Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

St. Philip Neri லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
St. Philip Neri லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 பிப்ரவரி, 2022

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 9

 மகாப் பரிசுத்த தேவநற்கருணைப்புதுமை அர்ச். பிலிப் நேரியார் திவ்ய பலிபூசை செய்ததால் நான்கு யூதர்கள் மனந்திரும்பின புதுமை


16வது நூற்றாண்டில், ரோமாபுரியில் ஜீவித்த அநேக அர்ச்சிஷ்டவர்களுள் அர்ச்.பிலிப் நேரியாரும் ஒருவர். இவர் தமது ஆன்ம இரட்சணிய அலுவலினாலும், ஞானமிக்க பிரசங்கங்களினாலும், எண்ணற்ற பாவிகளை மனந்திருப்பினார். அப்பொழுது அந்நகரத்தில், நான்கு யூத சகோதரர்கள் வசித்து வந்தனர். அவர்கள் கன்னெஞ்சர்கள். குருக்கள் சொன்ன நற்புத்திமதிகளை எத்தனை முறை கேட்டாலும், மனந் திரும்பாமல் இருந்தனர். இந்த நான்கு யூதர்களையும், சிலர், அர்ச். பிலிப்பு நேரியாரிடம் கூட்டிச் சென்றனர். அர்ச். பிலிப் நேரியார், அவர்களுக்கு அதிக சிநேகத்தைக் காண்பித்து, அவர்களிடம், "மோட்சத்துக்குப் போகிற மெய்யான வழி எது என்று நீங்கள் அறியும்படிக்கு, உங்களுடைய பிதாக்களாகிய அபிரகாம், ஈசாக், யாக்கோபு என்பவர்களைப் படைத்த சர்வேசுரனைப் பார்த்து வேண்டிக் கொள்ளுங்கள்'' என்றார். அதற்கு அவர்கள் சம்மதித்தனர். அர்ச். பிலிப், "நாளைக்கு நாமும் திவ்ய பலிபூசையில் வேண்டிக் கொள்வோம்" என்றார். 

பின்பு அவர்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள். கூட வந்தவர்கள், "அர்ச்சிஷ்டவர், அவர்களுக்கு வேறு புத்தி எதுவும் சொல்லவில்லை", என்று ஆச்சரியப்பட்டார்கள். இதை அவர் கண்டு, அவர்களைப் பார்த்து, "நாளைக்கு நாம் திவ்ய பலிபூசை நிறைவேற்றுகிறபோது, அவர்கள் மனந்திரும்புவார்கள்'' என்று கூறினார். அந்த நான்கு யூதர்களும் தங்களுடைய வீட்டிற்குப் போனபிறகு, மற்ற யூதர்கள் அவர்களிடத்தில் வந்து, அர்ச். பிலிப் நேரியார் அவர்களுக்கு என்ன புத்தி சொன்னார் என்று கேட்க, "அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவர் எத்தனைப் புத்தி சொன்னாலும், நாங்கள் கேட்போமா , நம் வேதத்தை விடுவோமா?'' என்று அவரைப் பரிகாசம் பண்ணும் வகையில் பேசினார்கள். ஆனால், மறுநாள் அர்ச்சிஷ்டவர், திவ்ய பலிபூசை செய்கையில், அந்த நான்கு யூதர்களும் புதுமையாக மனந்திரும்பினர். மற்ற யூதர் முன்பாக, தாங்கள் கிறிஸ்துவர்களாக விரும்புவதாகத் தெரிவித்தனர். அந்த நான்கு யூதர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன், ஞான உபதேசம் கேட்கிறபோது, அவர்களில் ஒருவனுக்குக் கடின காய்ச்சல் கண்டு படுக்கையில் கிடந்தான். அர்ச். பிலிப், இதை அறிந்து அந்தக் காய்ச்சல்காரனிடத்தில் போய், "நீ கிறிஸ்துவனான தினால் உனக்கு சாவு வந்தது" என்பார்கள். நாளைக்கு நான் திவ்ய பலிபூசை நிறைவேற்றுகையில் உனக்காக வேண்டிக்கொள்ள ஆள் அனுப்பு" என்றார். அன்று இரவு அவனுடைய உடல் நிலை மிக மோசமாயிருந்தது. மருத்துவர், இவன் பிழைக்கமாட்டான் என்று தெரிவித்து விட்டார். மறுநாள் அவன் பேச்சில்லாமல் அவஸ்தையாயிருந்த போது, அருகிலிருந்தவன் உரத்த சத்தமாய், "பிலிப்பு நேரியார் நேற்று சொன்னபடி, உனக்காக வேண்டிக்கொள்ள ஆள் ஆனப்ப வேண்டுமோ?" என்று கேட்டான். அவன் தலையசைத்து, ஆமென்று அடையாளம் காண்பித்தான். 

அப்படியே பிலிப்பு நேரியாரிடம், ஆள் போய், வியாதிக்காரன் தனக்காகப் பூசையில் வேண்டிக்கொள்ள மன்றாடினாரென்று சொன்னதும் தவிர, அவனும் திவ்ய பலிபூசையைப் பக்தியுடன் கண்டான். அப்படியே அர்ச். பிலிப்பு பூசையில் வேண்டிக் கொண்டார். திவ்ய பலிபூசை முடிந்த பிறகு, அவன் திரும்பிச் சென்றான். அவஸ்தைக்காரன் வீட்டிற்கு சென்றதும், அங்கு நோயாளி நலமுடனிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான் . " எப்படி உனக்கு திடீரென்று சுகம் கிடைத்தது? எந்த நேரத்தில் உனக்கு சுகம் கிடைத்தது?" என்று நோயாளியிடம் கேட்டதற்கு, அர்ச். பிலிப் நேரியார் திவ்ய பலிபூசை செய்கிற நேரத்தில் அவனுக்குக் குணமானது என்று அறிந்து கொண்டான்.

கிறிஸ்துவர்களே! ஆத்துமத்தின் வியாதியாகிய பாவமும், சரீரத்தின் வியாதியும் திவ்ய பலிபூசைப்பலத்தினால் நீங்கிப்போகும். உங்கள் உறவினர் அல்லது மற்றவர்களுக்குள்ளே பாவியாயிருக்கிறவர்கள் மனந்திரும்ப , நீங்கள் பக்தியோடு காண்கிற பூசையில் அவர்களுக்காக மகா பக்தி சுறுசுறுப்போடு வேண்டிக்கொண்டு, அந்தப் பூசையைப் பிதாவாகியசர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுங்கள். தேவ பூசையின் பலத்தினால் அப்பேர்பட்ட பாவிகள் மனந்திரும்புவார்கள். கல்வாரி மலைமேல் சிலுவை மரத்தில் நிறைவேற்றப்பட்ட திவ்ய பலிபூசையில், அருகில் இருந்த நல்ல கள்ளன் மனந்திரும்பினான். இரத்தம் சிந்தப்பட்ட அந்தப் பூசைக்குள்ள பலன், இரத்தம் சிந்தாத இந்தப் பூசைக்கும் இருக்கிறதினால், அதனுடைய பலத்தினால் அப்போது பாவி மனந்திரும்பினதுபோல், இந்தப் பூசை பலத்தினால் இப்போதும் பாவிகள் மனந்திரும்புவர். உங்கள் உறவினருள் யாதொரு வியாதிக்காரன் உண்டானால், நீங்கள் கோவிலுக்குப் போய் பக்தியோடு பூசைக்கண்டு, ஆண்டவருக்கு சித்திமிருந்தால் இந்த வியாதிக்காரனுக்குக் குணமுண்டாகும்படி, நீங்கள் கண்ட பூசையை ஒப்புக்கொடுத்தால் அந்தப் பூசையின் பலத்தினால் வியாதிக்காரருக்கு சுகம் கிடைக்கும்.