Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 21 - அர்ச்.சிலுவை சின்னப்பர் (April 28) St. Paul of Cross

ஏப்ரல் 28 தேதி


ஸ்துதியரும் வேதபாரகருமான அர்ச்.சிலுவை சின்னப்பர் திருநாள்




இவர் வடக்கு இத்தாலியிலுள்ள லிகூரியா மாகாணத்திலுள்ள  ஓவடா என்ற ஊரில் 1694ம் வருடம் ஜனவரி 3ம் தேதியன்று பிறந்தார்; பியட்மோன்ட்டின் அலெஸ்ஸான்டிரியாவிற்கு அருகிலுள்ள காஸ்டலா ஸோவைச் சேர்ந்த உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாயாருக்கு, இவர் பிறப்பதற்கு முன் ஏற்பட்ட பிரசவவேதனையின் சமயத்தில், ஒரு அதிசய பரலோக ஒளி இவருடைய தாயார் படுத்திருந்த அறையை ஒளிர்வித்தது! இப்பரலோக ஒளி, இவருடைய வருங்கால பரிசுத்தத்தனத்தினுடைய ஒளியின்  பிரகாசத்தை முன்னறிவித்தது! மேலும், இவர் குழந்தையாயிருந்தபோது, ஆற்றில் விழுந்து விட்டார்; அச்சமயம், பரலோக இராக்கினியான மகா பரிசுத்த தேவமாதா, புதுமையாக, இவரை எந்தக் கேடும் இல்லாமல் காப்பாற்றினார்கள்! புத்தி விவரம் வந்த நாள் முதற்கொண்டு, இவர், சிலுவையில் அறையுண்டிருக்கும் நேச ஆண்டவர் மீதான அத்தியந்த சிநேகத்தினால் நிறைந்திருந்தார்! மேலும், சிலுவையில் அறையுண்டிருக்கும் திவ்ய இரட்சகர் மீதான  தியானத்தில், அதிக நேரத்தை செலவிடத் துவக்கினார்.

இவர் தனது மாசற்ற சரீரத்தை கண்விழிப்புகளாலும், உபவாசங்களாலும், சாட்டை கசை அடிகளாலும், ஒறுத்துத் தண்டித்து வந்தார்; வெள்ளிக்கிழமைகளில், பிச்சுக் கலந்த காடியைக் குடித்து வந்தார்; மற்ற எல்லா விதமான கடின தபசுகளையும் ஒறுத்தல் முயற்சிகளையும் அனுசரித்து வந்தார். ஒரு வேதசாட்சியாக, சத்திய வேதத்திற்காக தன் உயிரை விடுவதற்கு ஆசித்தவராக, துருக்கியருக்கு எதிரான போரில் சண்டையிடுவதற்காக, வெனிஸில் திரட்டப்பட்ட  படைவீரர்களின் பட்டியலில் தன்னையும் சேர்க்கும்படிச் செய்தார்; ஆனால், சர்வேசுரனுடைய திருச்சித்தம், இதற்கு மாறாக இருப்பதை, ஜெபிக்கும்போது உணர்ந்தார்;  படைக் கருவிகளுடன் சண்டையிடும் இராணுவத்தில் சேர்வதைக் கைவிட்டார்; ஆனால், தன் சகல வல்லமையுடனும் எல்லா மனிதர்களுடைய நித்திய இரட்சணியத்திற்காகப் பாடுபடுகிற திருச்சபையைப் பாதுகாக்கிற உன்னதமான இராணுவத்தில் சேரத் தீர்மானித்தார்; இவர் வீடு திரும்பியதும், மிக செல்வாக்கும் புகழும் சம்பாதிக்கக் கூடிய திருமணத்தையும், தன் மாமா விட்டுச் சென்ற ஆஸ்தியையும் மறுத்து விட்டார்; குறுகலான சிலுவைப் பாதையினுள் நுழையவும்,மேற்றிராணியாரிடமிருந்து கரடுமுரடான துறவற உடுப்பைப் பெற்றுக்கொள்ளவும் இவர் ஆசித்தார்;  பின் இவர் மேற்றிராணியாருடைய கட்டளையினால், இவர் குருவானவராக இல்லாதபோதே, இவருடைய ஜீவியத்தின் மேம்பட்ட பரிசுத்தத்தனத்தினிமித்தமாகவும், தேவ காரியங்கள் பற்றி இவர் பெற்றிருந்த அறிவின் காரணமாகவும், சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததினால், ஆண்டவருடைய வயலில் உழுது , மாபெரும் பலனை அறுவடை செய்தார்; அநேக ஆத்துமங்களை ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்தார்;

இவர் உரோமாபுரிக்குச் சென்றார்; வேத இயல் கற்ற பிறகு, 13ம் ஆசீர்வாதப்பர் பாப்பரசரின் கட்டளையால், குருப்பட்டம் பெற்றார்; இவர் தன்னுடன் கூட சகக் குருக்களைச் சேர்த்துக் கொள்வதற்கு, பாப்பரசர் அனுமதியளித்தார்; அதன்படி, ஏற்கனவே தன்னை அர்ஜென்டாரோ மலைக்கு வரும்படி மகா பரிசுத்த தேவமாதா அழைத்திருந்த அதே மலைக்குச்  சென்று, ஏகாந்த ஜீவியம் ஜீவிக்கச் சென்றார்; மேலும் மகா பரிசுத்த தேவமாதா காண்பித்திருந்த அவர்களுடைய திவ்ய குமாரனுடைய  பரிசுத்தப் பாடுகளைக் குறிக்கும் அடையாள சின்னத்தைப் பொறித்த கறுப்பு உடுப்பை உடுத்திக்கொண்டார்; அங்கே அவர் ஒரு புதிய துறவற சபையை ஸ்தாபித்தார்; அது தான் “ஆண்டவருடைய பரிசுத்தப் பாடுகளின் துறவற சபை”. குறுகிய காலத்தில், சர்வேசுரனுடைய ஆசீர்வாதத்தினால், இத்துறவறசபை மிக துரிதமாக அதிகரித்து வளர்ச்சியடைந்தது! இவருடைய கடினமான அயரா உழைப்பினால் இத்துறவற சபை வளர்ந்து வந்தது; அநேக உயர்குடும்பங்களைச் சேர்ந்த மனிதர்களும் இச்சபையில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்; இத்துறவற சபைக்கான உறுதிப்பாட்டை ஒரு முறைக்கு மேலாக திருச்சபையின் தலைமையகத்திலிருந்து பெற்றுக் கொண்டது! அர்ச்.சிலுவை சின்னப்பர் ஜெபத்தில் பெற்றுக் கொண்ட இச்சபைக்கான விதிமுறைகளையும் திருச்சபை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது; “நமதாண்டவரின் பரிசுத்தப் பாடுகள் பற்றிய  ஆசிர்வதிக்கப்பட்ட ஞாபகத்தை ஊக்குவித்துப் பரப்புவது” என்கிற நான்காவது வார்த்தைப்பாடும் இத்துறவற சபையின் வார்த்தைப் பாடுகளுடன் சேர்க்கப்பட்டது!

பரிசுத்த கன்னியர்களின் ஒரு துறுவற சபையையும் இவர் ஸ்தாபித்தார்; இப்பரிசுத்தக் கன்னியர், இடைவிடாமல், தேவ பத்தாவானவருடைய சகலத்தையும் மிஞ்சும் உன்னதமான  சிநேகத்தைப் பற்றி தியானித்துக் கொண்டிருப்பார்கள்!

இந்த எல்லா ஞான அலுவல்களிலும், இவர் ஆன்மாக்கள் மேல் கொண்டிருந்த அயரா சிநேகமானது, ஒருபோதும், இவர் சுவிசேஷத்தைப் போதிப்பதில் சோர்வடையாமலிருக்கும்படிச் செய்தது! இவர் எண்ணிக்கையில்லாத திரளான மனிதர்களை, மிகவும் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மனிதர்களையும், பதிதத் தப்பறையில் விழுந்த மனிதர்களையும் கூட மனந்திருப்பி, இரட்சணியத்தின் பாதைக்குக் கூட்டிவந்து சேர்த்தார்! இவருடைய நேர்த்தியான பேச்சுத்திறனுடைய வல்லமை, விசேஷமாக  ஆண்டவருடைய பரிசுத்தப பாடுகள் பற்றி இவர் பேசியபோது, எவ்வளவு ஆச்சரியத்திற்குரிதாயிருந்ததென்றால், இப்பிரசங்கத்தின் போது, இவரும், ஆண்டவருடைய பரிசுத்தப் பாடுகள் மட்டிலான இவருடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்களும்  கண்ணீர் சிந்தி அழுவார்கள்! மகாக் கடினப்பட்ட இருதயங்களும் இதைக் கேட்டு, மனஸ்தாபப் பட்டு மனந்திரும்பினார்கள்!

 அர்ச்.சிலுவை சின்னப்பருடைய இருதயத்தில் தேவசிநேக அக்கினி சுவாலை எவ்வளவாக பற்றியெரிந்ததென்றால், இவருடைய இருதயத்திற்கு அருகிலிருந்த  துறவற அங்கிப்பகுதி, நெருப்பினால் எரிந்ததைப் போல் தீய்ந்து போயிருக்கும்!இவருடைய விலா எலும்புகள் இரண்டு, தேவசிநேக மிகுதியால் இருதயம் விரிவடைந்ததினிமித்தமாக துருத்திக் கொண்டிருந்ததைப் போல் தோன்றின!

இவர் திவ்யபலிபூசையை நிறைவேற்றும்போது, இவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்தக் கூடாமல் போகும்! இவர் அடிக்கடி பக்திபரவசத்தில் ஆழ்ந்திருப்பார்! இச்சமயங்களில், இவருடைய சரீரம் குறிப்பிடத்தக்க அளவில் நிலத்தை விட்டு மேலே உயரும்! இவருடைய முகம் பரலோக ஒளியால் பிரகாசிக்கும்! சில சமயங்களில் இவர், பிரசங்கம் நிகழ்த்தும்போது,இவரை ஊக்குவிக்கும் விதமாக பரலோகக் குரலொலி கேட்கப்படும்! மற்ற சமயங்களில், இவருடைய பிரசங்கம் பல மைல்கள் தொலைவிலுள்ள ஊர்களுக்கும் கேட்கும்!

தீர்க்கதரிசன வரமும், பலமொழிபேசும் வரமும், பிறருடைய இருதய இரகசியங்களை அறியும் வரமும், தீய ஆவிகள், நோய்கள் மட்டில் இவர் கொண்டிருந்த வல்லமை ஆகியவை இவர் கொண்டிருந்த விசேஷ தேவ கொடைகளாகும்! பாப்பரசர்களால் இவர் மிகுந்த மேரை வணக்கத்துடன் நடத்தப்பட்ட போதிலும், இவர் தன்னை பயனற்ற ஊழியன் என்றும் தகுதியற்ற பாவி என்றும் கருதினார்; இறுதியாக,  இவர் தனது கடின தபசின் மிகுதியால், தனது 81வது வயதில், 1775ம் வருடம் அக்டோபர் 18ம் தேதியன்று  உரோமாபுரியில் பாக்கியமாக மரித்தார்; இவர் ஏற்கனவே  தீர்க்கதரிசனமாக அறிவித்தபடி, அதே நாளன்று மரித்தார்;அதற்கு முன்பாக மகா அழகிய அறிவுரையை தன் துறவியருக்குக் கூறினார்;  அதுவே இத்துறவியருக்கு இவர் அளித்தத் தன் மரண சாசனமாகவும், உயிலாகவும் இருந்தது! திருச்சபையின் இறுதி தேவதிரவிய அனுமானங்களாலும், பெற்று, பரலோகக் காட்சியினாலும் திடம் பெற்றவராக பாக்கியமாய் மரித்தார். 9ம் பத்திநாதர் இவருக்கு முத்திப் பேறு பட்டமும், அர்ச்சிஷ்டப்பட்டமும் அளித்தார்.

அர்ச்.சிலுவை சின்னப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


To Read more about Saints - Click Here



Tags: St. Paul of Cross, Saint. Paul of Cross, Saints life History in Tamil, 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக