Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 10 ஆகஸ்ட், 2024

May 11 - St. Philip & St. James அர்ச். பிலிப்பு, அர்ச். சின்ன யாகப்பர்

 

மே 1️1️ம் தேதி

அப்போஸ்தலர்களும் வேதசாட்சிகளுமான அர்ச். பிலிப்பு, அர்ச். சின்ன யாகப்பர் திருநாள்

 

அர்ச். பிலிப்பு

இவர், நமதாண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீடர்களில் ஒருவர். யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்குச் செல்கிற பாதையிலே நமதாண்டவர் பிலிப்புவைக் கண்டு, “என்னைப் பின் செல்!” என்று கூறினார்; உடனே ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, பிலிப்பு அவரைப் பின்தொடர்ந்தார். ஆன்ம இரட்சணிய ஆவலினாலும், உத்தமமான பிறர்சிநேகத்தினாலும், பிலிப்பு, நத்தனயேலைக் கண்டு, “வேதப்பிரமாணத்திலே மோயீசனும், தீர்க்கதரிசிகளும் குறித்தெழுதினவரைக் கண்டுகொண்டோம்; அவர் நசரேத்தூர் சூசையப்பருடைய குமாரனாகிய சேசுநாதர் தாம்என்றார். அதற்கு நத்தனயேல், “நசரேத்தூரிலிருந்து, யாதொரு நன்மை வரக்கூடுமோ?” என்று கூற, அதற்கு, பிலிப்பு, “நீயே வந்து பார், (அரு 1:43-46),  என்று கூறி, அவரை நமதாண்டவரிடம் கூட்டி வந்தார். அர்ச். பிலிப்பு, அர்ச். இராயப்பர், அர்ச். பெலவேந்திரருடைய ஊரான பெத்சாய்தாவைச் சேர்ந்தவர். அர்ச். ஸ்நாபக அருளப்பர், நமதாண்டவரைச் சுட்டிக் காண்பித்து, இதோ உலகத்தின் பாவங்களைப் போக்குகிறவர்! இதோ சர்வேசுரனின் செம்மறியானவர்! என்று அறிவித்தபோது, அர்ச். பிலிப்புவும், அர்ச். ஸ்நாபக அருளப்பரைச் சூழ்ந்திருந்தவர்களில் ஒருவராயிருந்தார். நமதாண்டவர், தம்மைப் பின்தொடர்ந்து வந்த 5000 பேர்களுக்கு உணவளிப்பதைப் பற்றி, பிலிப்புவிடம், “இவர்கள் சாப்பிடும்படி எங்கேயிருந்து அப்பங்கள் வாங்குவோம்?” என்று அவரைச் சோதிக்கும்படி வினவியபோது, பிலிப்பு, ஆண்டவரிடம், இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாக  எடுத்துக் கொண்டாலும், இருநூறு  பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே (அரு6:7), என்றார்.

                இராப்போஜனத்தின்போது,பிலிப்பு ஆண்டவரை நோக்கி, “ஆண்டவரே! பிதாவை எங்களுக்குக் காண்பித்தருளும். அதுவே, எங்களுக்குப் போதும்!”  என்றார். ஆண்டவர், அவருக்குத் திருவுளம்பற்றினதாவது; இவ்வளவு காலமாய் நான் உங்களுடனே கூட இருந்தும்,  நீங்கள் என்னை அறிந்துகொள்ளவில்லையோ? பிலிப்புவே, என்னைக் காண்கிறவன், என் பிதாவையும் காண்கிறான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பித்தருளும், என்று,  நீ சொல்லுவதெப்படி?..”  (அரு 14:9) என்று கூறினார்.

                அர்ச். பிலிப்பு துருக்கியில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் சென்றார்; கி.பி.80ம் வருடம். ஃபிரிஜியா என்ற இடத்தில், இவர் சிலுவையில் அறையப்பட்டு, வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

                இவருடைய பரிசுத்த சரீரத்தின் அருளிக்கங்கள், உரோமாபுரிக்குக் கொண்டு வரப்பட்டு, பரிசுத்த அப்போஸ்தலர்களின் தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன!

 

அர்ச். சின்ன யாகப்பர்

இவர், அல்ஃபேயுஸின் மகன்; செபதேயுவின் மகனான (பெரிய) யாகப்பருடன் இவரைப் பற்றி குழப்பமடையாதபடிக்கு, இவரை சின்ன யாகப்பர் என்று அழைக்கிறோம். நமதாண்டவர் உத்தானத்திற்குப் பிறகு, அர்ச். சின்ன யாகப்பருக்கு விசேஷ தரிசனை அளித்தார், என்று அர்ச். சின்னப்பர், (1 கொரி 15:7) கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிரூபத்தில்  கூறுகின்றார். அப்போஸ்தலர்கள் எல்லோரும் உலகின் நான்கு திசைகளுக்கும்  சுவிசேஷத்தைப் போதிப்பதற்குப் புறப்பட்டபோது, இவர், ஜெருசலேமிலேயே தங்கி அந்நகரின் முதல் மேற்றிராணியாரானார். இவருடைய அதி உன்னதமான பரிசுத்தத் தனம், இவர் அனுசரித்த கடின சரீர ஒறுத்தல், உபவாசம்  மற்றும் இடைவிடா ஜெபம் ஆகியவற்றைக் கண்டு, யூதர்கள் இவர் மட்டில் அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். இவர் 30 வருடகாலம் ஜெருசலேமின் மேற்றிராணியாராயிருந்தார்.

                ஹெகிசிப்புஸ் என்ற ஆதித்திருச்சபையின் சரித்திர ஆசிரியர்,  அர்ச். சின்ன யாகப்பருடைய சாங்கோபாங்கத்தின் அர்ச்சிஷ்டத்தனத்தைப் பற்றிய அநேக பாரம்பரிய உண்மைகளை, திருச்சபைக்கு விட்டுச் சென்றிருக்கின்றார்;  அர்ச். சின்ன யாகப்பர், பரிசுத்த கன்னிமை விரதத்துவத்தை நேர்ந்தபடி, தன் கற்பை சர்வேசுரனுக்கு அர்ப்பணித்திருந்தார்; இவர் திராட்சை இரசத்தை முதலாய் அருந்தியவரல்ல ; காலணி அணிந்தவருமல்ல;  இவர் எப்போதும் நீண்டநேரம் சாஷ்டாங்கமாக தரையில் கிடந்து ஜெபிப்பதில் ஈடுபட்டிருப்பார்; அதன் காரணமாக இவருடைய முழங்கால்களின் தோல், ஒட்டகத்தின் குளம்பைப் போல் தடித்துப் போயிருந்தது! யூதர்கள் இவர்மெல் கொண்டிருந்த மரியாதையினிமித்தமாக, இவருடைய உடையின் விளிம்பைத் தொடுவார்கள்!  மேலாவிலிருந்து வருகிற ஞானமோ முந்த முந்த கற்புள்ளதும், பின்னும் சமாதானமுள்ளதும், மரியாதையுள்ளதும், இணக்கமுள்ளதும், நல்லவைகளுக்கு உடந்தையுள்ளதும், இரக்கத்தாலும், நற்கனிகளாலும், நிறைந்ததுமாயிருக்கின்றது (யாக 3:17) என்று அவருடைய நிரூபத்தில் கூறியிருக்கிற அவருடைய வார்த்தைகளின் உயிருள்ள அத்தாட்சியாகவே உண்மையில் அவருடைய ஜிவியம் திகழ்ந்தது!

                ஜெருசலேமில் நிகழ்ந்த முதல் பொதுச்சங்கத்தின்போது, இவர் அர்ச். இராயப்பருடனும், அர்ச். சின்னப்பருடனும் கூட அமர்ந்திருந்தார். பின்னாளில், அர்ச். சின்னப்பர், சீசரிடம் மேல்முறையிடு செய்ததன் மூலம், யூதர்களின் சீற்றத்திலிருந்து தப்பித்தபோது, “நீதிமான் தவறிழைத்தார்!” என்று கூக்குரலிட்டபடி, யூதர்கள் தங்கள் பழிதீர்க்கும் கோபத்தை, அர்ச். சின்ன யாகப்பரிடம் காண்பித்தனர்.

                கி.பி.62ம் வருடம், அர்ச். யாகப்பர், ஜெருசலேம் தேவாலயத்தின் கூரை கைப்பிடிச் சுவரிலிருந்து யூதர்களால் கீழே தள்ளப்பட்டு, தடிகளால் அடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

                வேதசாட்சிய மரண நேரத்தில், இவர் தனது கொலைஞர்களுக்காக வேண்டிக்கொண்டார்; நமதாண்டவர் சிலுவையில் பாடுபட்டு மரிக்கிறவேளையில், வேண்டிக் கொண்ட அதே வார்த்தைகளை, “பரலோகப் பிதாவே! இவர்களை மன்னித்தருளும்! இவர்கள் செய்கிறதை இன்னதென்று அறியாமலிருக்கிறார்கள்!”  என்கிற அதே ஜெபத்தை, இவரும்  ஜெபித்து வேண்டிக் கொண்டார்.

                2011ம் வருடம், ஜுலை 27ம் தேதியன்று, இத்தாலிய நாட்டுப் புதைப்பொருள் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான பிரான்செஸ்கோ டி ஆன்டிரியா டெனிசி என்ற துருக்கிய நகருக்கருகிலுள்ள ஹியரபோலிஸ் என்ற இடத்தில், ஏற்கனவே ஒரு தேவாலயம் பூமிக்கடியிலிருந்து அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது; அந்த இடத்திற்கருகிலேயே அர்ச். பிலிப்புவின் கல்லறைக் கண்டெடுக்கப்பட்டது.  அதன் சுவர்களிலிருந்த  எழுத்துக்கள் ஆதாரப்பூர்வமாக நமதாண்டவருடைய அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான அர்ச். பிலிப்புவின் கல்லறை என்று நிரூபிக்கின்றது, என்று இத்தாலியப் பேராசிரியர் கூறுகின்றார்.

 

அப்போஸ்தலர்களும் வேதசாட்சிகளுமான அர்ச். பிலிப்புவே! அர்ச். சின்ன யாகப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக