஸ்‌ சூசையப்பர்‌

 ஸ்துதியரான அர்ச்‌.  கலசாங்சியுஸ்‌ சூசையப்பரே! எங்களுக்காக வேண்‌ டிக்கொள்ளும்‌!

சனி, 10 ஆகஸ்ட், 2024

May 4. St. Monica, அர்ச். மோனிக்கம்மாள்

 

மே 0️4️ம் தேதி

அர்ச். மோனிக்கம்மாள் திருநாள்


 

திருச்சபையின் மாபெரும் வேதபாரகரும், தூய  ஞானத்தினுடைய மாபெரும் ஆசிரியருமான அர்ச். அகுஸ்தீனாரின் தாயாரான அர்ச். மோனிக்கம்மாள், வட ஆப்ரிக்காவிலுள்ள தகாஸ்தே என்ற இடத்தில் கி.பி.331ம் வருடம் பிறந்தார்கள். மோனிக்கம்மாள், அர்ச். அகுஸ்தீனாருக்கு பூலோக ஜீவியத்தை மட்டுமல்லாமல் ஞான ஜீவியத்தையும் அளித்தவர்களாக, அதாவது, பரலோக ஜீவியத்திற்கான மறுபிறப்பையும் அவர் அடையும்படிச் செய்து, அவருக்கு இரட்டிப்பான தாயாராகத் திகழ்கின்றார்கள்!  மோனிக்கம்மாளின் பெற்றோர்கள் நல்ல கிறீஸ்துவர்களாயிருந்ததால், மோனிக்கம்மாளை அடக்கவொடுக் கத்திலும், கிறீஸ்துவ புண்ணியத்திலும் வளர்த்தனர்; சிறு வயதிலிருந்தே பக்திமுயற்சிகளை அனுசரித்து வந்தார்கள்;  இரவில் உறக்கத்தை மேற்கொண்டு, அந்நேரத்தை, ஜெபத்தில் செலவழிப்பது, சர்வேசுரனை அதிகமாக மகிழ்விக்கக் கூடிய புண்ணியம் என்பதை தன் தாயிடமிருந்து  கற்றறிந்த நாள் முதல், மோனிக்கம்மாள், இரவில் எழுந்து ஜெபிக்கத் துவக்கினார்கள்.  ஏழைகள் மேல் அதிக இரக்கமுள்ளவர்களாக, அர்ச். மோனிக்கம்மாள், அநேக நேரங்களில் தனக்குண்டான உணவை முதலாய், ஏழைகளுடைய பசியைப் போக்குவதற்காக அளித்து ஏழைகளைப் பராமரித்து வந்தார்கள். அர்ச். மோனிக்கம்மாள் எப்போதும் அலங்காரத்தைத்  தவிர்த்தவர்களாக, எளிமையாகவும் அடக்கவொடுக்கமாகவும் ஆடை அணிந்து வந்தார்கள்; கன்னியாஸ்திரியாக சர்வேசுரனுக்கு தன்னை அர்ப்பணிக்க ஆசித்தார்கள்; ஆனால், பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, திருமணம் செய்து கொண்டார்கள்; ஒரு உத்தமமமான கிறீஸ்துவ மனைவியாக ஜீவித்தார்கள்; மற்ற திருமணமான பெண்களுக்கெல்லாம், நன்மாதிரிகையாகத் திகழ்ந்தார்கள்; ஆனால், மோனிக்கம்மாளுடைய கணவன், பத்ரீசியுஸ்,  மூர்க்கக் குணமுடையவராக, ஒழுக்கக்கேட்டிலும், அனேக துர்ப்பழக்கங்களுக்கு  அடிமையாயிருந்ததாலும்,பக்தியுள்ள தன் மனைவியை ஆயிரக்கணக்கான வழிகளில், சித்திரவதைச் செய்து உபத்திரவப்படுத்தி வந்தார்; இருப்பினும், மோனிக்கம்மாள், எப்போதும் தன் கணவனை தயவுடனும் பெருந்தன்மையுடனும், சிநேகத்துடனும்  நடத்தினார்கள்; ஒருபோதும்,கணவனுடைய துர்க்குணங்களுக்காகக் கடிந்துகொண்டதில்லை! அநேக சமயங்களில் தன்னை சபித்துத் திட்டியபோதிலும் கணவனுக்கு எதிராக ஒரு முரண்பாடான வார்த்தையும் கூறாமல், மோனிக்கம்மாள் எப்போதும் தாழ்ச்சியும் சாந்தமும் உடையவர்களாக இருந்தார்கள். கணவனுடைய கோபம் நீங்கியவுடன், கிறீஸ்துவ அமைதியுடன், கணவன் செய்த குற்றத்தைப் பற்றி, மோனிக்கம்மாள், எடுத்துரைத்து வந்தார்கள்; கணவனின் மனந்திரும்புதலுக்காக இடைவிடாமல், சர்வேசுரனிடம் இரவு பகலாக ஜெபித்து வந்தார்கள்; கொஞ்சமாக,கொஞ்சமாக மோனிக்கம்மாள் தன் கணவனை மனந்திருப்பி வந்தார்கள்; இறுதியில், பத்ரீசியுஸ் தான் அனுசரித்து வந்த மாணிக்கேயப் பதிதத்தை விட்டு விட்டு, உத்தம கத்தோலிக்கராக மனந்திரும்பி முன்மாதிரிகையான மேம்பட்ட ஜீவியம் ஜீவிக்கலானார்.

                மோனிக்கம்மாளுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர்; இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். அவர்களுக்கு கிறீஸ்துவ ஞான உபதேசக் கல்வியைக் கற்பிப்பதில் மோனிக்கம்மாள் மாபெரும் கவனத்துடன் இருந்தார்கள். மூத்த மகன் அகுஸ்தீன்,  கீழ்ப்படியாத மகனாக இருந்தார்; குறிப்பாக அவருடைய தந்தை இறந்தபிறகு, ஒரு முரட்டுத்தனமான ஜீவியம் ஜீவித்து வந்தார்; சுதந்திரமாக எந்த அறிவுரையையும் கேட்க விருப்பமில்லாமல் பக்தியுள்ள தாயாருடைய அச்சுறுத்தல்களையும் கண்டு கொள்ளாமல், தன் இஷ்டம்போல் ஜீவித்து வந்தார்; அச்சமயம் மாணிக்கேயப் பதிதத்திலும் சேர்ந்திருந்தார்.

                அதேசமயம், அர்ச். மோனிக்கம்மாள், விதவையாகிவிட்ட தனது ஜீவிய அந்தஸ்தின் கடமைகள் மட்டில், அர்ச். சின்னப்பர், தீமோத்தேயுவிற்கு எழுதிய முதல் நிரூபத்தின் அறிவுரைகளின் விதிமுறைகளை முறையுடன், அனுசரிக்கலானார்கள். தினமும் திவ்யபலி பூசை தவறாமல் பக்தியுடன் கண்டு வந்தார்கள்; ஏழைகளுக்கு தர்மம் செய்து தாராளமாக உதவி வந்தார்கள்; தேவையற்ற உரையாடல்களில் ஈடுபடாமலும்,தேவையற்ற இடங்களுக்குச் செல்லாமலும், ஞான வாசகங்கள் வாசிப்பதிலும், ஜெபிப்பதிலும், உழைப்பதிலும் இடைவிடாமல் ஈடுபட்டிருந்தார்கள்;  ஏகாந்த ஜீவியத்தை நேசித்தவர்களாக, தனிமையில் அமைதியான ஜீவியம் ஜீவிப்பதில் இளைப்பாறினார்கள்; மூத்த மகனுடைய துர்ப்பழக்கத்தினுடைய தீய ஜீவியத்தைப் பற்றிய கவலை மட்டுமே, அர்ச். மோனிக்கம்மாளைப் பெரிதும் பாதித்தது! தனது மகன் அகுஸ்தீனுடைய மனந்திரும்புதலுக்காக மோனிக்கம்மாள், திரளான கண்ணீர் விட்டு அழுதுகொண்டே, இரவு பகலாக சர்வேசுரனிடம் தொடர்ந்து மன்றாடி ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்; இதே கருத்திற்காக மற்றவர்களிடமும், குருக்களிடமும் துறவியரிடமும், வேண்டிக் கொள்ளும்படி விண்ணப்பித்து வந்தார்கள்; ஒருநாள் ஒரு மேற்றிராணியாரிடம், தன் மகனுக்காக வேண்டிக் கொள்ளும்படி கேட்ட போது, அந்த மேற்றிராணியார், மோனிக்கம்மாளிடம், “சமாதானமாகப் போங்கள்! ஒரு மகனுக்காக ஒரு தாய் சிந்தும் இவ்வளவு அதிகமான கண்ணீர்கள் ஒருபோதும் வீண்போகாதுஎன்று கூறி அனுப்பி வைத்தார். மேற்றிராணியாரின் இவ்வார்த்தைகள், மோனிக்கம்மா ளுக்கு ஆறுதல் அளித்தன;  ஆனால், அச்சமயம், அர்ச். மோனிக்கம்மாள் கண்ட ஒரு பரலோகக் காட்சியில், சர்வேசுரன் தாமே பிரத்தியட்சமாக, அகுஸ்தீனாருடைய மனந்திரும்புதலைப் பற்றி அறிவித்ததைக் கண்டபிறகு, மோனிக்கம்மாள் மாபெரும் ஆறுதலடைந்தார்கள்.

                அதேசமயம், அகுஸ்தீனார், சொல் இலக்கணத்திற்கான உயர்கல்வியை கற்றபிறகு, கார்த்தேஜ் நகரை விட்டு, உரோமைக்குச் செல்ல தீர்மானித்தார்.மோனிக்கம்மாள் பெருமுயற்சி செய்து, தன் மகனை உரோமைக்குச் செல்வதைத் தடுக்கப் பார்த்தார்கள். மோனிக்கம்மாள் தேவாலயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, இரகசியமாக அகுஸ்தீன், உரோமைக்கான பயணத்தைத் துவக்கினார்; உரோமையை அடைந்தவுடன் அகுஸ்தீனுக்கு, உயிருக்கு ஆபத்தான பெரிய வியாதி வந்தது. இதைப்பற்றிக்கூறும்போது, “என் தாயாருடைய பக்திமிகுந்த ஜெபங்களால்  தான், என் நித்தியக் கேட்டை அடையும் படியாக, நான் அப்போது  பாவத்திலேயே இறந்து போகவில்லை!” என்று பிற்காலத்தில் அர்ச். அகுஸ்தினார் குறிப்பிடுகின்றார்.

                மகனுடைய வியாதியைப் பற்றி அறிந்ததும், மோனிக்கம்மாள், உடனே மகனைக் கண்காணித்து, இரட்சணியப்பாதையில் சேர்த்து விடுவதற்காக உரோமைக்குச் செல்லத் தீர்மானித்தார்கள்; உரோமையை அடைந்ததும், மோனிக்கம்மாள், தன் மகன் உரோமைக்கு சொல் இலக்கணத்தைக் கற்பிப்பதற்காக அழைக்கப்பட்டிருப்பதை அறிந்தார்கள்; அச்சமயம், தன் மகன் மிலான் நகர மேற்றிராணியாரான அர்ச். அம்புரோசியாருடன் நிகழ்த்திய உரையாடல்களினால் பெரு மாற்றத்தை அடைந்திருப்பதைக் கண்டு மோனிக்கம்மாள் மிகவும் அகமகிழ்ச்சியடைந்தார்கள்; அர்ச். மோனிக்கம்மாள், அர்ச். அம்புரோசியாரிடம், தன் மகனுடைய  முழு மனந்திரும்புதல் வரை, தளர்வில்லாத கண்டிப்புடன் ஞான உபதேசத்தைக் கற்பிக்கும் படி விண்ணப்பித்தார்கள்.

                இறுதியாக, சர்வேசுரன் தமது இரக்கத்தினால், இப்பரிசுத்த விதவையான அர்ச். மோனிக்கம்மாளின் ஆவலை நிறைவேற்றத் திருவுளம்கொண்டார். அகுஸ்தீனார், மாணிக்கேயப் பதிதத்தைப்புறக்கணித்து கைவிட்டார்;  மேலும், கத்தோலிக்கராக தனது 30வது வயதில், அர்ச். அம்புரோசியாரிடம் ஞானஸ்நானம் பெற்றார்;

அர்ச். மோனிக்கம்மாளின் இடைவிடாத ஜெபங்களுடையவும் கண்ணீர்களுடையவும் பலனாகத்தான், இவ்வுன்னதமான மனந்திரும்புதல் நிகழ்ந்தது; இதன்பின், அர்ச். மோனிக்கம்மாள், தன் மகனுடன் ஆப்ரிக்காவிற்குத் திரும்ப ஆசித்தார்கள்; ஆனால், ஓஸ்டியாவை அடைந்ததும், அர்ச். மோனிக்கம்மாளுக்கு இலேசான காய்ச்சல் வந்தது; அப்போது தன் தாயார் பரலோக மகிமைகள் பற்றி உரையாடிய உரையாடலின் இறுதிப்பகுதியைப் பற்றி, அர்ச். அகுஸ்தீனார் பின்வருமாறு விவரிக்கின்றார்: “என் மகனே! என்னைப் பொருத்தவரை, இந்த உலகத்திலிருந்து, இன்னும் வேறு ஒன்றையும், நான் எதிர்பார்க்கவில்லை!  நான் இறப்பதற்கு முன் உன்னை ஒரு கத்தோலிக்கனாக பார்க்க வேண்டும் என்கிற ஒரே ஒரு ஆவல் எனக்கு இருந்தது! நான் கேட்டதற்கு மேலாக சர்வேசுரன் இக்காரியத்தில் எனக்கு அருளியிருக்கிறார்! ஏனெனில், நீ சர்வேசுரனுக்கு ஊழியம் செய்வதில் ஈடுபட்டிருப்பது மட்டுமல்லாமல், நீ பூலோக சந்தோஷத்தையெல்லாம் அருவருத்துப் புறக்கணித்தும் விட்டிருக்கிறாய்! ஆதலால், இனி நான் செய்யக்கூடிய  வேறு  என்ன காரியம் இவ்வுலகில் இருக்கிறது?”

                அர்ச். மோனிக்கம்மாளுடைய  வியாதி அதிகரித்தது்  ஒன்பது நாட்களுக்குப் பிறகு,மோட்சத்தை தன் வாழ்நாளெல்லாம் மிகவும் ஆசித்த அர்ச். மோனிக்கம்மாள், அநேக புண்ணியங்களால் அலங்கரித்திருந்த தனது ஆத்துமத்தை தனது சிருஷ்டிகரிடம் ஒப்படைக்கும்படியாக, தனது 56வது வயதில் 387ம் வருடம் ஆகஸ்டு 27ம் தேதியன்று பாக்கியமாய் மரித்தார்கள். அர்ச். மோனிக்கம்மாள் இறப்பதற்கு முன்பாக, தன் இரு மகன்களிடமும், கூறியதைப் பற்றி அர்ச். அகுஸ்தீனார், பின்வருமாறு விவரிக்கின்றார்: “நீங்கள் எங்கே அடக்கம் செய்ய விரும்புகிறீர்களோ, அங்கே என் சரீரத்தைக் கிடத்துங்கள்!  நான் இறந்ததைப் பற்றிய எந்த நினைவும் உங்களைக் கஷ்டப்படுத்துவதற்கு அனுமதியாதேயுங்கள்! நான் உங்களிடம் ஒரே ஒரு  காரியத்தைத்தான் கேட்கிறேன்: நீங்கள் எங்கிருந்தபோதிலும், எல்லாம் வல்லவரும் சர்வாதி கர்த்தருமானவரின் பரிசுத்த பலிபீடத்தின் முன்பாக என்னை நினைவு கூருங்கள்!”  கல்லறையின் அருகில் தனது பரிசுத்த தாயாரின் சரீரத்தைக் கிடத்தியபடி, மரித்தோருக்கான திவ்யபலி பூசை நிறைவேற்றப்பட்டது, என்பதை அர்ச். அகுஸ்தினார் எழுதி வைத்தார்.

அர்ச். மோனிக்கம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


for Daily Saints History - Click here

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

July 15- St. Hentry the 2nd - அர்ச். 2ம்ஹென்றி

 


 

ஜுலை 1️5️ம் தேதி

 

சக்கரவர்த்தியும் ஸ்துதியருமான அர்ச். 2ம்ஹென்றி திருநாள்

 


                2ம் ஹென்றி, 973ம் வருடம், மே 6ம் தேதியன்று பவேரிய நாட்டின் அரசனுடைய மகனாகவும், ஜெர்மனி நாட்டு அரசரான முதலாம் ஹென்றியின் கொள்ளுப்பேரனாகவும் பிறந்தார்.இரண்டு முந்தின சக்கரவர்த்திகள் ஆண்ட சமயத்தில், இவருடைய தந்தை அந்த சக்கரவர்த்திகளை எதிர்த்து நின்றதால், அடிக்கடி நாடுகடத்தப்பட்டார். சின்ன 2ம் ஹென்றியும் தந்தையுடன் அடிக்கடி நாடுகடத்தப்பட்ட நிலையில் ஜீவிக்க நேர்ந்தது. இச்சூழ்நிலை தான், இவரை சிறுவயதிலேயே, சர்வேசுரனையும், திருச்சபையையும் அண்டிப் போகும்படி தூண்டுவதற்குக் காரணமாயிற்று.. 995ம் வருடம், இவருடைய தந்தையின் மறைவிற்குப் பிறகு, இவர் பவேரியா நாட்டின் சிற்றரசரானார்.

         இவருடைய ஒன்றுவிட்ட சகோதரனும், பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியுமான 3ம் ஓட்டோ, , ஜெர்மனியின் படைவீரர்களின் துணையுடன், இத்தாலியில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறுகிற புரட்சியை ஒடுக்கி அடக்கும்படியாக, 1002ம் வருடம், இவரை தன்னிடம் வரும்படி, அழைத்தார்.

                ஆனால், இவர் சக்கரவர்த்தியின் அரண்மனையை அடைவதற்குள் 3ம் ஓட்டோ சக்கரவர்த்தி காய்ச்சலினால் இறந்தார். அவருக்கு வாரிசு யாருமில்லாததால், 2ம்ஹென்றி, ஜெர்மனியின் அரசராக 1002ம் வருடம் ஜுலை 9ம் தேதியன்று முடிசூட்டப்பட்டார். 2ம் ஹென்றி, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக மட்டுமே, இந்த உலகத்தை, அரசராள வேண்டும் என்கிற ஒரே உன்னத நோக்கத்துடன், அரசருடைய  பத்திராசனத்தில் ஏறி அமர்ந்தார்.

                வட ஐரோப்பாவிலிருந்து தாக்குதல் நடத்திய அஞ்ஞானிகளும் காட்டுமிராண்டிகளும், உரோமை சாம்ராஜ்ஜியத்தை கொள்ளை யடித்துக்  கொண்டிருந்தனர். மிகப்பெரிய அவர்களுடைய படைகளுக்கு முன்பாக அர்ச். 2ம் ஹென்றி தனது சிறிய படையுடன் சென்று அவர்களை எதிர்த்துப் போரிட்டார். ஆனால், இவருடைய படையணிகளை, சம்மனசுகளும், அர்ச்சிஷ்டவர்களும், புதுமையாகத் தோன்றி, வழிநடத்தினர்! ஆதலால், அஞ்ஞானிகளுடைய படைகள், அவநம்பிக்கைக்கும் குழப்பத்திற்கும் உட்பட்டவர்களாக, பல்வேறு திசைகளில் சிதறி ஓடினர். இவ்விதமாக காட்டுமிராண்டிகளின் தொல்லைகளிலிருந்து, பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தை, அர்ச். 2ம் ஹென்றி காப்பாற்றினார். போலந்து, பொஹேமியா, மொராவியா, பர்கண்டி ஆகிய நாடுகளை வென்று, தனது உரோமை சாம்ராஜ்ஜியத்துடன் சேர்த்துக் கொண்டார். பன்னோனியா, ஹங்கேரி நாடுகளை, சத்திய கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்த்தார்.

                ஜெர்மனியில் சத்திய கத்தோலிக்க வேத விசுவாசத்தை ஸ்திரமாக ஸ்தாபித்தபிறகு, அர்ச். 2ம் ஹெனறி அரசர், இத்தாலிக்குள் அணிவகுத்துச் சென்றார். கிரகோரி என்ற எதிர்பாப்புவை அகற்றி விட்டு, 8ம் பெனடிக்ட் பாப்பரசரை, வரவழைத்து, மறுபடியும், பாப்பரசரின் பத்திராசனத்தில் அமர்த்தினார். 8ம் பெனடிக்ட் பாப்பரசர், அர்ச். 2ம் ஹென்றி அரசருக்கு, 1014ம் வருடம் பிப்ரவரி 14ம் தேதியன்று, பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியின் மகுடத்தைச் சூட்டினார்.

                சக்கரவர்த்தி 2ம் ஹென்றி, எந்த நகரத்திற்குச் சென்றாலும், அங்கு அந்நகரிலுள்ள  மகா பரிசுத்த தேவமாதாவின் ஒரு தேவாலயத்திற்குச் சென்று, ஜெபிப்பதில் தன் முதல் இரவைக் கழிப்பதைத் தன் பக்தியுள்ள வழக்கமாகக் கொண்டிருந்தார். அர்ச். ஹென்றி, உரோமாபுரிக்குச் சென்றபோது, அங்கிருந்த மகா பரிசுத்த தேவமாதாவின் தலைமை தேவாலயமான மேரி மேஜர்  பசிலிக்காவில் தனது முதல் இரவைக் கழிக்கும்படியாக,  ஜெபித்துக் கொண்டிருந்தபோது,  உன்னதரும் நித்திய குருவுமான நமதாண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதர் சுவாமி, திவ்ய பலிபூசை நிகழ்த்துவதற்காக தேவாலயத்தினுள் நுழைவதைக் கண்டார். அர்ச். லாரன்ஸும், அர்ச். வின்சென்டும், தியாக்கோன் மற்றும் உபதியாக்கோன்களாக முறையே, திவ்யபலிபூசைக்கு உதவி செய்ய  அங்கு வந்ததையும் கண்டார். தேவாலயம் முழுவதும் எண்ணற்ற அர்ச்சிஷ்டவர்களால் நிரம்பியது. சம்மனசுகள் பாடற்குழுவினரின் அறையில் இருந்தபடி, மகா இனிமையான பரலோக இசையில் பாடினர். மகா பரிசுத்த தேவமாதாவும் திவ்யபலிபூசையைக் காணும்படி தேவாலயத்தினுள் மிகுந்த பக்திபற்றுதலுடன் முழங்காலிலிருந்தார்கள்.  நடுப்பூசையிலும், திவ்ய நன்மை நேரத்திலும், தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, ஆண்டவரை ஆராதித்தார்கள்!

                சுவிசேஷம் வாசித்தபிறகு, மகா பரிசுத்த தேவமாதா அனுப்பிய ஒரு சம்மனசானவர், சுவிசேஷத்தை முத்தமிடும்படியாக, அர்ச். ஹென்றியிடம் கொண்டு வந்தார். அச்சமயம், யாக்கோபுவிற்குச் செய்ததைப் போல, அந்த சம்மனசானவர், இவருடைய தொடையை மெதுவாகத் தொட்டு, “நீ அனுசரிக்கிற பரிசுத்த கற்பின் விரத்தத்துவத்தின் பேரிலும், நீதியின் பேரிலும், சர்வேசுரன் காண்பிக்கிற சிநேகத்தின் அடையாளத்தை ஏற்றுக்கொள்!” என்று கூறினார். அந்நேரமுதல், பரிசுத்த உரோமைச் சக்கரவர்த்தி 2 ஹென்றி,  தன் எஞ்சிய வாழ்நாள் காலத்தில் எப்போதும் நொண்டியாக இருந்தார்.

                தாவீதரசரைப்போல், அர்ச். 2ம் ஹென்றி தனது போர்களில் அடைந்த சகல வெற்றிகளின் பலன்களையெல்லாம், திருச்சபையின் ஊழியத்திற்குப் பயன்படுத்தினார். உரோமை சாம்ராஜ்ஜியத்திலிருந்த காடுகள், சுரங்கங்கள், மேலும், தனது திரவியசாலை அளிக்கக்கூடிய மிகச் சிறந்த கனிகள் யாவற்றையும்,                  சர்வேசுரனுடைய தேவாலயங் களின் மகா பரிசுத்த சன்னிதானங்களுக்காக அர்ப்பணித்தார்: தனது சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த நாடுகளின் அரசாங்கங்களின் உயர்ரக கதீட்ரல் தேவாலயங்கள், உன்னதமான துறவற மடங்கள், எண்ணிக்கையில்லாத தேவாலயங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு, தன் சாம்ராஜ்ஜியத்தின் திரவியங்கள் எல்லாவற்றையும் பயன் படுத்தினார். ஒரு காலத்தில் அஞ்ஞான இருளினுடைய ஐரோப்பியப் பகுதியாக இருந்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் ஜெர்மனி மற்றும் அதைக் சேர்ந்த வடக்குப் பகுதியை அர்ச். 2ம் ஹென்றி, இவ்வளவான தேவாலயங்கள், துறவற மடங்களால் ஒளிர்வித்து அர்ச்சித்துப் பரிசுத்தப்படுத்தினார்.

                1024ம் வருடம், ஜுலை 15ம் தேதி, அர்ச். 2ம் ஹென்றி சக்கரவரதேவாலயங்கள், ெர்ஸ்டாடு அருகிலுள்ள குரோன் கோட்டையில் பாக்கியமாய் மரித்தார்.  சர்வேசுரனுடைய பரலோக இராஜ்ஜியத்தையே எப்போதும் தன் கண்முன் கொண்டவராக, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக மட்டுமே, தன்னுடைய உலக இராஜ்ஜியத்தை  மிகுந்த பொறுப்புடன் ஆண்டு நடத்திய உன்னத அர்ச்சிஷ்ட அரசரான 2ம் ஹென்றியின் மரணத்தை, நாட்டு மக்களும், திருச்சபை அதிகாரிகளும்  உகந்த விதத்தில் அனுசரித்தனர். 1146ம் வருடம், 3ம் யூஜின், பாப்பரசர் அர்ச். 2ம்ஹென்றிக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.

 

பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியும் ஸ்துதியருமான அர்ச். 2ம் ஹென்றியே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!