Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 17 ஆகஸ்ட், 2024

August 13, St. Casian, அர்ச்‌. காஸ்‌ஸியான்

 

ஆகஸ்டு 13ம் தேதி

ஆசிரியர்களின் பாதுகாவலரும், வேதசாட்சியுமான அர்ச்‌. காஸ்ஸியான் திருநாள்.




            இவர், ஒரு கத்தோலிக்கப் பள்ளிக்கூட ஆசிரியர்;இத்தாலியில், ராவென் னாவிலிருந்து 27 மைல் தொலைவிலுள்ள இமோலா என்ற நகரில்,200 மாணவர்களுக்கு எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இவரை உரோமப் படைவீரர்கள் கைது செய்து, இமோலாவின் உரோமை ஆளுநன் முன்பாக விசாரணைக்குக் கொண்டு வந்து நிறுத்தினர்; உரோமைச் சக்கரவர்த்தியும் கிறிஸ்துவ வேதத்தை மறுதலித்தவனுமான ஜூலியன் ஆண்டபோது, கிறீஸ்துவர்களைத் துன்புறுத்தி உபத்திரவப்படுத்திய காலத்தில்,இவர் கைது செய்யப்பட்டார்; உரோமை அஞ்ஞான விக்கிரகங்களை, வழிபடக் கட்டாயப்படுத்தப்பட்டபோது, அர்ச்‌. காஸ்ஸியான், பசாசுகளான அவ்விக்கிரகங்களை வழிபட மறுத்திருந்ததால், சக்கரவர்த்தியின் ஆணையை மீறிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருந்தார்.

            மூர்க்கனும், காட்டுமிராண்டியுமான ஆளுநன், அர்ச்‌. காஸ்ஸியான் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் என்பதைக் கேள்விப்பட்டவுடன், அவருடைய மாணவர்களால் குத்தப்பட்டு, அவர் கொல்லப்பட வேண்டும் என்று கட்டளையிட்டான். அர்ச்‌.  காஸ்ஸியான், ஆடைகள் அகற்றப்பட்டு, ஒரு தூணில் கட்டப்பட்டார்; 200 மாணவர்களும், இரும்பிலான கூர்மையான எழுது கோல்களைக் கொண்டு, அவர்களுடைய ஆசிரியரான அர்ச்‌. காஸ்ஸியானைக் குத்திக் கொடூரமாகக் கொன்றனர். மெழுகினால் மூடப்பட்டிருக்கும் ஒரு மரப்பலகையின் மீது , இந்த கூர்மையான ஆணி போன்ற இந்த எழுதுகோல்களால், எழுத்துக்களை உருவாக்கி எழுதுவது, அக்காலத்தில் நடைமுறைப் பழக்கமாயிருந்தது. இங்கு கொலைஞர்கள், சிறுவர்களாயிருந்ததாலும், கொலை செய்வதற்கான கருவி எழுதுகோல் என்ற சிறிய கருவியாயிருந்ததாலும், வேதசாட்சியாகக் கொல்லப்பட்ட அர்ச்‌. காஸ்ஸியான் அனுபவித்த வேதனை அதிகக் கொடூரமானதாகவும், மிக நீண்ட நேரத்திற்கும் நீடித்தது!

            200 மாணவர்கள், மத்தியில் அகப்பட்டிருந்த அர்ச்‌. காஸ்ஸியானின் தலையின் மீதும், முகத்தின் மீதும், சில மாணவர்கள், தங்கள் நோட்டுப்பலகைகளை வீசி எறிந்தனர்; அவற்றை, அவருடைய சரீரத்தின் மீது உடைத்தனர்: மற்ற மாணவர்கள், அவர்களுடைய இரும்பு பென்சில்களால் அவரைக் குத்தித்துளைத்தனர்; அவருடைய தோலையும் , சதையையும் கிழித்தனர்; அவருடைய வயிற்றைக் குத்திக் கிழித்தனர்; சில காட்டுமிராண்டி மாணவர்கள், அவருடைய தோலின் மீது, கக்தியினால், அவர்களுடைய பெயர்களை செதுக்கி எழுதினர்.

            இவ்விதமாக, அர்ச்‌. காஸ்ஸியானின் பரிசுத்த சரீரம், அவருடைய இரத்தத்தினால் மூடப்பட்டது; சரீரத்தின் ஒவ்வொரு இடமும், காய மடைந்தது;சரீரம் முமுவதும் காயங்களால் நிறைந்தது; அர்ச்‌. காஸ்ஸியான், தன் சிறு கொலைஞர்களிடம், இன்னும் மாபெரும் பலத்துடன் தன்னை அடித்துத் தாக்கும்படி, மகிழ்வுடன் கூறினார். இக்கொடிய பாவத்தை செய்வதற்கு, அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக, அவர் அவ்வாறு கூறவில்லை! மாறாக, நமதாண்டவருக்காக தனது உயிரை விடுவதற்கு, தனக்கு இருந்த மாபெரும் ஆவலை அறிவிக்கும்படியாகவே, அவ்விதம் கூறினார். ஆயிரக்கணக்கான காயங்களிலிருந்து மிகுதியாக இரத்தம் வெளியேறியதாலேயே, அர்ச்‌. காஸ்ஸியான், மகிழ்ச்சியாக 368ம் வருடம், ஆகஸ்டு 13ம் தேதியன்று, இறந்து, மகிமையான வேதசாட்சிய முடியைப் பெற்றுக் கொண்டார்.

            இமோலாவில், இவருடைய பரிசுத்த சரீரத்தை, கிறீஸ்துவர்கள் பூஜிதமாக அடக்கம் செய்தனர். இமோலாவிலுள்ள ஒரு கதீட்ரலில் கட்டப்பட்டிருக்கும், மிக ஆடம்பரமான ஒரு ஷேக்திரத்தில், அர்ச்‌. காஸ்ஸியானின் பரிசுத்த சரீரம் பொது வணக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! அர்ச்‌. அம்புரோசியார் குறிப்பிடுவதுபோல், இந்த இரும்பு பென்சில் அல்லது எழுதுகோலின் ஒரு முனை கூர்மையாக, மெழுகு மரப்பலகைகளில், எழுதுவதற்கு ஏற்றதாகவும், மறுமுனை மழுங்கலாகவும், சமமானதாகவும், எழுதியதை அழிப்பதற்காகவும் இருந்தது! இவர் , 12ம் பத்திநாதர் பாப்பரசரால் 1952ம் வருடம், முத்திப்  பேறு பட்டமளிக்கப்பட்டு, இத்தாலி நாட்டின் சுருக்கெழுத்தாளர் அல்லது தட்டெழுத்தாளர்களின் பாதுகாவலராக ஏற்படுத்தப்பட்டார்.       

நல்லாசிரியர்களின் பாதுகாவலரும், வேதசாட்சியுமான அர்ச்‌. காஸ்ஸியானே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக