Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

July 30 - Saints Abdon and Sennen, அர்ச்‌.அப்டன்‌ , அர்ச்‌.சென்னன்‌

 

ஜூலை 3️0ம்‌ தேதி

வேதசாட்சிகளான அர்ச்‌.அப்டன்‌ , அர்ச்‌.சென்னன்‌ திருநாள்‌.


 

    கிறீஸ்துவர்களை உபத்திரவப்படுத்திக்‌ கொன்றவனும்‌, கிறீஸ்துவர்களுக்கு விரோதியுமான தேசியுஸ்‌, உரோமை சக்கரவர்த்தியாக, ஆண்டபோது, பெர்ஷியா நாட்டின்‌ அரசனைப்‌ போரில்‌ தோற்கடித்தான்‌; அநேக நாடுகளை போரில்‌ வென்று, பல நாடுகளுக்கு அதிபதியானான்‌. பெர்ஷிய நாட்டின்‌ மேற்‌ றிராணியாரான அர்ச்‌. போலிகுரோம்‌ மற்றும்‌ அவருடைய உதவியாளர்களான குருக்கள்‌ ஐவருக்கும்‌, மரணதண்டனை விதித்து, சித்ரவதை செய்து கொன்று போட்டான்‌. பெர்ஷிய நாட்டின்‌ உயர்குடிமக்களும்‌ சகோதரர்களுமான அர்ச்‌. அப்டன்‌, அர்ச்‌. சென்னன்‌, இருவரும்‌, பெர்ஷிய அரசரால்‌ மிகவும்‌ மகிமைப்படுத்தப்பட்டவர்கள்‌; இவர்கள்‌ இரகசியமாக கிறீஸ்துவர்களாக ஜீவித்தனர்‌; சனி விக்கிரகத்தின்‌ கோவிலில்‌ இழிவான நிலையில்‌, வேதசாட்சியாகக்‌ கொன்று போடப்பட்டிருந்த அர்ச்‌. போலிகுரோம்‌ மேற்றிராணி யாருடைய பரிசுத்த சரீரத்தை இவ்விருவரும்‌ இரகசியமாக, இரவில்‌ எடுத்துச்‌ சென்று, மேரை மரியாதையுடன்‌ பூஜிதமாக ஒரு கல்லறையில்‌ அடக்கம்‌ செய்தனர்‌.

            இவ்விரு பெர்ஷிய நாட்டினுடைய அரசாங்க அதிகாரிகளும்‌, இப்போது, உரோமை சக்கரவர்த்தியின்‌ கொடுங்கோல்‌ ஆதிக்கத்தின்‌ கீழ்‌ வந்தனர்‌. கொடுங்‌கோலனான தேசியுஸ்‌, பெர்ஷிய நாட்டிலுள்ள கிறீஸ்துவர்களை, மிகக்‌ கொடூரமாக உபத்திரவப்படுத்துவதைக்‌ கண்டு, இவ்விரு அர்ச்சிஷ்டவர்களும்‌ மிகவும்‌ துயரமடைந்தனர்‌. ஆண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதர் மீது அவர்கள்‌ கொண்டிருக்கும்‌ சிநேகத்தையும்‌, விசுவாசத்தையும்‌ பகிரங்கமாக சக்கரவர்த்தியின்‌ முன்பாக அறிவிக்கவேண்டியது, அவர்களுடைய கடமை என்று நம்பினர்‌.

            தங்களுடைய புதிய அரசரைப்பற்றி பயப்படாமல்‌, இருவரும்‌, கத்தோலிக்க வேத விசுவாசத்தைப்‌ பரப்புவதற்கும்‌, அதில்‌ மக்களை ஸ்திரப்படுத்துவதற்கும்‌, குருக்களை உற்சாகப்படுத்துவதற்கும்‌, இறந்த வேதசாட்சிகளை அடக்‌கம்‌ செய்வதற்கும்‌ தேவையான சகல வழிமுறைகளையும்‌, தங்களாலான மட்டும்‌ கையாண்டனர்‌.  இவ்விரு சகோதரர்களும்‌, கிறீஸ்துவ வேதத்தைப்‌ போற்றிக்‌ காப்பாற்று வதற்காக தங்களையே அர்ப்பணித்திருந்ததைக்‌ கண்டறிந்த தேசியுஸ்‌, வெகுவாக சினந்து, அவர்கள்‌ மேல்‌ எரிச்சலடைந்தான்‌. தன்‌ நீதியாசனத்திற்கு முன்பாக இருவரையும்‌ அழைத்து வரக்கட்டளை யிட்டான்‌. அஞ்ஞான விக்கிரகங்‌களுக்கு பலி செலுத்த அவர்களை வற்புறுத்தினான்‌.

            “நாங்கள்‌, எங்கள்‌ ஆண்டவரான திவ்ய சேசுகிறீஸ்துநாதரை மட்டுமே ஆராதிப்போம்‌; ஆண்டவரைத்‌ தவிர, வேறு எதையும்‌ நாங்கள்‌ வழிபட மாட்டோம்!” என்று, இரு அர்ச்சிஷ்ட சகோதரர்களும்‌, உறுதியாக தீர்மானத்துடன்‌ பதிலளித்தனர்‌. இருவரையும்‌ சிறையிலடைத்தான்‌; தேசியுஸ்‌ தனது பிரதிநிதியான உரோமை வைஸ்ராய்‌ இறந்ததைப்‌ பற்றிக்‌ கேள்விப்பட்டதும்‌, உரோமாபுரிக்குத்‌ திரும்பிச்‌ சென்றான்‌; இவ்விரு கைதிகளையும்‌ கூட்டிச்‌ சென்றான்‌; தன்னுடைய பெர்ஷிய நாட்டின்‌ மீதான வெற்றியின்‌ மூலம்‌, தனக்குக்‌ கிடைத்த அருமையான கோப்பைகளாக இவ்விருவரையும்‌ உரோமைக்கு இழுத்துச்‌ சென்றான்‌.

            இருவரையும்‌ தனது ஆலோசனைச்‌ சங்கமான செனட்டின்‌ முன்பாக, தேசியுஸ்‌ நிறுத்தினான்‌. இங்கேயும்‌ எல்லா செனட்டர்கள்‌ முன்பாகவும்‌, அர்ச்‌. அப்டனும்‌, அர்ச்‌. சென்னனும்‌, நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்துநாதரின்‌ தெய்வீகத்தை பகிரங்கமாக அறிக்கை யிட்டனர்‌; விசுவாச உச்சாரணம்‌ செய்தனர்‌. “ஆண்டவரை மட்டுமே ஆராதிப்போம்‌; மற்ற எதையும்‌ வழிபடமாட்டோம்‌!” என்று உறுதியான குரலில்‌ கூறினார்‌. உரோமையரின்‌ அரை வட்ட கேளிக்கை மைதானத்தில்‌, அடுத்த நாள்‌ இருவரையும்‌ சாட்டையால்‌ அடித்தனர்‌. பின்‌, இரண்டு சிங்கங்களும்‌, நான்கு கரடிகளும்‌ இவர்களை விழுங்கும்‌ படியாக கூண்டிலிருந்து திறந்து விடப்பட்டன!

            ஆனால்‌, இந்த காட்டு மிருகங்கள்,‌ இரு அர்ச்சிஷ்டவர்களின்‌ பாதங்களில்‌ வந்து படுத்துக்‌ கொண்டன! இருவருடைய பாதுகாவலர் களைப் போல்‌ இம்மிருகங்கள்‌, இருவரையும்‌ பாதுகாத்தன! சிறிது நேரத்திற்கு யாராலேயும்‌, இரு அர்ச்சிஷ்டவர்களின்‌ அருகில்‌ செல்லக்‌ கூடாமல்‌ போனது! இறுதியில்‌, தேசியுஸ்‌, கிளாடியேட்டர்களை, மைதானத்திற்குள்‌ அனுப்பி, இரு அர்ச்சிஷ்டவர்களையும்‌ தலையை வெட்டிக்‌ கொல்லும்படிக்‌ கட்டளையிட்டான்‌.

            இரு அர்ச்சிஷ்டவர்களும்‌ தங்களின்‌ வேதசாட்சிய மரணத்தை, சர்வேசுரனுக்கு முழங்காலிலிருந்து ஒப்புக்‌ கொடுத்‌தனர்‌! அந்த ஒப்புக்கொடுத்தலை தயவுடன்‌ ஏற்ற சர்வேசுரன்‌, இருவரும்‌, கிளாடியேட்டர்களால்‌ தலைவெட்டப்பட்டுக்‌ கொல்லப்படுவதற்குத்‌ திருவுளம்‌ கொண்டார்‌; அதன்படி, தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்ட இரு அர்ச்சிஷ்டவர்களுடைய பரிசுத்த சரீரங்களும்‌, அடக்கம்‌ செய்யப்படாமல்‌ , அங்கேயே மூன்று நாட்கள்‌ கிடந்தன.

            பின்‌, இவ்விரு அர்ச்சிஷ்டவர்களுடைய ஜீவிய சரீரத்தை எழுதிய ஒரு உபதியாக்கோன்‌ , இருவருடைய பரிசுத்த சரீ ரங்களையும்,‌ தனது இடத்தில்‌ பூஜிதமாக ஒரு கல்லறையில்‌ அடக்கம்‌ செய்தார்‌. இவர்களுடைய மகிமையான வேதசாட்சிய மரணம்‌, 254ம்‌ வருடம்‌ நிகழ்ந்தது! மகா கான்ஸ்டன்டைன்‌ அரசருடைய ஆட்சி காலத்தில்‌, போர்டோவிற்குச்‌ செல்கிற பாதையிலுள்ள தைபர்‌ ஆற்றின்‌ அருகில்‌, போந்தியன்‌ , என்று அழைக்கப்படும்‌ அடக்கம்‌ செய்கிற பகுதியில்,‌ இரு அர்ச்சிஷ்டவர்களு டைய பரிசுத்த சரீரங்கள்‌ இடமாற்றம்‌ செய்யப்பட்டு, அடக்கம்‌ செய்யப்பட்டன! இரு அர்ச்சிஷ்டவர்களும்,‌ அவர்களுடைய அடக்கம்‌ செய்த இடத்தை, காட்சியளித்து அறிவித்ததன்பேரில்‌, இவ்விடமாற்றம்‌ செய்யப்பட்டது! இவ்விரு அர்ச்சிஷ்டவர்கள்‌ மீதான பக்தி முயற்சி, உரோமையில் 4ம்‌ நூற்றாண்‌ டிலிருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது!

வேதசாட்சிகளான அர்ச்‌. அப்டனே! அர்ச்‌. சென்னனே!  எங்களுக்காக வேண்டிக்‌ கொள்ளுங்கள்‌!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக