ஆகஸ்டு 0️7ம் தேதி
ஸ்துதியரும் தியேட்டைன் துறவற சபையின் ஸ்தாபகருமான அர்ச்.கயேத்தான் திருநாள்
இவர் இத்தாலியிலுள்ள விசென்ஸா என்ற உயர்குடியில் 1480ம் வருடம், அக்டோபர் 1ம் தேதி பிறந்தார். இவருடைய 2வது வயதில், இவருடைய தந்தை இறந்தார்.இவர், பதுவா பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்லூரியில் கல்வி பயின்றார். 24வது வயதில், சமூக சட்டத்துறையிலும், வேத இயல் சட்டத்துறையிலும் முனைவர் பட்டம் பெற்றார்; 1506ம் வருடம் முதல், 2ம் ஐூலியஸ் பாப்பரசரிடம் திருச்சபையின் அரசாங்க விவகார அதிகாரியாக, இவர் தன் அலுவலைத் துவக்கினார்; வெனிஸ் குடியரசை, பாப்பரசருடன் சமரசம் செய்து கொள்ளச் செய்து, பாப்பரசருடன் நல்லுறவு கொள்ளச் செய்தார். 1513ம் வருடம், 2ம் ஜூலியஸ் பாப்பரசர் இறந்தபிறகு, அர்ச்.கயேத்தான், பாப்பரசருடைய அரண்மனையிலிருந்து விலகி வெளியேறினார். இவர் 1516ம் வருடம் குருப்பட்டம் பெற்றார்; அடுத்த வருடம், இவருடைய தாயார் இறந்தபிறகு, விசென்ஸாவிற்கு இவர் மறுபடியும் வரவழைக்கப்பட்டார்; அங்கு, குணப்படுத்த முடியாத நோயில் பீடிக்கப்பட்டிருந்த வியாதியஸ்தா்களுக்காக, 1522ம் வருடம், ஒரு மருத்துவமனையைக் கட்டினார்.
இவ்விதமாக இவருடைய ஜீவிய காலம் முழுவதையும் நிரப்பியிருந்த உத்தமமான பிறர்சிநேக அலுவல்களின் அத்தாட்சியாக இம்மருத்துவமனை திகழ்கிறது! ஆனால், ஆத்துமங்கள் மீது, இவர் கொண்டிருந்த ஆர்வமானது, அக்காலத்தில் பல்வேறு நிலைகளிலிருந்த குருக்களிடையே நிலவியதும், அவர்களுடைய ஞான ஜீவியத்தின் நோயாக இருந்ததும், அவர்களிடையே தொற்று நோயைப்போல் பரவியிருந்ததுமான அரசியல் ஒழுங்கீனங்களால், மிக ஆழமமான தாக்கத்தையும், உத்வேகத்தையும் கொண்டிருந்தது! முன்னொரு காலத்தில்,அர்ச். அகுஸ்தீனார் செய்ததைப்போல, இவரும், தீவிர முனைப்புடன் குருக்களிடையே நிலவிய சீர்கேட்டை முற்றிலுமாக அழித்தொழிப்பதற்காக, குருக்களை சீர்திருத்துவதற்காக, ஒரு துறவற குருக்கள் சபையை ஏற்படுத்தினார்; இக்குருக்களுடைய ஜீவியம், துறவற மடத்தின் ஜீவியமும், மக்களிடையே குருக்கள் ஆற்ற வேண்டிய ஆன்ம இரட்சணிய அலுவலின் ஜீவியமும் ஒன்றிணைந்த துறவற ஜீவியமாக இருந்தது! இத்துறவற சபை, தியேட்டைன் துறவற சபை என்று அழைக்கப்பட்டது. அர்ச்.கயேத்தான், 1523ம் வருடம், உரோமாபுரிக்குத் திரும்பி வந்தபோது, இத்துறவற சபையை ஸ்தாபித்தார்.
1524ம் வருடம், 7ம் கிளமென்ட் பாப்பரசர், இத்துறவற சபையை அங்கீகரித்து, அதற்கான அனுமதியை அளித்தார். இத்துறவற சபையை ஸ்தாபிப்பதில், அர்ச். கயேத்தானுக்கு உறுதுணையாக இருந்து, உதவிய முதல் நான்கு சகதுறவிகளில் ஒருவர், ஜான் பியத்ரோ கராஃபா, சியட்டியின் மேற்றிராணியாராயிருந்தார். இந்த சியட்டி நகரம், இலத்தீனில் தியேட்டே என்று அழைக்கப்படுகிறது; இம்மேற்றிராணி யார், பின்னாளில் 4ம் சின்னப்பர் பாப்பரசரானார்; இருப்பினும், இவர், தியேட்டே மேற்றிராணியாராக இருந்த போது, இத்துறவற சபையின் தலைமை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், இத்துறவற சபை, தியேட்டைன் துறவற சபை, என்று அழைக்கப்பட்டது. ஒரு சமயம், உரோமையிலுள்ள மகா பரிசுத்த தேவமாதாவின் பெரிய பசிலிக்கா தேவாலயத்தில், கிறீஸ்துமஸ் திருநாளன்று, மகா பரிசுத்த தேவமாதாவின் திருக்கரங்களிலிருந்து, தேவபாலனான திவ்ய குழந்தை சேசுவை, அர்ச்.கயேத்தான் நேரடியாக தன் கரங்களில் பெற்றுக் கொள்கிற மகா உன்னதமான பாக்கியம், பெற்றார். இத்துறவற சபை, மெதுவாக வளர்ந்தது.
1527ம் வருடம், 5ம் சார்லஸ் உரோமையை ஆக்ரமித்து, அதை சூரையாடியபோது, அந்த அரசனுடைய வீரர்கள், அர்ச்.கயேத்தானை சித்ரவதை செய்தனர்; இவருடைய தியேட்டைன் துறவியர், உரோமையை ஆக்ரமித்த வீரர் களால், அநேக அவசங்கைகளையும், துன்ப உபத்திரவங்களையும் , அனுபவித்தபிறகு, இத்துறவற சபையிலிருந்த 12 துறவியரும், உரோ மையிலிருந்து தப்பி, வெனிஸ் நகருக்குச் சென்றனர். அங்கு, கயேத்தான், அர்ச். ஜெரோம் எமிலியானியை சந்தித்தார். இவருடைய துறவற குருக்கள் சபையை ஸ்தாபிப்பதில், இதற்கு முன்பாக,இவருக்கு அர்ச்.கயேத்தான், உதவியிருந்தார். இங்கு ஏழைகளுக்கு உதவுவதற்காக, ஒரு வங்கியை அர்ச்.கயேத்தான், நிறுவினார். அச்சமயம், அங்கே, ஏழைகள், கடன் தருகிற பண முதலைகளால், மாபெரும் விதமாக துன்புறுத்தப் பட்டிருந்தனர். இவ்வங்கி, பின்னாளில், நேப்பிள்ஸ் வங்கி என்று அழைக்கப்பட்டது. நேப்பிள்ஸிலும், ஒரு துறவற மடத்தை ஸ்தாபித்து, லூத்தரன் பதித சபையை, அங்கிருந்து விரட்டினார். அர்ச். கயேத்தான், 1547ம் வருடம்,ஆகஸ்டு 7ம் தேதியன்று, பாக்கியமாய் மரித்தார். இவருடைய பரிசுத்த அருளிக்கங்கள், நேப்பிள்ஸிலிருக்கும் அர்ச்.சின்னப்பா் பசிலிக்கா தேவாலயத்தில், பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. 1629ம் வருடம், அக்டோபர் 8ம் தேதியன்று, 8ம் உர்பன் பாப்பரசரால் இவருக்கு முத்திப்பேறு பட்டம் அளிக்கப்பட்டது. 1671ம் வருடம்,ஏப்ரல் 12ம் தேதியன்று, 10ம் கிளமென்ட் பாப்பரசரால், இவருக்கு, அர்ச். லீமா ரோசம்மாள், அர்ச். லூயிஸ் பெல்டிரான், அர்ச்.பிரான்சிஸ் போர்ஜியா, அர்ச்.பிலிப் பெனிசியார் ஆகியோருடன் சேர்த்து, அர்ச்சிஷ்டப்பட்டம் அளிக்கப்பட்டது. அர்ச்.கயேத்தான், அர்ஜென்டீனா நாட்டிற்கும், வேலை தேடுகிறவர்களுக்கும் பாதுகாவலர்.
ஸ்துதியரான அர்ச்.கயேத்தானே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக