Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Tamil Catholic saints லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil Catholic saints லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஆகஸ்ட், 2024

August 13, St. Casian, அர்ச்‌. காஸ்‌ஸியான்

 

ஆகஸ்டு 13ம் தேதி

ஆசிரியர்களின் பாதுகாவலரும், வேதசாட்சியுமான அர்ச்‌. காஸ்ஸியான் திருநாள்.




            இவர், ஒரு கத்தோலிக்கப் பள்ளிக்கூட ஆசிரியர்;இத்தாலியில், ராவென் னாவிலிருந்து 27 மைல் தொலைவிலுள்ள இமோலா என்ற நகரில்,200 மாணவர்களுக்கு எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இவரை உரோமப் படைவீரர்கள் கைது செய்து, இமோலாவின் உரோமை ஆளுநன் முன்பாக விசாரணைக்குக் கொண்டு வந்து நிறுத்தினர்; உரோமைச் சக்கரவர்த்தியும் கிறிஸ்துவ வேதத்தை மறுதலித்தவனுமான ஜூலியன் ஆண்டபோது, கிறீஸ்துவர்களைத் துன்புறுத்தி உபத்திரவப்படுத்திய காலத்தில்,இவர் கைது செய்யப்பட்டார்; உரோமை அஞ்ஞான விக்கிரகங்களை, வழிபடக் கட்டாயப்படுத்தப்பட்டபோது, அர்ச்‌. காஸ்ஸியான், பசாசுகளான அவ்விக்கிரகங்களை வழிபட மறுத்திருந்ததால், சக்கரவர்த்தியின் ஆணையை மீறிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருந்தார்.

            மூர்க்கனும், காட்டுமிராண்டியுமான ஆளுநன், அர்ச்‌. காஸ்ஸியான் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் என்பதைக் கேள்விப்பட்டவுடன், அவருடைய மாணவர்களால் குத்தப்பட்டு, அவர் கொல்லப்பட வேண்டும் என்று கட்டளையிட்டான். அர்ச்‌.  காஸ்ஸியான், ஆடைகள் அகற்றப்பட்டு, ஒரு தூணில் கட்டப்பட்டார்; 200 மாணவர்களும், இரும்பிலான கூர்மையான எழுது கோல்களைக் கொண்டு, அவர்களுடைய ஆசிரியரான அர்ச்‌. காஸ்ஸியானைக் குத்திக் கொடூரமாகக் கொன்றனர். மெழுகினால் மூடப்பட்டிருக்கும் ஒரு மரப்பலகையின் மீது , இந்த கூர்மையான ஆணி போன்ற இந்த எழுதுகோல்களால், எழுத்துக்களை உருவாக்கி எழுதுவது, அக்காலத்தில் நடைமுறைப் பழக்கமாயிருந்தது. இங்கு கொலைஞர்கள், சிறுவர்களாயிருந்ததாலும், கொலை செய்வதற்கான கருவி எழுதுகோல் என்ற சிறிய கருவியாயிருந்ததாலும், வேதசாட்சியாகக் கொல்லப்பட்ட அர்ச்‌. காஸ்ஸியான் அனுபவித்த வேதனை அதிகக் கொடூரமானதாகவும், மிக நீண்ட நேரத்திற்கும் நீடித்தது!

            200 மாணவர்கள், மத்தியில் அகப்பட்டிருந்த அர்ச்‌. காஸ்ஸியானின் தலையின் மீதும், முகத்தின் மீதும், சில மாணவர்கள், தங்கள் நோட்டுப்பலகைகளை வீசி எறிந்தனர்; அவற்றை, அவருடைய சரீரத்தின் மீது உடைத்தனர்: மற்ற மாணவர்கள், அவர்களுடைய இரும்பு பென்சில்களால் அவரைக் குத்தித்துளைத்தனர்; அவருடைய தோலையும் , சதையையும் கிழித்தனர்; அவருடைய வயிற்றைக் குத்திக் கிழித்தனர்; சில காட்டுமிராண்டி மாணவர்கள், அவருடைய தோலின் மீது, கக்தியினால், அவர்களுடைய பெயர்களை செதுக்கி எழுதினர்.

            இவ்விதமாக, அர்ச்‌. காஸ்ஸியானின் பரிசுத்த சரீரம், அவருடைய இரத்தத்தினால் மூடப்பட்டது; சரீரத்தின் ஒவ்வொரு இடமும், காய மடைந்தது;சரீரம் முமுவதும் காயங்களால் நிறைந்தது; அர்ச்‌. காஸ்ஸியான், தன் சிறு கொலைஞர்களிடம், இன்னும் மாபெரும் பலத்துடன் தன்னை அடித்துத் தாக்கும்படி, மகிழ்வுடன் கூறினார். இக்கொடிய பாவத்தை செய்வதற்கு, அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக, அவர் அவ்வாறு கூறவில்லை! மாறாக, நமதாண்டவருக்காக தனது உயிரை விடுவதற்கு, தனக்கு இருந்த மாபெரும் ஆவலை அறிவிக்கும்படியாகவே, அவ்விதம் கூறினார். ஆயிரக்கணக்கான காயங்களிலிருந்து மிகுதியாக இரத்தம் வெளியேறியதாலேயே, அர்ச்‌. காஸ்ஸியான், மகிழ்ச்சியாக 368ம் வருடம், ஆகஸ்டு 13ம் தேதியன்று, இறந்து, மகிமையான வேதசாட்சிய முடியைப் பெற்றுக் கொண்டார்.

            இமோலாவில், இவருடைய பரிசுத்த சரீரத்தை, கிறீஸ்துவர்கள் பூஜிதமாக அடக்கம் செய்தனர். இமோலாவிலுள்ள ஒரு கதீட்ரலில் கட்டப்பட்டிருக்கும், மிக ஆடம்பரமான ஒரு ஷேக்திரத்தில், அர்ச்‌. காஸ்ஸியானின் பரிசுத்த சரீரம் பொது வணக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! அர்ச்‌. அம்புரோசியார் குறிப்பிடுவதுபோல், இந்த இரும்பு பென்சில் அல்லது எழுதுகோலின் ஒரு முனை கூர்மையாக, மெழுகு மரப்பலகைகளில், எழுதுவதற்கு ஏற்றதாகவும், மறுமுனை மழுங்கலாகவும், சமமானதாகவும், எழுதியதை அழிப்பதற்காகவும் இருந்தது! இவர் , 12ம் பத்திநாதர் பாப்பரசரால் 1952ம் வருடம், முத்திப்  பேறு பட்டமளிக்கப்பட்டு, இத்தாலி நாட்டின் சுருக்கெழுத்தாளர் அல்லது தட்டெழுத்தாளர்களின் பாதுகாவலராக ஏற்படுத்தப்பட்டார்.       

நல்லாசிரியர்களின் பாதுகாவலரும், வேதசாட்சியுமான அர்ச்‌. காஸ்ஸியானே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்! 

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 21 - அர்ச்.சிலுவை சின்னப்பர் (April 28) St. Paul of Cross

ஏப்ரல் 28 தேதி


ஸ்துதியரும் வேதபாரகருமான அர்ச்.சிலுவை சின்னப்பர் திருநாள்




இவர் வடக்கு இத்தாலியிலுள்ள லிகூரியா மாகாணத்திலுள்ள  ஓவடா என்ற ஊரில் 1694ம் வருடம் ஜனவரி 3ம் தேதியன்று பிறந்தார்; பியட்மோன்ட்டின் அலெஸ்ஸான்டிரியாவிற்கு அருகிலுள்ள காஸ்டலா ஸோவைச் சேர்ந்த உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாயாருக்கு, இவர் பிறப்பதற்கு முன் ஏற்பட்ட பிரசவவேதனையின் சமயத்தில், ஒரு அதிசய பரலோக ஒளி இவருடைய தாயார் படுத்திருந்த அறையை ஒளிர்வித்தது! இப்பரலோக ஒளி, இவருடைய வருங்கால பரிசுத்தத்தனத்தினுடைய ஒளியின்  பிரகாசத்தை முன்னறிவித்தது! மேலும், இவர் குழந்தையாயிருந்தபோது, ஆற்றில் விழுந்து விட்டார்; அச்சமயம், பரலோக இராக்கினியான மகா பரிசுத்த தேவமாதா, புதுமையாக, இவரை எந்தக் கேடும் இல்லாமல் காப்பாற்றினார்கள்! புத்தி விவரம் வந்த நாள் முதற்கொண்டு, இவர், சிலுவையில் அறையுண்டிருக்கும் நேச ஆண்டவர் மீதான அத்தியந்த சிநேகத்தினால் நிறைந்திருந்தார்! மேலும், சிலுவையில் அறையுண்டிருக்கும் திவ்ய இரட்சகர் மீதான  தியானத்தில், அதிக நேரத்தை செலவிடத் துவக்கினார்.

இவர் தனது மாசற்ற சரீரத்தை கண்விழிப்புகளாலும், உபவாசங்களாலும், சாட்டை கசை அடிகளாலும், ஒறுத்துத் தண்டித்து வந்தார்; வெள்ளிக்கிழமைகளில், பிச்சுக் கலந்த காடியைக் குடித்து வந்தார்; மற்ற எல்லா விதமான கடின தபசுகளையும் ஒறுத்தல் முயற்சிகளையும் அனுசரித்து வந்தார். ஒரு வேதசாட்சியாக, சத்திய வேதத்திற்காக தன் உயிரை விடுவதற்கு ஆசித்தவராக, துருக்கியருக்கு எதிரான போரில் சண்டையிடுவதற்காக, வெனிஸில் திரட்டப்பட்ட  படைவீரர்களின் பட்டியலில் தன்னையும் சேர்க்கும்படிச் செய்தார்; ஆனால், சர்வேசுரனுடைய திருச்சித்தம், இதற்கு மாறாக இருப்பதை, ஜெபிக்கும்போது உணர்ந்தார்;  படைக் கருவிகளுடன் சண்டையிடும் இராணுவத்தில் சேர்வதைக் கைவிட்டார்; ஆனால், தன் சகல வல்லமையுடனும் எல்லா மனிதர்களுடைய நித்திய இரட்சணியத்திற்காகப் பாடுபடுகிற திருச்சபையைப் பாதுகாக்கிற உன்னதமான இராணுவத்தில் சேரத் தீர்மானித்தார்; இவர் வீடு திரும்பியதும், மிக செல்வாக்கும் புகழும் சம்பாதிக்கக் கூடிய திருமணத்தையும், தன் மாமா விட்டுச் சென்ற ஆஸ்தியையும் மறுத்து விட்டார்; குறுகலான சிலுவைப் பாதையினுள் நுழையவும்,மேற்றிராணியாரிடமிருந்து கரடுமுரடான துறவற உடுப்பைப் பெற்றுக்கொள்ளவும் இவர் ஆசித்தார்;  பின் இவர் மேற்றிராணியாருடைய கட்டளையினால், இவர் குருவானவராக இல்லாதபோதே, இவருடைய ஜீவியத்தின் மேம்பட்ட பரிசுத்தத்தனத்தினிமித்தமாகவும், தேவ காரியங்கள் பற்றி இவர் பெற்றிருந்த அறிவின் காரணமாகவும், சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததினால், ஆண்டவருடைய வயலில் உழுது , மாபெரும் பலனை அறுவடை செய்தார்; அநேக ஆத்துமங்களை ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்தார்;

இவர் உரோமாபுரிக்குச் சென்றார்; வேத இயல் கற்ற பிறகு, 13ம் ஆசீர்வாதப்பர் பாப்பரசரின் கட்டளையால், குருப்பட்டம் பெற்றார்; இவர் தன்னுடன் கூட சகக் குருக்களைச் சேர்த்துக் கொள்வதற்கு, பாப்பரசர் அனுமதியளித்தார்; அதன்படி, ஏற்கனவே தன்னை அர்ஜென்டாரோ மலைக்கு வரும்படி மகா பரிசுத்த தேவமாதா அழைத்திருந்த அதே மலைக்குச்  சென்று, ஏகாந்த ஜீவியம் ஜீவிக்கச் சென்றார்; மேலும் மகா பரிசுத்த தேவமாதா காண்பித்திருந்த அவர்களுடைய திவ்ய குமாரனுடைய  பரிசுத்தப் பாடுகளைக் குறிக்கும் அடையாள சின்னத்தைப் பொறித்த கறுப்பு உடுப்பை உடுத்திக்கொண்டார்; அங்கே அவர் ஒரு புதிய துறவற சபையை ஸ்தாபித்தார்; அது தான் “ஆண்டவருடைய பரிசுத்தப் பாடுகளின் துறவற சபை”. குறுகிய காலத்தில், சர்வேசுரனுடைய ஆசீர்வாதத்தினால், இத்துறவறசபை மிக துரிதமாக அதிகரித்து வளர்ச்சியடைந்தது! இவருடைய கடினமான அயரா உழைப்பினால் இத்துறவற சபை வளர்ந்து வந்தது; அநேக உயர்குடும்பங்களைச் சேர்ந்த மனிதர்களும் இச்சபையில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்; இத்துறவற சபைக்கான உறுதிப்பாட்டை ஒரு முறைக்கு மேலாக திருச்சபையின் தலைமையகத்திலிருந்து பெற்றுக் கொண்டது! அர்ச்.சிலுவை சின்னப்பர் ஜெபத்தில் பெற்றுக் கொண்ட இச்சபைக்கான விதிமுறைகளையும் திருச்சபை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது; “நமதாண்டவரின் பரிசுத்தப் பாடுகள் பற்றிய  ஆசிர்வதிக்கப்பட்ட ஞாபகத்தை ஊக்குவித்துப் பரப்புவது” என்கிற நான்காவது வார்த்தைப்பாடும் இத்துறவற சபையின் வார்த்தைப் பாடுகளுடன் சேர்க்கப்பட்டது!

பரிசுத்த கன்னியர்களின் ஒரு துறுவற சபையையும் இவர் ஸ்தாபித்தார்; இப்பரிசுத்தக் கன்னியர், இடைவிடாமல், தேவ பத்தாவானவருடைய சகலத்தையும் மிஞ்சும் உன்னதமான  சிநேகத்தைப் பற்றி தியானித்துக் கொண்டிருப்பார்கள்!

இந்த எல்லா ஞான அலுவல்களிலும், இவர் ஆன்மாக்கள் மேல் கொண்டிருந்த அயரா சிநேகமானது, ஒருபோதும், இவர் சுவிசேஷத்தைப் போதிப்பதில் சோர்வடையாமலிருக்கும்படிச் செய்தது! இவர் எண்ணிக்கையில்லாத திரளான மனிதர்களை, மிகவும் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மனிதர்களையும், பதிதத் தப்பறையில் விழுந்த மனிதர்களையும் கூட மனந்திருப்பி, இரட்சணியத்தின் பாதைக்குக் கூட்டிவந்து சேர்த்தார்! இவருடைய நேர்த்தியான பேச்சுத்திறனுடைய வல்லமை, விசேஷமாக  ஆண்டவருடைய பரிசுத்தப பாடுகள் பற்றி இவர் பேசியபோது, எவ்வளவு ஆச்சரியத்திற்குரிதாயிருந்ததென்றால், இப்பிரசங்கத்தின் போது, இவரும், ஆண்டவருடைய பரிசுத்தப் பாடுகள் மட்டிலான இவருடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்களும்  கண்ணீர் சிந்தி அழுவார்கள்! மகாக் கடினப்பட்ட இருதயங்களும் இதைக் கேட்டு, மனஸ்தாபப் பட்டு மனந்திரும்பினார்கள்!

 அர்ச்.சிலுவை சின்னப்பருடைய இருதயத்தில் தேவசிநேக அக்கினி சுவாலை எவ்வளவாக பற்றியெரிந்ததென்றால், இவருடைய இருதயத்திற்கு அருகிலிருந்த  துறவற அங்கிப்பகுதி, நெருப்பினால் எரிந்ததைப் போல் தீய்ந்து போயிருக்கும்!இவருடைய விலா எலும்புகள் இரண்டு, தேவசிநேக மிகுதியால் இருதயம் விரிவடைந்ததினிமித்தமாக துருத்திக் கொண்டிருந்ததைப் போல் தோன்றின!

இவர் திவ்யபலிபூசையை நிறைவேற்றும்போது, இவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்தக் கூடாமல் போகும்! இவர் அடிக்கடி பக்திபரவசத்தில் ஆழ்ந்திருப்பார்! இச்சமயங்களில், இவருடைய சரீரம் குறிப்பிடத்தக்க அளவில் நிலத்தை விட்டு மேலே உயரும்! இவருடைய முகம் பரலோக ஒளியால் பிரகாசிக்கும்! சில சமயங்களில் இவர், பிரசங்கம் நிகழ்த்தும்போது,இவரை ஊக்குவிக்கும் விதமாக பரலோகக் குரலொலி கேட்கப்படும்! மற்ற சமயங்களில், இவருடைய பிரசங்கம் பல மைல்கள் தொலைவிலுள்ள ஊர்களுக்கும் கேட்கும்!

தீர்க்கதரிசன வரமும், பலமொழிபேசும் வரமும், பிறருடைய இருதய இரகசியங்களை அறியும் வரமும், தீய ஆவிகள், நோய்கள் மட்டில் இவர் கொண்டிருந்த வல்லமை ஆகியவை இவர் கொண்டிருந்த விசேஷ தேவ கொடைகளாகும்! பாப்பரசர்களால் இவர் மிகுந்த மேரை வணக்கத்துடன் நடத்தப்பட்ட போதிலும், இவர் தன்னை பயனற்ற ஊழியன் என்றும் தகுதியற்ற பாவி என்றும் கருதினார்; இறுதியாக,  இவர் தனது கடின தபசின் மிகுதியால், தனது 81வது வயதில், 1775ம் வருடம் அக்டோபர் 18ம் தேதியன்று  உரோமாபுரியில் பாக்கியமாக மரித்தார்; இவர் ஏற்கனவே  தீர்க்கதரிசனமாக அறிவித்தபடி, அதே நாளன்று மரித்தார்;அதற்கு முன்பாக மகா அழகிய அறிவுரையை தன் துறவியருக்குக் கூறினார்;  அதுவே இத்துறவியருக்கு இவர் அளித்தத் தன் மரண சாசனமாகவும், உயிலாகவும் இருந்தது! திருச்சபையின் இறுதி தேவதிரவிய அனுமானங்களாலும், பெற்று, பரலோகக் காட்சியினாலும் திடம் பெற்றவராக பாக்கியமாய் மரித்தார். 9ம் பத்திநாதர் இவருக்கு முத்திப் பேறு பட்டமும், அர்ச்சிஷ்டப்பட்டமும் அளித்தார்.

அர்ச்.சிலுவை சின்னப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


To Read more about Saints - Click Here



Tags: St. Paul of Cross, Saint. Paul of Cross, Saints life History in Tamil, 

வியாழன், 18 ஜனவரி, 2024

அர்ச். எவுப்பிறாசியம்மாள் - Ste. EUPHRASIE

மார்ச் மாதம் 13-ந் தேதி. 

அர்ச். எவுப்பிறாசியம்மாள் திருநாள். 

 Ste. EUPHRASIE. 








 கொன்ஸ்காண்டி னொப்பொலி பட்டணத்திலே துரை மக்களான தாய் தகப்பனிடத்தில் அர்ச். எவுப்பிறாசியம்மாள் பிறந்தாள். அவர்கள் அவ்வரசின் இரா யனுக்கு நெருங்கிய உறவாயிருந்ததினால் அவர்களுக்கு வெகு மகிமையாய் இருந்தது. அவளுடைய தாயானவள் மிகப் புண்ணியவதியாயிருந்தமையால் தன்னுடைய மகள் தரும வழியிலே நடக்கப் புத்திமதி சொல்லித் தேவ பத்தியில் பழக்க வெகு பிரயாசைப்பட்டாள். பாவத்தைப் பகைத்துச் சேசுநாதரையும் அவருடைய திருத் தாயாரையுஞ் சிநேகித்திருக்க மகளுக்குத் தாயானவள் அடிக்கடி புத்தி சொன்னதினாலே  ஐந்து வயதுள்ள எவுப்பிறாசியம்மாள் அப்படி நடக்கிறதை கண்டு ஆச்சரியப்பட்டார்கள். இந்தச் சிறு பிள்ளை தாயாருடன் இராயன் அரண்மனைக்குப் போகிற போது இராயனும் இராணியும் அரண்மனையிலேயிருந்த மற்றவர்களும் இந்தம்மாளுடைய பத்தியையும் புத்தியையுங் கண்டு இவளை மிகவுங் கொண்டாடிப் போற்றுவார்கள். இந்தப் பெண் ஒரு துரைமகனுக்கு வாழ்க்கைப்பட வேண்டுமென்று அரசன் கட்டளையிட்டான். 

எவுப்பிறாசியம்மாளுடைய தகப்பனார் காலஞ் சென்ற பிறகு அவளுடைய தாய் அவள் பேரில் அதிக பட்சம் வைத்து வெகு நேர்த்தியாய் விசாரித்து நடத்தினாள். எவுப்பிறாசியம்மாளுக்கு ஏழு வயது நடக்கும் போது தாயும் இவளும் எஜிப்து தேசத்திற்குப் போய்க் கன்னியர் மடத்திற்குப் போனார்கள். எவுப்பிறாசியம்மாள் அந்தக் கன்னியர்கள் மடத்தையுங் கண்டு அவர்களுடைய தரும நடக்கையையும் அறிந்து அவர்களுடன் தானும் இருக்க ஆசைப்பட்டதினாலே தான் அங்கே யிருக்கிறதன்றி வெளியிலே போகிறதில்லை யென்று சொன்னாள். தாயுங் கூடவந்த மற்றவர்களும் அந்த மடத்தை விட்டுத் தங்கள் அரண்மனைக்கு அவளைக் கூட்டிக் கொண்டு போக எவ்வளவு பிரயாசைப்பட்டாலும் எவுப்பிறாசியம்மாள் அதற்குச் சம்மதிக்கவில்லை. தாய் இதைக் கண்டு ஞான சந்தோஷப்பட்டதுமன்றி மகள் கேட்ட காரியத்திற்குஞ் சம்மதித்தாள். ஆதலால் தாய் தன்னுடைய அரண்மனைக்குப் போன போது எவுப்பிறாசியம்மாள் அந்தக் கன்னியர்கள் மடத்திலே இருந்து விட்டாள். அவளுக்கு வயது கொஞ்சமாய் இருந்ததினாலே மற்ற கன்னியர்களைப் போல அவள் ஒரு சந்தியாயிருக்கமாட்டாள், செபம் பண்ணமாட்டாள், தபசு பண்ணமாட்டாள், அதற்குத் தக்க பிராயமாகுமட்டும் பிள்ளைகளுக்குரிய விதமாய் அவளை நடத்தவேண்டி இருக்குமென்று அந்தக் கன்னியர்கள் நினைத்திருக்கிறது, அவர்கள் நினைத்ததற்கு மாறாக மற்றவர்களை விட அந்தப் புண்ணியங்களை அதிக சுறுசுறுப்போடே செய்துகொண்டு வந்தாள். 



அந்தக் கன்னியர்கள் அதைக் கண்டு ஆச்சரியப் பட்டு இவள் பேரில் விசேஷமான பட்சம் வைத்தார் கள். இவளுடைய தாய் மரணமடைந்த செய்தியை இராயன் அறிந்து தம்மாலே குறிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு எவுப்பிறாசியம்மாள் வாழ்க்கைப்பட வேண்டுமென்று இந்தம்மாளுக்குச் சொல்லி அனுப்பினான். ஆனால் எவுப்பிறாசியம்மாள் இராயனுக்கு அனுப்பின கடிதத்தில் எழுதியிருந்ததாவது: இராயரே, உம்மாலே குறிக்கப்பட்ட மாப்பிள்ளையை விட மேலானவர் சேசுநாதர். சேசுநாதருக்கு என்னுடைய கன்னிமையை ஒப்புக்கொடுத்ததினால் என்னை முழுவதும் அவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன். ஆகையினால் நான் சாகுமட்டும் எப்பொழுதுங் கன்னிகையாய் இருக்கிறதன்றி நான் ஒருவருக்கும் வாழ்க்கைப்பட மாட்டேன். என்னுடைய ஆஸ்தியெல்லாந் தரும காரியத்திலே செலவழிக்கத் தேவரீரை மன்றாடுகிறேனென்று எழுதினாள். 

இராயன் அந்தக் கடிதத்தை வாசித்த பிறகு ஞான சந்தோஷப்பட்டு அவள் ஆசைப்பட்டதிற்கு விக்கினம் பண்ணினதில்லை. 

அந்தம்மாள் அந்த மடத்திலே பண்ணின ஆச்சரியமான புண்ணியங்களால் அங்கேயிருந்த கன்னியர்கள் மிகவும் அவளைப் புகழ்வார்கள். இந்தப் புகழ்ச்சி அவர் களுக்குள்ளே ஒருத்திக்குப் பொருந்தாமல் பொறாமை வருவித்ததினாலே இவள் அந்தப் புண்ணியவதி பேரிலே வர்மம் வைத்து அவளுக்கு அநியாய தொந்தரவு  பண்ணத் துவக்கினாள். எவுப்பிறாசியம்மாள் மிகுந்த பொறுமை காட்டி தாழ்ச்சியி னாலே அவளுடைய காலிலே விழுந்து மன்னிப்பு கேட்டாள். பசாசு அவளுக்கு வருவித்த எண்ணப்படாத சோதனைகளை யெல்லாம் வேண்டுதலைக்கொண்டு நீக்கி வென்றாள்.  ஆச்சரியத்திற்குரிய அநேகம் புதுமைகளைச் செய்தாள். 

தனக்கு சாவு கிட்டியிருக்கிறதென்று ஆண்டவராலே புதுமையாய் அறிந்து மரணத்திற்கு உத்தமமான ஆயத்தம் பண்ணினாள். அவளுக்குக் காய்ச்சல் வந்த பிறகு அவள் நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணித் தேவநற்கருணையும் அவஸ்தைப் பூசுதலும் பெற்று சேசு மரியே என்னும் திருநாமங்களைப் பத்தியோடே சொல்லி 412-ம் வருஷத்தில் நல்ல மரணத்தை அடைந்தாள். 

கிறீஸ்துவர்களே! ஒரு சிறு பிள்ளையின் ஆச்சரியமான பத்தியுஞ் சாதுரியப் பேச்சும் யாவரும் அதிசயமாய் எண்ணுவதுபோல் கொஞ்ச வயதுள்ள அர்ச். எவுப்பிறாசியம் மாளிடத்திலே உண்டான உத்தம பத்தியையும் நீங்கள் ஆச்சரியத்தோடே பார்த்துக் கண்டு பாவிக்கப் பிரயாசைப்பட வேண்டும். அந்தம்மாளுக்கு ஏழு வயது நடக்கிற போது அவள் மெத்த வயதுள்ளவளைப்போல் புண்ணியங்களைச் செய்து வந்தாளென்று கேட்டீர்களே; அவளுடைய தாய் இந்தச் சிறு பிள்ளைக்குச் சொன்ன நல்ல புத்தியானது அந்த ஆச்சரியமான பத்தி வொழுக்கத்திற்கு ஓர் காரணமா யிருந் தது. 

"தாய் தகப்பன்மார்களே! அத்தகைய நல்லொழுக்கம் உங்கள் மக்களிடத்திலே காண வேண்டுமானால் உங்களுடைய கடனின்படியே அவர்களுக்கான புத்தி சொல்ல வேண்டும். சில தாய்மார் தங்கள் மக்களுடைய சரீரத்தை அலங்கரிக்க மிகுந்த உடமைகளைச் சம்பாதித்துக் கொடுக்கப் பிரயாசைப்படுவதொழிய மக்கள் ஆத்துமத்தை அலங்கரிக்க மக்களுக்குப் புண்ணிய சற்குணம் வருவிக்கப் பிரயாசைப்படுகிறதில்லை. அதினால் தங்கள் பிள்ளைகள் சிலாக்கியம் ஆங்கார முதலிய துராசாபாசங்களினால் கெட்டுப்போவதற்குக் காரணமாகிறார்கள். இத்தகைய தாய்மார்கள் சர்வேசுரனுக்கு என்ன கணக்கு சொல்லப்போகிறார்கள்? அர்ச். எவுப்பிறாசியம்மாள் கொன்ஸ்தான்டினோப்பிள் இராயன் சொன்னபடிக்குத் தனக்கு நியமித்திருந்த மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டால் உலக செல்வ பாக்கியம்   அவளுக்குத் திரளாய் வந்திருக்கும். ஆனால் அவள் அந்தப் பாக்கிய மெல்லாஞ் சாகிறபோது கட்டாயமாய் விடவேண்டியிருந்ததினாலே அந்தம்மாள் அந்தப் பாக்கியத்தைத் தனக்கு வேண்டாமென்று புத்தியுள்ளவள்போல் சொன்னாள், 

ஊழியம் பண்ணுகிற ஒருவன் தன்னுடைய எசமான் தன்னை இனிமேல் தள்ளுவா னென்று நிச்சயமாய் அறிந்திருந்தால் எசமான் தன்னை அவமானத்தோடே தள்ளுவதற்கு முந்தித் தன் எசமானை விட்டுவிடுவது மேல் அல்லவோ? உலகத்திற்கு ஊழியம் பண்ணுகிறவர்கள் எத்தனை ஆஸ்தி எத்தனை மகிமை அனுபவித்தாலும் வாழ்வு நாளில் அவர்களுக்குப் பல பாவ தந்திரத்திற்குக் காரணமான அந்தப் பாக்கிய மெல்லாம் அவர்கள் சாகும்போது அவர்களை விட்டு விடும். 

இதைக் கேட்கிறவனே உலக பாக்கியம் உன்னை ஏமாற்றி விடுகிறதற்கு முந்தி நீயே அதை விட்டு விடுவது மேல். ஒரு ஆஸ்கிக்காரன் சாகிற போது தன்னுடைய ஆஸ்திகளையெல்லாம் எட்டுவிட வேண்டுமென்பதினாலே அவனுக்கு வெகு துக்க துயரமுஞ் சலிப்பும் வரும். ஒரு பிச்சைக்காரன் சாகிற போது விடுவதற்கு ஒன்றுமில்லாததினாலே முன் சொல்லப்பட்ட துக்க துயர சலிப்பு அவனுக்கு வருவ தற்கு இடமில்லை. நீங்கள் உலக பாக்கியத்தின் பேரிலே ஆசை விருப்பம் வையாமலிருந்தால் அந்தப் பாக்கியத்தை விட்டுவிடுவதுபோல் ஆகும்.





புதன், 2 பிப்ரவரி, 2022

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 9

 மகாப் பரிசுத்த தேவநற்கருணைப்புதுமை அர்ச். பிலிப் நேரியார் திவ்ய பலிபூசை செய்ததால் நான்கு யூதர்கள் மனந்திரும்பின புதுமை


16வது நூற்றாண்டில், ரோமாபுரியில் ஜீவித்த அநேக அர்ச்சிஷ்டவர்களுள் அர்ச்.பிலிப் நேரியாரும் ஒருவர். இவர் தமது ஆன்ம இரட்சணிய அலுவலினாலும், ஞானமிக்க பிரசங்கங்களினாலும், எண்ணற்ற பாவிகளை மனந்திருப்பினார். அப்பொழுது அந்நகரத்தில், நான்கு யூத சகோதரர்கள் வசித்து வந்தனர். அவர்கள் கன்னெஞ்சர்கள். குருக்கள் சொன்ன நற்புத்திமதிகளை எத்தனை முறை கேட்டாலும், மனந் திரும்பாமல் இருந்தனர். இந்த நான்கு யூதர்களையும், சிலர், அர்ச். பிலிப்பு நேரியாரிடம் கூட்டிச் சென்றனர். அர்ச். பிலிப் நேரியார், அவர்களுக்கு அதிக சிநேகத்தைக் காண்பித்து, அவர்களிடம், "மோட்சத்துக்குப் போகிற மெய்யான வழி எது என்று நீங்கள் அறியும்படிக்கு, உங்களுடைய பிதாக்களாகிய அபிரகாம், ஈசாக், யாக்கோபு என்பவர்களைப் படைத்த சர்வேசுரனைப் பார்த்து வேண்டிக் கொள்ளுங்கள்'' என்றார். அதற்கு அவர்கள் சம்மதித்தனர். அர்ச். பிலிப், "நாளைக்கு நாமும் திவ்ய பலிபூசையில் வேண்டிக் கொள்வோம்" என்றார். 

பின்பு அவர்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள். கூட வந்தவர்கள், "அர்ச்சிஷ்டவர், அவர்களுக்கு வேறு புத்தி எதுவும் சொல்லவில்லை", என்று ஆச்சரியப்பட்டார்கள். இதை அவர் கண்டு, அவர்களைப் பார்த்து, "நாளைக்கு நாம் திவ்ய பலிபூசை நிறைவேற்றுகிறபோது, அவர்கள் மனந்திரும்புவார்கள்'' என்று கூறினார். அந்த நான்கு யூதர்களும் தங்களுடைய வீட்டிற்குப் போனபிறகு, மற்ற யூதர்கள் அவர்களிடத்தில் வந்து, அர்ச். பிலிப் நேரியார் அவர்களுக்கு என்ன புத்தி சொன்னார் என்று கேட்க, "அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவர் எத்தனைப் புத்தி சொன்னாலும், நாங்கள் கேட்போமா , நம் வேதத்தை விடுவோமா?'' என்று அவரைப் பரிகாசம் பண்ணும் வகையில் பேசினார்கள். ஆனால், மறுநாள் அர்ச்சிஷ்டவர், திவ்ய பலிபூசை செய்கையில், அந்த நான்கு யூதர்களும் புதுமையாக மனந்திரும்பினர். மற்ற யூதர் முன்பாக, தாங்கள் கிறிஸ்துவர்களாக விரும்புவதாகத் தெரிவித்தனர். அந்த நான்கு யூதர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன், ஞான உபதேசம் கேட்கிறபோது, அவர்களில் ஒருவனுக்குக் கடின காய்ச்சல் கண்டு படுக்கையில் கிடந்தான். அர்ச். பிலிப், இதை அறிந்து அந்தக் காய்ச்சல்காரனிடத்தில் போய், "நீ கிறிஸ்துவனான தினால் உனக்கு சாவு வந்தது" என்பார்கள். நாளைக்கு நான் திவ்ய பலிபூசை நிறைவேற்றுகையில் உனக்காக வேண்டிக்கொள்ள ஆள் அனுப்பு" என்றார். அன்று இரவு அவனுடைய உடல் நிலை மிக மோசமாயிருந்தது. மருத்துவர், இவன் பிழைக்கமாட்டான் என்று தெரிவித்து விட்டார். மறுநாள் அவன் பேச்சில்லாமல் அவஸ்தையாயிருந்த போது, அருகிலிருந்தவன் உரத்த சத்தமாய், "பிலிப்பு நேரியார் நேற்று சொன்னபடி, உனக்காக வேண்டிக்கொள்ள ஆள் ஆனப்ப வேண்டுமோ?" என்று கேட்டான். அவன் தலையசைத்து, ஆமென்று அடையாளம் காண்பித்தான். 

அப்படியே பிலிப்பு நேரியாரிடம், ஆள் போய், வியாதிக்காரன் தனக்காகப் பூசையில் வேண்டிக்கொள்ள மன்றாடினாரென்று சொன்னதும் தவிர, அவனும் திவ்ய பலிபூசையைப் பக்தியுடன் கண்டான். அப்படியே அர்ச். பிலிப்பு பூசையில் வேண்டிக் கொண்டார். திவ்ய பலிபூசை முடிந்த பிறகு, அவன் திரும்பிச் சென்றான். அவஸ்தைக்காரன் வீட்டிற்கு சென்றதும், அங்கு நோயாளி நலமுடனிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான் . " எப்படி உனக்கு திடீரென்று சுகம் கிடைத்தது? எந்த நேரத்தில் உனக்கு சுகம் கிடைத்தது?" என்று நோயாளியிடம் கேட்டதற்கு, அர்ச். பிலிப் நேரியார் திவ்ய பலிபூசை செய்கிற நேரத்தில் அவனுக்குக் குணமானது என்று அறிந்து கொண்டான்.

கிறிஸ்துவர்களே! ஆத்துமத்தின் வியாதியாகிய பாவமும், சரீரத்தின் வியாதியும் திவ்ய பலிபூசைப்பலத்தினால் நீங்கிப்போகும். உங்கள் உறவினர் அல்லது மற்றவர்களுக்குள்ளே பாவியாயிருக்கிறவர்கள் மனந்திரும்ப , நீங்கள் பக்தியோடு காண்கிற பூசையில் அவர்களுக்காக மகா பக்தி சுறுசுறுப்போடு வேண்டிக்கொண்டு, அந்தப் பூசையைப் பிதாவாகியசர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுங்கள். தேவ பூசையின் பலத்தினால் அப்பேர்பட்ட பாவிகள் மனந்திரும்புவார்கள். கல்வாரி மலைமேல் சிலுவை மரத்தில் நிறைவேற்றப்பட்ட திவ்ய பலிபூசையில், அருகில் இருந்த நல்ல கள்ளன் மனந்திரும்பினான். இரத்தம் சிந்தப்பட்ட அந்தப் பூசைக்குள்ள பலன், இரத்தம் சிந்தாத இந்தப் பூசைக்கும் இருக்கிறதினால், அதனுடைய பலத்தினால் அப்போது பாவி மனந்திரும்பினதுபோல், இந்தப் பூசை பலத்தினால் இப்போதும் பாவிகள் மனந்திரும்புவர். உங்கள் உறவினருள் யாதொரு வியாதிக்காரன் உண்டானால், நீங்கள் கோவிலுக்குப் போய் பக்தியோடு பூசைக்கண்டு, ஆண்டவருக்கு சித்திமிருந்தால் இந்த வியாதிக்காரனுக்குக் குணமுண்டாகும்படி, நீங்கள் கண்ட பூசையை ஒப்புக்கொடுத்தால் அந்தப் பூசையின் பலத்தினால் வியாதிக்காரருக்கு சுகம் கிடைக்கும்.