ஆகஸ்டு
2️8️ம் தேதி
திருச்சபையின் தலைசிறந்த வேதபாரகரும்
தந்தையுமான ஹிப்போ நகரின்
அர்ச். அகுஸ்தீனார் திருநாள்
இவர்,
354ம் வருடம்,நவம்பர் 13ம் தேதியன்று உரோமையின் ஆப்ரிக்கப் பிராந்தியத்தைச்
சேர்ந்த டகாஸ்டே (தற்போதைய அல்ஜீரியாவிலுள்ள சூக் ஆஹ்ராஸ்)வில் பிறந்தார். அர்ச்.மோனிக்கம்மாள்,
இவருடைய தாயார். ஆனால், இவருடைய தந்தையார், ஒரு அஞ்ஞானியாக இருந்தார்; அர்ச்.மோனிக்கம்மாளின்
இடைவிடா ஜெபத்தின் பலனாக, மரணப்படுக்கையிலிருந்தபோது, இவருடைய தந்தை, கத்தோலிக்கராக
மனந்திரும்பி பாக்கியமாய் மரித்தார். கத்தோலிக்க வேத விசுவாசத்தில் வளர்க்கப்பட்டபோதிலும்,
முதல் சில நூற்றாண்டுகளில், வாலிப வயதை அடைந்ததும் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும்
வழக்கம் திருச்சபையில் அனுசரிக்கப்பட்டதால், அகுஸ்தீனார், சிறு வயதில்,ஞானஸ்நானம்
பெற்றுக்கொள்ளவில்லை.
அர்ச்.
மோனிக்கம்மாளுடைய பிரபல்யமான குமாரனும், உயரிய இலட்சியங்களையும்,பிரகாசமுள்ள திறமைகளையும்,
அதே சமயம், மூர்க்கமான ஆசாபாச உணர்வுகளையுமுடைய பள்ளிக்கூட மாணவனாயிருந்தவருமான அர்ச்.அகுஸ்தீனார்,
அநேக வருடங்கள், தீமைகளும், போலியான பதித நம்பிக்கைகளும் நிறைந்த ஜீவியம் ஜீவித்து
வந்தார். இதுவரை ஜீவித்த மனிதர்களிலேயே மாபெரும் அறிவுத்திறனும், ஞானமும் உடையவராயிருந்த
மனிதர்களில் ஒருவராகத் திகழ்ந்த போதிலும்,
அசுத்த பாவங்களும், ஆங்காரமும், அகுஸ்தினாரின் மனதை, எவ்வளவுக்கு அதிகமாக இருளடையச்
செய்ததென்றால், சத்திய வேதத்தினுடைய நித்திய சக்தியங்களை இவரால் பார்க்கக் கூடாமல்,
அல்லது புரிந்துகொள்ளக் கூடாமற்போயிற்று!
இருப்பினும், இவர் இலத்தீன் மொழியில், எவ்வளவு உயரிய தேர்ச்சியை அடைந்தாரென்றால், வாய்ச்சாலகமாக அம்மொழியைப்
பேசுவதிலும், தனது கருத்தைத் தெளிவு படுத்துவதற்காக புத்திசாலித்தனமாக வாதிடுவதிலும்
நிபுணத்துவம் பெற்றிருந்தார்.
தத்துவ
இயலில் தொடர்ந்து உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்தார்; இலக்கியத்தையும், இலக்கணத்தையும்
, தனது சொந்த ஊரான டகாஸ்டேயிலும், கார்த்தேஜிலும் 9 வருட காலமாகக் கற்றுக்கொடுத்து
வந்தார். இவருடைய வயதின் கடைசி இருபதுகளில், ஆப்ரிக்காவை விட்டு, உரோமாபுரியில்,
வேலை தேட ஆரம்பித்தார். இதே சமயம், இவருடைய கத்தோலிக்க தாயாரான அர்ச். மோனிக்கம்மாள்,
இவருடைய மனந்திரும்புதலுக்காக இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்; இவரைப்
பின்தொடர்ந்து உரோமாபுரிக்கும் சென்றார்கள். உரோமாபுரியில் அகுஸ்தினார் வளமையடைந்தார்;
அணியிலக்கணத்தின் துறையினுடைய தலைமை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். மிலான் நகர
மேற்றிராணியாரான அர்ச். அம்புரோசியாரை, அகுஸ்தீனார் சந்தித்தார்; இவர் கேட்ட அத்தனை
கேள்விகளுக்கும், திருச்சபையின் ஞானமுள்ள பதில்களை, அர்ச். அம்புரோசியார் அளித்தார்.
அப்போது தான்,கிறீஸ்துவ வேதம்,தத்துவ இயல் வல்லுனர்களுக்கு ஏற்ற வேதம், என்பதை
அகுஸ்தீனார் கண்டறிந்தார்.
ஆனால்,
இவர் தனது துர்ப் பழக்கங்களின் சங்கிலிகளை உடைத்தெறியக்கூடாமலிருந்தார்; அதற்கான
தீர்மானத்தை எடுக்கக் கூடாமலிருந்தார். உடனடியாக, அகுஸ்தீனாரால் கிறீஸ்துவராக மாறக்
கூடாமலிருந்தது. பரிசுத்த ஜீவியத்தை, ஒரு அர்ச்சிஷ்டவருடைய ஜீவியத்தைத் தன்னால் ஒருபோதும்
ஜீவிக்க முடியாது, என்று , இவர், நினைத்திருந்தார். இருப்பினும் ஒருநாள், அர்ச்.
வனத்து அந்தோணியாரின் ஜீவிய சரித்திரத்தை வாசித்ததால், இரு மனிதர்கள் கத்தோலிக்கர்களாக
மாறினர், என்பதைக் கேள்விப்பட்டதும், இவர் தன்னைப்பற்றி, மாபெரும் விதமாக வெட்கமடைந்தார்;
இவர் தன் நண்பரான அலிபியுஸ் என்பவரிடம், “நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
கல்வியறிவில்லாக மனிதர்கள், வலுவந்தமாக பரலோகத்தைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்!
அதே சமயம், எல்லாவிதமான அறிவையும் கொண்டிருக்கிற நாம், நம் பாவங்கள் என்கிற சேற்றிலே
உருண்டுகொண்டிருக்கும் அளவிற்கு மாபெரும் கோழைகளாக இருக்கிறோம்!” என்று கூறினார்.
அகுஸ்தீனார்,
பின்னர், பரிசுத்த வேதாகமத்தை எடுத்து, அர்ச். சின்னப்பரின் நிரூபங்களை ஒரு புதிய
ஒளியில் வாசித்தார்; ஒரு நீண்டதும் கொடூரமானதுமான முரண்பாடு இவருடைய இருதயத்தில்
இதைப் பின்தொடர்ந்து வந்தது! ஆனால், தேவ வரப்பிரசாதத்தின் உதவியால், உள்ளரங்க போராட்டத்தை,
இவர் வெற்றிகொண்டார். அர்ச். மோனிக்கம்மாளின் இடைவிடா ஜெபங்களாலும், அர்ச். அம்புரோசியாரின்
ஆச்சரியமிக்க பிரசங்கங்களாலும், கத்தோலிக்க வேதம் மட்டுமே உண்மையான வேதம் என்பதைத்
தெளிந்தமனதுடன், 386ம் வருடம், அகுஸ்தீனார், கண்டறிந்தார்; 387ம் வருடம் ஈஸ்டர்
திருநாளன்று, அர்ச். அம்புரோசியார், அர்ச். அகுஸ்தீனாருக்கு, ஞானஸ்நானம் அளித்தார். இவர் ஆப்ரிக்காவிற்கு சென்று, தனது உடைமைகளையெல்லாம்
ஏழைகளுக்கு அளித்தார்; வட ஆப்ரிக்காவிலுள்ள ஹிப்போ நகருக்கு குடியேறினார்; அங்கே,395ம்
வருடம், மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப்பட்டார். அடுத்த 35 வருட காலத்தில், இவர்
அயராமல் திருச்சபைக்காக உழைத்தார்;
வடஆப்ரிக்கா, திருச்சபையின் மையமாக உருமாறியது!
இவருடைய ஞான ஜீவியம் உத்தமமான விதமாக பிரகாசித்தது! அச்சமயத்தில், இவர், திருச்சபையில்
நிலவிய சகல பதிதத் தப்பறைகளையும், எதிர்ப்பதிலும், தன்னிகறற்ற தர்க்கவாதத் திறமையால்,
பதிதத்தப்பறைகளை அழித்தொழிப்பதிலும், முன்னோடியான ஞானமும் வலிமையுமிக்க வேகபாரகராகத்
திகழ்ந்தார்; அநேகக் காண்டங்களையுடைய இவருடைய எழுத்துக்களும், நூல்களும், உலகெங்கிலும்
ஏற்கப்பட்டு, கிறீஸ்துவ ஞான ஜீவிய முறைகளுடையவும், வேத இயல் ஊகங்களுடையவும் முக்கிய
ஆதாரமாகப் பயன்படுத்துப்படுகின்றன!
அர்ச்.அகுஸ்தீனார்
காய்ச்சலினால், 430ம் வருடம், ஆகஸ்டு 28ம் தேதியன்று, 76வது வயதில், மரித்தார்.
இந்நேரத்தில், ஹிப்போ நகரத்தை நாசகாரர்கள் முற்றுகையிட்டிருந்தனர். 8ம் நூற்றாண்டில்,
ஹிப்போ நகரில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த அர்ச்.அகுஸ்தீனாருடைய பரிசுத்த அருளிக்கங்களை,
லொம்பார்டு நாட்டின் அரசரான லுட்பிராண்டு என்பவர், இத்தாலியாவிலுள்ள பாவியாவில்
ஸ்தாபித்தார்; அதற்காக பெருந்தொகையை, அவர் மகமதியருக்கு அளிக்க வேண்டியிருந்தது!
✝
அர்ச்.அகுஸ்தீனாரின் பிரபல்யமான காட்சி
St. Agustine and the Child (Angel) |
ஒரு
சமயம், அர்ச்.அகுஸ்தினார், கடற்கரையோரத்தில், மகா பரிசுத்த தமதிரித்துவத்தினுடைய
பரம இரகசியத்தைப் பற்றி தியானித்தபடி நடந்துசென்று கொண்டிருந்த போது,கடற்கரையில்
ஒருசிறு குழந்தை விளையாடிக்கொண்டிருப்பதைக் கவனித்தார்: அது தன் கையிலிருந்த ஒரு
சிறு ஓட்டிற்குள் கடற்தண்ணீரை அள்ளி வந்து அருகிலுள்ள ஒரு குழிக்குள் ஊற்றிக்கொண்டிருந்தது;
இதைத் தொடர்ந்து செய்தபடி இருந்தது.அந்த குழந்தையிடம், அர்ச்சிஷ்டவர், “நீ என்ன
செய்கிறாய்?” என்று கேட்டார்; அதற்கு அந்த குழந்தை, “கடலிலுள்ள எல்லா தண்ணீரையும்
இந்த குழிக்குள் விட்டு, கடலைக் கட்டாந்தரையாக்கப் போகிறேன்!” என்று கூறியது. உடனே,
அக்குழந்தையிடம், அர்ச்சிஷ்டவர், “குழந்தையே! உன் ஜீவியகாலமெல்லாம் இந்த வேலையில்
நீ ஈடுபட்டாலும், உன்னால், இதை முழுவதுமாக முடிக்கமுடியாது!” என்று கூறினார்; அதற்கு,
அந்த குழந்தை, “இருப்பினும், நீங்கள் உங்களுடைய மனதில் தியானிக்கிற அந்த மகா பரம
இரகசியத்தைப் பற்றி நீங்கள் புரிந்துகொள்வதற்கு முன்பாக , நான் இதை செய்து முடிப்பேன்!”
என்று கூறிய பிறகு, அங்கிருந்து மறைந்துபோனது. உடனே, அர்ச். அகுஸ்தீனார், மகா பரிசுத்த
தமதிரித்துவத்தின் பரம இரகசியத்தைப் பற்றிப்புரிந்துகொள்வதற்கு, தான் எடுத்து வந்த
பயனற்ற முயற்சிகள் பற்றி, தனக்கு அறிவுறுத்தும்படியாகவே, ஒரு சம்மனசானவரை இக்குழந்தையின்
உருவில் தன்னிடம், சர்வேசுரன் தாமே அனுப்பியிருக்கிறார், என்பதைக் கண்டுணர்ந்தார்.
மாபெரும்
திருச்சபையின் வேதபாரகரும் தந்தையுமான அர்ச்.அகுஸ் தீனாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
Download St. Augustine Books for Free
Click Here to download
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக