மே
0️4️ம் தேதி
அர்ச். மோனிக்கம்மாள் திருநாள்
திருச்சபையின்
மாபெரும் வேதபாரகரும், தூய ஞானத்தினுடைய
மாபெரும் ஆசிரியருமான அர்ச். அகுஸ்தீனாரின் தாயாரான அர்ச். மோனிக்கம்மாள், வட ஆப்ரிக்காவிலுள்ள தகாஸ்தே
என்ற இடத்தில் கி.பி.331ம்
வருடம் பிறந்தார்கள். மோனிக்கம்மாள், அர்ச். அகுஸ்தீனாருக்கு பூலோக ஜீவியத்தை மட்டுமல்லாமல் ஞான ஜீவியத்தையும் அளித்தவர்களாக,
அதாவது, பரலோக ஜீவியத்திற்கான மறுபிறப்பையும் அவர் அடையும்படிச் செய்து,
அவருக்கு இரட்டிப்பான தாயாராகத் திகழ்கின்றார்கள்! மோனிக்கம்மாளின்
பெற்றோர்கள் நல்ல கிறீஸ்துவர்களாயிருந்ததால், மோனிக்கம்மாளை அடக்கவொடுக் கத்திலும், கிறீஸ்துவ புண்ணியத்திலும் வளர்த்தனர்; சிறு வயதிலிருந்தே பக்திமுயற்சிகளை
அனுசரித்து வந்தார்கள்; இரவில்
உறக்கத்தை மேற்கொண்டு, அந்நேரத்தை, ஜெபத்தில் செலவழிப்பது, சர்வேசுரனை அதிகமாக மகிழ்விக்கக் கூடிய புண்ணியம் என்பதை தன் தாயிடமிருந்து
கற்றறிந்த நாள் முதல், மோனிக்கம்மாள்,
இரவில் எழுந்து ஜெபிக்கத் துவக்கினார்கள். ஏழைகள்
மேல் அதிக இரக்கமுள்ளவர்களாக, அர்ச். மோனிக்கம்மாள், அநேக நேரங்களில்
தனக்குண்டான உணவை முதலாய், ஏழைகளுடைய
பசியைப் போக்குவதற்காக அளித்து ஏழைகளைப் பராமரித்து வந்தார்கள். அர்ச். மோனிக்கம்மாள் எப்போதும் அலங்காரத்தைத் தவிர்த்தவர்களாக,
எளிமையாகவும் அடக்கவொடுக்கமாகவும் ஆடை அணிந்து வந்தார்கள்;
கன்னியாஸ்திரியாக சர்வேசுரனுக்கு தன்னை அர்ப்பணிக்க ஆசித்தார்கள்; ஆனால், பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, திருமணம் செய்து கொண்டார்கள்; ஒரு உத்தமமமான கிறீஸ்துவ
மனைவியாக ஜீவித்தார்கள்; மற்ற திருமணமான பெண்களுக்கெல்லாம்,
நன்மாதிரிகையாகத் திகழ்ந்தார்கள்; ஆனால், மோனிக்கம்மாளுடைய கணவன், பத்ரீசியுஸ், மூர்க்கக்
குணமுடையவராக, ஒழுக்கக்கேட்டிலும், அனேக துர்ப்பழக்கங்களுக்கு அடிமையாயிருந்ததாலும்,பக்தியுள்ள தன் மனைவியை ஆயிரக்கணக்கான
வழிகளில், சித்திரவதைச் செய்து உபத்திரவப்படுத்தி வந்தார்; இருப்பினும், மோனிக்கம்மாள், எப்போதும் தன் கணவனை தயவுடனும்
பெருந்தன்மையுடனும், சிநேகத்துடனும் நடத்தினார்கள்;
ஒருபோதும்,கணவனுடைய துர்க்குணங்களுக்காகக் கடிந்துகொண்டதில்லை! அநேக சமயங்களில் தன்னை
சபித்துத் திட்டியபோதிலும் கணவனுக்கு எதிராக ஒரு முரண்பாடான வார்த்தையும்
கூறாமல், மோனிக்கம்மாள் எப்போதும் தாழ்ச்சியும் சாந்தமும் உடையவர்களாக இருந்தார்கள். கணவனுடைய கோபம் நீங்கியவுடன், கிறீஸ்துவ அமைதியுடன், கணவன் செய்த குற்றத்தைப் பற்றி, மோனிக்கம்மாள், எடுத்துரைத்து வந்தார்கள்; கணவனின் மனந்திரும்புதலுக்காக இடைவிடாமல், சர்வேசுரனிடம் இரவு பகலாக ஜெபித்து
வந்தார்கள்; கொஞ்சமாக,கொஞ்சமாக மோனிக்கம்மாள் தன் கணவனை மனந்திருப்பி
வந்தார்கள்; இறுதியில், பத்ரீசியுஸ் தான் அனுசரித்து வந்த
மாணிக்கேயப் பதிதத்தை விட்டு விட்டு, உத்தம கத்தோலிக்கராக மனந்திரும்பி முன்மாதிரிகையான மேம்பட்ட ஜீவியம் ஜீவிக்கலானார்.
மோனிக்கம்மாளுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர்; இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.
அவர்களுக்கு கிறீஸ்துவ ஞான உபதேசக் கல்வியைக்
கற்பிப்பதில் மோனிக்கம்மாள் மாபெரும் கவனத்துடன் இருந்தார்கள். மூத்த மகன் அகுஸ்தீன்,
கீழ்ப்படியாத மகனாக இருந்தார்; குறிப்பாக அவருடைய தந்தை இறந்தபிறகு, ஒரு முரட்டுத்தனமான ஜீவியம்
ஜீவித்து வந்தார்; சுதந்திரமாக எந்த அறிவுரையையும் கேட்க
விருப்பமில்லாமல் பக்தியுள்ள தாயாருடைய அச்சுறுத்தல்களையும் கண்டு கொள்ளாமல், தன் இஷ்டம்போல் ஜீவித்து
வந்தார்; அச்சமயம் மாணிக்கேயப் பதிதத்திலும் சேர்ந்திருந்தார்.
அதேசமயம், அர்ச். மோனிக்கம்மாள், விதவையாகிவிட்ட தனது ஜீவிய அந்தஸ்தின்
கடமைகள் மட்டில், அர்ச். சின்னப்பர், தீமோத்தேயுவிற்கு எழுதிய முதல் நிரூபத்தின் அறிவுரைகளின் விதிமுறைகளை முறையுடன், அனுசரிக்கலானார்கள். தினமும் திவ்யபலி பூசை தவறாமல் பக்தியுடன்
கண்டு வந்தார்கள்; ஏழைகளுக்கு தர்மம் செய்து தாராளமாக உதவி வந்தார்கள்; தேவையற்ற
உரையாடல்களில் ஈடுபடாமலும்,தேவையற்ற இடங்களுக்குச் செல்லாமலும், ஞான வாசகங்கள் வாசிப்பதிலும்,
ஜெபிப்பதிலும், உழைப்பதிலும் இடைவிடாமல் ஈடுபட்டிருந்தார்கள்; ஏகாந்த
ஜீவியத்தை நேசித்தவர்களாக, தனிமையில் அமைதியான ஜீவியம் ஜீவிப்பதில் இளைப்பாறினார்கள்; மூத்த மகனுடைய துர்ப்பழக்கத்தினுடைய தீய ஜீவியத்தைப் பற்றிய
கவலை மட்டுமே, அர்ச். மோனிக்கம்மாளைப் பெரிதும் பாதித்தது! தனது மகன் அகுஸ்தீனுடைய
மனந்திரும்புதலுக்காக மோனிக்கம்மாள், திரளான கண்ணீர் விட்டு அழுதுகொண்டே, இரவு பகலாக சர்வேசுரனிடம்
தொடர்ந்து மன்றாடி ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்; இதே கருத்திற்காக மற்றவர்களிடமும்,
குருக்களிடமும் துறவியரிடமும், வேண்டிக் கொள்ளும்படி விண்ணப்பித்து வந்தார்கள்; ஒருநாள் ஒரு மேற்றிராணியாரிடம், தன் மகனுக்காக
வேண்டிக் கொள்ளும்படி கேட்ட போது, அந்த மேற்றிராணியார், மோனிக்கம்மாளிடம்,
“சமாதானமாகப் போங்கள்! ஒரு மகனுக்காக ஒரு
தாய் சிந்தும் இவ்வளவு அதிகமான கண்ணீர்கள் ஒருபோதும் வீண்போகாது”
என்று கூறி அனுப்பி வைத்தார்.
மேற்றிராணியாரின் இவ்வார்த்தைகள், மோனிக்கம்மா ளுக்கு ஆறுதல் அளித்தன; ஆனால்,
அச்சமயம், அர்ச். மோனிக்கம்மாள் கண்ட ஒரு பரலோகக்
காட்சியில், சர்வேசுரன் தாமே பிரத்தியட்சமாக, அகுஸ்தீனாருடைய
மனந்திரும்புதலைப் பற்றி அறிவித்ததைக் கண்டபிறகு, மோனிக்கம்மாள் மாபெரும் ஆறுதலடைந்தார்கள்.
அதேசமயம், அகுஸ்தீனார், சொல் இலக்கணத்திற்கான உயர்கல்வியை
கற்றபிறகு, கார்த்தேஜ் நகரை விட்டு, உரோமைக்குச்
செல்ல தீர்மானித்தார்.மோனிக்கம்மாள் பெருமுயற்சி செய்து, தன் மகனை உரோமைக்குச்
செல்வதைத் தடுக்கப் பார்த்தார்கள். மோனிக்கம்மாள் தேவாலயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, இரகசியமாக அகுஸ்தீன், உரோமைக்கான பயணத்தைத் துவக்கினார்; உரோமையை அடைந்தவுடன் அகுஸ்தீனுக்கு, உயிருக்கு ஆபத்தான பெரிய வியாதி வந்தது. இதைப்பற்றிக்கூறும்போது, “என் தாயாருடைய பக்திமிகுந்த
ஜெபங்களால் தான்,
என் நித்தியக் கேட்டை அடையும் படியாக, நான் அப்போது பாவத்திலேயே இறந்து போகவில்லை!” என்று பிற்காலத்தில் அர்ச். அகுஸ்தினார் குறிப்பிடுகின்றார்.
மகனுடைய வியாதியைப் பற்றி அறிந்ததும், மோனிக்கம்மாள், உடனே மகனைக் கண்காணித்து,
இரட்சணியப்பாதையில் சேர்த்து விடுவதற்காக உரோமைக்குச் செல்லத் தீர்மானித்தார்கள்; உரோமையை அடைந்ததும், மோனிக்கம்மாள், தன் மகன் உரோமைக்கு
சொல் இலக்கணத்தைக் கற்பிப்பதற்காக அழைக்கப்பட்டிருப்பதை அறிந்தார்கள்; அச்சமயம், தன் மகன் மிலான்
நகர மேற்றிராணியாரான அர்ச். அம்புரோசியாருடன் நிகழ்த்திய உரையாடல்களினால் பெரு மாற்றத்தை அடைந்திருப்பதைக்
கண்டு மோனிக்கம்மாள் மிகவும் அகமகிழ்ச்சியடைந்தார்கள்; அர்ச். மோனிக்கம்மாள், அர்ச். அம்புரோசியாரிடம், தன் மகனுடைய முழு மனந்திரும்புதல் வரை,
தளர்வில்லாத கண்டிப்புடன் ஞான உபதேசத்தைக் கற்பிக்கும்
படி விண்ணப்பித்தார்கள்.
இறுதியாக, சர்வேசுரன் தமது இரக்கத்தினால், இப்பரிசுத்த
விதவையான அர்ச். மோனிக்கம்மாளின் ஆவலை நிறைவேற்றத் திருவுளம்கொண்டார்.
அகுஸ்தீனார், மாணிக்கேயப் பதிதத்தைப்புறக்கணித்து கைவிட்டார்; மேலும்,
கத்தோலிக்கராக தனது 30வது வயதில், அர்ச்.
அம்புரோசியாரிடம் ஞானஸ்நானம்
பெற்றார்;
அர்ச்.
மோனிக்கம்மாளின் இடைவிடாத
ஜெபங்களுடையவும் கண்ணீர்களுடையவும் பலனாகத்தான், இவ்வுன்னதமான மனந்திரும்புதல் நிகழ்ந்தது; இதன்பின், அர்ச். மோனிக்கம்மாள், தன் மகனுடன் ஆப்ரிக்காவிற்குத்
திரும்ப ஆசித்தார்கள்; ஆனால், ஓஸ்டியாவை அடைந்ததும், அர்ச். மோனிக்கம்மாளுக்கு இலேசான காய்ச்சல் வந்தது; அப்போது தன் தாயார் பரலோக
மகிமைகள் பற்றி உரையாடிய உரையாடலின் இறுதிப்பகுதியைப் பற்றி, அர்ச். அகுஸ்தீனார் பின்வருமாறு விவரிக்கின்றார்: “என் மகனே! என்னைப்
பொருத்தவரை, இந்த உலகத்திலிருந்து, இன்னும்
வேறு ஒன்றையும், நான் எதிர்பார்க்கவில்லை! நான்
இறப்பதற்கு முன் உன்னை ஒரு
கத்தோலிக்கனாக பார்க்க வேண்டும் என்கிற ஒரே ஒரு ஆவல்
எனக்கு இருந்தது! நான் கேட்டதற்கு மேலாக
சர்வேசுரன் இக்காரியத்தில் எனக்கு அருளியிருக்கிறார்! ஏனெனில், நீ சர்வேசுரனுக்கு ஊழியம்
செய்வதில் ஈடுபட்டிருப்பது மட்டுமல்லாமல், நீ பூலோக சந்தோஷத்தையெல்லாம்
அருவருத்துப் புறக்கணித்தும் விட்டிருக்கிறாய்! ஆதலால், இனி நான் செய்யக்கூடிய வேறு என்ன
காரியம் இவ்வுலகில் இருக்கிறது?”
அர்ச். மோனிக்கம்மாளுடைய வியாதி
அதிகரித்தது் ஒன்பது
நாட்களுக்குப் பிறகு,மோட்சத்தை தன் வாழ்நாளெல்லாம் மிகவும்
ஆசித்த அர்ச். மோனிக்கம்மாள், அநேக புண்ணியங்களால் அலங்கரித்திருந்த
தனது ஆத்துமத்தை தனது சிருஷ்டிகரிடம் ஒப்படைக்கும்படியாக,
தனது 56வது வயதில் 387ம்
வருடம் ஆகஸ்டு 27ம் தேதியன்று பாக்கியமாய்
மரித்தார்கள். அர்ச். மோனிக்கம்மாள் இறப்பதற்கு முன்பாக, தன் இரு மகன்களிடமும்,
கூறியதைப் பற்றி அர்ச். அகுஸ்தீனார், பின்வருமாறு விவரிக்கின்றார்: “நீங்கள் எங்கே அடக்கம் செய்ய விரும்புகிறீர்களோ, அங்கே என் சரீரத்தைக் கிடத்துங்கள்! நான்
இறந்ததைப் பற்றிய எந்த நினைவும் உங்களைக்
கஷ்டப்படுத்துவதற்கு அனுமதியாதேயுங்கள்! நான் உங்களிடம் ஒரே
ஒரு காரியத்தைத்தான்
கேட்கிறேன்: நீங்கள் எங்கிருந்தபோதிலும், எல்லாம் வல்லவரும் சர்வாதி கர்த்தருமானவரின் பரிசுத்த பலிபீடத்தின் முன்பாக என்னை நினைவு கூருங்கள்!” கல்லறையின்
அருகில் தனது பரிசுத்த தாயாரின்
சரீரத்தைக் கிடத்தியபடி, மரித்தோருக்கான திவ்யபலி பூசை நிறைவேற்றப்பட்டது, என்பதை அர்ச்.
அகுஸ்தினார் எழுதி
வைத்தார்.✝
அர்ச்.
மோனிக்கம்மாளே! எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும்!