Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

July 15- St. Hentry the 2nd - அர்ச். 2ம்ஹென்றி

 


 

ஜுலை 1️5️ம் தேதி

 

சக்கரவர்த்தியும் ஸ்துதியருமான அர்ச். 2ம்ஹென்றி திருநாள்

 


                2ம் ஹென்றி, 973ம் வருடம், மே 6ம் தேதியன்று பவேரிய நாட்டின் அரசனுடைய மகனாகவும், ஜெர்மனி நாட்டு அரசரான முதலாம் ஹென்றியின் கொள்ளுப்பேரனாகவும் பிறந்தார்.இரண்டு முந்தின சக்கரவர்த்திகள் ஆண்ட சமயத்தில், இவருடைய தந்தை அந்த சக்கரவர்த்திகளை எதிர்த்து நின்றதால், அடிக்கடி நாடுகடத்தப்பட்டார். சின்ன 2ம் ஹென்றியும் தந்தையுடன் அடிக்கடி நாடுகடத்தப்பட்ட நிலையில் ஜீவிக்க நேர்ந்தது. இச்சூழ்நிலை தான், இவரை சிறுவயதிலேயே, சர்வேசுரனையும், திருச்சபையையும் அண்டிப் போகும்படி தூண்டுவதற்குக் காரணமாயிற்று.. 995ம் வருடம், இவருடைய தந்தையின் மறைவிற்குப் பிறகு, இவர் பவேரியா நாட்டின் சிற்றரசரானார்.

         இவருடைய ஒன்றுவிட்ட சகோதரனும், பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியுமான 3ம் ஓட்டோ, , ஜெர்மனியின் படைவீரர்களின் துணையுடன், இத்தாலியில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறுகிற புரட்சியை ஒடுக்கி அடக்கும்படியாக, 1002ம் வருடம், இவரை தன்னிடம் வரும்படி, அழைத்தார்.

                ஆனால், இவர் சக்கரவர்த்தியின் அரண்மனையை அடைவதற்குள் 3ம் ஓட்டோ சக்கரவர்த்தி காய்ச்சலினால் இறந்தார். அவருக்கு வாரிசு யாருமில்லாததால், 2ம்ஹென்றி, ஜெர்மனியின் அரசராக 1002ம் வருடம் ஜுலை 9ம் தேதியன்று முடிசூட்டப்பட்டார். 2ம் ஹென்றி, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக மட்டுமே, இந்த உலகத்தை, அரசராள வேண்டும் என்கிற ஒரே உன்னத நோக்கத்துடன், அரசருடைய  பத்திராசனத்தில் ஏறி அமர்ந்தார்.

                வட ஐரோப்பாவிலிருந்து தாக்குதல் நடத்திய அஞ்ஞானிகளும் காட்டுமிராண்டிகளும், உரோமை சாம்ராஜ்ஜியத்தை கொள்ளை யடித்துக்  கொண்டிருந்தனர். மிகப்பெரிய அவர்களுடைய படைகளுக்கு முன்பாக அர்ச். 2ம் ஹென்றி தனது சிறிய படையுடன் சென்று அவர்களை எதிர்த்துப் போரிட்டார். ஆனால், இவருடைய படையணிகளை, சம்மனசுகளும், அர்ச்சிஷ்டவர்களும், புதுமையாகத் தோன்றி, வழிநடத்தினர்! ஆதலால், அஞ்ஞானிகளுடைய படைகள், அவநம்பிக்கைக்கும் குழப்பத்திற்கும் உட்பட்டவர்களாக, பல்வேறு திசைகளில் சிதறி ஓடினர். இவ்விதமாக காட்டுமிராண்டிகளின் தொல்லைகளிலிருந்து, பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தை, அர்ச். 2ம் ஹென்றி காப்பாற்றினார். போலந்து, பொஹேமியா, மொராவியா, பர்கண்டி ஆகிய நாடுகளை வென்று, தனது உரோமை சாம்ராஜ்ஜியத்துடன் சேர்த்துக் கொண்டார். பன்னோனியா, ஹங்கேரி நாடுகளை, சத்திய கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்த்தார்.

                ஜெர்மனியில் சத்திய கத்தோலிக்க வேத விசுவாசத்தை ஸ்திரமாக ஸ்தாபித்தபிறகு, அர்ச். 2ம் ஹெனறி அரசர், இத்தாலிக்குள் அணிவகுத்துச் சென்றார். கிரகோரி என்ற எதிர்பாப்புவை அகற்றி விட்டு, 8ம் பெனடிக்ட் பாப்பரசரை, வரவழைத்து, மறுபடியும், பாப்பரசரின் பத்திராசனத்தில் அமர்த்தினார். 8ம் பெனடிக்ட் பாப்பரசர், அர்ச். 2ம் ஹென்றி அரசருக்கு, 1014ம் வருடம் பிப்ரவரி 14ம் தேதியன்று, பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியின் மகுடத்தைச் சூட்டினார்.

                சக்கரவர்த்தி 2ம் ஹென்றி, எந்த நகரத்திற்குச் சென்றாலும், அங்கு அந்நகரிலுள்ள  மகா பரிசுத்த தேவமாதாவின் ஒரு தேவாலயத்திற்குச் சென்று, ஜெபிப்பதில் தன் முதல் இரவைக் கழிப்பதைத் தன் பக்தியுள்ள வழக்கமாகக் கொண்டிருந்தார். அர்ச். ஹென்றி, உரோமாபுரிக்குச் சென்றபோது, அங்கிருந்த மகா பரிசுத்த தேவமாதாவின் தலைமை தேவாலயமான மேரி மேஜர்  பசிலிக்காவில் தனது முதல் இரவைக் கழிக்கும்படியாக,  ஜெபித்துக் கொண்டிருந்தபோது,  உன்னதரும் நித்திய குருவுமான நமதாண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதர் சுவாமி, திவ்ய பலிபூசை நிகழ்த்துவதற்காக தேவாலயத்தினுள் நுழைவதைக் கண்டார். அர்ச். லாரன்ஸும், அர்ச். வின்சென்டும், தியாக்கோன் மற்றும் உபதியாக்கோன்களாக முறையே, திவ்யபலிபூசைக்கு உதவி செய்ய  அங்கு வந்ததையும் கண்டார். தேவாலயம் முழுவதும் எண்ணற்ற அர்ச்சிஷ்டவர்களால் நிரம்பியது. சம்மனசுகள் பாடற்குழுவினரின் அறையில் இருந்தபடி, மகா இனிமையான பரலோக இசையில் பாடினர். மகா பரிசுத்த தேவமாதாவும் திவ்யபலிபூசையைக் காணும்படி தேவாலயத்தினுள் மிகுந்த பக்திபற்றுதலுடன் முழங்காலிலிருந்தார்கள்.  நடுப்பூசையிலும், திவ்ய நன்மை நேரத்திலும், தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, ஆண்டவரை ஆராதித்தார்கள்!

                சுவிசேஷம் வாசித்தபிறகு, மகா பரிசுத்த தேவமாதா அனுப்பிய ஒரு சம்மனசானவர், சுவிசேஷத்தை முத்தமிடும்படியாக, அர்ச். ஹென்றியிடம் கொண்டு வந்தார். அச்சமயம், யாக்கோபுவிற்குச் செய்ததைப் போல, அந்த சம்மனசானவர், இவருடைய தொடையை மெதுவாகத் தொட்டு, “நீ அனுசரிக்கிற பரிசுத்த கற்பின் விரத்தத்துவத்தின் பேரிலும், நீதியின் பேரிலும், சர்வேசுரன் காண்பிக்கிற சிநேகத்தின் அடையாளத்தை ஏற்றுக்கொள்!” என்று கூறினார். அந்நேரமுதல், பரிசுத்த உரோமைச் சக்கரவர்த்தி 2 ஹென்றி,  தன் எஞ்சிய வாழ்நாள் காலத்தில் எப்போதும் நொண்டியாக இருந்தார்.

                தாவீதரசரைப்போல், அர்ச். 2ம் ஹென்றி தனது போர்களில் அடைந்த சகல வெற்றிகளின் பலன்களையெல்லாம், திருச்சபையின் ஊழியத்திற்குப் பயன்படுத்தினார். உரோமை சாம்ராஜ்ஜியத்திலிருந்த காடுகள், சுரங்கங்கள், மேலும், தனது திரவியசாலை அளிக்கக்கூடிய மிகச் சிறந்த கனிகள் யாவற்றையும்,                  சர்வேசுரனுடைய தேவாலயங் களின் மகா பரிசுத்த சன்னிதானங்களுக்காக அர்ப்பணித்தார்: தனது சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த நாடுகளின் அரசாங்கங்களின் உயர்ரக கதீட்ரல் தேவாலயங்கள், உன்னதமான துறவற மடங்கள், எண்ணிக்கையில்லாத தேவாலயங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு, தன் சாம்ராஜ்ஜியத்தின் திரவியங்கள் எல்லாவற்றையும் பயன் படுத்தினார். ஒரு காலத்தில் அஞ்ஞான இருளினுடைய ஐரோப்பியப் பகுதியாக இருந்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் ஜெர்மனி மற்றும் அதைக் சேர்ந்த வடக்குப் பகுதியை அர்ச். 2ம் ஹென்றி, இவ்வளவான தேவாலயங்கள், துறவற மடங்களால் ஒளிர்வித்து அர்ச்சித்துப் பரிசுத்தப்படுத்தினார்.

                1024ம் வருடம், ஜுலை 15ம் தேதி, அர்ச். 2ம் ஹென்றி சக்கரவரதேவாலயங்கள், ெர்ஸ்டாடு அருகிலுள்ள குரோன் கோட்டையில் பாக்கியமாய் மரித்தார்.  சர்வேசுரனுடைய பரலோக இராஜ்ஜியத்தையே எப்போதும் தன் கண்முன் கொண்டவராக, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக மட்டுமே, தன்னுடைய உலக இராஜ்ஜியத்தை  மிகுந்த பொறுப்புடன் ஆண்டு நடத்திய உன்னத அர்ச்சிஷ்ட அரசரான 2ம் ஹென்றியின் மரணத்தை, நாட்டு மக்களும், திருச்சபை அதிகாரிகளும்  உகந்த விதத்தில் அனுசரித்தனர். 1146ம் வருடம், 3ம் யூஜின், பாப்பரசர் அர்ச். 2ம்ஹென்றிக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.

 

பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியும் ஸ்துதியருமான அர்ச். 2ம் ஹென்றியே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக